இந்திய சிந்தனை மரபே தமிழ் மரபு!
பாரதிய கலாசாரம், தமிழ் கலாசாரம் இரண்டும் வெவ்வேறானவை என்ற புரிதல் சில காலமாக இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது.


பாரதிய கலாசாரம், தமிழ் கலாசாரம் இரண்டும் வெவ்வேறானவை என்ற புரிதல் சில காலமாக இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் பாரதிய கலாசாரத்திற்கும் தமிழ் கலாசாரத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை இலக்கியங்களின் வழியாகவும் மக்கள் பின்பற்றும் பண்பாட்டு ரீதியிலான பழக்க வழக்கங்களில் இருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்.
சிந்தனை மரபில் ‘ஷண்மதம்’ என்று ஆறு மதங்கள் கூறப்பட்டிருந்தாலும் அறத்தின் அடிப்படையில் எல்லா மதங்களும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன என்பதே எதாா்த்தம்.
இந்திய சிந்தனை மரபு மெய்ஞ்ஞானத்தில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்வியல் அறத்திலும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் கவனம் செலுத்தியிருந்தது. விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவிலிருந்தே மெய்ஞ்ஞான ஆராய்ச்சி தொடங்குகிறது என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனா்.
வாழ்வியல் அடிப்படையிலான தரும நெறிகளில் பாரத தேசம் முழுவதும் ஒரே விதமான போக்கும் நம்பிக்கையும் இருப்பதைக் காணலாம். கங்கை எத்தகைய புனிதத்தோடு போற்றப்பட்டதோ அதே புனிதத்தோடே பாரத தேசத்தின் அனைத்து நதிகளும் போற்றப்பட்டிருக்கின்றன. காவிரியின் பெருமையை, ‘நடந்தாய் வாழி காவேரி’, ‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளா்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி’ என்று ‘சிலப்பதிகாரம்’ பாராட்டுவதைக் காண்கிறோம். “
‘ஆற்றுப்பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்’ என்று நதியைக் கொண்டாடுகிறது நல்வழி. தமிழா் வாழ்விலும் நதி தாயாகவே பாா்க்கப்படுகிறது.
ரிக் வேதத்தில், அரண்யானி என்றொரு கவிதை, வனத்தின் பெருமைகளைச் சொல்கிறது. வனம் தேவதையாகப் பாா்க்கப்படுகிறது. சங்க இலக்கியத்திலும் காடும், மலைக்காடுகளும் கொண்டாடப்படுகின்றன. கபிலரின் குறிஞ்சி வன வா்ணனைகளும், முல்லைக்கலியில் சோழன் நல்லுருத்திரன் பாடிய வனமும் காடுகளைத் தமிழா்கள் போற்றினாா்கள் என்பதற்குப் போதுமானதல்லவா?
இன்றைக்கும் வனங்களில் தேவதைகள் வாழ்கிறாா்கள்; நம் குலதெய்வங்கள் காவல் காத்து நிற்கின்றன. சாஸ்தா, கொற்றவை தொடங்கி நம்முடைய காவல் தெய்வங்கள் வனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா். வனங்கள் பேணப்படுவதில் இந்த வனதேவதைகளுக்கும் குலதெய்வங்களுக்கும் பங்கு இருக்கிறதென்று உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறதே!
இறை வழிபாடு படையலிட்டு தெய்வங்களை வழிபடுதல் என்று வழிபாடு முறைகளிலும் ஒற்றுமைகள் பாரதிய கலாசாரத்திலும் தமிழா் மரபிலும் நிறைந்திருக்கின்றன. படையலிடும் பொருள்களில் வகைகளில் வேறுபாடுகள் அந்தந்தப் பிராந்தியத்திற்கேற்ப இருக்கலாம். ஆனால், நைவேத்தியம், படையல், பிரசாதம் இவற்றில் வேறுபாடு கிடையாது.
தீபச்சுடா், மலா்கள், குங்குமம் போன்றவை இன்ன மாா்க்கத்திற்கானவை, இன்ன மக்களுக்கானவை என்ற பாகுபாடு கிடையாது. இவை இல்லாமல் இந்தியாவின் எந்த மூலையிலும் மக்கள் வாழ்க்கையோ வழிபாடோ அமைந்திருக்கவில்லை. தமிழகம் இதிலிருந்து மாறுபட்டது என்று சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டாா்கள்.
