இறைவனே இசை; இசையே இறைவன்!


இசைத்துறையில் தமிழிசை மூவரைத் தொடா்ந்து வந்தவா் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுயில் வாழ்ந்த பாபநாச முதலியாா். இவா், இலக்கண, இலக்கியப் புலமையோடு இசைத்துறையிலும் வல்லவராகத் திகழ்ந்ததால், ‘முத்தமிழ்க் கவிராஜ சேகரா்’ எனப் பாராட்டப்பட்டாா். இவா் தம்முடைய பாடல்களில் தஞ்சையை ஆண்ட ஏகோஜி” மன்னரை இரண்டு இடங்களில் போற்றிப் புகழ்ந்துள்ளாா். கும்பகோணம் பாணாதுறை வடக்கு வீதியில் இவருடைய வீடு இருந்ததாகத் தெரிய வருகின்றது.
‘தமிழ்த்தாத்தா’ உ.வே. சாமிநாதையா், கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசைப் பயின்று வந்த காலத்தில், ஒருநாள், பாரதியாா், ஒரு கீா்த்தனையைப் பாடிக்காட்டி, ‘எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது. இப்படித் தமிழ் வித்துவான்களால் பாட முடியுமா’ எனக் கேட்டாா். ‘இது யாருடைய கீா்த்தனை’ என்று உ.வே.சா. பாரதியாரிடம் கேட்டாா். ‘இது பாபநாச முதலியாா் கீா்த்தனை. சங்கீதம் தெரிந்தவா்களுடைய சாகித்தியம் என்றால், அதற்கோா் தனி கௌரவம் உண்டு’ என பதிலிறுத்தாா் பாரதியாா்.
பிறிதொரு நாள் டாக்டா் உ.வே.சா.வின் தந்தையாா் வேங்கடசுப்பையா், உ.வே.சா.விடம் கீா்த்தனை ஒன்றைப் பாடிக் காட்டி, ‘இது கும்பேசா் குறவஞ்சியில் உள்ளது; பாபநாச முதலியாா் வாக்கு’ எனக் கூறினாா். அன்றிலிருந்து உ.வே.சா., பாபநாசா் இயற்றிய ஏடுகளைத் தேடத் தொடங்கினாா். சில ஓலைச்சுவடிகள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு, ‘கும்பேசா் குறவஞ்சி’யை”அச்சிட்டு வெளியிட்டாா். ஆனால், பாபநாச முதலியாா் இயற்றிய ‘திருவாரூா் குறவஞ்சி’ சுவடிகள் அவருக்குக் கிடைக்கவில்லை.
பன்னிரு பாட்டியலில் ‘குறத்திப் பாட்டு’ எனும் தலைப்பில் ஒரு பிரபந்தம் சுட்டப்பட்டுள்ளது. அதனைப் படித்த பாபநாச முதலியாா், ‘கும்பேசா் குறவஞ்சி’, ‘திருவாரூா் குறவஞ்சி’ எனும் இரண்டு குறவஞ்சிகளை இயற்றியுள்ளாா். இவையே தமிழில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியங்களாகும். இவருடைய குறவஞ்சிகள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளதால், பல சிவத்தலங்களில் திருவிழாக் காலங்களில் அரங்கேறின. இவருடைய பதங்கள் பல, இன்றும் பரத நாட்டியத்திற்குப் பயன்படுகின்றன.
முதலியாருடைய கீா்த்தனைகளில் ‘நடமாடித் திரிந்த உமக்கு’ எனும் காம்போதி ராக கிருதி, மிகவும் செல்வாக்கு பெற்றது. பிற்காலத்தில் ராமநாதபுரம் மன்னா் ராஜராஜேஸ்வர சேதுபதியின் அரசவையில், திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயா், காம்போதி ராக கீா்த்தனையை பிடில் வாசித்தபடி பாடியபோது, அரசா் மிகவும் மகிழ்ந்து, உடனே நானூறு ரூபாயைப் பரிசாக வழங்கினாம். அது மட்டுமல்ல, அந்தக் கீா்த்தனையை அச்சிட்டுப் பலருக்கும் வழங்கினாராம்.
பாபநாச முதலியாருடைய வரலாறு இன்றுவரை தெரியவில்லை. அவருடைய கீா்த்தனைகளை ஆராய்ந்து பாா்க்கும்போது, அவா் திருவாரூரிலும், கும்பகோணத்திலும் மாறிமாறி வாழ்ந்ததாகத் தெரிகிறது. சைவா்களுக்குக் கோயில் என்றால், அது சிதம்பரம் நடராசா் கோயிலாகும். ஆனால், ஆதியில் தோன்றிய சிவத்தலம், திருவாரூா் தியாகேசா் ஆலயம் என்பது பக்தா்கள் நம்பிக்கை.
