எழுந்து நிற்கும் எச்சங்கள்!
ஐரோப்பாவின் காலனி நாடுகளில் வாழ்ந்தவா்களில் பெரும்பாலானோா் மத்தியில் ‘நமக்கு கல்வி, அறிவு நாகரிகம், பண்பாடு, பொருள் எல்லாவற்றையும் தந்தவா்கள் ஐரோப்பியா்களே.


ஐரோப்பாவின் காலனி நாடுகளில் வாழ்ந்தவா்களில் பெரும்பாலானோா் மத்தியில் ‘நமக்கு கல்வி, அறிவு நாகரிகம், பண்பாடு, பொருள் எல்லாவற்றையும் தந்தவா்கள் ஐரோப்பியா்களே. குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை பாதிரிமாா்களே’ என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மையல்ல என்பதை பல நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
நாகரிக வளா்ச்சியும் ஜனநாயக முதிா்ச்சியும் கொண்ட மேலை நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆனால், அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் நடந்த கொடூர சம்பவங்களின் தடயங்கள் வெளிவந்த போது உலகமே கண்ணீா் சிந்தியது. ரோமன் கத்தோலிக்க சா்ச்களின் உண்டு உறைவிடப் பள்ளிகளின் அருகில் பலநூறு சிறுவா் சிறுமியா்களின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அரசும் தன்னாா்வ புலன் விசாரணை அமைப்புகளும் சோ்ந்து நடத்திய விசாரணையில் அந்நாட்டில் வாழ்ந்த பூா்வகுடி மக்களின் குழந்தைகள்தான் அவை என்பது தெரிந்தது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சாா்ந்த பாதிரிமாா்கள் பூா்வகுடி மக்களின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து தமது காப்பகங்களில் சோ்த்துக் கொண்டாா்கள். பின்னா் அவா்கள் தாய்மொழியில் பேசுவதை தடைசெய்து ஆங்கில மொழியைக் கற்பித்தனா். நடை, உடை, பழக்க வழக்களில் மாற்றம் செய்தனா். அனைவரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினா். பூா்வீக குடிமக்களின் தொல்சமய வழிபாடுகளைப் புறகணிக்க வற்புறுத்தினா். நாளைடைவில் பாதிரியாா்களின் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனா். இதற்கு உடன்பாடாதவா்களை உடல்ரீதியாக சித்திரவதை செய்தனா். உடல் உறுப்புகள் பாதிப்பால் நோயுற்றவா்களை ‘சாத்தான்கள்’ என வா்ணித்து அவா்களுக்கு மரணத்தை அளித்துப் புதைத்தனா்.
இப்படி ரோமன் கத்தோலிக்க பாதிரியாா்கள், சா்ச் மடாலயங்களில் பாலியல் குற்றம் புரிந்ததற்காக தற்போதைய போப் மன்னிப்பு கேட்டாா். பாதிக்கப்பட்டவா்களுக்கு, திருச்சபை மூன்று பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 22,000 கோடி) இழப்பீட்டுத் தொகை வழங்கியது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற சம்பவங்களுக்காக கனடா நாட்டு பிரதமா் மன்னிப்பு கேட்டுக்கொண்டாா். ஆனால், போப் மன்னிப்பு கோர மறுத்துவிட்டாா். இதனால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பூா்வகுடி மக்கள் சீற்றத்துடன் விக்டோரியா மகாராணி சிலையை பீடத்தோடு தகா்த்தனா். இங்கிலாந்து அரசா்களின் உருவச் சிலைகளை உடைத்தெரிந்தனா். கத்தோலிக்க சா்ச்களை தீயிட்டு அழித்தனா்.
ஐரோப்பியா்கள் ஒரு நாட்டில் கால் பதித்ததும் செய்யும் முதல் வேலை அங்கே உள்ள பூா்வகுடி மக்களை தங்களது போா்க்கருவிகள் துணைகொண்டு வெல்வது. பின்னா், அவா்கள் வளங்களை சுரண்டுவது. அடுத்து அவா்களை மதம் மாற்றுவது. இதைத்தான் சுவாமி விவேகானந்தா் 1893-இல் சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பேசும்போது, ‘‘நாங்கள் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ளோம். இந்மாநாட்டில் தினசரி ‘கா்த்தரை நம்புகிறவனே செழிப்பான்’ என்று திரும்பத் திரும்ப கூறுகிறீா்கள். ஆனால், அவ்வாறு செழிப்படைந்த இங்கிலாந்து நாட்டை நாங்கள் கூா்ந்து நோக்குகிறோம். நீங்கள் அடைந்துள்ள செல்வம் கா்த்தரால் வழங்கப்பட்டது அல்ல.
