வல்லான் வகுப்பதல்ல வாய்க்கால்!
சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட மனித உரிமைகளை, சமூகவியலாளர்கள் மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் அவை போன்ற உலகு தழுவிய அமைப்புகளும் வலியுறுத்தி வருவதால், பெயரளவுக்காவது ஜனநாயக


சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட மனித உரிமைகளை, சமூகவியலாளர்கள் மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் அவை போன்ற உலகு தழுவிய அமைப்புகளும் வலியுறுத்தி வருவதால், பெயரளவுக்காவது ஜனநாயக நெறிமுறைகளை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் பல நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை அடைவதற்கு, உலக வரலாற்றில் அந்தந்த நாட்டு மக்கள் கொடுத்த விலை மிக அதிகம். பல நாடுகளின் அரசுகள், ஆட்சி நிர்வாகம் என்ற பெயரில் தனது மக்களை வாட்டி வதைத்தன; அடக்கி ஒடுக்கின. இன்றைய மக்களாட்சிக் காலத்திலும் இந்நிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோர், சாலைகளில் பயணிக்கும்போது பொதுமக்கள் ஒதுங்கி, காத்திருந்து அவர்கள் சென்ற பின்னர்தான் தங்களது பணிகளுக்குப் போகவேண்டியிருக்கிறது.
இத்தனைக்கும், விஐபி-களின் பயணத்திற்காக, பத்து நிமிடத்திற்குமேல் போக்குவரத்தை நிறுத்தி வைக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டு பயணிக்கிற மேட்டுக்குடி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அத்தகையோரின் மகிழுந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு மற்றும் நீல சுழல் விளக்குகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வரும் தனது மகிழுந்தில் அமைக்கப்பட்டிருந்த சுழல் விளக்கை, தானே அகற்றினார்.
ஏழை எளிய மக்கள் உள்ளே செல்ல அச்சப்படுகின்ற வகையில் அமைந்திருக்கின்ற நமது காவல் நிலையங்களில், வரவேற்பாளர்களாக சில காவலர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு உளவியல் சார்ந்த நட்புறவுப் பயிற்சிகளையும் அளித்தது தமிழ்நாடு காவல்துறை. கடந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நல்ல முயற்சி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களைக் கடந்து, தமிழ்நாட்டின் மற்ற காவல் நிலையங்களுக்கு எந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இதுபோன்று, ஜனநாயகத்தை மேம்படுத்தும் செயல்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில், ஆட்சியதிகாரத்தில் காணப்படும் அதீத ஆடம்பரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிற வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒருவர், மிகவும் ஆடம்பரமான முறையில் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரமும் இரண்டு லட்சம் மதிப்புள்ள கண்ணாடியும் அணிந்திருக்கிறார்' என்று கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த சித்தராமையா மீது தற்போதைய முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டினார்.
ஒரு முறை, தனது மனைவிக்கு சுமார் ஒரு லட்ச ரூபாயில், நீரில் நனையாத ("வாட்டர் ப்ரூஃப்') பட்டுப்புடவை ஒன்றை வாங்கிப் பரிசளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, பட்டு கூட்டுறவு நெசவுத் தொழிலாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவே, தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். ஆனால், எந்த நாட்டின் எந்தத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்த நாம் 70 லட்ச ரூபாய்க்கு கைக்கடிகாரமும் இரண்டு லட்ச ரூபாய்க்குக் கண்ணாடியும் வாங்கி அணிகிறோம் என்று அவர் சிந்திக்கவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், சித்தராமையா மீது குற்றம் சாட்டிய குமாரசாமி, கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற போது, விருந்தினர்களாக வந்திருந்த 300 பேருக்கான தேநீர் விருந்துக்கு தட்டு ஒன்றுக்கு ரூ.1,450 எனும் கணக்கில் 4,35,000 ரூபாய் அரசுப் பணத்தைச் செலவழித்திருக்கிறார். மேலும், அவருடைய அமைச்சர்கள் பதவியேற்றபோது 3,000 விருந்தினர்களுக்கான தேநீர் செலவு மட்டும் 12,74,000 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உயர் மதிப்புடைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாதவையாக்கப்பட்டு, மக்கள் ஏடிஎம் எந்திரங்களின் முன்பு நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தபோது, 650 கோடி ரூபாய் செலவில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகள் திருமணம் பெங்களூரில் நடந்தபோது, நாடு முழுவதும் அதிர்ச்சி பரவியது.
நமது நாட்டில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நமது ஜனநாயக முறை எந்தக்குறையையும் வைப்பதில்லை. ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் ஜனநாயகத்திற்கு ஏற்படுத்துகின்ற குறைகள் மிக மிக அதிகம். தங்களுக்கான மாத ஊதியத் தொகையைப் பல மடங்கு கூடுதலாக தங்களுக்கு தாங்களே உயர்த்திக் கொள்கிற அதிகாரமும், சில மாதங்களே பதவியில் இருந்தாலும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுகிற வாய்ப்பும் நமது மக்கள் பேராளர்களுக்கு உண்டு.
