/

நடக்க வேண்டும் ஜல்லிக்கட்டு!

பாரதப் பண்பாட்டின் பாரம்பரிய கலாசார திருவிழாக்களில் மிக முக்கியமானது பொங்கல் திருவிழா.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:52 pm

அா்ஜுன் சம்பத்

பாரதப் பண்பாட்டின் பாரம்பரிய கலாசார திருவிழாக்களில் மிக முக்கியமானது பொங்கல் திருவிழா. தமிழகத்தில் தை மாதம் முதல் நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். இதே நாளை நாடு முழுவதும் மகர சங்கராந்தி திருவிழா என கொண்டாடுகிறார்கள். இவ்விழாவிற்கு ஒரு நாள் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலாகவும், மூன்றாம் நாள் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
மாடுபிடித்தல், ஏறுதழுவுதல், மாடு பழக்குதல், மஞ்சு விரட்டு என பல்வேறு பெயர்களில் நடைபெறும் இவ்வீரவிளையாட்டு தமிழர்களின் நெடிய வரலாற்றோடும் பாரம்பரியத்தோடும் கலாசாரத்தோடும் தொடர்புடையது. நமது கிராமிய விவசாய வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. பழமையான சிந்து சமவெளி நாகரிக காலத்திலேகூட இவ்விளையாட்டு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
சங்ககாலத்தில் மஞ்சு விரட்டில் பங்கேற்று காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. சங்ககால பாடல்களில் "கலித்தொகை', "பத்துப்பாட்டு' ஆகியவற்றில் இவ்விளையாட்டு குறித்த பாடல்கள் உள்ளன.
மிருக வதை தடைச்சட்டம் 1966இன்படி காட்டு விலங்குகளை கூண்டில் அடைத்தோ அல்லது பொது இடங்களில் வைத்தோ காட்சிப் பொருளாக்கி வித்தை காட்டக்கூடாது. இதன்விளைவாக, சர்க்கஸ் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்பட்டு வந்த சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை வைத்து வித்தை காட்டுவதுகூட சட்டப்படி குற்றமானது.
மேலும் திரைப்படங்களில் யானை, குரங்கு, பாம்பு, நாய், ஆடு, மான் உள்ளிட்ட விலங்குகளை வைத்து திரைப்படம் எடுப்பதுகூட தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது. அனைத்தும் வரைகலை காட்சிகள் (கிராபிக்ஸ்) மூலம் படமாக்கப்படுகின்றன.
2008-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மிருகவதை தடுப்பு சங்கத்தினரும் விலங்குகள் நல ஆர்வலர்களும் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி ஜல்லிக்கட்டு விழாவை தடைசெய்ய அனைத்து வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டனர். நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்து தடை ஆணைகளை பெற்றனர்.
இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009-ஐ கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் பல்வேறு நிபந்தனைகளையும் ஒழுங்குமுறைகளையும் இச்சட்டம் ஏற்படுத்தியது.
2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அன்றைய காங்கிரஸ் அரசின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், வனவிலங்குகளின் பட்டியலில் வீட்டு விலங்கான காளையையும் சேர்த்தார். மிருக வதை தடைச்சட்டம் - பிரிவு 22-இன் கீழ் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
மிருகங்களுக்கான நெறிமுறைகள் கொண்ட பீட்டா (டஉபஅ) அமைப்பு ஜல்லிக்கட்டை தடைசெய்யக் கோரியும், தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் - 2009-ஐ தடைசெய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உடனடி தடை கேட்டது.
காளைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் முறையிலும், பார்வையாளர்களாகிய பொதுமக்களை பாதுகாக்கும் முறையிலும், ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் தமிழக அரசு மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கொடுத்த உறுதி மொழிகள், வாதங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மேலும் சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்தது.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி முழுவதையும், பிராணிகள் நல வாரியமும் மற்றும் பீட்டா அமைப்புக்கு ஆதரவான சில தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களும் நிழற்படம் மற்றும் கானொலி காட்சிகளாக படம் பிடித்து பதிவு செய்து காளைகளுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமை காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தமிழக அரசு மற்றும் விழா அமைப்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பது குறித்த ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 2014 மே 7-இல் ஜல்லிக்கட்டை உச்சநீதிமன்றத்தால் தடை செய்தது மட்டுமல்லாது தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 2009-ஐயும் நீக்கியது.
