இப்படியும் ஒரு மகா மனிதர்!
சுதந்திரத்திற்கு முன் உங்களுக்கு என்ன வேண்டும்?' என பத்திரிகை நிருபர் ஒருவர் மகாத்மா காந்தியடிகளைக் கேட்டபொழுது,


சுதந்திரத்திற்கு முன் உங்களுக்கு என்ன வேண்டும்?' என பத்திரிகை நிருபர் ஒருவர் மகாத்மா காந்தியடிகளைக் கேட்டபொழுது, மறைவிடங்களிலே பாமர மக்கள் காலைக் கடன்களைக் கழிக்கும் வசதி வேண்டும்' எனச் சொன்னார் அப்பெருந்தகை. நமது முன்னோர்கள் இயற்கை உபாதைகளைக் கழித்தலைச் சொற்களால்கூட உச்சரிக்கக்கூடாது என எண்ணி வாழ்ந்தனர்.
நன்னூல் எனும் இலக்கண நூலைச் செய்த பவணந்தி முனிவர், அதனை இடக்கரடக்கல்' என்றார். அந்நூலுக்கு உரையெழுதிய சங்கர நமச்சிவாயர் சிறுநீர்க் கழித்தலை, புலி நின்று இறந்த நீரல் ஈரத்து' என்றும், மலஜலம் கழித்தான் என்பதைக் கால் கழீஇ வந்தான்' எனவும் குறிப்பிட்டுள்ளார். புலி நின்று இறந்த நீரல் ஈரத்து' என்பதற்குப் புலி நின்றுவிட்டுப் போன இடத்தில் ஈரம் நின்றது என்பதாகும். இங்குப் புலி என்பதற்கு ஆண்மகன் எனப் பொருள் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் வாயால் சொல்லுவதற்குக்கூடக் கூச்சப்பட்ட செயலைப் பலரறிய பொதுவிடங்களில் நிகழ்த்துதல், கலாசாரக் கேடல்லவா?
அநாகரிகத்தைக் களைய நினைத்த பிரதமர் நரேந்திர மோடி 2.10.2014 அன்று ஸ்வச் பாரத்' என்று ஓர் அருமையான திட்டத்தைக் கொண்டு வந்தார். மகாத்மா காந்தியடிகளின் 150 -ஆம் ஆண்டு நிறைவடையும் 2.10.2019-க்குள், இத்தகைய அநாகரிகம் முற்றாகக் களையப்பட வேண்டும்' என்று சூளுரைத்திருக்கிறார்.
இந்த அரும்பெருந்தொண்டில், 1960-களில் பிகாரைச் சேர்ந்த டாக்டர் பிந்தேஸ்வர் பதக் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்து, வெற்றியும் கண்டிருக்கிறார். மனிதக் கழிவை மனிதர்களே அள்ளி, அந்த மலக்கூடையைத் தலையில் சுமந்து செல்லும் தோட்டிமைத் தொழிலைக் கண்டு மனம் குமுறிய டாக்டர் பிந்தேஸ்வர் பதக், தாமே மலக் கூடையைச் சுமந்து, அக்கொடுமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
ஒழிப்பதற்கும், தோட்டிமைத் தொழிலை ஒழிப்பதற்கும் வாழ்வை அர்ப்பணித்த பிந்தேஸ்வர் பதக், பிகார் மாநிலத்தில், வைஷாலி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில், டாக்டர் ராம்காந்த் பதக் என்பவருக்கு 2.4.1943 அன்று மகனாகப் பிறந்தார். அந்தணர் குடும்பத்தில் பிறந்த பிந்தேஸ்வர் பதக், தமது ஐந்தாவது வயதிலேயே தெருவில் சென்ற தலித் கூடைக்காரியைத் தொட்டுப் பேசியதால், கடுமையான தண்டனைக்கு ஆளானார். அவருடைய பாட்டியார், பிந்தேஸ்வர் வாயில் சாணிப்பாலைக் கரைத்து ஊற்றினார்; பசுவின் கோமியத்தையும் பருகச் செய்தார். பற்றாக்குறைக்குக் கங்கையிலும் முழுக்காட்டி எடுத்தார்.
