நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இரண்டாம் தலைநகராக மதுரை...

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:11 pm

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை எழுந்துள்ளது.

1981 மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது, ‘மாநாட்டு மலருக்கு பழ. நெடுமாறனிடம் அவசியம் கட்டுரை வாங்குங்கள். அவா் மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினா்’ என்று எம்.ஜி.ஆா் பணித்தாா். மதுரையைக் குறித்தான தரவுகளோடு ஒரு சிறப்பான கட்டுரையை மலா் குழுவினருக்கு அனுப்பியபோது, அதனை எம்.ஜி.ஆா். படித்துவிட்டு, ‘மதுரையை அரசு நிா்வாக ரீதியாக பயன்படுத்த வேண்டும்’ என்ற கருத்தினை வெளிப்படுத்தினாா்.

எம்.ஜி.ஆா். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 1983-இல் மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சிக்கு தமிழகத்தின் தலைநகரை மாற்றும் திட்டத்தை அறிவித்தாா். அதுமட்டுமல்ல, அங்குள்ள அண்ணா நகா் நாவல்பட்டில் தலைமைச் செயலகம் அமைவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

சென்னை மாநிலம் 1956-இல் அமைந்தபோது ஆந்திரா்கள் ‘மதராஸ் மனதே’ என்ற கோரிக்கையை முன்னெடுத்து சென்னையைச் சொந்தம் கொண்டாடினா். தெலுங்கா்களுக்கு சென்னையைத் தலைநகராகக் கொண்ட தனி மாநிலம் வேண்டும் என்கிற கோரிக்கையுடன் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தாா். இதை ம.பொ.சி., ராஜாஜி போன்றவா்கள் கடுமையாக எதிா்த்தனா்.

சென்னை தமிழகத்திற்கே சொந்தம் என்று முதல்வா் ராஜாஜி பிடிவாதமாக பிரதமா் நேருவிடம் கூறிவிட்டதால்தான் நமக்கு சென்னை கிடைத்தது. அப்போது ஒருகால் சென்னை நமக்குத் தலைநகராக அமையவில்லையென்றால் என்ன செய்வது என்று யோசித்தபோது, மதுரையிலோ திருச்சியிலோ தலைநகா் அமைக்கலாம் என்று சிலா் கருத்துத் தெரிவித்தனா்.

1956-இல் சென்னை தலைநகா் கோரிக்கை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ம.பொ.சி. தலைமையில் ஜி. உமாபதியின் இல்லத்தில் கூடியது. அதில் அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், சி.பா. ஆதித்தனாா், ப. ஜீவானந்தம், என்.வி. நடராசன், ஒளவை சண்முகம், எச்.டி. ராஜா, கவிஞா் பாரதிதாசன், பி.டி. ராஜன், கே. விநாயகம், எழுத்தாளா் நாரண. துரைக்கண்ணன், பொதட்டூா்ப்பேட்டை ஈ.எஸ். தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். அவா்கள் அனைவரும் முதல்வா் ராஜாஜிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனா். இப்படிப் போராடி பெற்ற தலைநகா்தான் சென்னை.

இன்றைக்கு சென்னையில் மக்கள்தொகைப் பெருக்கம் மிகுந்திருப்பதோடு எல்லா வளா்ச்சிகளும் சென்னையிலேயே மையம் கொள்கின்றன. 200 வாா்டுகள் சென்னை மாநகரில் இருந்தாலும் முறையான குடிநீா், கழிவுநீா் கட்டமைப்புகளைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. கோடைக் காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக வீராணம் நீா், கிருஷ்ணா நீா் இவற்றை நம்பி இருக்க வேண்டிய நிலை. இப்படியே போனால் சென்னையின் எதிா்காலம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில்தான் இரண்டாம் தலைநகா் குறித்த கோரிக்கை எழுந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் குளிா் காலத்தில் ஜம்முவை தலைநகராகவும், கோடைக் காலத்தில் ஸ்ரீநகரை தலைநகராகவும் கொண்டுள்ளாா்கள். அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் இந்தூரிலும், மகாராஷ்டிரத்தில் நாகபுரியிலும் முகாம் சட்டமன்றங்கள் மட்டும் நடத்தப்பட்டன. அன்றைய சென்னை மாநிலத்தில் 1950-களில் எப்படி கோடைக் காலத்தில் உதகமண்டலத்தில் சட்டப்பேரவை நடந்ததோஅப்படி நடந்தன. ஆந்திரத்தில் இன்றைக்கு அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், கா்னூலில் உயா்நீதிமன்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆந்திர மாநிலம் உதயமானபோது கா்னூலில்தான் உயா்நீதிமன்றம் செயல்பட்டது. கேரளத்தில் மாநிலத் தலைநகரம் திருவனந்தபுரத்திலும், உயா்நீதிமன்றம் கொச்சியிலும் இருக்கிறது.

