பாத்திர இயக்கம் தொடங்குவோம்


சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்க தமிழ்நாட்டில் "மீண்டும் "மஞ்சள் பை' இயக்கம் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வரும்போது, பெறப்படும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கடைக்குச் செல்லும்போது கையில் பை எடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. நாகரிகம் பெருகிவிட்டதாகக் கருதப்பட்ட பிறகு, கையில் பையுடன் சென்றால் ஒரு மாதிரியாகப் பார்க்கும் சூழல் வந்தது. அதிலும் குறிப்பாக "மஞ்சள் பை' என்பது கேலியாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு நம்மிடமிருந்த பழக்கங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இப்போது நாம் செய்யும் பெரும்பிழை புரியவரும்.
காலை உணவோ, மதிய சாப்பாடோ, இரவு சிற்றுண்டியோ வாங்க உணவுக்கூடத்துக்குச் சென்றால் நாம் கையில் பாத்திரங்களுடன் சென்றோம். காலை உணவாக இட்லி வாங்கினால், இட்லி மட்டும் இலையில் வைத்து கட்டித் தரப்படும். சாம்பார், சட்னிகள் நாம் கொண்டு செல்லும் பாத்திரத்தில் ஊற்றித் தரப்படும். மதிய உணவு வாங்குவதற்காகவே நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான வீடுகளில் கேரியர் இருக்கும்.
எவர்சில்வர் கேரியரில் சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், உள்ளேயொரு சிறு இலையில் ஊறுகாய் மடித்து வைத்து விட்டு, அரிசிச் சோற்றை இலையில் கட்டித் தருவார்கள். இவற்றை எடுத்து வருவதற்கான கூடைப் பைகள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மில் 99 சதவீதம் பேர் எந்தப் பாத்திரமும் இன்றி கைகளை வீசிக் கொண்டுதான் செல்கிறோம். எல்லாமும் பிளாஸ்டிக் பைகளில் கட்டித் தரப்படுகின்றன, அதுவும் நல்ல சூட்டோடு!
சின்னஞ்சிறிய இலையில் வைத்துத் தரப்பட்ட ஊறுகாய்க்கு, இப்போது சிறிய பிளாஸ்டிக் பை அல்லது பிளாஸ்டிக் டப்பா. சராசரியாக சைவ சாப்பாடு என்றால் 6 முதல் 8 பிளாஸ்டிக் பைகள். அசைவச் சாப்பாடு என்றால் 7 முதல் 9 பிளாஸ்டிக் பைகள். ஸ்டார் ஹோட்டல்களில் அப்பளத்தையும், உப்பையும் கூட பிளாஸ்டிக் பைகளில் கட்டித் தருகிறார்கள்.
காலையில், மாலையில் தேநீர்க் கடைகளுக்குச் செல்வதற்காக பெரும்பாலான வீடுகளில் எவர்சில்வர் சொம்பு இருக்கும். கடைக்காரர் தேநீரை ஊற்றி, சூடு ஆறிவிடாமல் இருக்க, நாளிதழின் துண்டு காகிதத்தை மேலே வைத்து மூடிக் கொடுப்பார். சில நேரங்களில் அந்தத் காகிதத்துக்கும் சணல் கொண்டு கட்டித் தருவார்கள்.
கொஞ்சம் பணக்காரர்கள் என்றால் தேநீருக்கான பிரத்யேக பாத்திரம் இருக்கும். இன்னும் வசதி உள்ளவர்கள் "பிளாஸ்க்' வைத்திருப்பார்கள்.
இன்று, நல்ல சூட்டோடு பிளாஸ்டிக் கவரில் தேநீர், காபி, லெமன் டீ, இஞ்சி டீ எல்லாமும் கட்டித் தரப்படுகிறது. சணலுக்குப் பதில் ரப்பர் பேண்ட்! பிளாஸ்டிக் பைகள் மண்ணில், நீர்நிலைகளில் வீசப்படும்போது சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேட்டைத் தரக் கூடியவை என்பது ஒரு பக்கம். சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டினால், பிளாஸ்டிக் மூலக்கூறுகள் இளகி, உருகி உணவுப் பொருளுடன் கலந்து புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மற்றொரு பக்கம்.
இதேபோலத்தான், பால். வீட்டுக்கு வெளியே ஒரு சொம்பு வைக்கப்பட்டிருக்கும். பால்காரர், அதில் ஊற்றி வைத்துச் செல்வார். அல்லது மணியடிக்கும்போது வீட்டைத் திறக்கும்போதே சொம்புடன் செல்வோம். பால் வாங்கிக் கொள்வோம். இப்போது காலை, மாலை இரு வேளைகளுக்கும் வண்ண வண்ண பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வருகிறது.
இறைச்சிக் கடைகளுக்குச் செல்லவும் பாத்திரம் எடுத்துச் சென்றோம். பாத்திரம் கொண்டு வராதவர்களுக்கு இலைகளில் வைத்து, வாழை நார் கொண்டு கட்டித் தந்தார்கள். அதேபோலத்தான் பூ வாங்கப் போனாலும், இலைகளில் வைத்து சுருட்டி வாழை நார் கிழித்து கட்டித் தந்தார்கள்.
வேலைக்குச் சென்றவர்கள் மதிய உணவை முடித்து கழுவிய டிபன் பாக்ஸில் வீட்டுக்கு பூ வாங்கி வந்தார்கள். இவையனைத்தும் இப்போது வெள்ளை வெள்ளைவெளேரென்ற பிளாஸ்டிக் தாளில் வைத்து - நாகரிகமாக - ஒரு முடிச்சு போட்டுத் தருகிறார்கள். அது கையாளுவதற்கு எளிதாகவும் கருதப்பட்டுவிட்டது.
மாதச் செலவுக்கான மளிகைப் பொருட்களை வாங்கச் செல்லும்போது எண்ணெய் வகைகளை வாங்க பாத்திரம் எடுத்துச் சென்றோம்.
நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் என அனைத்துக்கும் தனித்தனியே சிறியதும் பெரியதுமாக பாத்திரங்கள் இருந்தன. இப்போது எல்லாமே பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாக மாறிவிட்டன. பாக்கெட்டுகள் நேரடியாக குப்பைக்கு.
இப்படித்தான் மாறியிருக்கிறோம். இந்த நிலையில், மஞ்சள் பை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம்தான். உணவகங்களுக்கு, தேநீர்க் கடைகளுக்கு, இறைச்சிக் கடைகளுக்கு, பூக்கடைகளுக்குச் செல்லும்போது அவற்றுக்குத் தேவையான பாத்திரங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மக்களுக்குப் புரியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
2019-இல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை கொண்டு வரப்பட்டபோது, பல உணவகங்களில் பாத்திரம் கொண்டு வருவோருக்கு 5 சதவிகித கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது. இப்போதும் அப்படிச் செய்யலாம்.
சாதாரணக் குடும்பத்தினர் கூட, மாதம் ஒன்றுக்கு சராசரியாக நூறு பிளாஸ்டிக் பைகளை வீட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அவை அனைத்தும் அருகிலுள்ள சாக்கடையில், குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுகின்றன. இப்படியாக ஆண்டுக்காண்டு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகள்!
எனவே, பாத்திர இயக்கம் என்பது மஞ்சள் பை இயக்கத்தைக் காட்டிலும் அவசியமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...