வட இந்தியாவை விட்டுத்தள்ளுங்கள். தெற்கில் கட்டபொம்மன் பாளையங்குறிச்சியை ஆண்ட காலத்தில் இங்கே இன்னும் பல சிறு, குறு அரசுகள் இருந்தனவே... கட்டபொம்மனுக்கு முன்பே நெற்கட்டும்சேவலில் பூலித்தேவர் இருந்தார். கட்டபொம்மனின் இணைக்காலத்தில் சிவகங்கையில் மருது சகோதரர்கள் இருந்தார்கள், கொங்கு நாட்டில் தீரன் சின்னமலை இருந்தார். இவர்களெல்லாம் அப்போது அவர்கள் வாழ்ந்த பிராந்தியங்களில் சுதந்திர வேட்கையை முன்னெடுத்திருக்கா விட்டால் எங்கிருந்து கிளர்ந்தெழுந்திருக்கக் கூடும் அன்றைய நம் மக்களின் சுதந்திர உணர்வு?! அன்று அவர்கள் வித்திட்டிருக்காவிடில், அதை அன்றைய மக்கள் தெருக்கூத்துக்களாகவும், மேடை நாடகங்களாகவும், நாட்டார் கதைப்பாடல்களாகவும், திரைப்படங்களாகவும் எடுத்து அவர் தம் பெருமைகளை நாடறியச் செய்திரா விட்டால் இந்திய சுதந்திரத்துக்கான மூலவிதை தென்னகத்தில் எங்கிருந்து முளைவிட்டிருக்கக் கூடும்? அவர்களைப் போய் வெள்ளைக்காரர்கள் வரி கேட்டதால் ‘ராஜாவையே வரி கேட்கிறாயா? என்று ஈகோவில் கட்டபொம்மன் அவர்களுடன் யுத்தத்திற்கு கிளம்பி விட்டார் என்ற தொனியில் எழுதி இருக்கிறீர்கள்?! அது மட்டுமல்ல, அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிற்றரசுகள், பாளையக்காரர்கள், ஜமீந்தார்கள், பண்ணையார்கள் என எல்லோருமே சுதந்திர வேட்கை கொண்டவர்களாக இருந்திருக்கவில்லையே. கட்டபொம்மன் கதையின் எட்டப்பர்களாக அன்றும் வெள்ளை அரசாங்கத்துக்கு தங்களது ஏகோபித்த ஆதரவை நல்கி, அவர்களுக்குப் பயந்து அடங்கி, ஒடுங்கி பொம்மை ராஜாக்களாக காலம் தள்ளியவர்களும் அன்றும் உண்டு. அவர்களைப் போல கட்டபொம்மனோ, மருது சகோதர்களோ, பூலித்தேவரோ இல்லை என்பதால் அல்லவா அவர்களை சரித்திரம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக்கி அழகு பார்க்கிறது. அதற்கும் வேட்டு வைக்க நினைத்தால் எப்படி?