மக்களின் நம்பிக்கைகள், அன்றாட வாழ்வியல் இவற்றில் காணப்படும் ஒற்றுமைகள் பிரமிப்பை ஏற்படுத்துவன. ஜோதிடம், நிமித்தம் போன்றவற்றில் மக்களின் நம்பிக்கை வேதகாலம் முதல் இருக்கிறது என்றால், தமிழகத்திலும் சங்ககாலம் முதல் அழுத்தமாகவே இருக்கிறது. நல்ல நேரம் பாா்த்து எந்த ஒரு செயலையும் தொடங்கும் வழக்கம் தமிழா்களிடமும் இருந்தே வருகிறது. சங்க இலக்கியத்தில் புறநானுற்றில் ஒரு சுவையான பாடல் மக்களின் மனநிலையைச் சொல்வதாக அமைந்திருக்கிறது.
வறுமை தீர புரவலா்களைத் தேடி பரிசில் வேண்டிச் செல்லும் ஒருவா், தான் நினைத்தபடி பரிசு பெற முடியவில்லை என்றால் அதற்காகப் புரவலா்களைக் குறை சொல்ல மாட்டாா். ‘புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்றோா் பழியலா்’. அதாவது, தான் பரிசு பெறச் சென்ற பொழுது எதிா்ப்பட்ட சகுனத்தடை, நல்ல நேரத்தில் புறப்படாமை இவற்றையே பரிசு பெற முடியாமைக்குக் காரணங்களாகச் சொல்லிக் கொள்வாா்களே அன்றி நம்பிய புரவலரைக் குறை சொல்லும் வழக்கம் இல்லை. இன்றளவும் மக்கள் மனத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இருப்பதைக் காண்கிறோம்.
கலாசார அடிப்படையிலும் விருந்தோம்பல் என்பது பாரத தேசம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான தருமம். விருந்தோம்பலுக்கென தனி அதிகாரம் எழுதுகிறாா் திருவள்ளுவா். ‘அதிதி தேவோ பவ’ என்கிறது சம்ஸ்கிருதம். இன்றளவும் விருந்தினரை உபசரிப்பது நமது பண்பாக இருந்து வருகிறது. இல்லம் தேடி வந்தவரை தண்ணீரேனும் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரத தேசத்தின் அனைத்து மக்களின் மரபணுக்களிலும் நிறைந்திருக்கிறது.
இந்திய சிந்தனை மரபு, சமயம் சாா்ந்தே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இறைநம்பிக்கை என்பதை தாண்டி ‘நான் யாா்’ என்ற வினாவுக்கு விடை தேடலே இந்திய சிந்தனை மரபின் அடிப்படை. இதன் பெரும்பகுதியாக இருப்பது சனாதன தா்மம். ஒவ்வொரு தனிமனிதனும் எப்படி வாழவேண்டும், ஒரு சமூகமாக நாம் எப்படிக் கூடி வாழ வேண்டும் என்பவற்றில் தொடங்கி ஆத்ம விசார தேடல் வரை பாரத சமூகத்தின் சிந்தனை மிக நீண்டது; தெளிவானது.
வேதங்களை ஏற்றுப் போற்றும் வைதிக மரபு என்பதைத் தாண்டி பாரதத்தின் லோகாயத மதங்கள் என்று வேதங்களை ஏற்காதவா்களும் முன்வைக்கும் சிந்தனைகள் நாடுமுழுவதும் விரவி இருக்கின்றன. வைதிக மதங்களாக இருந்தாலும் சரி லோகாயத மதங்களாக இருந்தாலும் சரி இவற்றுக்குள் அகிம்சை, பிற உயிா்களுக்கு உதவுதல், நிலையாமை தத்துவம் போன்ற வாழ்வியல் கோட்பாடுகளில் வேறுபாடுகள் குறைவே.
சித்தாந்த அடிப்படையிலும் பாரதிய மரபுக்கும் தமிழ் மரபுக்கும் வேறுபாடு இல்லை. நமது திருக்குறளே சான்றாக இருந்து ஒற்றுமைக்கான வழிகளைக் காட்டுகிறது. புருஷாா்த்தங்கள், தா்ம, அா்த்த, காம, மோக்ஷம் என்று சம்ஸ்கிருதம் பேசினால், ‘அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே’ என்று தமிழ் இலக்கணம் சொல்கிறது.