இதனை அப்போதைய காங்கிரஸ் அரசின் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த காட்டுமிராண்டித்தனமான பழக்கம் ஒழிந்தது என வரவேற்றார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு காரணமாக தன் நிலையை மாற்றிக்கொண்ட அப்போதைய காங்கிரஸ் அரசு காளையை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்குவதாக உறுதிமொழி மனுவை உச்சநீதிமன்றத்தில் கொடுத்தபோது நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. மத்திய அரசை எச்சரித்ததோடு இத்தகைய மனுக்களை விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை நீடித்து வருகிறது. பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தடை நீடிக்க தொடர்ந்து கடும் முயற்சிகளை தற்போதும் செய்து வருகிறது.
தற்போதைய மத்திய - மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தை சார்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசுக்கு புரியவைத்து மத்திய அரசின் உத்தரவு மூலமாகவும், மேலும் உச்ச
நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பை பெறுவதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் விழாவின்போது இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என மத்திய அமைச்சர்கள் அறிவித்தபோதும் உச்சநீதிமன்றத்தின் தடையாணை காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் மத்திய அமைச்சர்கள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக விலங்குகள் நலவாரியம், மிருகவதை தடைச் சங்கம், நீல சிலுவை சங்கம் (ஆப்ன்ங் இழ்ர்ள்ள்) விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் பீட்டா அமைப்பு ஆகியவற்றோடு பேச்சுவார்த்தை நடத்தி இது விஷயத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தும் பீட்டா அமைப்பு, அன்றாடம் தமிழகத்தில் கால்நடை செல்வங்கள் சட்டவிரோதமாக லாரிகளில் கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு மாடுவதைக் கூடங்களில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு மாமிசங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதை தடைசெய்ய வேண்டும் என எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
ஆறு மாடுகள் ஏற்றிச்செல்ல வேண்டிய லாரிகளில், அறுபது மாடுகளை அடைத்து உணவு, தண்ணீர் வசதிகூட செய்யாமல் குற்றுயிரும் குலைஉயிருமாக அன்றாடம் மாடுகள் துன்புறுத்தப்படுவது குறித்து வேதனைப் படாத பீட்டா அமைப்பு, ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்துவிட வேண்டும் என செயல்படுவது அவர்களது நோக்கத்தை சந்தேகத்திற்குரியதாக்கி உள்ளது.
விபத்துக்கள் நிகழ்கின்றன என்பதால் ஜல்லிக்கட்டிற்கே தடை என்பது அநீதியாகும். கிரிக்கெட் விளையாட்டின்போது விபத்து நடக்கிறது, காயம் ஏற்படுகிறது. அதற்காக கிரிக்கெட் விளையாட்டை தடை செய்ய முடியுமா?
ஜல்லிக்கட்டு எனும் பாரம்பரியமான
வீரவிளையாட்டை ஒழுங்குபடுத்தலாம், ஒழித்துக்கட்ட முயற்சிக்கக் கூடாது.
பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ரேக்ளா ரேஸ் (மாட்டுவண்டி பந்தயம்), சாவற்கட்டு (கோழிச் சண்டை), கிடாய் சண்டை, சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட வீரவிளையாட்டுகளை சூதாட்டம் என முத்திரை குத்தி பரவலாக தமிழகம் முழுவதும் காவல்துறையின் மூலம் தடை விதித்து வருகின்றனர்.
இத்தகைய பாரம்பரியமான வீரவிளையாட்டுகளில் காயங்களும், உயிரிழப்புக்களும் சில நேரங்களில் ஏற்படுவதும் உண்டு. மேலும் பகைமை உருவாகுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதும் உண்டு. ஆனால் இதனை காரணம் காட்டி நமது கிராமிய வாழ்க்கை முறையை அழிக்க முயற்சிக்க கூடாது.
தற்போது நமது நாட்டு மாடுகள், காளை இனங்கள், நாட்டுக்கோழி வகைகள், ஆடுகள் அரிதாகி வருகின்றன. ஏன்? நாட்டு நாய்கூட அரிதாகி விட்டது. இந்நிலையில் பொங்கல் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள் மூலம் நமது பாரம்பரிய விலங்கினங்களை காப்பாற்ற முடியும்.
ஜல்லிக்கட்டை மிருகவதையோடு தொடர்புபடுத்துவது ஏற்புடையதல்ல. உண்மையில் ஜல்லிக்கட்டு காளைகளை நேசித்து போற்றி வளர்த்து வழிபடுகின்ற ஒரு அற்புதமான திருவிழாவாகும்.
இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் இணைந்துஉரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மிருக வதையில்லாமல் நடைபெற வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு தமிழர்களாகிய நாம் அனைவரும் தோள் கொடுப்போம்.

கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.