அப்பா வழி உறவினர்களோ, திருமணத்திற்கு வருகை தந்திருந்தாலும்... வார்த்தைக்கு வார்த்தை அண்ணனையும், அண்ணியையும் இத்தனை செலவு செய்து சாதி கெட்ட திருமணத்தை நடத்தி வைத்துக் கொண்டு இருக்கிறார்களே என்று பேசி ஊவாமுள்ளாகக் குத்தத் தயங்கவில்லை. இத்தனை மனச்சங்கடத்தையும் தாண்டி சரி ஒருவழியாகத் திருமணம் இனிதே நடந்து முடிந்தது என்று திருப்திப் பட வகையின்றி இன்று வரையிலும் அந்தப் பெண்ணின் பெற்றோரை எங்கு சந்தித்தாலும் இன்னும் சிலர், சாதி மாறித் திருமணம் செய்து கொண்ட அவர்களது பெண்ணைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது மட்டம் தட்டிக் குறைத்துப் பேசாமல் அகலுவதில்லை. அப்படிப் பேசுபவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்து அவ்விடத்தை விட்டு நீங்கினாலும் கூட ஒவ்வொருமுறையும் அறிந்தவர், தெரிந்தவர், உறவினர் முன்னிலையில் அப்படியான நிந்தனைகளுக்கு ஆளாகும் போதெல்லாம் அந்தப் பெற்றோர் மனமுடைந்து தான் போகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஒரு திருப்தி என்னவெனில் தங்கள் மகள் தான் தேர்வு செய்த வாழ்வை நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதே! அது போதும். ஊர் என்ன வேண்டுமானாலும் பேசும். கொஞ்சம் மனம் வலித்தாலும் இங்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டியது ஊராருக்கு அல்ல, தாம் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி மணமுடித்து அனுப்பிய மகளுக்குத் தான் என்பதை உணர்ந்த பெற்றோர் அவர்கள். எனவே அவர்களால் மகள் சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதனால் ஏற்படும் மனச்சங்கடங்களை ஒவ்வொருமுறையும் வலித்தாலும் கூட பொருட்படுத்தாமல் எளிதாகக் கடந்து விட முடிகிறது.