நேஷனல் கல்லூரியில் படித்து பட்டதாரியான பதக், இரவு நேரங்களில் தோட்டிகளுடைய தெருக்களில் தங்கி, அவர்களுக்கு நாகரிக வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தார். கல்லூரிக்கு, பேன்ட், ஷர்ட் அணிந்து வராமல், குர்தா - வேட்டி அணிந்து வந்தமைக்காக சக மாணவர்களால் ஏளனமாகப் பேசப்பட்டார். 1968-ஆம் ஆண்டு, பாட்னா காந்தி நூற்றாண்டு விழாக்குழுவினர், காந்திஜியின் உயிர்க்கொள்கையான தோட்டிமைத் தொழிலை ஒழித்தலை மையப்படுத்தி விழா நடத்தினர்.
அதில் தீவிரமாக ஈடுபட்ட பிந்தேஸ்வர் பதக், அதனையே வாழ்க்கையாக மேற்கொண்டார். சுலப் செளராலயா' (சுலப் இன்டர்நேஷனல்) எனும் செயல் திட்டத்தைத் தொடங்கினார். ஒரே கழிப்பிடத்தில் இரண்டு குழிகள் வெட்டப்பட்டு, ஒரு குழி நிரம்பி முடித்தபிறகு இரண்டாவது குழிக்குக் கழிவுகள் செல்லும். இதனால் மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமக்க வேண்டிய அவசியமில்லை.
பாட்னா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்வை நிகழ்த்துவதற்கு துப்புரவுத் தொழிலாளர்களின் விடுதலை' என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். அதற்காக தோட்டிமைத் தொழிலாளர்களின் குடும்பத்தோடு, பல இரவுகள் தங்கினார்.
1974 -ஆம் ஆண்டு பாட்னா நகரத்தில் 20 குளியலறைகளோடு கூடிய பொதுக் கழிப்பிடத்தைக் கட்டி முடித்தார் பதக். உள்ளே சிறுநீர் கழிப்பதற்குச் சிறிய பீங்கான்களும், சோப்பு வசதிகளும் இருந்தன. பத்து பைசா கட்டணத்தில், இந்த வசதிப் பாமர மக்களுக்குக் கிடைத்தன. பின்னர் 1.5 மில்லியன் வீடுகளில் எளிய கழிப்பறைகளைக் கட்டித் கொடுத்தார். இதனால், 20 மில்லியன் மக்கள் பயனடைந்தனர்.
பதக்கினால், இன்று 8,500 பொதுக் கழிப்பிடங்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டிருக்கின்றன. இதனால், புறக்கணிக்கப்பட்ட மக்கள் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. பத்து இலட்சம் தோட்டித் தொழிலாளர்கள், இத்திட்டத்தில் இணைக்கப்பெற்றதால் நாகரிக வாழ்க்கைக்குத் திரும்பினர். இன்று 500 கோடிக்குப் பணப் பரிவர்த்தனை நடக்கும் அளவுக்கு அத்திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, வங்கியில் ரூ.50,000 கடன் வாங்கினார். அக்கடனைத் திருப்பிக் கட்டுவதற்காகத் தம்முடைய தாயின் நகைகளையும், மனைவியின் நகைகளையும் விற்றிருக்கிறார். அப்போதும் முழுக்கடனை அடைக்க முடியாத நிலையில், பதக் தற்கொலைக்கு முயன்ற சரித்திரமும் உண்டு.
1970- இல் பதக் அகில உலக சுலப் சேவை மையத்தைத் தொடங்கியதன் நோக்கம், மனித நேயத்தை வளர்த்தல், மனித உரிமைகளைக் காத்தல், சுற்றுப்புறத்தைச் சுகாதாரப்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு நல்குதல், சாதி வேற்றுமைகளைக் களைதல், விதவைகளுக்கு வாழ்வாதாரத்தைத் தருதல் என்பனவாகும்.
அந்தணர் குடும்பத்தில் பிறந்த பதக், புறக்கணிக்கப்பட்டவரோடும், துப்புரவுத் தொழிலாளர்களோடும் சேர்ந்து தொண்டாற்றுவதைக் கண்ட குடும்பத்தாரும் மேட்டுக்குடி மக்களும் கடுமையான வெறுப்பைக் கொட்டினர். அதற்கு பதக், நான் காந்தியடிகளின் செயல்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். இதற்கு தோட்டிமைத் தொழிலாளர்களின் மேல் யான் கொண்ட மனிதநேயம் மட்டும் காரணம் அன்று; இத்தொழில் மனித நாகரிகத்தைக் கொச்சைப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும்' என்று கூறினார்.
