இதழியல் துறையின் ஏகநாயகன்
தாய் மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தும் ஒரு போராளியின் வீரம், பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டும்; நல்லவர்களுக்குப் பொல்லாதவர்களால் கேடு நேரும்போது,


தாய் மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தும் ஒரு போராளியின் வீரம், பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டும்; நல்லவர்களுக்குப் பொல்லாதவர்களால் கேடு நேரும்போது, அதனைத் தடுத்து நிறுத்தும் கேடயமாகவும் ஒரு பத்திரிகையாளன் அமைய வேண்டும்; அதிகார வர்க்கத்தாலும் ஆட்சியாளர்களாலும் அமல்படுத்தப்படும் கருப்புச் சட்டங்களை, வெகுண்டு விமர்சிக்கும் அர்ப்பணிப்பு உள்ளவராகவும் ஒரு பத்திரிகையாளர் இருக்க வேண்டும். இந்த மூன்று போர்க்குணங்களையும் ஒருங்கே பெற்று வாழ்ந்து முடிந்த பத்திரிகையாளர், குல்தீப் நய்யார்.
இதழியலின் நரம்பறிந்து எழுதிய குல்தீப் நய்யார் ஏடுகளை மட்டுமின்றி, மனித மனங்களையும் ஆழ உழுதார். 95 ஆண்டுக்காலம் எழுதுகோலையே செங்கோலாகக் கொண்டு ஆண்ட ஏகநாயகன் நய்யார், நிமோனியா காய்ச்சலால் 15.08.2018 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல்நாள், இந்தியச் சுதந்திரம் எதிர்காலத்தில் செல்லவேண்டிய திசைபற்றி ஒரு பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் அமரத்துவம் அடைந்தார். 14 மொழிகளில் 80 பத்திரிகைகள் ஒருவருடைய சிறப்புப் பத்திகளை வெளியிட்ட பெருமை, குல்தீப்பிற்கு மட்டுந்தான் உண்டு.
ஒரே நேரத்தில் பத்திரிகையாளராகவும், வழக்குரைஞராகவும், ராஜதந்திரியாகவும், மனித உரிமைகளின் காவலராகவும், சமாதானப் பாதுகாவலராகவும் வாழ்ந்த போராளி, குல்தீப். இவர், பிளவுபடாத பாரதத்தில் - பாகிஸ்தானில் சியால்காட் எனும் ஊரில் 14.08.1923 அன்று, குர்பக்சிங் எனும் தந்தைக்கும் பூர்ணாதேவி எனும் தாய்க்கும் மகனாகப் பிறந்தார்.
லாகூரில் பட்டப்படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்த அவர், அமெரிக்காவிலுள்ள நார்த் வெஸ்டன் பல்கலைக் கழகத்தில் இதழியலுக்குரிய பட்டத்தையும் பெற்றார். பின்னர் அங்கேயே தத்துவத்துறையில் பிஎச்.டி. பட்டத்தையும் பெற்றார். நாடு பிரிவினையின்போது லாகூரில் ஓடிய குருதி ஆற்றைக் கண்ட நய்யாருக்குக் கடைசிக்காலம் வரையில் அது அவருடைய கண்களில் இரத்தக்கண்ணீராக வடிந்து கொண்டிருந்தது. உருதுமொழியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த நய்யார் அஞ்சாம் எனும் உருது பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தார். பின்னர் தில்லியிலிருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் ஆங்கில இதழுக்கு ஆசிரியரானார்.
ஒரே நேரத்தில் பாகிஸ்தான் பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் அவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலும், லண்டனிலிருந்து வெளிவரும் தி டைம்ஸ் பத்திரிகையிலும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்.
