முதன் முதலாக டெல்லியில் ஒரு தொழிலதிபரின் வீட்டில் டார்ஜிலிங்கில் இருந்து கடத்தி விற்கப்பட்டு கொத்தடிமையாக மாட்டிக் கொண்ட ஒரு சிறுமியை வெற்றிகரமாக மீட்டது தான் ரங்குவின் துவக்கம். அதன் பின்னர் இன்று வரை அவர் மீட்ட பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை 20, 000 தாண்டும். பாலியல் அடிமைகளாக்கப் பட்டு விற்கப்படும் குழந்தைகளை மீட்பதில் முழு மூச்சாக இறங்கும் முன் ரங்கு நேபாளம், காத்மண்டு சென்று அங்கே அனுராதா கொய்ராலா நடத்தி வந்த மைத்தி நேபாள் எனும் தன்னார்வ அமைப்பின் மூலமாகத் தீவிரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். அங்கே முறையான பயிற்சி பெற்ற பின் டார்ஜிலிங் திரும்பி ‘கஞ்சன் ஜங்கா உத்தர் கேந்திரா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை டெல்லி, பாட்னா, மும்பை, கொல்கத்தா, நேபாள எல்லைப்பகுதிகள் எனப் பல இடங்களில் இருந்தும் பல்வேறு பெண் குழந்தைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.