நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தலைமைப் பண்பு கற்போம்

கல்வி நிலையங்களில் படிப்பை முடித்தவுடன் வேலை தேடிச்செல்வோருக்கு கல்வித்தகுதி மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. படிப்புடன் இணைந்த

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:08 pm

ஐவி.நாகராஜன்

கல்வி நிலையங்களில் படிப்பை முடித்தவுடன் வேலை தேடிச்செல்வோருக்கு கல்வித்தகுதி மட்டுமே போதுமானதாக இருக்க முடியாது. படிப்புடன் இணைந்த வாழ்க்கை கல்வியையும் வளர்த்துக்கொள்வது மிக அவசியம். வாழ்க்கையில் சில நேரம் இனிமையான சூழலும் சில சமயங்களில் மிக இக்கட்டான சூழலும் மாறிமாறி வருவது இயல்பு. வரக்கூடிய பிரச்னைகள் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் அவற்றை சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும். 
இவற்றை நமக்கு அளிப்பதுதான் உண்மையான தலைமை பண்பு. தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் மட்டுமல்ல, நம்மை நாமே ஒழுங்காகத் தகவமைத்துக்கொள்வதும்தான்.அது மட்டுமல்ல, பல விஷயங்களில் மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் கருத்துகளைக் கூறும் ஆளுமைத்திறனும் அமைந்திருப்பதுதான்.
நம் வீட்டில் நாம் செல்லப்பிள்ளையாக இருக்கலாம். நம் விருப்பங்கள் அனைத்தும் அங்கே உடனே நிறைவேறலாம். நாம் விழுவதற்கு முன்பே தூக்கி பிடிக்க பலர் இருக்கலாம். நமது தவறுகளை நம் மனம் வருந்தாமல் வீட்டினர் கண்டிக்கலாம்.
ஆனால், வெளிஉலகம் இதற்கு நேர்மாறாகத்தான் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தொட்டால்சிணுங்கியாக நீங்கள் இருந்தால் உலகம் உங்களை பந்தாடும். எனவே உலகை எதிர்கொள்வதற்கு, நாம் தவறி கீழே விழுந்துவிட்டால், உடனே எழுந்து நிற்கும் திறனும் நமக்கு தேவை என்பதை உணரவேண்டும். விழுவது இயற்கை எழுவதே வாழ்க்கை என்பதை நன்கு புரிந்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். 
குறிப்பாக, தலைமைப் பண்பை வளர்த்துக் கொண்டால் இத்தகைய இயல்புகள் நமக்கு தானே வந்தடைந்து நம்மை வெற்றிக்கு அழைத்துச்செல்லும். அத்தகைய தலைமை பண்பை தொடங்குவதற்கான மிகச்சிறந்த இடம் கல்விக்கூடம்தான். ஏனென்றால் வெளிஉலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பது பள்ளிக்கூடம்தான்.
அங்கே பாடத்தை படிப்பதுடன் மட்டும் நம்முடைய ஆற்றலை சுருக்கிக்கொள்ளக்கூடாது. பிற்காலத்தில் நாம் சந்திக்கப்போகும் சாவல்களை எதிர்க்கொள்ள தேவைப்படும் தலைமை பண்பையும் அங்கே கற்று பழகவேண்டும்.
அத்தகைய கற்றலுக்கு ஏதுவாக கீழ்காணும் எளிய வழிமுறைகள் மிகவும் உதவும். ஒழுக்கம் என்பது வெளியிலிருந்து நம்மீது தினிக்கப்படுவதாக இருக்கக்கூடாது. அது எந்த நிர்பந்தமும் இன்றி நம்மிடம் வெளிப்படவேண்டும். சுலபமான பயிற்சிகள் மூலம் இது சாத்தியம்.
