/

தி. இராசகோபாலன்

 ஒற்றாடல் என்னும் உளவாய்தல் இன்று நேற்று வந்ததன்று; தொன்று தொட்டுவந்ததொன்றாகும். முடியாட்சியாக இருந்தாலும் குடியாட்சியாக இருந்தாலும் ஒற்றாடல் ஆட்சித்தலைவனுடைய கடமைகளில் ஒன்றாகும். கெளடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் ஒற்று குறித்துப் பதிவு செய்கிறார். திருவள்ளுவர் "ஒற்றாடல்' குறித்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், அத்துறை இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. சிறிது கவனம் சிதறினாலும், ஏந்திய கையிலேயே ரத்தம் கொட்ட வைத்துவிடும்.
 மெளரிய அரசர்கள் (கி.மு. 321 - 296) உளவு ஆய்வாளர்களுக்கு சகல வசதிகளையும் தந்து ஆதரித்திருக்கின்றனர். உழவர்கள், வணிகர்கள், சந்நியாசிகள் இவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கட்கு ஆடை அணிகலன் ஊதியம் அனைத்தையும் வழங்கியிருக்கின்றனர். மெளரியஅரசர் முதலாம் சந்திரகுப்தரின் அமைச்சர் "எந்த இடத்தில் எவரிடத்தில் சூது சூழ்ச்சி இருந்தாலும்அவற்றை மன்னருக்கும் எனக்கும் உடனடியாகத் தெரிவித்தாக வேண்டும்' எனக் கட்டளையிட்டிருக்கிறார்.
 புறநானூற்றுக் காலத்தில் ஒற்றர்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்தியதை கோவூர் கிழாரின் 47-ஆவது பாடல் மூலம் அறிய முடிகிறது. சகோதரர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடும்பகை இருந்தது. இளந்தத்தனார் எனும் புலவர் நலங்கிள்ளியைப் பாடிப் பரிசில் பெற்றுவிட்டு அடுத்து நெடுங்கிள்ளியிடம் வருகிறார்.
 நலங்கிள்ளியிடமிருந்து புலவர் வருவதால் அவரை நலங்கிள்ளியின் ஒற்றர் எனக் கருதி நெடுங்கிள்ளி காத்திருப்புப் பட்டியலில் வைக்கிறார். இந்த விபரீதத்தை அறிந்த கோவூர் கிழார், நெடுங்கிள்ளியிடம் சென்று "பழமிருக்கும் மரங்களை நாடி வரும் பறவைகளைப் போல் வள்ளல்களை நோக்கி நடப்பவர்கள் நாங்கள். பாலைவனம் பலவற்றைக் கடந்து வள்ளல்களைப் பாடிப் பரிசில் பெற்று அந்தப் பரிசிலை நாங்கள் மட்டும் உண்ணாமல் மற்றவர்களுக்கும் கொடுத்துப் பகிர்ந்துண்டு வாழும் ஒப்பற்ற வாழ்க்கை எங்களுடையது. யாருக்கும் தீங்கு நினைக்காத வாழ்க்கை.
 இங்கு வள்ளல் எனும் பெயரில் நீர் ஒருவர் மட்டுமில்லை; இன்னும் எத்தனையோ வள்ளல்கள் இருக்கிறார்கள்' எனக் கடிந்து பாடியதைக் கேட்டு நெடுங்கிள்ளி தன் தவற்றுக்கு நாணி, புலவர் இளந்தத்தனாருக்குப் பரிசில் கொடுத்து வழியனுப்புகின்றான். இதன் மூலம் ஒற்றர்களை நியமித்த அரசர்கள் சங்க காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகின்றது.
 உளவாய்தலுக்கு திருவள்ளுவர் ஒரு பேரகராதியே வகுத்திருக்கிறார். "ஒற்றும் உரைசான்றநூலும்' எனும் குறட்பா (581) மூலம் ஒற்றுக்கலையைப் பற்றிய நூல்கள் நிறைய இருந்ததாகக் கூறுகிறார். "ஒற்றர்கள் சொன்னதை உரைசார்ந்த நூல்களோடு ஒப்பிட்டுச் சரிபார் என மன்னர்களுக்கு அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்.
 எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் ஒற்றர்களைக் கொண்டு விரைந்து அறிதல் வேந்தனுக்குக் கடமை என குறட்பா 582 மூலம் புலப்படுத்துகின்றார். ஒற்றர் வாய் கேட்டு ஆளாத மன்னன் விரைந்துகெட்டுப் போவான் எனவும் வள்ளுவர் எச்சரிக்கிறார்.
