மறுப்பது ஒரு கலை
வாழ்க்கையில் ஒன்றை ஏற்பதா, மறுப்பதா என்ற நிலை வரும்போது நாம் பெரும்பாலும் அதனை ஏற்கவே பழகியிருக்கிறோம்.


வாழ்க்கையில் ஒன்றை ஏற்பதா, மறுப்பதா என்ற நிலை வரும்போது நாம் பெரும்பாலும் அதனை ஏற்கவே பழகியிருக்கிறோம். நம்மில் பலரும் மறுத்தல் என்ற கலையைக் கற்கத் தவறிவிட்டோம். ஆம், மறுக்கவேண்டியதை குறிப்பிட்ட நேரத்தில் மறுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆம், மறுத்தல் என்பது ஒரு கலைதான். எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டிருப்பதைவிட சில நேரங்களில் சிலவற்றை மறுத்துப் பேசவும் கற்கவேண்டியுள்ளது. மேலாண்மைக் கலையில் இது மிகவும் அவசியமான ஒன்றாகும். "இல்லை என்று சொல்வதற்குக் கற்போம்' என்றே ஒரு சொல்லாடல் ஆங்கிலத்தில் உண்டு. இவ்வாறு இல்லை என்று சொல்வது அந்த ஒரு நிமிட நேரம் கசப்புணர்வை ஏற்படுத்தினாலும் பின்னர் அதுதான் நம் நிரந்தர நிம்மதிக்கு வழிவகுக்கும்.
ஒரு உதாரணத்தின் வழி இதனைப் பார்க்கலாம். நம்மிடம் பணம் இல்லாதபோது, நம் நண்பர் நம்மிடம் கடனாக ஒரு தொகை கேட்கிறார். அவருக்கு நம்மிடம் பணம் இல்லை என்பது தெரியவில்லை. நமது நடை, உடை, பாவனைஅப்படிப்பட்ட ஓர் எண்ணத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கலாம். நம்மிடம் பணம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்கிறார். பணம் நம்மிடம் இல்லாத காரணத்தால் இல்லை என்று நாம் சொல்கிறோம்.
வந்தவரும் விடாக்கண்டனாக "உங்களிடம் இல்லையென்றால் என்ன யாரிடமாவது வாங்கிக்கொடுக்கக்கூடாதா' என்கிறார். நாம் மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத நிலைக்கு ஆளாகிறோம். இரண்டு நாட்கள் கழித்து சொல்வதாகக் கூறுகிறோம். பின்னர் பணம் வைத்திருக்கும் ஒருவரைக் கண்டறிந்து அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்கிறோம். பணம் கொடுத்தவரும் நம்மிடம் உத்தரவாதம் வாங்கிக்கொண்டு தருகிறார்.
அந்தப் பணத்தை நாம் கடன் கேட்ட நண்பருக்குத் தருகிறோம். அவர் அதனைக் குறிப்பிட்டபடி திருப்பிக் கொடுத்துவிட்டால் நல்லது. அவர் திரும்ப அதனைத் தராமல் போகும்போது அவருக்காக நாமே அந்தத் தொகையை செலுத்தும் நிலைக்கு ஆளாகவும் நேரிடுகின்றது. நம்மிடம் கடன் கேட்க வந்தவரின் நோக்கத்தை முன்னதாகவே ஆராய்ந்திருந்தால் அப்போதே நாம் பணம் தர மறுத்திருக்கலாம்.
அதன்மூலம் நமக்கும் நிம்மதியைத் தேடிக்கொண்டு அவரையும் கடன்காரராக்காமல் காத்திருக்கலாம். அவரது அவசியமில்லாத தேவையை ஊக்குவிக்கும் செயல்பாட்டையும் தவிர்த்திருக்கலாம்.
இன்றைய தாராளமய நுகர்வு கலாசாரத்தில் ஓரளவுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் பெரும்பாலானோருக்குக் கிடைத்துவிடுகிறது. உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளும் பெரும்பாலானோருக்கு நிறைவேறிவிடுகிறது. விதிவிலக்காக ஒருசிலர் இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான உதவியை மற்றவர்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டும். அது அவர்களின் சமூகக்கடமையும் கூட.