நேரம் தவறாமல் இருக்க பழகுதல், குறித்த நேரத்தில் உறக்கம், குறித்த நேரத்தல் எழுதல், ஆசிரியர் சொன்ன நேரத்துக்குள்பாடங்களை முடித்தல், தினமும் சுத்தமான உடை அணிதல், விரல் நகங்களை ஒழுங்காக வெட்டுதல், தலைமுடியை சரியாக பேணுதல், நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை நம்மிடம் தலைமைப் பண்பை உருவாக்கும்.
நம்மால் செய்து முடிக்கக்கூடிய செயல்களை அதிக விருப்பத்தோடு ஏற்பது தலைமைப் பண்பை வளர்பதற்கான சிறந்த வழிமுறைகளில் முதன்மையானது. படிப்பதற்கே நேரம் இல்லை, இருக்கும் வேலைகளையே கவனிக்கமுடியவில்லை, இதில் எங்கே கூடுதல் பொறுப்புகளை ஏற்பது என்று சலிப்பு ஏற்படலாம். ஆனால், மனித ஆற்றலின் அளவு எல்லையற்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 
கூடுதலாக பொறுப்புகளை ஏற்க ஏற்க நமது ஆற்றலின் அளவு அதிகரிக்கும். பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். வகுப்புக்கு தலைமை வகிப்பது, விளையாட்டு அணிகளில் பங்கேற்பது, சாரணர் அணியில் இணைவது, சமூக சேவை மற்றும் பொதுநலனில் ஈடுபடுவது, வீட்டு நிர்வாகம், அரசியலில்கூட சிறிய சிறிய பொறுப்புகளை ஏற்க பழகுவது போன்றவை நமது நிர்வாகத் திறனை அதிகரிக்க உதவும். 
கண்மூடிதனமாக யாரையும் பின்பற்றுவது நல்லதல்ல. ஆனால் சில விஷயங்களில் நம்மைவிட சிறந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களை நாம் பின்பற்றி செல்ல தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்வது நமக்கு இழுக்கு என்று நினைக்க தேவையில்லை. முக்கியமாக, அவர்களைப் போட்டியாளராக கருதாமல் அவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும்.
சூழ்நிலையை முழுமையாக உணர்வதன் மூலம் பிரச்னைகள் வரும் முன்பே அவை வரக்கூடும் என்று ஊகிப்பவர் தலைவராகிறார். அதற்கு முதலாவதாக செய்ய வேண்டியது, எப்போதும் நம்முடைய சூழல் குறித்து விழிப்புடன் இருப்பதுதான்.
அப்படி இருந்து, அவ்வப்போது வரும் பிரச்னைகளை கவனிக்கவேண்டும். 
பின்னர் அந்த பிரச்னைகளை நமது சூழலுடன் பொருத்திப் பார்க்கவேண்டும். அந்தப் பிரச்னையைத் தவிர்க்க ஏதாவது வழி உண்டா என்று யோசிக்கவேண்டும். 
அப்படிச் செய்தால் பிரச்னைக்குத் தீர்வு காண்பது எளிது.
அந்த வழிமுறையை அடுத்த முறை பிரச்னை வரும் முன்னரே செயல்படுத்தி பார்க்கவேண்டும். இதனை பள்ளி கல்லூரிகளில் மட்டுமல்லாமல் வீட்டிலும், பொதுவாழ்விலும்கூட செயல்படுத்திப் பழகவேண்டும். தன் வேலையை மட்டும் சிறப்பாக செய்வது தலைவருக்கான அடையாளம் அல்ல.
தன் குழுவினர் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த செய்வதுதான் தலைமைப் பொறுப்பு வகிப்பவருக்கு அழகாகும்.
ஏதேனும் ஒரு குழுவின் தலைவராக நாம் இருந்தால் நம் அதிகாரத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்து பழகவேண்டும். இது நமது பணியை சுலபமாக்குவதோடு, அதிகாரத்தில் பங்குபெறும் மற்றவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இதன் மூலம் நமது தலைமை பண்பு மேலும் புகழ் பெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.