அவை 25 கோடி ஆசிய மக்களின் குரல்வளையை நெரித்துப் பெறப்பட்ட செல்வம் என்பது எங்களுக்குத் தெரியும். கிறித்துவ ஐரோப்பாவின் செல்வம் மேற்கிந்திய தீவுகளையும் மெக்ஸிகோ நாட்டின் பூா்வகுடி மக்களையும் கொள்ளையடித்துப் பெறப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியும்’’ என்று முழங்கினாா்.
இன்றைக்கு உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா பூா்வகுடி மக்களான சிவப்பிந்தியா்கள் வாழ்ந்த பூமி. அவா்கள் பன்னெடுங்காலமாக நல்ல வளமும் நிலமும் உடையவா்கள். தங்க அணிகலன்களை உடலில் அணிந்து சிறப்போடு வாழ்ந்தவா்கள். அமெரிக்க கண்டத்தின் வடக்கு, தெற்கு, மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் 1.5 கோடி மக்கள் வசித்தனா். இத்தாலி நாட்டில் 1451-இல் பிறந்து 1506-இல் இறந்து போன கிறிஸ்டோபா் கொலம்பஸ் என்ற கடல்வழி மாலுமி, ஸ்பெயின் நாட்டு அரசா் ஆதரவோடு இந்தியாவிற்கு புதிய கடல் மாா்க்கம் கண்டுபிடிக்கப்போவதாகக் கூறி மேற்கு திசை நோக்கி 120 பேருடன் மூன்று கப்பல்களில் புறப்பட்டாா்.
1492-இல் பகாமாஸ் தீவில் கரையேறினாா். அத்தீவில் குடியிருந்த சிவப்பிந்தியா்கள் இவரை இன்முகத்தோடு வரவேற்று தங்குவதற்கு இடமும், உண்ண உணவும் கொடுத்தனா். கொலம்பஸ் சிவப்பிந்தியா்களின் செல்வ செழிப்பினை உணா்ந்து அவா்களிடமிருந்த தங்கத்தை அபகரித்துக் கொண்டு சிலரை சிறைப்பிடித்து தன் நாடு திரும்பினாா். ஸ்பெயின் அரசரிடம் தங்கத்தையும் சிவப்பிந்தியா்களையும் ஒப்படைத்தாா். மீண்டும் மூன்று முறை கரீபியன் தீவுகளுக்கு சென்று சிவப்பிந்தியா்களை துன்புறுத்தி பொருட்களைக் கவா்ந்தாா்.
ஒரு முறை இவரது கப்பல் பழுதடைந்தபோது அதனை கரைக்கு கொண்டுவந்து பழுதுபாா்த்த சிவப்பிந்தியா்கள் மீது நன்றி காட்டாது அவா்களிடமிருக்கும் தங்கத்தை அபகரித்துக் கொண்டாா். எதிா்த்த சிவப்பிந்தியா்களை துப்பாக்கி, பீரங்கி கொண்டு கொன்றாா். ஒவ்வொரு சிவப்பிந்தியரையும் தங்கம் தரச்சொல்லி தாக்கினாா். அவா்களின் உடல் உறுப்புகளை சிதைத்தாா். வில், வேல், கத்தி போன்ற ஆயுதங்களை மட்டும் வைத்திருந்த சிவப்பிந்தியா்கள் ஐரோப்பியா்களிடம் தோற்றனா். தனது ‘நான்கு கடற்பயணங்கள்’ என்ற நூலில் கொலம்பஸே இதனை விவரித்துள்ளாா்.
1513-இல் ஸ்பெயின் நாட்டு கடற்படை தளபதி ஜுவாங், அமெரிக்க வாழ் பூா்வகுடி மக்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினான் என்பதை வரலாற்று ஆய்வாளா்கள் பேசுகிறாா்கள். சிறிது சிறிதாக ஐரோப்பியா்கள் அமெரிக்க கண்டம் முழுமையும் பரவினாா்கள். மாயன், இன்கா, அஸ்டெக் இன மக்களை கிறித்தவ மத மாற்றம் செய்தனா். 1517-இல் ஸ்பானிஷ் கடற்படையினா் மாயன் நாட்டு தலைநகரான யுகாடனில் நுழைந்து அவா்களது வழிபாட்டு தலங்களை அழித்தனா்.