ஆனால் இவற்றைத் தாண்டிய தேவைகள் பெரும்பாலும் ஒருவரது சுயமதிப்பீட்டை உயர்த்திக்கொள்ளும் தேவைகளாகவே இருக்கும். இவ்வாறான தேவைகளுக்கு நாம் உதவி செய்யத் தொடங்கினால் மிகப்பெரிய வரிசையே நாள்தோறும் நம் வீட்டின் முன் காத்திருக்கும். இதுபோலவே நட்பிலும், குறிப்பாக ஆண் } பெண் நட்பில் எல்லை மீறப்படும்போது மறுப்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறேதான் குழந்தை வளர்ப்பிலும். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு மறுக்கும் கலையைத் தெளிவாகக் கற்பிக்கவேண்டும். நம் மூலமே அவர்கள் பலவற்றையும் கற்றுக்கொள்வதால் மறுக்கும் செயல்பாட்டையும் நாம் அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும்.
ஆனால் அதே நேரம் இப்பயிற்சியானது அவர்களது மனதை புண்படுத்தாதவாறு நேர்த்தியாக அமைய வேண்டும். இப்பயிற்சியை மேற்கொள்ளும்போது சில அணுகுமுறைகள் நமக்கு வழிகாட்டலாம்.
குழந்தைகளின் தேவைக்குப் பின்னாலுள்ள நோக்கத்தின் நேர்மையைக் கணிக்கவேண்டும். பின்னர் அந்தத் தேவை நிறைவேறாத நிலையில் குழந்தைகள் எப்படிப்பட்ட இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதையும் நாம் அனுமானிக்க வேண்டும்.
இந்தத் தேவை நிறைவேறாவிடினும் குழந்தைகளால் சமாளிக்க இயலுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி எல்லாக் கோணங்களையும் மதிப்பீடு செய்துவிட்டுக் கடைசிபட்சமாகவே அந்தத் தேவையை நிறைவேற்ற நாம் முயல வேண்டும்.
இவ்வாறு நாம் சில தேவைகளுக்காக உரையாடும்போதே குழந்தைகளே இந்த விஷயத்தில் நல்ல தெளிவைப் பெறுவர். நாம் கேட்கும் அனைத்தும் கிடைக்காது. அதற்கான நியாயமான காரணம் இருக்கும்போதுதான் அதற்கான வாய்ப்புள்ளது என்று புரிந்துகொண்டு அவர்கள் வாழ முயல்வர்.
குழந்தைப் பருவத்தில் கிடைக்கும் இப்படிப்பட்ட பயிற்சி அவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் பயன் தருவதாக அமையும். இப்படிப்பட்டோர் தம்மையும் அறியாமல் தமது நெருங்கிய நண்பர்களிடத்திலும் தாம் பணியாற்றும் நிறுவனங்களிலும் இக்கலையை வளர்த்துவிடுவர்.
இதற்காக எல்லா நேரமும் எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று முடிவெடுப்பதும் தவறு. சில உண்மையான தேவைகளுக்கு உதவவும் வேண்டும். அப்படி உதவுவதால் நமக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
யாருக்காக இருந்தாலும், அவருடைய உண்மையான தேவை என்ன என்பதை நாம் அறிந்துகொள்வதுதான் அவருக்கு உதவி செய்வதா அல்லது மறுப்பதா என்பதை முடிவு செய்ய உதவும்.
ஆதலால் மனிதர்களின் உண்மைச்சூழலை மதிப்பிடும் கலையையும் நாம் கற்றிருத்தல் அவசியமாகிறது. அடுத்தோரின் கவலைகளைத் தீர்ப்பதால் நமக்கு புதுக்கவலைகள் வராமலிருக்குமா என்பதை யோசித்து நமது செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவருடைய சூழல் நம்மைச் சுழலில் சிக்கவைத்துவிடாமல் காத்துக்கொள்வதும் ஒரு கலைதானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...