டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வெற்றிலை உற்பத்தி வீழ்ச்சி - விலையேற்றம்

வெற்றிலை பயிர்களை நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதோடு, விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:44 pm

எம். அருண்குமார்

வெற்றிலை பயிர்களை நோய் தாக்கியுள்ளதால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதோடு, விலையும் ஏற்றம் கண்டுள்ளது.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் முதல் அனைத்து நிகழ்ச்சியிலும், கோயில்களிலும் வெற்றிலை முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. தாம்பூலம் தரிப்பதற்கு வெற்றிலையே பிரதானமானது. வெற்றிலை இல்லாத நிகழ்ச்சிகள் இல்லை.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், குடியாத்தம், அணைக்கட்டு வட்டங்களில் வெங்கிளி, ஜமீன், குளிதிகை, கீழ்முருங்கை, தோட்டாளம், மாதனூர், ராசம்பட்டி, இதயாத்பூர், பசுமாத்தூர், வெட்டுவானம், சின்னச்சேரி, அகரம்சேரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், பனங்காட்டூர், ரெட்டிமாங்குப்பம், ராஜக்கல், எம்.வி.குப்பம், நாவிதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.
வெற்றிலை பயிரிடும் முன், நிலத்தை மூன்று முறை எருவிட்டு ஏர் உழவு சால் ஓட்ட வேண்டும். பின்னர் 8 முழம் (1 மார்) கொண்ட அளவீடுகள் அடிப்படையில் ஏக்கருக்கு 1000 மார் கிடங்கு வெட்டவேண்டும்.
ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ அகத்தி விதையை வாங்கி நட வேண்டும். அதன் பின்னர் புங்கம் புண்ணாக்கு ஒரு முறையும் பின்னர் டிஏபி உரம் வைத்து மண் அணைக்க வேண்டும்.
வெற்றிலை கொடி போடுதல், களையெடுத்தல், மூங்கில் கழிகளை உட்டம் கட்டுதல், மருந்து தெளித்தல் என ஒரு ஏக்கர் வெற்றிலை பயிருக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகிறது. பயிரிட்ட ஓராண்டு வரை பக்குவப்படுத்துதல், சீர்படுத்துதல் பணிகள் மட்டும் நடைபெறும். முதல் ஆண்டில் அறுவடை செய்யமுடியாததால் எந்த வருமானமும் கிடைக்காது.
ஓராண்டுக்கு பிறகு, மாதம் ஒரு முறை வெற்றிலை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் 25 பிண்டி முதல் 30 பிண்டி வரை விளைச்சல் கிடைக்கும். பிண்டி என்பது 70 கவுளி முதல் 80 கவுளி வரை கொண்டது. ஒரு கவுளியில் 80 வெற்றிலை முதல் 100 வெற்றிலை வரை இருக்கும். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை 13-ஆம் மாதம் முதல் 36 மாதம் வரை சாகுபடி கிடைக்கும்.
நல்ல விளைச்சல் குறைந்தது 12 மாதம் முதல் அதிகபட்சம் 24 மாதம் வரை சாகுபடி கிடைக்கும். அதற்குள் புயல், மழை போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் மொத்த பயிரும் வீணாகும். ஏனைய விவசாய பயிர்கள் இயற்கை சீற்றம் ஏற்படும்போது குறிப்பிட்ட அளவு மட்டும் சேதமாகும். ஆனால், வெற்றிலை பயிர்களை மூங்கில் கழிகளைக் கொண்டு உட்டம் கட்டுவதால் ஒட்டுமொத்தமாய் சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தும்.
இது குறித்து வெற்றிலை விவசாயி ஒருவர் கூறியதாவது:
கருகல் நோய், வாடல் நோய், இயற்கை சீற்றங்களால் வெற்றிலை பயிர் பாதிக்கப்பட்டால், அதனை பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.
மனித உழைப்பு அதிகமாக தேவைப்படும் வெற்றிலை விவசாயத்தில் நூறு நாள் பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்துகளை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும். ஏனைய விவசாய பயிர்களுக்கு பல்வேறு சலுகைகள், மானியங்கள், விவசாய இடு பொருள்கள் வழங்குவது போல், வெற்றிலை பயிருக்கும் அவற்றை வழங்க வேண்டும் என்றார்.
மாதனூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் யோகானந்தம் கூறுகையில், வெற்றிலை பயிரை தாக்கும் வாடல், கருகல் நோய்க்கு எமிசான் என்ற மருந்தை தெளிக்க வேண்டும். வெற்றிலை பயிருக்கு மானியம் வழங்கும் எந்த திட்டமும் நடைமுறையில் இல்லை' என்றார்.
வாடல், கருகல் போன்ற நோய் காரணமாக வெற்றிலை விவசாயம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றிலையின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு வெற்றிலை அதிகபட்சமாக 50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. விசேஷ நாள்களில் விலை மேலும் உயர்கிறது.
எனவே, வாடல், கருகல் நோய்க்கான மருந்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவும், மற்ற பயிர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வெற்றிலை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டால், விவசாயிகள் வாழ்வு ஒளிமயமாவதோடு, வெற்றிலையின் விலையும் குறைந்து பொதுமக்களும் பயன்பெறுவர்.

** வெற்றிலை பயிருக்கு மானியம் வழங்கும் எந்த திட்டமும் நடைமுறையில் இல்லை' வாடல், கருகல் போன்ற நோய் காரணமாக
வெற்றிலை விவசாயம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. **

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.