நய்யாருக்கு மிகவும் பிடித்த பழம், மாம்பழம்; மிகவும் பிடித்த மனிதர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அப்பொழுது உள்துறை அமைச்சராகத் திகழ்ந்த கோவிந்த வல்லப பந்த்-க்கு செய்தி அதிகாரியாகவும், பின்னர் பிரதமராக வந்த லால்பகதூர் சாஸ்த்ரிக்கு ஊடகவியல் ஆலோசகராகவும் பணியாற்றிய பெருமை குல்தீப்-க்கு உண்டு. 1990-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் இந்தியத் தூதராக குல்தீப் நியமிக்கப்பட்டார்.
1997-ஆம் ஆண்டு, இந்திய அரசில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1962 -இல், சீன-இந்திய போரின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குச் சரியான காரணத்தைத் துல்லியமாகக் கணித்தவர், நய்யார். சரியான ஆயத்தங்கள் இல்லாத நேரத்தில் போரில் முனைந்திருக்கக்கூடாது. மேலும், இப்போரில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளால் மடிந்தவர்களைக் காட்டிலும், பனிமழையில் செத்தவர்களே அதிகம் எனப் பகிரங்கமாக அறிக்கை விட்டார். அதைப்போலவே 1971-இல், மேற்குப் பாகிஸ்தானியர் கிழக்கு வங்கத்தில் (பங்களாதேஷ்) நிகழ்த்திய அட்டூழியங்களைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார், குல்தீப். கிழக்கு வங்கத்திலிருந்து இந்தியாவிற்குப் போதைப் பொருள்களைக் கடத்தி வருவதையும் கண்டித்தார், நய்யார். இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலையை அறிவித்தபோது, அதனைத் தீவிரமாகக் கண்டித்து எழுதியதால், 1975-லிருந்து 1977 வரை இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
நய்யார் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய முழுப்புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டு அவருக்கு ஆதரவு திரட்டும் பணியிலும் முழுமையாக, ஈடுபட்டார். நேர்மையான ஆட்சிக்காக அன்னா ஹசாரே எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டினார். அதே நேரத்தில், அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தைக் கண்டித்தும் எழுதினார்.
வரலாற்று நாயகர்களான ஜவாஹர்லால் நேரு, டேனியல் ஸ்மித், பேரி மணிலோ போன்றோரைப் பற்றி நய்யார் எழுதிய 'Scoop' சிறப்புப் பத்திகள் உலக அளவில் பாராட்டப்பட்டன. இதழியல் துறையில் ஊகங்களின் அடிப்படையில் எழுதுவது, ஒரு ரசமான அம்சம்; தவிர்க்க முடியாததும்கூட. அப்படி எழுதுவதில் வல்லவரான நய்யார், தம்முடைய ஊகங்கள் - கணிப்புகள் தவறாகப் போன இடங்களில், அவற்றுக்காக வருத்தப்பட்டு, மன்னிப்பும் கோரியிருக்கின்றார்.
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் நேச உறவு நிலைத்திட வேண்டும் என்று எழுத்து வேள்வி செய்தவர், நய்யார். பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது ஆகஸ்ட் 14; இந்தியா விடுதலை பெற்றது ஆகஸ்ட் 15. இந்த இரண்டு நாட்களிலும் அமிர்தசரஸிலிருந்து வாகா எல்லை வரை கி.பி. 2000 ஆம் ஆண்டிலிருந்து, தான் மறையும் நாள் வரையில், சமாதான விரும்பிகளை அழைத்துக்கொண்டு மெளன ஊர்வலம் நடத்தியவர், குல்தீப்.
குல்தீப் வாழ்க்கையிலும் சில கரும்புள்ளிகள் உண்டு. இந்தியாவுக்கு எதிராக, அமெரிக்காவில் மையம் கொண்டிருந்த பாகிஸ்தான் உளவாளிகள் ஏற்பாடு செய்த பல கூட்டங்களில் குல்தீப் நய்யார் கலந்து கொண்டதை அமெரிக்க அரசே ஊர்ஜிதம் செய்திருக்கிறது. என்றாலும், மனித உரிமைகள் பாதிக்கப்படும் போதெல்லாம் சினந்தெழுந்து போராடியவர் என்ற காரணத்தால், இந்திய அரசு, ஐ.நா.வுக்குச் செல்லும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் அவரையும் சேர்த்து அனுப்பி வைத்தது.