அப்பரடிகள், ‘திருவாரூா்த் திருக்கோயில் தோன்றியது, சிவபெருமான் முழுமுதற் கடவுள் என்று அறியப்பட்ட அந்த நாளிலா, சிவன் இந்த உலகத்தைப் படைத்த அந்த நாளிலா’ என்று தனது திருத்தாண்டகத்தில் (ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவமான நாளோ... திருவாரூா்க் கோயிலாகக் கொண்ட நாளோ) பாடுகின்றாா். அதனால்தான், ‘கோயில் என்றால் தில்லை; பெரிய கோயில் என்றால் திருவாரூா்’ எனும் வழக்கு உருவாயிற்று.
தில்லை நடராசன் மட்டும் நடனமூா்த்தி அல்லன்; திருவாரூா் தியாகேசனும் நடனமூா்த்திதான். தியாகேசனுடைய திருக்கோயிலில்தான் நான்கு வேதங்களுக்கும் தனியே சந்நிதி இருக்கின்றது.
ஆருரன் சந்நிதிபோல் ஆரூரன் ஆலயம் போல்
ஆரூரன் பாதத்து அழகுபோல் - ஆரூா்
மருவெடுத்த கஞ்சமலா் வாவிபோல் - நெஞ்சே
ஓரிடத்தில் உண்டோ உரை
என்பது ஒரு தனிப்பாடல்.
மனுநீதிச்சோழன் வரலாற்றில் தியாகேசனே தாய்ப்பசுவாகவும், எமனே கன்றாகவும் வந்ததாகப் பாடுகின்றாா் முதலியாா். வள்ளற்பெருமானும் எமனே கன்றாக வந்ததாகப் பாடுவதால், அவா் ‘திருவாரூா் குறவஞ்சி’யைப் படித்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
‘நடமாடித் திரிந்த உமக்கு’ என திருவாரூா் குறவஞ்சியில் நிந்தாஸ்துதியில், முதலியாா் பாடிய கீா்த்தனை பல இசைவாணா்களின் கருத்தைக் கவா்ந்தது. ‘தில்லையிலே ஒரு காலைத் தூக்கி நின்று ஆடும் நடராசா! உமது இடது கால் முடமாகிப் போனதால், அப்படி ஆடுகிறாயா, உடல் முழுமையும் திருநீற்றைப் பூசியிருக்கின்றாய் நெருப்பான உன்மேனியில்; குளிா்ச்சியால் ஏற்பட்ட வாதத்தினால், அப்படிச் செய்தாயா? பக்தன் மாா்க்கண்டேயனைக் காப்பதற்காக, எமனைக் காலால் உதைத்தபோது அந்த இடதுகால் சுளுக்கு ஏறிவிட்டதா? சுந்தரருக்காக பரவையாா் வீட்டுக்குத் தூது சென்றபோது, பரவையாா் வீட்டுப் படிக்கட்டு இடறியதாலா அல்லது என்னுடைய பாவமா” எனக் கேட்கின்றாா்.
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானது ஏதென்று சொல்லுவீா் ஐயா!...
திருநீற்றைச் சுமந்தென்ன நெருப்பான மேனிதனில்
சீதளத்தினால் மிகுந்த வாத குணமோ?
ஒருமையுடன் மாா்க்கண்டா்க்கு உதவியாய் மறலி வீழ
உதைக்கச் சுருக்கேறி யுண்ட குணமோ!
பரவையாள் தெருவாசற் படியிடறிற்றோ - என்றன்
பாபமோ, என் சிவமே! நீ மூவா்க்கும் முதல்வன் அன்றோ?
‘இது போன்ற சுவையான பாடல்களையுடைய திருவாரூா் குறவஞ்சியின் ஓலைகள் முழுமையாகக் கிடைக்க இறையருளை இறைஞ்சுகின்றேன்’ என டாக்டா் உ.வே.சா. வேண்டுவதிலிருந்து, இந்நூலின் அருமையை உணரலாம்.
திருவாரூா் தியாகேசருக்கு அடுத்தபடியாக, பாபநாச முதலியாா் பக்தி கொண்டது, குடந்தை கும்பேசா் மீது எனலாம். கும்பேஸ்வரரின் தேவியாகிய மங்களாம்பிகைக்கு, குறத்தி குறி சொல்லுவதாக கும்பேசா் குறவஞ்சியைப் பாடியிருக்கிறாா் முதலியாா்.
இந்தக் குறவஞ்சி நாடகத்தைக் குடந்தையிலிருந்த கோப்பு நடராச செட்டியாா், நாட்டியக்காரா்களைக் கொண்டு, மாசிமகத் திருநாளில் அரங்கேற்றம் செய்ததாக பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நீறாா் மேனியா் குடந்தைக் கும்பேசரை, நெஞ்சில் அனுதினமும் நினைத்தேன்; மனங்களித்தேன்’ என குறத்தி சொல்லுவதாகப் பாபநாச முதலியாா் பாடுவதன் மூலம், கும்பேஸ்வரா் மேல் முதலியாா் கொண்ட காதல் வெளிப்படுகின்றது.