 மேலும் ஒற்றர்களுக்குரிய வேடத்தையும் திருவள்ளுவர் சுட்டுகிறார். யாரும் சந்தேகப்படாத உருவத்தோடு பார்த்தவர்களுடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் அமைச்சகம் ஆயுதசாலை அந்தப்புரம் ஆகிய எல்லாவிடங்களிலும் புகுந்து புறப்படுகின்றவர்களாய் சந்தேகப்படுபவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ரகசியத்தை வெளிப்படுத்தாதவர்களாய் இருக்க வேண்டும். துறவிகள் வேடம் பூணவும் ஒற்றர்கள் தயங்கக்கூடாது (குறள்: 585, 586).
 மேலும், ஓர் ஒற்றர் தரும் தகவலை மூன்று ஒற்றர்கள் தரும் செய்திகளோடு ஒப்பிட்டு ஆய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்கிறார் வள்ளுவர். கோவலன் சிலம்பைத் திருடியவன் எனப் பொற்கொல்லன் சொல்லிய தகவலை மற்ற ஒற்றர்களோடு உற்றறிந்து பாண்டியன் முடிவெடுத்திருப்பானேயானால் அவன் ஆட்சி வீழ்ந்திருக்காது.
 சேரன் செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் ஒற்றர்கள் நடமாட்டம் இருந்ததை "சிலப்பதிகார' காட்சிக்காதை மூலம் அறிய முடிகிறது. கண்ணகி சிலைக்கு இமயத்தில் கல் எடுக்க விரும்பிய செங்குட்டுவன் கயல் வில் புலி சின்னங்கள் பொறித்த ஓலைகளை வடநாட்டு மன்னர்களுக்கு அனுப்பும்படியாக அமைச்சர்களுக்குக் கட்டளையிடுகின்றான்.
 அப்பொழுது அருகிலிருந்த சிற்றரசனாகிய அழும்பில்வேள் "வேண்டாம் மன்னா! வடபுலத்து மன்னர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ஒற்றர்கள் நம் வஞ்சிமாநகரத்தைச் சுற்றி மறைந்து வாழ்கிறார்கள். அவர்களே தங்களுடைய மன்னர்களுக்கு அறிவித்து விடுவார்கள்; நாம் யானைமேல் முரசு அறைந்து அறிவித்தால் போதும்' என்பான் (கட்டுரைக் காதை: 173 - 174). எனவே சங்கம் மருவிய காலத்திலும் மன்னர்களால் ஒற்றர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.
 திருவள்ளுவர் உளவாய்தலுக்கு "ஒற்றாடல்' எனவோர் அதிகாரம் வைத்தது போல் கம்பர் "ஒற்றுக்கேள்விப்படலம்' எனவொரு படலமே வகுத்திருக்கிறார். இராவணனுடைய ஆட்சியிலும் ஒற்றர்கள் இருந்திருக்கிறார்கள். வீடணன் இராமபிரானை வந்தடைந்ததும் வானரப்படையின் அளவைப் பார்க்க இராவணன் ஒற்றர்களை கடற்கரைக்கு அனுப்பி வைக்கின்றான். அரக்கர்களாகிய ஒற்றர்கள் தம் உருவில் வராமல் குரங்கு வடிவில் வந்து குரங்குச் சேனையில் கலக்கின்றனர்.
 ஆனால் தவவலிமையுடைய வீடணன் குரங்கு வடிவத்தில் இருக்கும் அரக்கர்களைக் கண்டுபிடித்து அவர்களை இராமபிரான் முன் நிறுத்துகிறான். ஒற்றர்கள் சுய வடிவத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டவுடன் இராமபிரானும் மன்னித்து அருள்கிறான். இதனால் அரக்கர்களுடைய ஆட்சியில்கூட "ஒற்றாடல்' எனும் ஆட்சிக்கலை பின்பற்றப்பட்டிருப்பதை அறியலாம்.
 விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் சுதேசி இயக்கத்தாரின் திட்டங்களைக் கண்டறிவதற்காக ஓர் ஒற்றர் படையை வைத்திருந்தனர். அதில் ஆங்கிலேயர்களைக் காட்டிலும் நம்மவர்களே அவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டார்கள். பால கங்காதர திலகர் ஆங்கில அரசுக்கு பயங்கரமான போராளியாகத் தென்பட்டார். எனவே அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஓர் இந்தியரையே ஒற்றராக்கி திலகருடைய வீட்டுக்கு வேலையாளாக நியமித்தனர். ஒரு மாதம் கழித்து அந்த வேலையாள் ஒற்றன் என்பது திலகருக்குத் தெரிந்துவிட்டது. என்றாலும் திலகர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
 இரண்டு மாதங்கள் கழித்து அந்த வேலையாள் தான் உண்மையான வேலைக்காரன் எனத் திலகரை நம்ப வைப்பதற்காக, "ஐயா, நான் பார்க்கின்ற வேலைகளுக்கு நீங்கள் கொடுக்கின்ற சம்பளம் போதவில்லை. இந்த மாதம் கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள்' என்றான். அதற்கு திலகர், "ஏம்பா, உனக்கு வெள்ளைக்காரன் கொடுத்த வேலைக்கு இவ்வளவு சம்பளம் தருகின்றான். மேற்கொண்டு எனக்குப் பார்க்கின்ற வேலைக்காக நான் முப்பது ரூபாய் தருகிறேன், இது போதாதா' என்று கேட்டார். அன்றைக்கே சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டான் அந்த ஒற்றன்.