பொறுப்பு என்பது இங்கே "பதவி' என்று புரிந்து கொள்ளப்பட்டு இன்னும் ஒருபடி மேலே சென்று அதை அலங்கரிப்பதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். எந்த நாற்காலியும் பொறுப்புக்கு உரியதே தவிர அலங்கரிப்பதற்கு அல்ல வடக்கு மாகாண இந்திய தொடர்வண்டித்துறையின் தொழிலாளியான தர்மேந்திரகுமார் என்பவர், தனது உயர் அதிகாரியின் வீட்டில், தான் எடுபிடி வேலை செய்ய வேண்டியிருப்பதைக் குறித்தும், தனது உயர் அதிகாரி புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் அவரது வீட்டில் கொத்தராக, தான் வேலை செய்து கொண்டிருப்பது குறித்தும் அத்துறையின் மூத்த உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதம் அவரைக் கடுமையாக மிரட்டவே பயன்படுத்தப்பட்டது. மனம் தளராத அவர், கடைசியில், தனது உயரதிகாரி கட்டிக் கொண்டிருக்கிற வீட்டில், தான் கொத்து வேலை செய்கின்ற காட்சியைப் படம்பிடித்து தொடர்வண்டித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அனுப்பினார். இந்த சம்பவம், தற்போது விசாரணையில் இருக்கிறது.
தொடர் வண்டித்துறையின் வாரியத் தலைவர், உயரதிகாரிகள் போன்றோர் ரயில் நிலையங்களுக்கு வரும்போது அவர்களை வரவேற்கும் வகையில் கீழ்நிலை, உயரதிகாரிகள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள், மகாராஜாக்களின் காலத்தை நமக்கு நினைவூட்டுபவையாக இருந்தன. நல்லவேளையாக இந்த நிலையை மாற்றி, இனி தொடர்வண்டித் துறையின் உயரதிகாரிகள் வரும்போது அவர்களைக் கீழ்நிலை அதிகாரிகள் வரவேற்கத் தேவையில்லை; வழியனுப்பவும் தேவையில்லை என்று கூறிருக்கிறார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல். இந்தச் சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகான ஒரே மாதத்தில், தொடர்வண்டித் துறையின் கலாசித் தொழிலாளர்கள் 7,000 பேர் உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசு நிர்வாக அமைப்புகளின் அடக்கு முறைகள், சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களுக்கு மாறுகின்றன. அவ்வகை அடக்கு முறைகளில் ஒன்று, நமது நாட்டின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள்.
இந்திய அளவில் 21 மாநிலங்களில் மொத்தம் 464 சுங்கச்சாவடிகள் தற்போது இருக்கின்றன. அதிக மலைப் பகுதிகளைக் கொண்ட சிறிய மாநிலங்களில் சுங்கச்சாவடிகள் குறைவாகவே உள்ளன. திரிபுரா, மிசோராம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் அவை அறவே இல்லை. சுங்கச் சாவடிகளால் தற்போது மிகவும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவை, மருத நிலப்பரப்புக்களை அதிக உளவில் உடைய ஆந்திப் பிரதேசம்(38), பிகார்(18), குஜராத் (38) கர்நாடகம் (37) மத்தியப் பிரதேசம் (37) மகாராஷ்டிரம் (34) ராஜஸ்தான் (59) தமிழ்நாடு (44) உத்தரப் பிரதேசம் (51) ஆகிய மாநிலங்கள்தான். இவற்றில், குறைவான நிலப்பரப்பில் அதிக சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அதிகத் தொகை வசூலிக்கப்படுவது நமது தமிழ்நாட்டில்தான். நெடுஞ்சாலைப் பயணங்களின் சுங்கக் கட்டணச் செலவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது நமக்குப் பேரதிர்ச்சி ஏற்படுகிறது.
முக்கிய பிரமுகர்கள் போன்ற "வலிமை' மிக்கவர்களுக்கு வணங்கி வழிவிட்டுவிட்டு, போராடவோ கேள்வி கேட்கவோ முடியாதவர்களிடம் மட்டும் கடுமையாகப் பணம் வசூலிக்கும் பணியைச் சுங்கச் சாவடியினர் மேற்கொள்ளுகின்றனர். கேட்பாரற்ற நிலையில் வசூல் நடத்திக் கொண்டிருக்கிற சுங்கச்சாவடிகளை, நீதிமன்றங்களால் மட்டுமே வழிக்குக் கொண்டுவந்து சுங்கக் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவுகட்ட முடியும் என்பது சாமானியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்தின்படி எல்லாரும் இந்நாட்டு மன்னர்களாக நடத்தப்படவேண்டும் என்றாலும், விஐபி, விவிஐபி போன்ற பாகுபாடுகளால் இந்திய ஜனநாயகம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளில் கூட விஐபி-க்கள் என்று சொல்லப்படுகின்ற முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டிலும் 150-க்குள்ளேயே அடங்கி விடுகிறது. இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில்கூட விஐபி-க்களின் எண்ணிக்கை வெறும் 345-தான். ஆனால், நமது இந்திய நாட்டின் விஐபி-க்கள் எண்ணிக்கையோ 5,79,092- என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
ஆக, நமது ஜனங்களுக்கு ஏறக்குறைய 5,80,000 நாயகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் தேவைப்படுவதென்னவோ, அனைவருக்குமான ஜனநாயகம்தான்!
கட்டுரையாளர்: கவிஞர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...