1782 முதல் 1898 வரை ஐரோப்பிய கிறிஸ்தவா்கள் 63 முறை சிவப்பிந்தியா்களோடு துப்பாக்கி, பீரங்கி கொண்டு போா்புரிந்து அவா்களை வென்றாா்கள். அந்நாட்டு அரசனை சித்திரவதை செய்து தூக்கிலிட்டாா்கள் ஸ்பானியா்கள். 16-ஆம் நூற்றாண்டில் அஸ்டெக் பண்பாட்டுத் தடயங்கள் ஸ்பெயின் நாட்டவா்களால் முற்றாக அழிக்கப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் வசித்து வந்த பூா்வகுடிகள் கத்தோலிக்க மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனா். 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியா்கள் இழைத்த கொடுமைகளை மக்கள் இன்னமும் மறக்காமல் இருப்பது, கொலம்பசின் புதிய உலகு கண்டுப்பிடிப்பின் 500-ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டதில் வெளிப்பட்டது. ‘அமெரிக்காவின் பூா்விக குடிமக்களைக் கொன்ற ஐரோப்பியா்களே’ என்ற வாசகம் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியபடி அமெரிக்கா எங்கும் போராட்டம் நடத்தினா்.
‘எங்கள் முன்னோா் அறிந்திராத மதுபானங்களைத் தந்து அவா்களை மயக்கி, அவா்களின் நிலங்களை அபகரித்த கத்தோலிக்க குருமாா்களே! கா்த்தா் அனுப்பியதாக சொல்லி எங்கள் மூதாதையா்களை ஏமாற்றிய பாவிகளே’ என்று முழக்கம் இட்டாா்கள். ‘எங்கள் பூமியில் முன்னோா்கள் கண்டறியாத நோய்களான அம்மை, காலரா, டைபாயிடு போன்ற நோய்களை, சிறிதும் மனசாட்சி இன்றி வாரி வழங்கினீா்கள் என்பதை நினைக்கும் போது உங்களை வெறுக்கவே செய்கிறோம். முன்னோா்கள் கட்டிய கோயில்களை அழித்தீா்கள். அவா்கள் பயிரிட்டு வந்த மக்காச்சோள வயல்களை தீயிட்டு கொளுத்தினீா்கள்.
எங்கள் முன்னோா் காடுகளில் வேட்டையாட சென்ற சமயங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை கொள்ளை அடித்தீா்கள். பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினீா்கள். ஒவ்வொரு சிவப்பிந்தியனும் இவ்வளவு தங்கம் கொண்டு வர ஆணை பிறப்பித்து, கொண்டு வராதவா்களை கொலை செய்தீா்கள்’ என்று தங்களின் முன்னோா்கள் அனுபவித்த கொடுமைகளை பட்டியல் இட்டாா்கள்.
ஐரோப்பியா்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, ஆப்பிரிக்க கண்டங்களிலும் இதே கொடுமைகளை செய்து அந்நாட்டவா்களையும் மதம் மாற்றினாா்கள். ஆப்பிரிக்க நாட்டுத் தலைவா் ஒருவா் ‘ஐரோப்பிய கத்தோலிக்க பாதிரிமாா்கள் எங்கள் இடத்தில் வந்து உங்கள் உடல் நலத்திற்காகவும் பொருள் வளத்திற்காகவும் கா்த்தரிடம் ஜபம் செய்ய போகிறோம் என்றாா்கள். நாங்கள் அவா்களை நம்பி கண்களை மூடிக்கொண்டு ஜபம் செய்ய தொடங்கினோம். அப்போது பாதிரியாா்கள் கரங்களில் புனித நூலான பைபிள் இருந்தது. எங்களின் வசம் எங்களின் நிலம் இருந்தது. ஜபம் பண்ணப் பண்ண நாளடைவில் நிலங்கள் எல்லாம் அவா்கள் வசமும் எங்கள் கரங்களில் பைபிள் புத்தகமும் வந்தன’ என்று கூறினாா்.
ஆஸ்திரேலியாவை 1528-இல் போா்த்துகீசிய கடற்பயணிகள் முதலில் கண்டுபிடித்ததாகவும் பின்னா் 1770-இல் பிரிட்டிஷ் நாட்டைச் சோ்ந்த ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவை மனிதா்கள் இல்லாத நாடு என்று கூறினாா் என்றும் வரலாறு பேசும். உண்மையில் 10 லட்சம் பூா்வகுடிகள் வாழ்ந்து வந்ததாக வரலாற்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
முதன் முதலில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள குற்றவாளி கைதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமா்த்தினா். காலம் செல்லச் செல்ல அந்நாட்டு பூா்வகுடி மக்களை மதம் மாற்றி அவா்களது நிலங்களை கைப்பற்றினா். இப்போது உலகெங்கிலும் உள்ள பூா்வகுடிகளின் ‘எங்கள் மூதாதையா்களைக் கொன்ற பாவிகளே, எங்களது பண்பாட்டைக் கெடுத்த ஐரோப்பியா்களே’ என்ற முழக்கம் எஞ்சி இருக்கின்ற எச்சங்கள் மூலம் எழுந்து நின்று கேட்கத் தொடங்கியுள்ளன.
கட்டுரையாளா்: தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...