காலம் அழைத்த தருணத்திலும் உறுதியாக நின்ற கலாம்!
செப்டம்பர் 30, 2001-ல் விபத்தில் சிக்கி, அதிஷ்டவசமாக டாக்டர் அப்துல் கலாம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்


காலன் அவரை பலமுறை துரத்தித் துரத்தி தோற்றிருக்கிறான். அதை அவர் புன்னகையோடு எதிர்கொண்டிருக்கிறார். மரணத்தைக் கண்டு மாமனிதர்கள் அஞ்சுவதில்லை. அது குறித்த பயம் ஒருபோதும் அவர்களுக்கு இருப்பதில்லை. டாக்டர் அப்துல் கலாம் வாழ்க்கையில் ஒரு சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அப்போது அவர் பதினோறாவது இந்திய ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு பத்து மாதத்திற்கு முன் பவன் ஹேன்ஸ் ஹெலிகாப்டரில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொக்காரோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது, செப்டம்பர் 30, 2001-ல் விபத்தில் சிக்கி, அதிஷ்டவசமாக டாக்டர் அப்துல் கலாம் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார் எனறு செய்தித்தாள்கள் பரபரப்பான விஷயத்தை பிரசுரித்தன. விபத்திலிருந்து தப்பிவிட்டபின் விடுபட்ட மனநிலையில் இருப்பது தான் அனைவரும் செய்வது, ஆனால் அப்போதும் தன் கடமையைச் செய்ய கிளம்பினார் டாக்டர் கலாம். வாழ்க்கையை இயல்பாக ஏற்று வாழ்ந்தவர்களால் தான் மரணத்தையும் இயல்பாக ஏற்க முடியும். எப்படி வாழ வேண்டும் என்பதற்கான முன் உதாரணமாய் வாழ்ந்து இறவாப் புகழ் பெற்றுள்ளார் அவர்.
ராஞ்சியில் இருந்து புறப்பட்டிருக்கிறது. அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பிரதம மந்திரியின் தலைமை அறிவியல் ஆலோசகருடன் பொக்காரோவிற்கு பயணிக்கிற வழியில் டாக்டர் அப்துல் கலாமை ஒரு பள்ளி விழாவில் பங்கேற்பதற்காக இறக்கிவிட்டுவிட்டுச் செல்வது திட்டம். ஆனால் நடுவானில் ஹெலிகாப்டர் பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் காத்தாடியின் அச்சிலிருந்து மிகப்பெரிய சப்தம் வந்திருக்கிறது. உடனே விமானி நாம் அனைவரும் இறப்பது உறுதி என்று கத்தியிருக்கிறார். அப்போது கலாம் தன் அருகில் அமர்ந்திருந்த ஜார்கண்டை சேர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி சமரேஷ் சிங்கிடம் பயப்படவேண்டாம். எதுவும் விபரீதமாய் நடக்காது என்று புன்னகையோடு கூறியிருக்கிறார்.
நம்பிக்கையை இழந்த நிலையில் தான் கடைசி முயற்சியாக விமானி பொக்காரோ ஹெலிபேடின் ஓடுதளத்தில் இறக்கியிருக்கிறார். அப்போது ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழக்க, ரோட்டார் நொறுங்கி அந்த ஹெலிகாப்டர் மிகப்பெரிய சேதாரத்திற்கு ஆட்பட்டதென்றாலும், அதில் பயணித்த கலாம் உட்பட அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள். அவர் சொன்னது போலவே கலாமிற்கு அந்த விபத்தில் சிராய்ப்பும், சுளுக்கும் ஏற்படுகிறது. இருந்தாலும் அவர் மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் செல்லும்படி சொல்லவில்லை. முதலில் பொக்காராவில் இருக்கிற ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளிக்கூடத்திற்கு போகும்படி சொல்கிறார். அங்கே சென்றவர் திட்டமிட்டபடி உரையாற்றுகிறார். அதில் குறிப்பிட்ட விஷயம் குழந்தைகளே பெரிதாய் கனவு காணுங்கள்!
அன்று மாணவர்களுக்கு டாக்டர் கலாம் ஆற்றிய உரையில் மறந்தும் தனக்கு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்து பற்றி கலாம் குறிப்பிடவில்லை. அது தான் கலாம். டாக்டர் அப்துல்காலாமின் நேரம் தவறாமை, கடமையுணர்வு, மாணவ சமுதாயத்தின் மீது அவர் வைத்திருந்த வாஞ்சை யாவும் இந்த ஒரு நிகழ்வின் மூலம் துல்லியமாய் உணர்ந்து கொள்ள முடியும்.
இதேபோல தான் காலன் கலாமை எடுத்துக்கொள்ள இம்முறை வந்தபோதும்கூட மேகாலயா மாகாணத்தில் உள்ள ஷில்லாங் நகரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் வளாகத்தில் மாணவர்களுக்கு ஆற்றிய உரையை முடிக்க நினைத்தே ஆரம்பித்தார். ஆனால் தனக்கான நிறைவுப்புள்ளியை அவ்விடத்தில் நீங்காமல் இட்டுச் சென்றிருக்கிறார்.
வாழ்தல் குறித்த போராட்டத்தில் அவர் சளைக்காமல் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து போராடி வந்திருக்கிறார். அந்த மோசமான விபத்திற்கு பிறகு வந்த பதினான்கு வருடங்களிலும் இதுபோல பல கடினமான கட்டங்களை டாக்டர் கலாம் வெற்றிகரமாக கடந்துள்ளார். அவர் நினைவுகளை உலக மக்களின் எண்ணங்களில் மரணிக்கச் செய்வதென்பதில் காலனுக்கு எப்போதும் தோல்வி தான் மிஞ்சும் என்பதற்கு அவரின் வாழ்க்கை ஒரு பாடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...