 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது ஆங்கில அரசின் ஒற்றர்கள் வெகுசாமர்த்தியமாக வேலை பார்த்தனர். ஆகஸ்டு ஒன்பதாம் தேதி அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் பத்தாம் தேதி விக்டோரியா ஹாலில் கொடியேற்ற வேண்டிய பண்டித நேருவும் கைது செய்யப்பட்டார்.
 அதனால் நேரு பெருமான் இடத்தில் நின்று அந்த இடத்தில் கொடியேற்றுவதற்காக அருணா ஆசப் அலி மாறுவேடத்தில் பல வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்தார். மூன்று ஆண்டுகளாகக் கைது செய்ய முடியாத அருணாவைக் கைது செய்வதற்கு ஒற்றர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டனர்.
 "ஓர் ஆங்கில மாது வீட்டில் நல்ல சம்பளத்தில் வேலை செய்வதற்கு ஒரு வேலையாள் தேவை' என்று விளம்பரம் தந்தனர். அந்த விளம்பரத்தைப் பார்த்த அருணா அங்கு வேலைக்குச் சேர்ந்தார். அதற்காகவே காத்திருந்த ஒற்றர்கள் அருணா ஆசப் அலியை கைது செய்தனர்.
 ஒற்றர்களை வளர்ப்பதை ஒரு கலையாகக் கொண்டிருந்தவர்கள் ஆங்கிலேயர்கள். இறையாண்மையைக் காப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அக்கலையை சிற்றின்பம் போன்ற சுய லாபத்திற்குப் பயன்படுத்தினால் ஏவியவர்களையே அது அழித்துவிடும் என்பதற்கு இங்கிலாந்தே ஒரு சாட்சியாகும்.
 1963-இல் இங்கிலாந்தை ஆண்ட பிரதமர் ஹெரால்டு மாக்மில்லனுடைய ஆட்சி கவிழ்ந்ததற்கே கீலர் என்ற உளவாளிதான் காரணம். மற்ற நாட்டு போர் ரகசியங்களைக் கண்டறிவதற்காக ஹெரால்டு மாக்மில்லனுடைய அமைச்சரவையில் இருந்த புரோபியூமா எனும் பாதுகாப்பு மந்திரி கீலரைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் உலகப் பேரழகியாகிய கீலர் இங்கிலாந்தினுடைய போர் ரகசியங்களை மற்ற நாடுளுக்கு ஓதிவிட்டாள். எனவே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் புரோபியூமா மீது எழுந்த புகார் பிரதமர் மாக்மில்லனுடைய ஆட்சியையே கவிழ்த்தது.
 நம் நாட்டிலும் கர்நாடகத்தில் 1988-இல் செல்வாக்கான முதலமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே 51 முக்கிய புள்ளிகளுடைய தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்தார் என நாடாளுமன்றத்தில் புகார் எழுந்ததால் ஹெக்டே தம் பதவியை ராஜிநாமா செய்தார்.
 1938-இல் ராஜாஜி அமைச்சரவையிலும் பின்னர் ஓமந்தூரார் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர் பி. சுப்பராயன். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பொதுவுடமை இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்த காரணத்தால் அவர் இல்லமே அப்போதைய முதலமைச்சர்களின் ஆணைப்படி உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்தது. இறையாண்மையைக் காப்பதற்காக உளவுத்துறையைப் பன்படுத்துவதில் தவறில்லை.
 இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்து மத்திய அரசும் மாநில அரசுகளும் உளவுத்துறையைப் பயன்படுத்தியே வருகின்றன. நாட்டின் இறையாண்மைக்குக் கேடு செய்பவர்களையும் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களைக் காட்டிக் கொடுப்பவர்களையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்பதற்காக உளவுத் துறையைப் பயன்படுத்தியே ஆக வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்துப் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக உளவுத்துறையைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகன்று.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.