இன்றைய காலகட்டத்தில் இலக்கியக் கூட்டங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகளில் இளைய தலைமுறையினரைப் பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டோரே கலந்து கொள்கின்றனர்.
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு இலக்கியக் கூட்டங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் அடிக்கடி நடைபெறும். கோயில் திருவிழாக்களில் கட்டாயம் ஆன்மிகப் பேருரைகள் அரங்கேறும். அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவுகள் அடிக்கடி நடக்கும்; பட்டிமன்றங்களுக்கும் பஞ்சமிருக்காது. அரசியல் கூட்டங்களிலும் இலக்கிய ஆறு தேனாகப் பாயும். பல்வேறு கட்சிகளிலும் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்கள் இருந்தார்கள். கட்சிக் கொள்கைகளைப் பற்றிப் பேசும்போதே, சிந்தனைக்கு விருந்தளிக்கும் சொல்லாடல்களை முழங்குவார்கள்.
பெண்களும், ஆண்களும் போட்டி போட்டுக்கொண்டு தரையில் அமர்ந்தும், தெருவில் நின்றுகொண்டும் பேச்சாளர்களின் சுவை ததும்பும் சொற்பொழிவுகளை ரசிப்பார்கள். கூடவே தங்கள் குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் அந்தப் பேச்சுகளை கேட்பார்கள். இரவு எட்டு மணிக்குத் தொடங்கும் சொற்பொழிவுகள் சில நேரங்களில் நள்ளிரவு வரை நீளும். அப்போதும் கூட்டம் கலைந்து போகாமல் ஆர்வத்துடன் செவி மடுக்கும்.
ஆனால், இன்றைக்கு நிலைமையே வேறு. பட்டிமன்றங்களும் அரங்குகளுக்குள் அடைபட்டு விட்டன. குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்காக, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அரங்குகளில் நடைபெறும் விழாக்கால பட்டிமன்றங்கள், பதிவு செய்யப்பட்டு, பின்னர் பொதுமக்கள் பார்க்கும்படி ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.
அந்தக் காலத்து அறிஞர்கள் நல்ல இலக்கியங்களை தெருவுக்கு எடுத்து வந்தார்கள். அதைக் கேட்டுக் கேட்டு இளைஞர்களும், பதின்ம வயதுப் பருவத்தினரும் இலக்கியம், ஆன்மிக அறிவு பெற்றார்கள். சாலையில் நடந்து செல்பவர்களைக்கூட தூண்டில் போட்டு இழுத்து வந்த பெருமை வாய்ந்த இலக்கியக் கூட்டங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் இன்றில்லை. அதனால் இந்தக் காலத்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதுகுறித்த ஆர்வம் இல்லை. பெற்றோரும் அவர்களுக்கு நல்ல பேச்சுகளை அறிமுகப்படுத்துவதில்லை. அறிதிறன்பேசி பயன்பாடு அதிகரித்து, புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் குறைந்துவிட்டது. சமூக ஊடகங்களின் பெருக்கத்தால், அதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர். யூடியூப் சேனல்களில் கிடைக்கும் சிறந்த சொற்பொழிவுகளை யாரும் கேட்பதில்லை.
ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் மன்றங்கள், இலக்கிய மன்றங்கள் இருந்தன. மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆசிரியர்களும் இருந்தனர். திருக்குறள், கம்பராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், புறநானூறு, அகநானூறு என பல்வேறு இலக்கிய அமுதங்களைப் பருகும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. அதனால் தேன் உண்ட வண்டுகளைப் போல, பழந்தமிழ் இலக்கியங்களை, நவீன இலக்கியங்களைத் தேடித் தேடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அந்த இலக்கியங்கள் காட்டிய நல்வழியில், அறநெறியில் வாழத் தலைப்பட்டார்கள். மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிகரித்தது. இன்று அதுபோன்ற நிலை இல்லை.
இன்றைக்கு பள்ளி, கல்லூரிகளில் இலக்கிய மன்றம், மாணவர் மன்றம், நீதி போதனை வகுப்புகள் என்பதே அபூர்வமாகி விட்டதே. இதுபோன்ற மன்றங்களால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? வீணாக எதற்காக நேரத்தை செலவிட வேண்டும்? என்ற எண்ணம் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. இளம் தலைமுறையினரிடையே நம் கலாசாரத்தை, பண்பாட்டை, ஆன்மிக சிந்தனைகளை எடுத்துரைக்க மறந்து போனோம். மதிப்பெண்களை மட்டுமே துரத்தும் இயந்திரங்களாக அவர்களை மாற்றிவிட்டோம்.
சமூகத்தில் நடக்கும் கொலை, திருட்டுச் சம்பவங்கள், மதுப் பழக்கம், போதைப் பொருள்கள் பழக்கம் போன்ற பல்வேறு ஒழுக்கக்கேடான, உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை எளிதில் இன்றைய பதின்ம வயது பருவத்தினர் கற்றுக்கொண்டு சீரழிந்து போகிறார்கள். நினைத்தது நடக்காவிட்டால், கேட்டது கிடைக்காவிட்டால் தற்கொலை என்னும் கூர்வாளை கையிலேந்தி வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்.
எது நல்லது, எது கெட்டது என்பதை நம் இதிகாசங்கள், இலக்கியங்கள் மூலம் அவர்களுக்கு எடுத்துரைப்பார் யார்? 'வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி தோல்வி இயல்பு. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். தோல்வியே வெற்றிக்கு முதல் படி. இதோ நம் பழந்தமிழ் இலக்கியங்களிலும் தோற்றுப் போன மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தம் முயற்சியால் முன்னேறி வெற்றியின் வாசலைத் தொட்டிருக்கிறார்கள் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் நீதி போதனை வகுப்புகளை மீண்டும் பள்ளிகளில் கொண்டு வரவேண்டும்.
அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர் மன்றங்கள், இலக்கிய மன்றங்களை ஆரம்பித்து மாணவர்கள் மத்தியில் பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இதன் முலம் அறநெறி தவறாத, நல்லொழுக்கம் நிரம்பிய, வாழ்க்கையின் விழுமியங்களைப் போற்றும் மாணவச் செல்வங்களை உருவாக்க முடியும். வழக்கொழிந்து போன சில நல்ல வழக்கங்களை மீண்டும் செயல்படுத்த கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்.
இது நேரத்தை வீணாக்கும் முயற்சியல்ல; மாணவர்களின் நல்வாழ்வுக்கான விதை என்பதை உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மையின மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும்
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது நடவடிக்கை

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


