இந்நிலையில், அஃப்சீனின் வித்யாசமான உடல்நலக் குறைபாட்டால், அவளது தோற்றம் வழக்கமான சிறுமிகளைப் போல இல்லாமல் தலை தொங்கிப் போயிருப்பதைக் காரணமாக வைத்து அக்கம் பக்கத்திலிருக்கும் அவள் வயதொத்த பிற சிறுமிகளும் கூட அவளோடு விளையாட விரும்புவதில்லை. காரணம் அச்சம். இப்படித் தொடரும் வாழ்க்கையில் சிறுமி அஃப்சீனால் தனியாகத் தனது வேலைகள் எதையும் செய்து கொள்ள முடியாது. அவளது எல்லா வேலைகளுக்குமே அம்மா அல்லது உடன் பிறந்தோரது உதவி அவளுக்குத் தேவைப்படுகிறது. இதனால் மனமுடைந்து தனிமைப்பட்டுப் போன அந்தச் சிறுமி இப்போதெல்லாம் தனது உடன்பிறந்தவர்களில் இளையோருடன் தவிர வேறு எவருடனும் விளையாடுவதே இல்லை. சொல்லப்போனால் தனது நாளின் முக்கால்வாசி நேரமும் அவள் வீட்டின் மூலையில் சோகமாக உட்கார்ந்திருப்பதே அதிகமாகி வருகிறது. தற்போது 9 வயதாகும் அவளுக்கு, அவள் வளர, வளர அவளது தசைக்குறைபாட்டு நோயும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. தினமும் தாங்கவியலாத கழுத்து வலியால் நொந்து போய் அவதிப்படுகிறாள்.