நவீன கழிப்பிடங்களை பதக் உருவாக்கியதன் மூலம், வேறு பல எதிர்பாராத நன்மைகளும் விளைந்தன. எளிய புதைகுழி கழிப்பறையின் மூலம் எரிபொருள் (பயோ-கேஸ்') தயாரிக்க முடிந்தது. அந்த எரிபொருளை துர்நாற்றம் இல்லாமல் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தார். புதைகுழியில் தேங்கிக் கிடக்கும் கழிவு, நிலத்திற்கு நல்லுரமாகவும் அமைந்தது. மேலும், பதக் கண்டறிந்த பயோ-கேஸ்' சுற்றுச்சூழலுக்கு கேடு தராத ஒன்றாக அமைந்தது.
பிந்தேஸ்வர் பதக்கிற்கு ஒரு விஞ்ஞானியின் நுண்ணறிவும், ஒரு பொறியாளரின் நுட்பமும், ஒரு நிர்வாக அதிகாரிக்குரிய திட்பமும் அமைந்ததால், அவரை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டின. 2011-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்' பல்கலைக்கழக மாணவர்கள் அவரை அழைத்து, ஒரு விரிவுரை தர வேண்டினர். அந்தச் சொற்பொழிவின்போது, மாணவர்கள் தங்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை, அவர்களே துப்புரவு செய்ய வேண்டும். அதற்காக மற்றவர்களைப் பணியமர்த்தல் கூடாது' என்பதை வலியுறுத்திப் பேசினார்.
பதக்கினுடைய அரிய சேவையைக் கண்டு வியந்த போப் இரண்டாவது ஜான் பால், தம்முடைய வாடிகன் நகருக்கு அவரை அழைத்துச் சிறப்பாகப் பாராட்டி, மகிழ்ந்திருக்கிறார்.
பதக், தமிழகத்திற்கும் வந்து, சிவகங்கை மாவட்டத்தில் மதகுப்பட்டி, நாசுரம்பட்டி எனும் இரண்டு ஊர்களில் நவீன கழிப்பிடங்களைக் கட்டுவதற்குரிய அடிக்கல் நாட்டியிருக்கிறார். மேலும், அங்கு சுலப் இன்டர்நேஷனல் மையத்தின் மூலம் 200 இளைஞர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்குரிய தொழிற்கல்வி முறைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
மகாத்மா காந்தியடிகள் - டாக்டர் அம்பேத்கர் இலட்சியங்களை நிறைவேற்ற வந்தேன்' எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்ற டாக்டர் பிந்தேஸ்வர் பதக்கிற்கு 1991-ஆம் ஆண்டு, இந்திய அரசு பத்மபூஷண்' விருதை வழங்கிக் கெளரவித்திருக்கிறது. 2017- இல், லால் பகதூர் சாஸ்திரி பெயரில் அமைந்த தேசிய விருதும் அவருடைய சேவைக்கு கிட்டியிருக்கிறது. பதக்கினுடைய துப்புரவுத் திட்டங்கள் உலகம் முழுதும் பின்பற்றப்பட வேண்டும்' என கினியா நாட்டின் தூதர், அலெக்சான்ட்டரே ஸீ ஸீ லூயா கூறியுள்ளார்.சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தமைக்காக பாரிஸ் நகரத்திலுள்ள செனட், பதக்கிற்கு அந்நாட்டின் கெளர விருதை வழங்கியுள்ளது. துபாய் நகரம் அவருடைய சேவையைப் பாராட்டி, துபாய் இன்டர்நேஷனல் விருதை வழங்கியுள்ளது. நியூயார்க் நகரத்தின் மேயர், 14.4.2016 -ஆம் நாளை பதக் நாளாக' அறிவித்திருக்கிறார். ஸ்டாக்ஹோமினுடைய இளவரசர் கார்ல் பிலிப் ஸ்வீடன், ஸ்டாக்ஹோம் வாட்டர் விருது' வழங்கியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக யுனெஸ்கோ' நிறுவனம் பல்துறை வல்லுநர்' என்ற விருதை வழங்கியது.
டாக்டர் பிந்தேஸ்வர் பதக்கின் தொண்டு, ஒவ்வொரு இந்தியனாலும் பாராட்டப்பட வேண்டிய தொண்டாகும். இறைவன் தன்னிருப்பை நிலைநாட்டுவதற்காக அவ்வப்போது சில அபூர்வமான மனிதர்களை அனுப்பி வைப்பதுண்டு. அப்படி அனுப்பப்பட்ட மனிதர் - மகா மனிதர், டாக்டர் பிந்தேஸ்வர் பதக் ஆவார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...