முதியோர் - வீடு, நாட்டின் சொத்து!
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில், முதியோர் மீதான வெறுப்பு மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: புறக்கணிப்பு, தனிமை, சமூக தனிமை.


உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில், முதியோர் மீதான வெறுப்பு மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது: புறக்கணிப்பு, தனிமை, சமூக தனிமை. நிராகரிப்பு உள்பட முதல் வகை; சட்ட, மருத்துவ, மனித உரிமைகளற்ற இரண்டாவது வகை; தேர்வு செய்யும் உரிமை, நிதி, மரியாதை, தீர்மானிக்க முடியாத மூன்றாவது வகை.
உலகின் ஒவ்வொரு 10 மூத்த குடிமக்களில் ஒருவர் இந்தியர். இந்திய மக்கள்தொகை பதிவாளர் - பொது கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத் தரவுகளின்படி, இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை விகிதம் 1961-ஆம் ஆண்டில் 5.63%-லிருந்து 2011-ஆம் ஆண்டில் 8.6%-ஆக (2.47 கோடியிலிருந்து 9.72 கோடியாக) அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வாழும் மூத்த குடிமக்களில் 75% பேர் கிராமங்களிலும், மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டுக்குக் கீழும் வாழ்கின்றனர். முதியோரில் 70.3% பேர் எழுத்தறிவு இல்லாதவர்களாகவும், 32% பேர் 65 வயதைக் கடந்து கூலித் தொழிலாளர்களாகவும், 90% பேர் அமைப்புசாரா துறைகளில் பணிபுரிந்து வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் முதலான பலன்கள் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.
2017-இல் வெளியான "எங்கள் பெரியவர்களைப் பராமரித்தல்' என்ற ஆய்வறிக்கை, இந்திய அளவில் 11.2% முதியோரைக் கொண்டு அதிக மூத்த குடிமக்கள் கொண்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது என்றும் இந்தியாவிலேயே மிக அதிகமாக தமிழகத்தில்தான் 13.7% முதியவர்கள் தனியாக வாழ்கின்றனர் என்றும் கூறுகிறது. தமிழக முதியோரில் 17% பேர் ஆண்கள், 19.4% பேர் பெண்கள்.
முதியோருக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 18,714 எனவும், முதியோருக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் ஒட்டுமொத்த விகிதம் இந்தியாவில் 18.3% -ஆக உயர்ந்துள்ளது எனவும் தேசிய குற்ற ஆவணப் பணியகம் 2014 அறிக்கை தெரிவிக்கிறது.
நிதி பாதுகாப்பு காரணமாக பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்கள் சொந்த குடும்பத்திலிருந்தே கொடுமையை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் 71%-க்கும் அதிகமான மூத்த குடிமக்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அல்லது குழந்தைகளால் துன்புறுத்தல் அல்லது அவமானத்தை எதிர்கொள்கின்றனர்.
2011-ஆம் ஆண்டு இந்தியாவின் 12 முக்கிய நகரங்களில் ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பு மேற்கொண்ட முதியோருக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு, மூத்த குடிமக்கள் வாய்மொழியாக (60%), உடல் ரீதியாக (48%), உணர்ச்சி ரீதியாக (37%),பொருளாதார ரீதியாக (35%) இன்னல்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் குடும்பம் - சமுதாயம் தங்களைப் புறக்கணித்ததாக 20% முதியவர்கள் உணர்கின்றனர் என்றும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இன்னல்கள் அனுபவித்துவரும் முதியவர்களில் 72% பேர் 60 - 69 வயதுக்குட்பட்டவர்கள், 25% பேர் 70 - 79 வயதுக்குட்பட்டவர்கள், 3% பேர் மட்டுமே 80 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் ஆண்களுடன் (48%) ஒப்பிடும்போது பெண்கள் (53%) அதிக அளவு இடர்ப்பாடுகளுக்கு உள்ளானவர்கள் என்றும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
படுக்கையில் இருந்த, மற்றவர்களைச் சார்ந்து இருந்த மூத்த குடிமக்களிடம் நடத்திய ஆய்வில், தங்களின் இன்னல்களுக்கு காரணம் 50% பேர் மருமகள் என்றும், 42% பேர் மகன் என்றும், 10% பேர் மகள் என்றும், 23% பேர் சகோதரர்கள், மைத்துனர்கள் உள்ளிட்ட பிற உறவினர்கள் என்றும் 3% பேர் ஊழியர்கள் / பராமரிப்பாளர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களில் 70% பேர் குடும்ப விஷயங்களின் ரகசியத் தன்மை காரணமாகவும் 12% பேர் குழந்தைகளால் நிராகரிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவும் காவல் துறையிடம் தெரிவிக்க ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறியுள்ளனர்.
மூத்த குடிமக்களில் 10% பேர் மட்டுமே ஓய்வூதியம் பெறுகின்றனர். அதிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டுமே மாதத்துக்கு ரூ.200 முதல் ரூ.1,000 வரை ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள்.
வயதானவர்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் 90% நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு முதியோர் இல்லங்களை அமைக்க 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தின் கீழ் 2015-ஆம் ஆண்டு வரை 352 முதியோர் இல்லங்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.
1999-இல் உருவாக்கப்பட்டு, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை திருத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கையும், சுகாதார - குடும்ப நல அமைச்சகத்தால் 2010-இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதியோர் சுகாதார பராமரிப்பு தேசிய திட்டத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் வெவ்வேறு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டவை என்பது மட்டுமே.
செயல் திட்டங்களில் மாற்றம் இல்லாத இந்த இரண்டும் அதிக நிதி ஒதுக்கீடு இல்லாமல் திணறுகிறது. 2015-16, 2017-18-ஆம் ஆண்டுகளில் தொற்றற்ற நோய்களுக்கான ஒதுக்கீட்டில் முதியோரின் சுகாதார பராமரிப்பு தேசிய திட்டத்துக்கென ரூ.1,414 கோடியில் 5% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதியோரின் வாழ்க்கை, சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் "பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007'-இன்படி தங்கள் சொந்த வருமானம் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள போதுமானதாக இல்லை; இந்த நிலையில் தங்கள் வாரிசுகளிடமிருந்து பராமரிப்புச் செலவுகளுக்காக மூத்த குடிமக்கள் ரூ.10,000 பெற முடியும் என்ற சூழலில், இந்தச் சட்டம் குறித்து 14% பேர் மட்டுமே அறிந்திருக்கின்றனர்.
இந்தச் சட்டத்தின் தீர்ப்பாயம் குறித்து 12% பேரும், காவல் துறையின் உதவி மைய தொடர்பு எண்ணை (முதியோர் உதவி எண் - 1800 180 1253) 16% பேரும் தெரிந்து வைத்திருந்தனர். முதியவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து அறிந்திருக்காத நிலையில், மூத்த குடிமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வலி கொண்டோருக்கு விழி அளித்ததுபோல அமையும்.
(இன்று உலக முதியோர் புறக்கணிப்பு தடுப்பு விழிப்புணர்வு நாள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...