இதுவும்தான் சமூக அநீதி!
இளமைப் பருவமென்பது ஒரு பூ மலர்வதைப் போல இயல்பானது, சுதந்திரமானதும் கூட. இந்தப் பருவத்தில்தான் மனத்தடை, தயக்கம் ஏதுமற்று விளையாடிக் களிக்க முடியும். எதிர்கால இந்தியா


இளமைப் பருவமென்பது ஒரு பூ மலர்வதைப் போல இயல்பானது, சுதந்திரமானதும் கூட. இந்தப் பருவத்தில்தான் மனத்தடை, தயக்கம் ஏதுமற்று விளையாடிக் களிக்க முடியும். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்தான் உள்ளது. இளையோர் ஆரோக்கியமே நாளைய தேசத்தின் ஆரோக்கியம். நாளைய சமூகத்தின் தூண்களாகவும் நாட்டின் முதுகெலும்பாகவும் நின்று இந்த தேசத்தைத் தாங்கப்போவது இளையோர்தான். இவர்கள் பாதுகாக்கப்பட்டு நல்ல முறையில் வளர்க்கப்பட்டால் மட்டுமே நாடு உயர்வு பெறும்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமைகள் சமமானவையே. சிறுவர்களும் தங்கள் வாழ்வை மகிழ்வாய் வாழ உரிமை உடையவர்களே. உலகின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏறத்தாழ இதே நிலைதான் காணப்படுகிறது. வயது காரணமாக பிறரைச் சார்ந்து வாழும் நிலையில் அவர்கள் இருப்பதால் அவர்கள் மீது உரிமை மறுப்பும், அதிகார துஷ்பிரயோகமும் வெகு எளிதாக செய்யப்பட்டு விடுகின்றன.
சிறுவர்கள் மீதான ஆதிக்கம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்முறை, நிராகரிப்பு ஆகியவை பெரும் பாதிப்புக்கு அவர்களை ஆட்படுத்துகின்றன. அவர்களை அதிகம் பாதிப்பவை என்னென்ன என்று பார்த்தால், கல்வி மறுக்கப்படுவது, குழந்தைத் தொழிலாளர் முறை, பாலியல் வன்முறைகள் மற்றும் பலாத்காரம்.
சிறுவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதில் முதலிடம் குடும்பத்திற்கே. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, அரவணைப்பு, அன்பு இவற்றினைத் தரும் இடம் குடும்பமே. குடும்பத்தின் சண்டை சச்சரவுகள், வறுமை, குழந்தைகள் மீது அக்கறை காட்டாத அறியாமை கொண்ட பெற்றோர் இவைதான் முதலில் குழந்தையின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அப்போது குழந்தைகள் தனிமையை உணர்கிறார்கள். வெளியில் உள்ள அறிமுகமற்ற மனிதர்களை நம்பத் தொடங்குகின்றனர். அவர்களின் பாதுகாப்பு இங்கு தான் பிரச்னைக்குள்ளாகிறது.
வறுமை ஒரு மிகப்பெரிய சவாலாக குழந்தைகளின் வாழ்வில் அமைந்து விடுகிறது. கொடிது கொடிது வறுமை கொடிது... அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்பார்கள். இளமையில் குழந்தைகள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பாதித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்றாட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காத வறுமை நிலையில் உள்ள குழந்தைகள், தங்கள் வாழ்வாதாரத்திற்கென பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டி உள்ளது.
இத்தகைய வறுமையின் பிடியில் சிக்கி வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குழந்தைகளுக்கு முதலில் மறுக்கப்படுவது அவர்களுக்கான கல்வி.
உணவு, உடை, உறைவிடம் என அடிப்படை வாழ்வாதாரம் அற்றுப்போனவர்கள் அவற்றைப் பெறுவதற்கான தங்கள் அன்றாட ஓட்டத்தில் நாளையைப் பற்றி சிந்திக்கும் திறனற்றவர்களாக இருக்கின்றனர். அரசு இத்தகைய குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அரசியலமைப்பு சட்டம் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்கியதோடு நின்றுவிட்டது.
வறுமை, பொருளாதார சமச்சீரின்மை, தேவையான அளவுக்குப் பள்ளிக்கூடங்கள் இல்லாத நிலை போன்றவை சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் சரிசெய்யப்படவில்லை. இதற்கு அரசே முற்றிலும் பொறுப்பு ஏற்றாக வேண்டும். கல்வியறிவு மறுக்கப்படுவது குழந்தைகள் மீதான ஒரு வன்முறையே. அவர்களின் அறிவு வளர்ச்சியை பாதிக்கும் இந்த நிலை குழந்தைகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி.
