இப்படிப்பட்ட சுலுவுக்கு ஒருமுறை அவள் கலந்து கொண்ட ரேடியோ போட்டி ஒன்றில் பிரஸ்ஸர் குக்கர் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ள அவள் ரேடியோ நிலையம் செல்லும் போது தான் அவளது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தும் விதமாக கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் அங்கேயே அவளுக்கு ரேடியோ ஜாக்கியாகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. ரேடியோ ஜாக்கியென்றால் சாதாரணமாக ரேடியோ நேயர்களுடன் பகல் நேரத்தில் பேசிப் பேசியே கொல்கிறார்களே அப்படியல்ல; சுலு பொறுப்பேற்று நடத்தித் தர வேண்டிய நிகழ்ச்சி ரொம்பவே வித்யாசமானது. அவளுக்கு ரேடியோ நிலையத்தில் இரவில் தான் வேலையே. சுலு, இரவில் தனிமையில் இருக்கும் மனிதர்களுடன், தனது நிகழ்ச்சி மூலமாகப் பேச வேண்டும். தனிமையில் வசிக்கும் ஆத்மாக்களென்றால் அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாமில்லையா? அவர்கள் முரடர்களாக இருக்கலாம், சைக்கோக்களாக இருக்கலாம், குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் உலகத்தோரால் கைவிடப்பட்டவர்களாக இருக்கலாம், பெண் பித்தர்களாக இருக்கலாம், மொத்தத்தில் இரவு நேரங்களில் தனிமையே கதியெனக் கிடக்கும் அநாதரவான மனிதர்களுடன் சுலு ரேடியோ மூலமாக உரையாட வேண்டும். இது தான் சுலுவுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு. சுலுவின் வாழ்க்கையில் தான் எப்போதுமே ‘முடியாது’ என்ற பேச்சுக்கே இடமில்லையே. அதனால் அவள் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாள்.