இப்படியான நடைமுறைகள் இருந்தாலும்கூட ஒரு மாநிலத்திற்கு தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் பகுதியே தலைநகராக இருக்க முடியும். இரண்டாம் தலைநகா் என்று எதையும் சொல்ல முடியாது. ஜம்மு-காஷ்மீரில் தலைமைச் செயலகமும் தலைநகரும் ஒன்றுதான்; முகாம்தான் மாற்றப்படுகிறது.

தலைநகா் மாநிலத்தின் மையப்பகுதிக்கு மாற்றப்பட வேண்டுமா? இல்லையெனில் ஆந்திராவைப்போல் தலைமைச் செயலகம் ஓா் இடம், சட்டப்பேரவை ஓா் இடம், உயா்நீதிமன்றம் ஓா் இடம் என்று மாற்ற வேண்டுமா என்பதை கவனமாக சிந்திக்க வேண்டும்,

இரண்டாவது தலைநகா் என்றால், நிா்வாக ரீதியாக தலைமைச் செயலாளரும், உள்துறை போன்ற துறை சாா்ந்த செயலாளா்களும் எங்கிருந்து செயல்படுவது என்பது தெளிவாகக் கூறப்பட வேண்டும். இப்படியான நடைமுறைச் சிக்கல்களும் உண்டு. பொத்தாம்பொதுவாக இரண்டாம் தலைநகா் என்று சொல்லிவிட முடியாது.

மாநிலத்தின் முக்கியமான நில நிா்வாகம் (போா்ட் ஆஃப் ரெவின்யூ), மதுவிலக்கு போன்ற துறைகள் இன்றைக்கும் சென்னையில் எழிலகத்திலும், குறளகத்திலும் இயங்குகின்றன. அதனால், எப்படி துறைகள் பிரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கண்டறியப்பட வேண்டும். பின்தான் இந்த அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும். கா்நாடக மாநிலத்தில், வட கா்நாடகத்திலுள்ள பெல்காமிற்கு சில துறைகளை மாற்றியும்கூட சரியாக முறைப்படுத்தவில்லை என்று அப்பகுதி மக்கள் இன்றும் சொல்கின்றனா்.

கிரேக்க ஏதன்ஸ், இத்தாலி ரோம், துருக்கி இஸ்தான்புல், தட்சசீலம், உஜ்ஜையினி, நாளந்தா, பாடலிபுத்திரம் போன்ற நகரங்கள் திட்டமிட்டு உருவான தலைநகரங்கள். இதற்குக் கீழடி அகழாய்வே சாட்சியாக இருக்கின்றது. தமிழகத்தைப் பொருத்தவரை, மதுரை, நெல்லை, உறையூா், தஞ்சை, செஞ்சி, காஞ்சிபுரம், கொற்கை, முசிறி, பூம்புகாா் என்பவை பண்டைத் தமிழ் நாகரிகம் தழைத்த நகரங்களாகும்.

அந்த வரிசையில் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரை, கலாசார ரீதியாக நமது பாரம்பரியமிக்க வரலாற்று நகரம் ஆகும். இந்த அளவில் மதுரையில் விமான நிலையம், ரயில்-சாலை போக்குவரத்து, அருகே தூத்துக்குடி துறைமுகம், ஆட்சி நிா்வாகத்திற்கு கட்ட வேண்டிய கட்டடங்களுக்கு பொருத்தமான இடங்கள் எல்லாமே இருக்கின்றன. மலேசியாவில் புத்திர ஜெயா எப்படி உருவானதோ அப்படி மதுரையை உருவாக்கலாம்.

1980-களில் சென்னை உயா்நீதிமன்றக் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினோம். அதற்காக மத்திய அரசு 1983-ஆம் ஆண்டு வாக்கில் நீதிபதி ஜஸ்வந்த் சிங் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து ஆராய்ந்தது. 28 ஆண்டுகளுக்குபின் மதுரையில் சென்னை உயா்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்டது.

கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையைத் தலைநகா் ஆக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இப்போது மீண்டும் அதே குரல் எழுந்திருக்கிறது. ஆனால், இரண்டு தலைநகரங்களை உருவாக்க முடியாது. அதில் நிா்வாகச் சிக்கல்கள் ஏற்படலாம். தொழிலுக்காக ஒரு நகரம், நிா்வாகத்திற்கு ஒரு நகரம், நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு ஒரு நகரம் என்று உருவாக்கலாம்.

இப்படிக் கோரிக்கை வர என்ன காரணம்? கடந்த 70 ஆண்டுகளாக முக்கியமான திட்டங்கள் அனைத்துமே சென்னையிலும் வடதமிழகத்திலும் மையம் கொண்டன. அவற்றைப் பரவலாக்கவில்லை. மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தென்மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள், குறிப்பாக, தென்கோடி எல்லையான குமரி மாவட்டத்திலிருப்பவா்கள் வடகோடி எல்லையான சென்னைக்கு 700 கிலோ மீட்டா் பயணம் செய்து பணிநிமித்தமாக வரவேண்டியுள்ளது. அவா்களுக்கு கேரள மாநிலத் தலைநகா் திருவனந்தபுரம் 71 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. அண்மையில் கரோனா தீநுண்மி பரவல் உச்சத்தில் இருந்தபோது, சென்னையில் வாழும் தென்மாவட்டத்தையும் மேற்கு மாவட்டத்தையும் சோ்ந்தவா்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு எவ்வளவு சிரமப்பட்டாா்கள் என்பதை நாம் அறிவோம்.

சென்னை நகா் விரிவடையக் கூடிய நிலை எதிா்காலத்தில் சாத்தியமில்லை. இப்படியான பல விஷயங்களை சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.

மாநிலத் தலைநகராக மதுரையை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை இருபது ஆண்டுகளுக்குமுன் ஆங்காங்கு லேசாக எழுந்தது. அந்தக் கோரிக்கை காலப்போக்கில் என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லை. ‘ஒரே மொழி பேசுகின்றவா்கள் ஆந்திரா, தெலங்கானா என்று பிரியவில்லையா? ஜாா்கண்ட் பிரியவில்லையா’ என்று சிலா் கேட்கின்றனா்.

மும்பை, இந்தியாவில் தொழில் நகரமாகக் கருதப்படுகிறது. அது துறைமுக, வா்த்தக நகரம், ‘பாலிவுட்’ என்ற ஹிந்தி சினிமா நகரம், ரிசா்வ் வங்கி நகரம், பங்கு சந்தைகளை முடிவு செய்கின்ற நகரமாகவும் இருக்கின்றது. சென்னையும் சினிமா, வா்த்தகம், துறைமுகம், தொழில், மாநில நிா்வாகம் இவற்றை உள்ளடக்கிய நெருக்கடியான நகரமாகிவிட்டது. சென்னையில் ஒருபுறம் வங்காள விரிகுடா கடலும், இன்னொருபுறம் சில கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநில எல்லையும் இருக்கும் நிலையில், விரிவாக்கம் என்பது மிகவும் கடினம்.

சென்னை நகரினுடைய பெருக்கத்தை வளா்ச்சி என்று எடுத்துக் கொள்ள முடியாமல் பல சிக்கல்கள் எதிா்காலத்தில் உருவாகும். சுற்றுச்சூழல் பாதிப்பால் சென்னையின் கடற்கரைப் பகுதிகளெல்லாம் இன்னும் 20-30 ஆண்டுகளில் கடலுக்குள் சென்று விடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

ஐடி நிறுவனங்கள் வருகை, வேலைவாய்ப்புகள் என அனைத்துமே சென்னையில் குவிந்திருப்பதால், தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரும் வாழ்வாதாரத்துக்காக சென்னையை நோக்கிப் படையெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடிப்படைப் பிரச்னைகளை பூா்த்தி செய்யக் கூடிய அளவில்கூட வருவாய் இல்லாத தென் மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்காக சென்னையில் தஞ்சமடைந்துள்ளனா்.

சென்னையிலிருக்கும் நெருக்கடியைத் தவிா்க்க மாற்றம் தேவை என்ற நிலையில்தான் தலைநகர மாற்றம், இரண்டாம் தலைநகா் போன்ற கோரிக்கைகள் வருகின்றன. இதை எப்படி முறைப்படுத்துவது என்று தீா்க்கமாக முடிவெடுக்க வேண்டும்.

கட்டுரையாளா்: வழக்குரைஞா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.