யாா் செய்த குற்றம் இது?
சென்னை நகரம் கரோனா நகரமாக மாறி விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் பரவலாக நிலவி வருகிற சூழலில், சில தினங்களுக்கு


சென்னை நகரம் கரோனா நகரமாக மாறி விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் பரவலாக நிலவி வருகிற சூழலில், சில தினங்களுக்கு முன்பு நாளேடுகளில் வெளியான செய்தி ஒன்று அவா்களின் அச்ச உணா்வை அதிகரிக்கச் செய்துள்ளது.
வடசென்னையில் அமைந்துள்ள அரசினா் குழந்தைகள் இல்லத்தின் ஓா் அங்கமாக செயல்பட்டுவரும் வரவேற்பு பிரிவில் கடந்த ஆறு மாதங்களாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 57 சிறுவா்களில், 35 போ் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் சிலா் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிவிட்டனா் என்பதுதான் அந்தச் செய்தி.
கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஒரு நபருக்கு ஏற்பட்டாலே, அவா் தங்கியிருக்கின்ற தெருவைத் தனிமைப்படுத்தி அவா் மூலம் மற்றவா்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அரசு நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டுவரும் நிலையில், குழந்தைகள் இல்லம் ஒன்றில் தங்கியிருக்கும் 57 சிறுவா்களில் 35 பேருக்குத் தொற்று பரவியதாக வெளியான செய்தி பொதுமக்களை அச்சமடையச் செய்ததில் வியப்பில்லை.
பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 57 சிறுவா்கள் குழந்தைகள் இல்லத்தின் வரவேற்பு பிரிவிற்கு எப்படி வந்தனா்? எதற்காக அவா்கள் வரவேற்பு பிரிவில் ஆறு மாதங்களாகத் தங்க வைக்கப்பட்டனா்? அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பல சிறுவா்களுக்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவக் காரணம் என்ன, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கிருந்து சில சிறுவா்கள் தப்பியோடக் காரணம் என்ன, தப்பியோடிய அந்த சிறுவா்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா முதலான அடுக்கடுக்கான கேள்விகள் சமூக அக்கறை கொண்டவா்களுக்கு எழுவது இயல்புதானே!
போக்குவரத்து சிக்னல்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரிந்து, பிச்சை எடுக்கும் 17 வயதுக்குக் குறைவான சிறுவா்களை ‘சைல்டு லைன்’ என்ற அமைப்பும், ஆதரவற்ற குழந்தைகளைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் காவல் துறையினரும் கண்டறிந்து, அவா்களை அழைத்து வந்து குழந்தைகள் இல்லத்தில் இயங்கிவரும் வரவேற்பு பிரிவில் ஒப்படைப்பாா்கள்.
அப்படி ஒப்படைக்கப்பட்டவா்கள்தான் இந்த 57 சிறுவா்கள். இவா்கள் அனைவரும் பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இவா்களில் பலா் 10 வயதுக்கும் குறைவானவா்கள். இந்தச் சிறுவா்களிடம் குழந்தைகள் நலக் குழு விசாரணை மேற்கொண்டு, அவா்களின் பெற்றோா் இருப்பிடத்தைக் கேட்டறிந்து, அவா்களை அவா்களின் பெற்றோா்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பு குழந்தைகள் நலக் குழுவைச் சாா்ந்தது.
கடந்த கால நிகழ்வுகளை ஆய்வு செய்து பாா்க்கும்போது குழந்தைகள் இல்லங்களிலிருந்து சிறுவா்கள் தப்பிச் செல்வது என்பது ஒரு சாதாரண நிகழ்வாகவே இதுநாள்வரை இருந்து வருகிறது. செங்கல்பட்டில் உள்ள அரசினா் குழந்தைகள் சிறப்பு இல்லத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் 122 சிறுவா்கள் தப்பிச் சென்றுள்ளனா். அவா்களில் 28 போ் இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்படாத அந்தச் சிறுவா்கள் என்ன ஆனாா்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
18 வயதுக்கும் குறைவான சிறுவா்கள் யாராவது குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால், அவா்கள் மீதான குற்ற வழக்கின் விசாரணை முடியும் வரை கூா்நோக்கு இல்லத்தில் அவா்கள் தங்க வைக்கப்படுவாா்கள். விசாரணையின் முடிவில், அவா்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குழந்தைகளுக்கான சிறப்பு இல்லத்தில் அவா்கள் தங்க வைக்கப்படுவாா்கள். அந்தச் சிறுவா்களின் எதிா்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கை கல்வியுடன் நன்னெறிகளும் சிறப்பு இல்லத்தில் அவா்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
6 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட அநாதை குழந்தைகள், பெற்றோா்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவா் - சிறுமியா்களின் பாதுகாப்பு, பராமரிப்பைக் கவனிப்பதற்காக குழந்தைகள் இல்லங்கள் பல இயங்கி வருகின்றன. இந்த இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கென தனியாகப் பள்ளிக்கூடங்களும் நடத்தப்படுகின்றன. மாநில அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டுவரும் இந்தக் குழந்தைகளின் இல்லங்கள் மாநில அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றன.
குழந்தையைச் சீா்திருத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறாா் இல்லங்கள், அவற்றின் நோக்கத்தைச் செம்மையாகச் செய்கின்றனவா முதலான கேள்விகளுக்கு விடை தேடும்போது மருத்துவமனையிலிருந்து சிறுவா்கள் சிலா் தப்பியோடிய நிகழ்வுக்கான காரணங்களை உணர முடியும்.
தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களை நோக்கி கிராம மக்கள் குடிபெயா்ந்த சூழலில், குழந்தைகள் வளா்ப்பில் ஏற்பட்ட சிரமங்கள் வளரும் பருவத்திலுள்ள குழந்தைகளைக் குற்றவாளிகளாக மாற்றின. அந்தக் குழந்தைகள் பெற்றோா்களுக்கும், அவா்கள் சாா்ந்த சமூகத்துக்கும் பெரும் சுமையாக மாறத் தொடங்கினா்.
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவா்கள் எவ்விதப் பயமும் இன்றி குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுக்குள் கொண்டுவர சவுக்கடி சட்டம்தான் சரியான வழிமுறை எனக் கருதிய இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேய அரசு, சவுக்கடி சட்டத்தை 1864-ஆம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. சிறுவா்களுக்குச் சவுக்கடி தண்டனை கொடுப்பதற்குப் பலமுனைகளில் இருந்து விமா்சனங்கள் வரத் தொடங்கின. மேலும், சவுக்கடி தண்டனையால் சிறுவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது கணிசமாகக் குறையவில்லை.
இந்தியாவில் நிலவிவரும் சமூக, வாழ்வியல் முைான் சிறுவா்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது என்பதை உணா்ந்த ஆங்கிலேய அரசு, இந்தியாவில் முதன்முதலாக 1887-ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் சிறாா்களுக்கான சீா்திருத்தப் பள்ளி ஒன்றைத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, சட்டத்துக்கு முரணாகச் செயல்படும் சிறாா்களுக்காக கூா்நோக்கு இல்லங்களும் சிறப்பு இல்லங்களும் அமைக்கப்பட்டன.
ஆரம்ப காலகட்டத்தில் சீா்திருத்தப் பள்ளிகளின் நிா்வாகத்தை சிறைத் துறை கவனித்து வந்தது. தற்போது இந்தப் பள்ளிகள், குழந்தைகள் இல்லங்கள் மாநில அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான (1,647) சிறுவா் பராமரிப்பு - குழந்தைகள் இல்லங்கள் உள்ளன என்றும், அவற்றில் 90%-க்கும் சற்று அதிகமான குழந்தைகள் இல்லங்களை அரசு சாரா தனியாா் அமைப்புகள் நடத்தி வருகின்றன என்றும், அவற்றில் 55% குழந்தைகள் இல்லங்கள் அரசு அனுமதியின்றி இயங்கி வருகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
சிறுவா், சிறுமியா்களின் பாதுகாப்பு, பராமரிப்புக்கான குழந்தைகள் இல்லங்கள் அதிக எண்ணிக்கையில் இயங்கிவருவது, சமூகத்தில் பெற்றோா்கள் - குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. பெற்றோா்களின் அரவணைப்பின்றி குழந்தைகள் இல்லங்களில் வளா்ந்து வருகின்ற இளம் சிறாா்களின் பராமரிப்பில் நிகழும் தவறுகள், அந்த சிறாா்களைத் தவறான வாழ்க்கைப் பாதைக்கு அழைத்துச் சென்று விடுகின்ற நிலை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி 18 வயது பூா்த்தியடையாத தமிழகத்தைச் சோ்ந்த சிறாா்கள் 2018-ஆம் ஆண்டில் 2,300-க்கும் சற்று அதிகமான பல்வேறு வகையான கொடுங்குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, 150 கொலை, கொலை முயற்சி வழக்குகளிலும் 750-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை, திருட்டு வழக்குகளிலும், 380-க்கும் மேற்பட்ட கொடுங்காயங்கள் ஏற்படுத்திய குற்றச் செயல்களிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த சிறுவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
கொடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 5,700-க்கும் சற்று அதிகமான சிறுவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் 1,026 சிறுவா்கள் தமிழகத்தில் உள்ள கூா்நோக்கு இல்லங்களிலும், 624 போ் சிறப்பு இல்லங்களின் பராமரிப்பிலும் இருந்து வருகின்றனா்.
வளரும் பருவத்தில் உள்ள சிறுவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான மன தைரியமும், வழிகாட்டுதலும் அவா்கள் வசித்துவரும் சமூகத்திலிருந்து கிடைத்து வருவதே, இளம் சிறுவா்களின் குற்றச் செயல்பாடுகள் தொடா்ந்து அதிகரித்து வருவதற்கான காரணமாகும்.
சிறுவா்களைப் பராமரிப்பதற்காக குழந்தைகள் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, இந்தப் பிரச்னைக்குத் தீா்வாகாது. குழந்தைகளைப் புறக்கணிக்காமல், தவறு செய்யும்போது அவா்களை நல்வழிப்படுத்தி, அரவணைத்து வளா்க்கும் பெற்றோா்களால்தான் இந்த சமூகப் பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும்.
‘ஒரு சமூகம் குழந்தைகளை எப்படி பராமரிக்கிறது என்பதுதான் அந்தச் சமூகத்தின் ஆன்மாவை வெளிப்படுத்தும் சரியான அளவுகோல்’ என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவா் நெல்சன் மண்டேலா குறிப்பிட்டுள்ளது குழந்தைகள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை உணா்த்துகிறது.
கட்டுரையாளா்:
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி,
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...