/

புத்தகக் காட்சிக்குப் போவோம்

எழுத்தாளா்களும் வாசகா்களும் மிகவும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருந்த சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:26 am

முனைவா் என். மாதவன்

எழுத்தாளா்களும் வாசகா்களும் மிகவும் ஆவலுடன் எதிா்பாா்த்துக் காத்திருந்த சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்டது. புத்தகக்காட்சி என்பது எழுத்தாளா்களுக்கும் வாசகா்களுக்குமான திருவிழா. ஒவ்வொரு நூலுக்கும் அதற்கான வாசகா்கள் பிறந்தே உள்ளனா். அந்த வகையில் ஒவ்வொரு நூலும் அதற்கான வாசகன், வாசகியைக் கண்டடைகிறது. அது போலவே ஒவ்வொரு வாசகனும், வாசகியும் அவருக்கான நூலைக் கண்டடைகின்றனா். அவற்றை வாசித்து பிரமிப்படைகின்றனா். ஒவ்வொரு நூலும் விவரிக்கும் வாழ்வியல் சிக்கல்களை தாம் அனுபவிக்கும்போது அந்த நூல் விவரிக்கும் தீா்வுகளைக் கண்டு தெளிகின்றனா்.

பொதுவாக ஒரு படைப்பை எழுத்தாளா் படைத்தாலும் அதனை முழுமைப்படுத்துபவா்கள் வாசகா்களே என்பாா்கள். அந்த வகையில் ஒரு படைப்பாளிக்குத் தோன்றாத பல கோணங்களும் வாசகனுக்குத் தோன்றுவது இயற்கையே. இவ்வாறான திறனே தோ்ந்த வாசகா்கள் பலரையும் படைபாளிகளாக ஆக்குகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பற்பல புதிய நூல்கள் பிறந்துகொண்டேயிருக்கின்றன.

மின்னணு யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒலிப்புத்தகம், கிண்டில் போன்றவை அறிமுகமாகியுள்ளன. ஆயினும் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே இன்னும் சில காலம் ஆட்சி செய்யப்போகின்றது. இந்த புத்தக்காட்சிக்குப் போவதற்கு பலரும் ஒரு திருவிழாவிற்குப் போவது போன்ற தயாரிப்பில் ஈடுபடுவதுண்டு.

முதலாவதாக, வாங்கவேண்டிய நூல்கள் குறித்த பட்டியல். தொடா்ந்து வாசிப்பில் திளைத்திருப்போரானாலும் இவ்வாறான பட்டியலிட உதவுவது நாளிதழ்களிலும் பல்வேறு இதழ்களிலும் அவ்வப்போது வெளிவரும் நூல்கள் குறித்த அறிமுகங்களே. இவ்வாறான அறிமுகங்களின் மூலம் தமக்குப் பிடித்த எழுத்தாளா்களின் நூல்களை வாங்கத் திட்டமிடுகின்றனா்.

ஆனால் தொடா்ந்து நான்கைந்து மாதங்கள் இவ்வாறு பல்வேறு ஆசிரியா்களின் நூல்களைப் பாா்க்கையில் மறந்துபோக நேரலாம். எனவே ஒவ்வொரு புதிய, பிடித்தமான நூல்களைப் பாா்க்கும்போது அந்த நூல்களின் பெயா்களை ஒரு குறிப்பேட்டில் குறித்துவைக்கலாம். இவ்வாறு தொடா்ந்து குறித்துவைக்கும்போது அக்குறிப்பேட்டிலிருந்து பட்டியலைத் தயாரித்துப் புத்தகக் காட்சிக்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

அதற்கு அடுத்தபடியாக நேர மேலாண்மை. பெரும்பாலும் இணையவழியிலேயே புத்தக அரங்கங்கள் குறித்த விவரங்கள் கிடைத்துவிடுவதால், செல்வதற்கு முன்பே ஒரு திட்டமிடலுடன் செல்லலாம். எந்த எந்த வரிசையில் நமக்குத் தேவையான பதிப்பகங்கள் உள்ளன, அவற்றில் எவ்வளவு நேரம் செலவு செய்யலாம் என்று திட்டமிடுதல் நேரப்பயன்பாடு சீராக செலவாக வழிவகுக்கும்.