குல்தீப் நய்யார் 14 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அதனால்தான் அவரால், டெக்கான் ஹெரால்டு, தி நியூஸ், தி டெய்லி ஸ்டார், தி ஸ்டேட்ஸ்மேன், தி சண்டே கார்டியன், பிரபா சாக்ஷி போன்ற இந்தியப் பத்திரிகைகளிலும், தி டான், தி எக்ஸ்பிரஸ் டிரைபூன் போன்ற பாகிஸ்தான் பத்திரிகைகளிலும் ஒரே நேரத்தில் சிறப்புப் பத்திகள் எழுத முடிந்தது.
குல்தீப் நய்யார் எழுதிய 15 புத்தகங்கள், இந்திய வாசகர்களால் பரவலாகப் படித்துப் பாராட்டப் பெற்றன. அவருடைய சுயசரிதையை 'The day looks old' எனும் தலைப்பில் நூலாகக் கொணர்ந்தார். அப்புத்தகம் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத்துறையின் உள் விவகாரங்களை அவர் பட்டவர்த்தனமாக எடுத்துரைத்ததால், அவருடைய 'Between the Lines', 'India after Nehru', 'The Judgement', 'India - Pakistan Relationship', 'Distant Neighbours' போன்ற நூல்களும் அரசியல் நாட்டம் கொண்ட வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.
எழுத்துத்துறையில் நய்யார் காட்டிய அர்ப்பணிப்பைக் கண்டு மகிழ்ந்த பல அமைப்புகள், அவரைச் சிறப்பித்திருக்கின்றன. நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் அவருடைய மதிநுட்பத்தைக் கண்டு வியந்து, 1999-ஆம் ஆண்டு சான்றாளர் விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம் காக்க, அவர் ஆற்றிய பணிகளை மனத்திற்கொண்டு, 2003-ஆம் ஆண்டு ஆஸ்டர் விருது வழங்கப்பட்டது. இதழியல் துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளைக் கருத்தில் கொண்டு, 2015-ஆம் ஆண்டு, அவருக்கு ராம்நாத் கோயங்கா நினைவு விருது வழங்கப்பட்டது. 'The Saint Namdev' தேசிய விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பத்திரிகைத் துறையில் அவர் நிகழ்த்திய பரிசோதனைகளைப் பாராட்டி, சாஹித் நியோகி நினைவு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
பல விருதுகளைப் பெற்ற குல்தீப் நய்யார் பெயரிலும், அவருடைய அன்பர்களால் அவருடைய காலத்திலேயே ஒரு விருது நிறுவப்பட்டிருக்கிறது.
வாழ்நாளில் பல துறைகளில் வெற்றி மேல் வெற்றி பெற்ற குல்தீப் நய்யார், 23.8.2018 அன்று, புரந்தார் கண் நீர்மல்க இவ்வுலக வாழ்வை நீத்திருக்கிறார். 24.8.2018 அன்று அவருடைய புகழுடம்பு லோதி தகன மேடையில் எரியூட்டப்பட்டது. அப்போது மேனாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றைய அமைச்சர்கள் ஹர்ஷவர்த்தன், ராஜ்யவர்த்தன் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போன்றோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
குல்தீப் நய்யாரின் மறைவையொட்டி, பாரத பிரதமர் நரேந்திர மோடி விடுத்த இரங்கலுரையில் குல்தீப் நய்யார் நம்முடைய காலத்தில் வாழ்ந்த ஞானசொரூபி; அறிவுஜீவி. எந்த நேரத்திலும் நேர்மையுடனும், துணிச்சலுடனும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியவர். அவருடைய அறிவுப்பணி பல தலைமுறைகளைத் தாண்டியும் தொடரும். நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் காட்டிய அசாத்திய துணிச்சலும், எதிர்கால இந்தியாவை உருவாக்குவதில் அவருடைய பங்களிப்பும் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆம், அதில் ஐயமென்ன?
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...