நினைவுக் கலை காப்போம்!
அண்மையில் தமிழகக் கல்வி அமைச்சர் பள்ளிக்கூடங்களில் மனப்பாட முறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது' என்று அறிக்கை விடுத்து உள்ளார். மாணவர்கள் சுயமாக சிந்திப்பதும், சுதந்திரமாகப் பேசுவதும் சிறப்புடையதுதான்.


அண்மையில் தமிழகக் கல்வி அமைச்சர் பள்ளிக்கூடங்களில் மனப்பாட முறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது' என்று அறிக்கை விடுத்து உள்ளார். மாணவர்கள் சுயமாக சிந்திப்பதும், சுதந்திரமாகப் பேசுவதும் சிறப்புடையதுதான். ஆனால், ஆய கலைகள் அறுபத்து நான்கில் நினைவுக் கலையும் ஒன்று. அதன் அவசியம் கருதிதான் பள்ளிகளில் மனக்கணக்கு, மனப்பாடச் செய்யுள் போன்றவை காலங்காலமாக இருந்து வருகின்றன. முதுமைப் பருவத்தில் ஏற்படும் ஞாபக மறதி (DEMENTIA), நினைவுத்திறன் குன்றுதல் (ALZHEIMER'S) போன்ற நோய்கட்கு, நினைவூட்டும் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளாக வேத கால, சங்க கால இதிகாசங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லாம் வாய்மொழியாக சொல்லிச் சொல்லி எழுதாக்கிளவியாக பனையோலை காலம் வரை பாதுகாக்கப்பட்டன. பின்னரே அச்சில் அமர்ந்து உலா வந்தன.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த செய்கு தம்பிப் பாவலர் ஒரே நேரத்தில் பலவற்றை உள்வாங்கி பின்னர் பிழையின்றி வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர் என்பதால் சதாவதானி' என்று புகழப்பட்டார். பதின் கவனகர் என்று கோவில்பட்டி அந்தகர் பெ.இராமையா, அவர்தம் புதல்வர் இரா.கனகசுப்புரெத்தினம் பாராட்டப் பெற்றனர். 1330 திருக்குறளையும் மனனம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பரிசும் பொற்கிழியும் கொடுத்து மகிழ்ந்தது. இளமையில் கற்று மனதில் பத்திரப்படுத்தினால் வேண்டும்போது எடுத்துக்கொள்ளலாம். இதனால்தான் வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்' என்றார் ஒளவைப் பெருமாட்டி. ஒருமுறை வாரியார் சொன்னார், மின்சாரம் இருக்கும்போது கிணற்று நீரை மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றிவிட்டால், மின்சாரம் இல்லை என்றால் கூட கீழே உள்ள குழாயைத் திருகினால் தண்ணீர் வரும். இதுபோல, சிறு வயதில் இலக்கிய இலக்கணங்களை மனனம் செய்து கொண்டால் வேண்டும்போது தட்டினால் வரும்' என்று தனது தலையை தட்டிக் காட்டிச் சொல்லுவார். பத்து வயதிலேயே அவருக்கு பல ஆயிரம் செய்யுள்கள் மனப்பாடம். அதனால்தான் எந்தத் தலைப்பில் பேசினாலும், அது தொடர்பான பாடல்களை மேற்கோள் காட்ட முடிந்தது.
இசைக் கலைஞர்களும் பாடல்களையும், ராகங்களையும் இளவயதில் மனனம் செய்து பழகுவர். பள்ளி பருவத்தில் வாய்ப்பாடுகள், செய்யுள்கள், சூத்திரங்கள், மேற்கோள்கள் இவற்றை மனப்பாடம் செய்யாமல் எங்ஙனம் நல்ல மதிப்பெண் பெற முடியும்? மாணவப் பருவத்தில் கருத்துகளை மனப்பாடம் செய்தே பேசப் பழக வேண்டும். பின்னர் தொடர்ந்து பேசினால், எதிர்காலத்தில் பேச்சாளராக வலம் வரலாம். இன்றைய பெரிய பேச்சாளர்கள் எல்லாம் அப்படி வந்தவர்களே.
