/

தடுப்பூசியைத் தவிர வேறு வழியில்லை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள "லோகல்சர்கிள்' என்ற அமைப்பு, அம்மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த கணக்கெடுப்பு ஒன்றை ஜனவரி மாதம் நடத்தியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:00 am

முனைவா் என். மாதவன்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள "லோகல்சர்கிள்' என்ற அமைப்பு, அம்மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த கணக்கெடுப்பு ஒன்றை ஜனவரி மாதம் நடத்தியது.

இக்கணக்கெடுப்பில் பங்கேற்ற 4,976 பெற்றோரில் சுமார் 62 சதவீதம் பேர் தற்போது பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்தனர். சுமார் 11 சதவீதம் பேர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும், ஆனால், நோய்த்தொற்று 5% க்கும் குறைவாகும் நிலையிலேயே பள்ளிகளை இயக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். மற்றவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை.  

இந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பெற்றோர்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து பற்றிய விழிப்புணர்வு உள்ளது என்பது தெரிகிறது. தொடக்கப் பள்ளி நிலை இது. ஆண்டு பொதுத்தேர்வினை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ள மாணவர்களில் 15 முதல் 18 வரையிலான வயதுடையோர்க்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களிலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், மாணவர்களும் செலுத்திக்கொள்ள முன்வருவது ஆரோக்கியமானதே. 

அதே நேரம்,”ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு மிதமாக உள்ள நிலையில், இதுவே சமூகத் தடுப்பாற்றலை உண்டாக்கிவிடும். எனவே, தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற வாதம் எழுகிறது. மேலும், தடுப்பூசி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற வாதமும் எழுகிறது. அறிவியல்பூர்வமாக எந்த ஒரு மருந்தும் உலகிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற சொல்ல இயலாது. மருத்துவமனைகளில் இன்றும்கூட பென்சிலின் மருந்து ஊசி செலுத்தும் முன்னர் ஒரு பரிசோதனை ஊசி செலுத்திய பின்னர்தான் பென்சிலின் ஊசி செலுத்துவர். இது நம்மில் பலரும் அறிந்ததே. 

பொதுவாக, தலைவலிக்கு மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் வலி நிவாரணிகள் உடனடி பலனைத் தந்துவிடும். அதுபோன்ற வலி நிவாரணிகளேகூட சிலருக்கு ஒவ்வமையை, பக்கவிளைவுகளை ஏற்படுத்திய அனுபவங்கள் உண்டு. அதுபோலவே நாம் வாங்கும் கொசுவிரட்டிகளின் திரவங்களை சுவாசிக்கும்போதுகூட பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கொசுவிரட்டி திரவங்களுடன் அளிக்கப்படும் குறிப்பை வாசித்துப் பார்த்தால் இது புரியும். 

இதனைக் கருத்தில் கொண்டே தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே சாதாரண மக்களிடையே தடுப்பூசியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. அதுவும் வயது வாரியாகவே படிப்படியாகச் செலுத்தப்பட்டு அவை பயன் தருவதைக் கண்கூடாக பார்த்து வருகிறோம். இரண்டாவது அலை ஏற்படுத்திய தீவிரத்தையும், மருத்துவ பிராணவாயு படுக்கைகளுக்கான அவசியத்தையும், தூக்கமில்லா இரவுகளையும், ஊரடங்கின் கொடுமைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், மூன்றாவது அலை அந்த அளவுக்கு அச்சமூட்டாமல் நகர்ந்ததற்குக் காரணம், தடுப்பூசியைத் தவிர வேறு எதைக் காரணமாகக் கூற இயலும்.  

இரு ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது தமிழக மருத்துவமனைகளில் கரோனா நோயாளி இல்லாத நிலை உருவாகியுதுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் முதல் தவணை செலுத்திக்கொண்டோர் சதவீதம் 63% ஆகவும், இரண்டு தவணையும் செலுத்திக்கொண்டோர் சதவீதம் 50% என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்று சுகாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாள்கள் வரையிலான தரவுகளை ஆராய்ந்ததில், இறந்தோரில் 85.3% பேர் 50 வயதைக் கடந்தோர் என்று தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த ஆகஸ்டு முதல் அக்டோபர் வரையில் இறந்தோரில் 84% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் என்றும் கண்டறிந்துள்ளனர். ஏற்கெனவே அறிவுறுத்தியபடி இணைநோய் உள்ளோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும், வெளியில் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட முகக்கவசம், கிருமிநாசினி, தனிமனித இடைவெளி ஆகியவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டியவையே. அவற்றுக்கு விதிவிலக்கில்லை.

இன்றைக்கு கரோனாவை வெல்ல ஒரே அறிவியல்பூர்வமான வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான். இந்நிலையில், பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வியை மனதில் வைத்தாவது தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இணைநோய் உள்ளோர், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோர் வேண்டுமானால் தீவிரமான ஆய்வுக்குப் பின்னர் முடிவெடுக்கலாம். ஆனால் இயல்பு நிலையில் உள்ளோர், நிச்சயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் வலியுறுத்த வேண்டும். 

ஒரு பக்கம் பள்ளிகளைத் திறந்துவிட்டதால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதத்தினை முன்வைக்கும் பெற்றோர், தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல்தான் பணியிடங்களுக்கு சென்று வந்துகொண்டிருக்கின்றனர். இதனால், அவர்களுக்கு நோய்த்தொற்று எற்பட்டாலும் குழந்தைகள் பாதிக்கப்படுவர். அதேபோல் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நோயைப் பரப்புவோராலும் பெற்றோர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

எந்த ஓர் அரசும் தனது குடிமக்களுக்கு நன்மை செய்யவே விழையும். அதுவும் இன்றைக்கு இருக்கக்கூடிய ஊடக உலகில் அறிவியல்பூர்வமான தரவுகள் இல்லாமல், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எந்த அரசும் எடுக்காது. ஏற்கெனவே சந்தைமயமாக்கத்துக்கும் மருத்துவத்துக்கும் இருக்கும் தொடர்புகளை பெருந்தொற்றுக் கால சிகிச்சைகளோடும் தடுப்பூசிகளோடும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.