முக்கியமானவற்றுக்கு முதலிடம்
ஒர் அலுவலகத்தின் செயல்பாடுகளில் பணத்தை விட முக்கியத்துவம் கொண்ட அம்சம் நேரம் ஆகும். பணியிடங்களில் - தொழிற்கூடங்களில் நேரம் எவ்வாறு செலவிடப் படுகின்றது எனபது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறன.


ஒர் அலுவலகத்தின் செயல்பாடுகளில் பணத்தை விட முக்கியத்துவம் கொண்ட அம்சம் நேரம் ஆகும். பணியிடங்களில் - தொழிற்கூடங்களில் நேரம் எவ்வாறு செலவிடப் படுகின்றது எனபது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறன.
பொதுவாக, பணிகள், முக்கியமானவை- முக்கியத்துவம் குறைந்தவை -மற்றும் கூடியமட்டும் தவிர்க்கப்படவேண்டியவை என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
நிர்வாகத்தின் நேரடி வியாபாரம் - வருவாய் - லாபம் ஆகியனவற்றைப் பெருக்கக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் நலன் போன்றவை முக்கிய விஷயங்களாக கருதப்படும்; அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட விவகாரங்கள் போன்றவை முக்கியம் குறைவான விஷயங்களாக கருதப்படும். சாதாரண பிரச்னைகள், கண்காணிப்புகள், தொலைபேசி உரையாடல்கள் போன்றவை குறைக்கப்படவேண்டிய அல்லது தவிர்க்கப்படவேண்டிய விஷயங்கள் என்று கொள்ளப்படும் .
அலுவலகங்களில், பொதுவாக ஒவ்வொருவரது நேரத்திலும், இவற்றில் முறையே 10 - 20 - 70 சதவீத நேரம் செலவிடப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இன்னொரு அம்சம் என்னவெனில், முக்கியத்துவம் குறைந்த மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய செயல்பாடுகள் என்பனவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடவோ அல்லது முழுதுமாக ஒதுக்கி விடவோ முடியாது என்பதும் நிதர்சனம்.
இத்தகைய பின்னணியில், ஊழியர் மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி வழங்கப்படும் ஆலோசனை எதுவெனில், பணி புரியும் ஒவ்வொருவரும், முக்கிய விஷயங்களில் ஈடுபடும் 10 சதவீத நேரம் என்பதை 15 சதவீதம் என்ற அளவிற்காவது - அதாவது, முக்கியமான காரியங்களில் செலவிடும் நேரத்தினை ஒன்றரை மடங்காக உயர்த்த முழு முயற்சி எடுக்க வேண்டும் என்பது ஆகும்.
இப்படி நிகழும்போது, அவ்வலுவலகத்தின் செயல்பாட்டுத் திறன் உயர்த்தப் படும்; நேரடியாகவும் - மறைமுகமாகவும் நிர்வாகத்தின் வளர்ச்சி பெருகும்; அங்கு பணிபுரியும் அனைவரும் பயனடைவர் என்பதும் நிதர்சனம். மேலும் இதன் மூலம் தவிர்க்கபபடவேண்டிய விஷயங்களுக்கு செலவிடப்படும் நேரமும் குறைக்கப் படும் என்ற கூடுதல் பலனும் கிட்டும்.
அலுவலகம், தொழிற்கூடம் போன்றவனவற்றுக்கு மட்டுமின்றி, தனிநபர்கள்கூட, தாங்கள் செய்கின்ற பணிகளை வகைப் படுத்தி எவ்வளவு நேரம் எததகைய செயல்பாடுகளுக்கு செலவிடுகிறோம் என்று கருத்தில் கொண்டு செயல்படும்போது அவர்களது செயல்திறன் கூடுவது மட்டுமின்றி, வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது உறுதி. அதற்கு அடுத்த கட்டமாக,அத்தகைய முக்கிய செயல்பாடுகளுக்கு செலவிடும் நேரத்தினை சுய பிரக்ஞயோடு அதிகப் படுத்துவதும் அவசியம்.
இது போன்ற நடவடிக்கைகள், பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட பெற்றோர்களுக்கும் ஒர் இன்றியமையா கடமை ஆகும்; தங்களது பிள்ளைகள், அவர்களது செயல்பாடுகளில் முக்கியமானவை - முக்கியம் குறைந்தவை - தவிர்க்க வேண்டியவை என்பதனை பகுக்கும் வழக்கத்தை இளம் வயதிலேயே கற்கவும் , அதன்படி அவற்றினை செய்து முடிக்கவும் கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மீது ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே, அவர்களும் இதில் முனைப்பினை காட்ட வேண்டும்.
முக்கியமானவற்றுக்கு முதலிடம் என்ற கருத்தினை அலசும்போது, இதன் நீட்சியாக, நமது அன்றாட வாழ்வில் ஒரு கணிசமான நேரத்தை ஆக்கிரமிக்கும் - ஊடகங்களை - குறிப்பாக காட்சி ஊடகங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது.
தொலைக்காட்சிகள், முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விவாதங்கள் நடத்த வேண்டும் என்பதும் , நேயர்களின் விஷய ஞானத்தினை உயர்த்தும் வகையில் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும் என்பதும் நியாயமான எதிர்பார்ப்பு ஆகும்.
அந்த அடிப்படையில் அவை , நாட்டு நலன், சராசரி மனிதனின் அறிவு வளர்ச்சி, விழிப்புணர்வு போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் தர வேண்டும் என்பது அவசியம்.
மாறாக, குடும்பத்துக்குள் நடக்கும் உறவினர் சண்டைகள், போட்டி, பொறாமை போன்றவற்றுக்கும், திரைப்படத் துறையினரின் அங்க அசைவுகளுக்கும் திரைப்
படப் பாடல் வரிகளுக்கும்,தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து மணிக் கணக்கில் விவாதிப்பது என்பது, நாம் எந்த திசையில் செண்டு கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியையும் மனக்கலவரத்தையும் எழுப்புகிறது. நமது நாட்டில், பொதுவாக அரசியலில் ஈடுபடுபவர்கள் மீதான நல்ல அபிப்ராயம் என்பது குறைந்து வருவது என்னவோ உண்மைதான்.
ஆனாலும், பல ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு சேவையை மட்டுமே செய்தவர்கள், பதவியில் இருந்தும் தவறான வழிகளில் பொருள் சேர்க்காதவர்கள், அப்பழுக்கற்றவர்களாக விளங்குபவர்கள் ஆகியோர் அருகிவரும் இனத்தை சார்ந்தவர்களாக இருப்பினும், இன்னமும் பொதுவாழ்வில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டியதும் முதலிடம் தருவதும்- குறைந்த பட்சம் அப்படிப் பட்டவர்களை மக்களிடையே அறிமுகப்படுத்த வேண்டியதும், ஊடகங்களின் சமுதாயம் சார்ந்த கடமை எனலாம். அது ,நமது அரசியல்வாதிகள் மீது தளர்ந்து வரும் நமது நம்பிக்கையை சிறிதேனும் அதிகரிக்க செய்து ஆரோக்கியமான சூழலை வளர்த்தெடுக்கும்.
ஆக, தனி மனிதன் - நிறுவனம் - ஊடகம் என எல்லாத் தரப்பினரும், சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் முக்கியமானவற்றுக்கு மட்டுமே முதலிடம் தர வேண்டியதும், தவிர்க்க வேண்டியவற்றை கண்டறிந்து அவற்றை அறவே ஒதுக்க வேண்டுவதும் அவசியம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...