டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எச்சரிக்கை தேவை

மின்னணு பணப் பரிமாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் பலருடைய பணம் மோசடி பேர்வழிகளால் ஆன்லைன் மூலம் திருடப்பட்ட செய்திகளை அவ்வப்போது நாம் படித்தும், கேட்டும் வந்துள்ளோம்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:52 pm

எம். அருண்குமார்

மின்னணு பணப் பரிமாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் பலருடைய பணம் மோசடி பேர்வழிகளால் ஆன்லைன் மூலம் திருடப்பட்ட செய்திகளை அவ்வப்போது நாம் படித்தும், கேட்டும் வந்துள்ளோம்.
ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளின் இணைய பரிமாற்றத்திற்கான உள்ளீட்டு முகவரி, கடவு சொல் ஆகியவற்றை மின்னணு முறையிலேயே திருடி அதன் மூலம் வங்கி கணக்கு, பற்று அட்டை, கடன் அட்டைகள் மூலம் பல லட்சம் வாடிக்கையாளர்களின் பணம் பல கோடி ரூபாய் பணம் திருட்டு போயுள்ளது.
அடித்தட்டு மக்களுக்கு மின்னணு பணப் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியாது. அவர்களிடம் பற்று அட்டை இருந்தாலும் அதனை மற்றவர்களிடம் கொடுத்து தான் அந்த பரிமாற்றத்தை செய்யக் கோருவார்கள்.
அத்தகைய நேரத்தில் அவர்களுடைய உள்ளீட்டு முகவரி, கடவுச் சொல் ஆகியவற்றை மற்றவர்கள் அறிந்து அவர்களுடைய கணக்கிலிருந்து பணத்தை திருட அதிக வாய்ப்புள்ளது.
உள்ளீட்டு முகவரி அல்லது கடவுச் சொல்லை திருடி பணத்தை திருடுவது மட்டும் திருட்டு ஆகாது. அதன் மூலம் வாடிக்கையாளருக்கு தெரியாமல் பொருட்களை வாங்குவது, பயணச் சீட்டு வாங்குவது உள்ளிட்ட திருட்டுக்களும் அடங்கும்.
இவ்வாறு மின்னணு பணப் பரிமாற்றத்தின் போது பாதுகாப்பு அம்சங்களை மீறியதற்காக நாடு முழுவதும் 32 லட்சம் பற்று அட்டைகளை பல்வேறு வங்கிகளால் திரும்பப் பெறப்பட்டுள்ளது அல்லது முடக்கியுள்ளது.
அதனால் பற்று மற்றும் கடன் அட்டைகள், இணைய வங்கி, செல்லிடப்பேசி வங்கி பரிமாற்றம் ஆகிய மின்னணு பணப் பரிமாற்றத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களின் பணத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
இதற்காக உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய தொழில்நுட்பத்துடன் மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்ய வேண்டியது அந்த சேவையை வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்களின் கடமையாகும். இதனை கண்காணிப்பது அரசின் கடமையாகும்.
உயரிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக கைரேகை அல்லது கருவிழி பதிவுடன் கூடிய பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்தலாம். தற்போது ஆதார் அட்டை அரசின் பல்வேறு திட்டங்களுடன் இணைக்கப்பட்டு வரப்படுகிறது.
ஆதார் அட்டையில் அட்டைதாரரின் கைரேகை மற்றும் கருவிழி படலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால் ஆதார் உயிரிப் பதிவேடு (பையோ மெட்ரிக்) முறை மூலமாக ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள ஒரு செல்லிடப்பேசி செயலியை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்தியாவில் உள்ள செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனங்களிடம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. கைரேகை மற்றும் கருவிழிப் படலத்தை பதிவு செய்யும் வகையிலான அம்சங்களை செல்லிடப்பேசியில் கட்டமைக்குமாறும் அந்நிறுவனங்களிடம் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான கட்டமைப்புகள் உடைய செல்லிடப்பேசிகளை அனைத்து தரப்பு மக்களாலும் வாங்கி பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது. சாதாரண, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களை அதிக விலையுள்ள ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசிகளை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு இத்தகைய முறை கட்டாயமாக்குவது போல தோன்றுகிறது.
இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதற்கான கருவிகளை குறிப்பிட்ட சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தான் வாங்கி வைத்திருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதனை மக்களை வாங்க கட்டாயப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லிடப்பேசிகளை அதிக விலைக்கு அனைவராலும் வாங்க இயலாது.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செல்லிடப்பேசிகளை பயன்படுத்தி தான் பெரும்பாலான குற்றங்கள் நடந்து வருகின்றன.
அந்த செல்லிடப்பேசியை தயாரிக்கும் நிறுவனங்களால் கைரேகை மற்றும் கருவிழிப் படலத்தை பதிவு செய்யும் வகையிலான அம்சங்களை செல்லிடப்பேசியில் கட்டமைக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதை பயன்படுத்தி அந்த அம்சங்கள் உருவாக்கப்பட்டால் அந்த செல்லிடப்பேசியிலிருந்தே தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களுடைய கைரேகை மற்றும் கருவிழிப் படலத்தின் தகவல்களை திருடி அதனை பயன்படுத்தி மோசடி நடக்கவும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
அதனால் அத்தகைய செல்லிடப்பேசிகளை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்களை தள்ளிவிடக் கூடிய நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் மின்னணு பணப் பரிமாற்றத்தின்போது வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்று உயரிய பாதுகாப்பு அம்சங்களோடு கூடிய தொழில்நுட்பத்தை, சேவை வழங்கும் நிறுவனங்கள், சரக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வாங்கி பயன்பாட்டுக்கு எடுத்து வரவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
மக்கள் எந்தவித செலவில்லாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரொக்கமில்லா மின்னணு பண பரிமாற்றத்தை செய்ய வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய நடைமுறையை கண்காணித்து மக்களின் பணத்திற்குண்டான பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.