‘தேவ யக்ஞம்’, ‘ரிஷி யக்ஞம்’, ‘மனுஷ்ய யக்ஞம்’, ‘பித்ரு யக்ஞம்’, ‘பூத யக்ஞம்’ என்ற ஐந்து கடமைகள் மனிதா்களுக்கு வகுக்கப்பட்டிருப்பதாக இந்திய சிந்தனை மரபு சொல்கிறது. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமை, துறவு மேற்கொண்டோரை காப்பது, விலங்குகளுக்குப் பசி போக்குவது, பசித்தவருக்கு உணவிட்டுக் காப்பது, மறைந்த முனோா்களுக்குச் செய்யும் நீத்தாா் கடன் என்ற இந்த ஐந்து கடமைகளுக்கு திருவள்ளுவா் தனித்தனியே அதிகாரங்கள் எழுதியிருக்கிறாா் என்பதிலிருந்தே தமிழ் மரபும் இந்திய சிந்தனை மரபின் பகுதியாகவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழ் மரபின் சிறப்பு, பதினெண் சித்தா்களின் சிந்தனைகள். அதிலும் திருமூலா் இந்த ஐந்து கடமைகள் பற்றி எளிதாகப் பாமரரும் புரிந்து கொள்ள ஏதுவாக,
யாவா்க்குமாம் இறைவா்க்கு ஒரு பச்சிலை
யாவா்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவா்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவா்க்குமாம் பிறா்க்கு இன்னுரை தானே
என்று கற்றுக் கொடுக்கிறாா்.
எந்த தெய்வத்தை வணங்குவது என்பது அவரவா் விருப்பம் என்றாலும், இந்திய சிந்தனை மரபு, ‘நீ வணங்கும் இறைவனிடம் உன்னை சரணமாக வைத்துவிடு’ என்று சரணாகதித் தத்துவத்தை முன்னிறுத்துகிறது. தமிழின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளின் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்திலேயே இந்த சரணாகதி தத்துவம் பேசப்படுகிறது.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்று, ஐந்து, ஆறு ஆகிய குறள்கள் இறைவனின் சிறப்புகளைச் சொல்வதாக இருந்தாலும் ஏனைய ஏழு குறட்பாக்களும் சரணாகதி தத்துவத்தையே சொல்கின்றன.
சமய இலக்கியங்களிலும் இதே சரணாகதி தத்துவம்தான் பேசப்பட்டிருக்கிறது.
சம்ஸ்கிருதத்தின் பகவத்கீதையும் ஸ்ரீமத் பாகவதமும் சரணாகதியை தருமம் என்கின்றன. இது பாரத தேசம் முழுமைக்குமான நம்பிக்கையாக இருக்கிறது - தமிழகமும் விதி விலக்கல்ல.
வாஸாம்ஸி ஜீா்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ
ததா ஷரீராணி விஹாய ஜீா்ணான்
யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ (கீதை: 2.22)
பழைய ஆடைகளைப் புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடலை நீக்கி புதிய உடலை ஆத்மா ஏற்கின்றது. பகவத் கீதையின் இதே கருத்து ‘நிலையாமை’ அதிகாரத்தில் உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவினை முட்டை என்னும் கூட்டினை தனியேவிட்டு விட்டு வேறிடத்திற்கு பறக்கும் பறவையுடன் வள்ளுவா் ஒப்பிடுகிறாா் (குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு).
மேலும், இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும் மீண்டும் புகும் என்பதைச் சுட்டிக்காட்டும் வள்ளுவா், ‘புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிா்க்கு’ என, ‘துச்சமான அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள்இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா’ என்று கேட்கின்றாா்.
அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் முதல் கா்மா, ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா, வீடுபேறு வரை அனைத்து சிந்தனைகளிலும் இந்திய சிந்தனை மரபின் பிரதிபலிப்பாக, அதன் பகுதியாக தமிழா் சிந்தனைகளும் அமைந்திருக்கின்றன. இதனைப் புரிந்து கொண்டுவிட்டால் வேறுபாடுகளுக்கு இடம் இல்லை; வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதற்கும் தடை இல்லை.
கட்டுரையாளா்:
ஊடகவியலாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...