வில்லியம் பென்டிக் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1835-இல் ஜான் மெக்காலே என்ற ஆங்கிலேயக் கல்வியாளர் இந்தியாவுக்கான ஒரு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். அது நாள் வரை பள்ளியில் இருந்த சமஸ்கிருதம், உருது, பெர்ஷிய (பாரசீகம்) போன்ற மொழிகளுக்குப் பதிலாக ஆங்கிலக் கல்வியைப் புகுத்தினார். இந்திய வானவியல், கலாசாரம், வரலாறு, தத்துவம், சமயம் இவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டு ஆங்கிலேய ஆட்சிக்கு வேண்டிய இந்திய பணியாளர்களை உருவாக்கும் குமாஸ்தா கல்வி'யை அறிமுகப் படுத்தினார். அப்போது அவர் சொன்னார், நான் அறிமுகப்படுத்துகிற கல்விமுறையால் இந்தியர்கள் ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால் ரசனையில், கருத்துகளைச் சொல்வதில், ஒழுக்கம் பேணுவதில், அறிவாற்றலில் ஆங்கிலேயர் போல் இருப்பார்கள்(INDIAN IN BLOOD AND COLOUR, AND ENGLISH IN TASTE, OPINIONS IN MORALS AND IN INTELLECT') என்றார்.
கிறித்துவ மிஷனரிகளை இந்தியாவில் பள்ளிகளைத் தொடங்க அனுமதித்ததன் காரணமாக மேலைநாட்டு விஞ்ஞானம் பிரபலமடையத் தொடங்கியது. உயர் வகுப்பினர் கண்மூடித்தனமாக ஆங்கில அரசில் பணியாற்றவும், ஆங்கிலக் கல்வியை பாராட்டவும் விழைந்தனர். ஆனால், சாமானியர்களுக்கு கல்வி வடிகட்டப்பட்டது. அதற்குப் பின்னர், 1854-இல் கவர்னர் ஜெனரலாக டல்ஹவுஸி இருந்த காலத்தில், உட்ஸ் சார்லஸ் உட் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற மிதவாதி இந்தியக் கல்விக்கு ஒரு வடிவம் தந்தார். இவர் 1846 முதல் 1852 வரை பிரிட்டனின் நிதியமைச்சராக இருந்தவர்.
இவர், ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வி இலாகா அமைக்கப்பட வேண்டும். லண்டன் பல்கலைக்கழகம் போன்று கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் போன்ற இடங்களில் ஏற்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அரசு மானியம் தர வேண்டும். இந்திய மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். தொழிற்கல்வியைப் பயிற்றுவிப்பதன் மூலம் பிரிட்டனின் பொருள்களை விற்க முடியும். இந்தியாவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளை நிறைய திறக்க வேண்டும். இதனால் நலிந்த பிரிவினரும் கற்க முடியும். ஆசிரியர்களின் ஊதியம், கட்டடம், உதவித் தொகை போன்றவைகட்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும். இலக்கியம், விஞ்ஞானம் போன்ற பாடப்பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும்' என்றார்.
பின்னர், வைஸ்ராய் ரிப்பன் காலத்தில் 1882-இல் சர் வில்லியம் வில்சன் ஹன்டர் என்பவர் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார். இவர் ஒரு ஐ.சி.எஸ். அலுவலர். புள்ளியியல் துறை நிபுணர். கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தர். இம்பீரியல் கெஜட்டீர் இந்தியா' என்னும் புகழ்மிக்க நூலை எழுதியவர். இவர் தொடக்கப் பள்ளி நிர்வாகத்தை உள்ளூர் கிராமசபை, நகரசபை போன்றவற்றிடம் ஒப்படைக்க வேண்டும்; இந்திய பட்டதாரிகள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற வேண்டும்; தனியார் பள்ளிகளுக்கு அதாவது கிறித்துவ மிஷனரிகளுக்கு அரசு நிதி தர வேண்டும்' என்றார். நிறைய அளவில் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. வங்காளத்தில் மும்மடங்கு கல்வி நிலையங்கள் பெருகின. இந்தியர்கட்கு இந்திய முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது.
நாடு விடுதலை அடைந்த பிறகு, வார்தா திட்டத்தின் அடிப்படை ஆதார பயிற்சிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். பின்னர், டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையில் 1948-இல் குழு அமைக்கப்பட்டது. பின்னர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் குழு 1952-53-இல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறையை அறிமுகம் செய்ய வேண்டும்' என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. இடைநிலைக் கல்வி ஏழு ஆண்டுகள், குழந்தைகளுக்கு 11 முதல் 17 ஆண்டுகள் வரை. பதினோறாம் வகுப்பு இடைநிலைக் கல்வி நிலையத்தில் இணைக்கப்பட வேண்டும். 12-ஆம் வகுப்பு பட்டப்படிப்பான பி.ஏ.வில் சேர்க்கப்பட வேண்டும்.
பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள். கல்லூரிக் கல்வியில் (PRE UNIVERSITY) ஓராண்டு தேர்ச்சி பெற்ற பின்னர் ஏனைய பட்டப்படிப்புகளில் சேரலாம். தொழிற்கல்விக் கூடங்கள் அதிகம் தொடங்கப்பட வேண்டும். இவை தொழிற்சாலைகளின் அருகில் அமைய வேண்டும். தொழில்கல்விக்காக தொழிற்சாலைகளுக்கு வரி விதித்து தொழில்கல்விக் கூடங்களை மேம்படுத்தலாம். ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கப்படுதல் அவசியம். இருபாலரும் சேர்ந்து படிக்க வேண்டும். பெண்கட்கு வீட்டு விஞ்ஞானக் கல்வி போதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நாடும் தேசபக்தி, தெய்வீக உணர்வு இல்லாமல் முன்னேற முடியாது. எனவே இந்த இரண்டு பண்புகளையும் வளர்ப்பது அவசியம்.
தாய்மொழியோடு தேசிய அளவில் மற்றொரு மொழியையும், ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். விருப்பப் பாடங்கள் ஏழு தலைப்புகளில் தரப்படுதல் நல்லது. மாணவர்களின் வாய்ப்புகள் அதிகமாகும். தொழிற்பிரிவு கல்வியில் தச்சு, தோட்டக்கலை, அச்சுப்பணி, தையல், எம்ப்ராய்டரி, கொல்லர் போன்ற பாடப்பிரிவுகளை ஏற்படுத்துதல். விஞ்ஞானம், கணிதம், இசை, நிலவியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும் என்று பல பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியது.
பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவற்றில் முக்கியமானவை: ஆண்டுக்கு 200 வேலை நாள்கள், வாரத்திற்கு ஆறு வேலை நாள்கள், வாரத்திற்கு 35 வகுப்புகள், ஒரு வகுப்பு 45 நிமிடங்கள் என்பன.
காமராசர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது கல்வித்துறை இயக்குநராக இருந்த நெ.து. சுந்தர வடிவேலு மாணவர்களின் உடையில் ஏற்றத்தாழ்வு தெரியாமல் இருக்க நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சீருடை அணியும் பழக்கத்தை ஏற்படுத்தினார். பின்னர் 1964-இல் டவுலட் சிங் கோத்தாரி பல்கலைக்கழக மானியக் குழு தலைவராக இருந்தார். இவர் தலைமையில் ஆறாவது குழு அமைக்கப்பட்டது. இக்குழு இந்தியா முழுமையும் உள்ள கல்விமுறையை ஆய்வு செய்தது.
இந்தக் குழுவின் அறிக்கையில் இந்திய அரசியல் அமைப்பு விதி 45-ன் படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி தர வேண்டும் என்பது முக்கிய பரிந்துரை. சமூகத்தில், மதிப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் ஆசிரியர். ஆகவே, தகுதியானவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். பிரதேச மொழிகள் வளர்க்கப்பட வேண்டும். இடைநிலைக் கல்வி வரை மாநில அரசுகள் மும்மொழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இப்படி பல காலங்களில் பல்வேறு குழுக்கள் பெரிய அறிஞர்கள் தலைமையில் அமையப்பெற்று வந்திருக்கிறது.
மால்கம் ஆதிசேஷய்யா போன்ற பெரும் கல்வியாளர்களும் பாடத்திட்டத்தில் புதிய அணுகுமுறைகளைச் சேர்க்க விரும்பினார்கள். ஆனால், யாரும் மாணவர்களின் மனனப் பழக்கத்தை மாற்ற விரும்பியது இல்லை. நமது மூளையின் ஆற்றலும் அபரிதமானது. ஒரு மில்லியன் நரம்பு செல்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. மூளை ஒரு வினாடியில் செய்யும் திறன்மிக்க பணியை செய்ய கணினி பொறியாளர்கட்கு 82 ஆயிரம் பிராகஸ்சர் தேவைப்படுகிறது. பத்து மடங்கு தகவல்களை சேர்த்து வைக்க வல்ல பெட்டா பைட் (PETA BYTE) திறன் உடையது.
சுமார் 50 ஆண்டுகட்கு முன்னர் பள்ளியில் படித்த மாணவர்களின் அறிவுத்திறனுக்கும் இன்று பள்ளியில் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறனுக்கும் நிரம்ப வேறுபாடு இருப்பதை உணரலாம். ஆகவே சிறு வயதிலேயே மாணவர்களின் நினைவுத்திறனை வளர்க்கக்கூடிய மனனப் பயிற்சிகளைத் தந்து, ஆய கலைகளில் ஒன்றான நினைவுக் கலையை இழந்து விடாமல் காப்போம்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...