தங்கள் வயிற்றுப்பாட்டைத் தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் அல்லது தங்கள் குடும்பத்தாரின் பசியையும் போக்க வேண்டிய கட்டாயத்தில் குழந்தைகள் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது பெரும் தொழில் நிறுவனங்கள் போன்ற எண்ணற்ற இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களாக இவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். மிகக் குறைந்த ஊதியத்தில் மிக அதிக நேரம் வேலை செய்பவர்களாகவும், முதலாளிகளின் அதிகாரத்திற்கு பயந்து அடிபணிபவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள், விவசாயக் கூலிகளாக இருப்பதாகக் கூறுகிறது யுனிசெப்' அமைப்பு. மேலும், இந்தியாவில் 14 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் குழந்தைத் தொழிலாளர்களாக பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. நெசவுத் தொழில், பருத்தித் தோட்டங்களில் பருத்தி எடுப்பது, செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பது என இவர்களுக்கு பெரும் அபாயகரமான பணிகள் தரப்படுகின்றன. சில பெற்றோர் பணம் பெற்றுக் கொண்டு, தங்கள் குழந்தைகளை கொத்தடிமைகளாக அனுப்பிவிடுவதும் நிகழ்கிறது. தொழிற்சாலைகள், உணவகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இவர்கள் பணியில் உள்ளனர். குழந்தைத் தொழிலாளர் முறை சட்டவிரோதம், குற்றம் என்று சட்டம் இருந்தாலும் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான இந்தக் குற்றச் செயல் நடந்து கொண்டே இருக்கிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிப்பது நமக்கு அவமானம். மிகப்பெரும் பொருளாதாரக் குற்றங்களுக்கும் இது வழிகோலுகிறது. சொற்பப் பணத்தை செலவு செய்து மிகப்பெரும் லாபம் ஈட்டுவதோடு மட்டுமல்லாது அரசை ஏய்க்கும் செயலும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. சட்டங்கள் இருந்தும் குழந்தைகளைக் காக்கத் தவறுவது சமூகத்தின் பேராசையும் அரசின் மெத்தனமுமே. இதனால் குழந்தைகள் உடல் மற்றும் உணர்வு ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
அடுத்து, குழந்தைகள் மீது செலுத்தப்படும் ஆதிக்கம் பாலியல் ரீதியாக அமைவது. இதனால் உடல், மனம், உணர்வு பாதிக்கப்பட்டு, குழந்தை தன் வாழ்வின் மீதான நம்பிக்கையைக்கூட இழந்து விடுகிறது. இதுவரையிலான குற்றங்கள் வறுமை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே நிகழ்கிறது எனில் பாலியல் வன்முறைகள், தொந்தரவுகள், கூட்டு பலாத்காரம் அதன் பொருட்டாக உயிரிழப்பு வர்க்க பேதமற்று அனைத்துக் குழந்தைகளையும் பாதிக்கிறது. பாலியல் தொழிலில் குழந்தைகள் கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகின்றனர் என்னும் யுனிசெப்'பின் கூற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் அது கூறுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்படும் இவர்கள் பல ஆட்கொல்லி நோய்களுக்கும் பலியாகின்றனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நிலை துயரமானது. சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்படுவது பெரும்பாலும் அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களால் தான். ஆக, சமூகம், குடும்பம், உறவுகள் என அனைத்து நிலைகளிலும் சிறுவர்கள் மீது கொடூரமான முறையில் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. குற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இத்தகைய குற்றங்கள் வளரிளம் பிள்ளைகளுக்கே நிகழ்வதாக முடிவுக்கு வர முடியவில்லை. சின்னஞ்சிறிய குழந்தை முதல் இந்த கொடூர பலாத்காரத்திற்கு ஆளாவதை வழக்குகள் காட்டுகின்றன. குழந்தைகளுக்கெதிரான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியும், ஆபாசங்கள் அனைவர் கைகளுக்கும் எளிதாக இணைய வழியில் சென்று சேர்வதும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது, எனில் அதனை கட்டுப்படுத்தி குழந்தைகள் நலனைப் பேண வேண்டியது அரசின் கடமை தானே? குழந்தைகளுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் தடுக்கப்பட வேண்டுமென அரசு சட்டங்களை இயற்றியுள்ளது. நாளுக்கு நாள் இது குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றதே அன்றி, குறைந்தபாடில்லை.
குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமையை இணையத்தில் புகார் அளிக்க புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http:/incpcr.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த வசதி பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இந்த வசதியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்படுத்தித் தந்துள்ளது.
குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த வசதி உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு பாதிப்படைந்த குழந்தைக்கு நீதி கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் லட்சக்கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் தான் உள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இறைவனுக்கு சமமாக கள்ளமற்ற வெள்ளை மனதோடு நம்மை மட்டுமே சார்ந்து நம்பிக்கையோடு நெருங்கும் சிறுவர்களுக்கு இந்த சமூகம் அநீதியைத் தான் பரிசாகத் தந்து கொண்டிருக்கிறது. இது அறமல்ல. நம்மை நாமே கொன்றொழிக்கும் தற்கொலை நிலை. அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். எந்த ஒரு சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான அடக்குமுறைகளும் வன்முறைகளும் அதிகமாகிறதோ அந்தச் சமூகம் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்வதோடு தன் வருங்காலத்தையும் சிதைத்துக் கொள்கிறது' என்றார் ஆபி ரஹாம் லிங்கன்.
புதிய இந்தியா உருவாக வேண்டுமெனில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் சுதந்திரமாக வளர்வதற்கான சூழலை அரசும் சமூகமும் குடும்பமும் உறுதிப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் புதிய இந்தியா' கோஷம் வெறும் கோஷமாக மட்டுமே இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...