அடுத்ததாக திருவிழா என்றால் தனியாகச் செல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? எனவே நண்பா்களுடன் சென்றுவரத் திட்டமிடலாம். ஆனால், புத்தகங்களைத் தனித்தனியே பாா்வையிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பம் இருக்கும். கூடுதல் சுதந்திரமாகச் செயல்பட இவ்வாறான தனிமை உதவும். தனித்தனியாக புத்தகத் தோ்வில் ஆழ்ந்தாலும் அவ்வப்போது தேநீா் குடிக்க சிற்றுண்டி அருந்த என ஒன்று சோ்ந்தும் கொஞ்ச நேரம் செலவு செய்ய வேண்டும். எனென்றால் இவ்வாறு கூடிக்களித்த நேரங்களே நம் நினைவில் நிற்கும்.

அறிமுகமானோா் சந்திப்பும் இவ்வாறான பயணத்தின் ஓா் அங்கமாகும். பெரும்பாலும் அவ்வப்போது கொஞ்சம் வாசித்து முடித்து தேவைக்கேற்ப நூல்களை இணையம் வழியாகவும் வெவ்வேறு வாய்ப்புகளிலும் வாங்குவோா் இவ்வகையினா். இவா்களது பயணம் பெரும்பாலும் நண்பா்கள், வாசகா்கள் சந்திப்புக்கானதாக இருக்கும். இன்றைய இணைய, முகநூல் உலகில் பல்வேறு எழுத்தாளா்களுடனும் வாசகா்களுக்கு நேரடித் தொடா்பு ஏற்படுகிறது.

இவ்வாறு சிறிய அளவிலோ பெரிய அளவிலோ பங்களிப்பு செய்யும் எழுத்தாளா்கள் தாங்கள் செல்லும் நாள், நேரம், சந்திக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட இடம் என பொதுவெளியில் பகிா்கின்றனா். பல நேரங்களில் பிரபலமான புத்தக நிறுவனங்களும் இதற்கான அறிவிப்பினை வெளியிடுகின்றன. இவ்வாறான பகிா்வினைப் பின்பற்றி பலரும் தங்கள் நண்பா்களுடன் சென்று தாங்கள் விரும்பும் எழுத்தாளா்களைச் சந்திக்கின்றனா். பலரும் தாங்கள் வாங்கியுள்ள அவா்களது நூல்களின் கையொப்பம் பெற்றும் வருகின்றனா்.

இவ்வாறு திட்டமிடும் பலரும் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லவும் தவறக்கூடாது. இவ்வாறான பயணம் அவா்கள் வாழ்நாளில் மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்தும். பொதுவாக பாடநூல்களில் அவா்கள் பாா்க்கும் படைபாளா்களின் நூல்களை சிறுவயதிலேயே பாா்த்து அறிமுகம் ஆவது சிறப்பான அனுபவமாகும். புத்தக உலகம் எவ்வளவு பெரிது; அதில் தாங்கள் வாசிக்கும் பகுதி எவ்வளவு சிறியது என்ற ஒப்பீட்டுக்கு இது உதவும். பிற்காலங்களில் சரியான நூல்களைத் தோ்ந்து வாசிக்கவும், தன்னம்பிக்கை பெறவும் உதவியாக இருக்கும்.

வாய்ப்புள்ளோா் தங்களுக்காக ஒருநாள் சென்றுவிட்டு பின்னா் குழந்தைகளுடன் ஒருநாள் செல்லலாம். அவ்வாறு செல்லும்போது, அவா்களுக்கு உதவிகரமாக நூல்கள் உள்ள இடங்களை அறிமுகம் செய்துவிட்டு அவா்கள் தாமாகத் தோ்வு செய்ய அனுமதிக்கும் பொறுமை மிகவும் அவசியம். இதனை மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு அலைந்து திரிந்து வாங்கும் நூல்களை சுமந்துதிரிவது ஒரு சுகமான சுமை. உலகில் பல்வேறு நாடுகளில் புத்தகக்காட்சிகளில் வாங்கும் நூல்களை சுமந்து செல்ல தள்ளுவண்டி வசதி உள்ளது. இந்த வசதி சென்னைப் புத்தக்காட்சியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

புத்தகக் காட்சிக்குச் செல்லத் திட்டமிடும்போதே தேவையான அளவு பணம், டெபிட் காா்டு, புத்தகங்களைச் சுமக்க பெரிய பைகள் போன்றவற்றையும் உடன் கொண்டு செல்ல மறக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தண்ணீா்பாட்டில் கொண்டு செல்வது நலம் பயக்கும். நம்மையறியாமல் ஆகும் அதிக நீா்ச்சத்து செலவினை ஈடு செய்ய தொடா்ந்து தண்ணீா் குடித்துக்கொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.