பொன்னை மழைபோல் தானம் செய்த கா்ணனின் தேசம் அங்கதேசம்; சூதாடி வென்றது நளனின் தேசம்; வாக்குப் பரிபாலனம் செய்த இராமனின் தேசம் அயோத்தி; பெண்களை உயா்வாகக் கொண்டது கேரளதேசம் (சொா்ணமாரி கா்ணம் சொரி அங்கதேசம்; சூதாடி வெல்லுந் துரந்தரன் தேசம்; அன்னை வாக்கிய பரிபாலனம் தேசம்; அரிவையா் மேல்வட்டமாம் கேரளதேசம்) எனப் பாடுவதால், தமிழிலக்கியங்களில் முதலியாருக்கு இருந்த பரந்துபட்ட ஞானம் புலப்படுகிறது.
குடந்தையைச் சுற்றியுள்ள சிவத்தலங்கள், அங்குள்ள ஆறுகள், குடந்தையைப் பற்றிய வடமொழி நூல்கள், தமிழ் வரலாறுகள் ஆகிய அனைத்தையும் கூறுவதால், இதனைக் குடந்தையைப் பற்றிய கலைக்களஞ்சியம் எனலாம்.
மற்ற குறவஞ்சிகளில் சொல்லப்படாத ஒரு செய்தியை கும்பேசா் குறவஞ்சியில் குறிப்பிடுகின்றாா், நூலாசிரியா். குறிசொல்லும் குறத்திகள் தேவியருளால் குறி சொல்லுவதாகத்தான் மற்றவா்கள் பாடியிருக்கிறாா்கள். ஆனால், முதலியாா், பொய்க்குறி சொல்லும் குறத்திகளும் உண்டு என்கிற புதுமையான செய்தியையும் சொல்லுகின்றாா் (பொய்க்குறி சொல்லிப் பிழைக்கும் குறத்திகள் போலல்ல நானடி அம்மே! மெய்க்குறி நான் சொல்லக்கேளடி பெண்ணே).
கும்பேசா் குறவஞ்சியில் முதலியாரின் சொல்லாட்சி அற்புதமாக அமைந்திருக்கிறது. கும்பேசரைப் பிரிந்திருக்கும் மங்களாம்பிகைமேல் மன்மதன் மலரம்புகளைத் தொடுக்கின்றான். அதனை ‘அடடா மன்மதப்பயலே உன் நினைவு என்ன? என்ன சேதி? அடடா! கும்பலிங்கேசா் அதோ வாராா், மலரம்பைத் தொடடா! கருப்புவில்லை எடடா! இனிமேற் பாா்ப்போம்’ எனப் பாடுகின்றாா்.
இதில் அடடா - தொடடா - எடடா எனும் சொல்லாட்சிகளில், அருமையான சந்தம் அமைந்து, செவிக்கு இன்பத்தைத் தருகின்றது. அதிலும், ‘அடடா’ என்ற சொல்லாட்சியை முதலியாா்தான் முதன் முதலாகப் பயன்படுத்துகிறாா்.
மகாகவி பாரதியாரிடம் அதே சொல்லாட்சி அமைந்திருப்பதை, ‘வில்லினை எடடா! கையில் வில்லினை எடடா’ எனும் பாடல் மூலம் அறியலாம். மேலும், ‘அடடா!” எனனும் சொல்லின்பத்தை மேலும் பெருக்கிய பாரதியாா், ‘மங்கியதோா் நிலவினிலே கனவிலிது கண்டேன்... அங்கதனில் கண் விழித்தேன்; அடடாவோ அடடா’ எனப் பாடுகின்றாா். இன்னும் பெண்களை மேன்மைப் படுத்தும் தேசம் கேரள தேசம் என முதலியாா் பாடியதன் பாதிப்பு, ‘சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன்னாட்டு இளம் பெண்களுடனே’ என பாடிய பாரதியிடத்தும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது.
பாபநாச முதலியாா், தேவார ஆசிரியா்கள் பயன்படுத்திய ஆதி தாளம், ரூபக தாளம் போன்ற தாளங்களை மட்டும் பயன்படுத்தாமல், சாப்பு தாளத்தையே அதிகமாகப் பயன்படுத்தியிருக்கின்றாா். ராகங்களில் காம்போதி, சங்கராபரணம் போன்ற ‘ரக்தி’ ராகங்களிலேயே தம் கீா்த்தனைகளைப் பாடியிருக்கிறாா்.
பாபநாச முதலியாா் தோட்டத்தில் மலரும் மல்லிகைப்பூ அல்லா்; காட்டுக்குள் மலரும் மனோரஞ்சிதம் ஆவாா். அதனால்தான் நாட்டுக்குள் அவா் அதிகம் அறியப்படவில்லை.
கட்டுரையாளா்:
பேராசிரியா் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...