சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாரதியார் படைப்புகள்: அரசும் தடையும்

அரசாங்கம் ஒரு புத்தகத்தின் மீது தடை விதிக்க, பறிமுதல் செய்ய ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:03 pm

சா.கந்தசாமி

அரசாங்கம் ஒரு புத்தகத்தின் மீது தடை விதிக்க, பறிமுதல் செய்ய ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில், ஆசிரியர் இறந்துவிடலாம்; ஆனால் புத்தகம் உயிரோடு இருக்கிறது என்பதுதான். ஒரு புத்தகம் எப்போதெல்லாம் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதாக நம்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் புத்தகம் தடை செய்யப்படுகிறது.
அந்தப் புத்தகத்தை அச்சகத்தில் இருந்தும், புத்தகக் கடைகளில் இருந்தும், நூலகங்களில் இருந்தும் பறிமுதல் செய்து தீயிட்டுக் கொளுத்தி விடுகிறது. இருண்ட அறைகளில் போட்டு பூட்டி வைத்துவிடுகிறது. 
அரசாங்கம் என்பது பயப்படக் கூடியது. பயந்து கொண்டே இருப்பது. எத்தனைத்தான் சட்டங்கள், ராணுவம், போலீஸ் இருந்தாலும் புத்தகங்களுக்குப் பயந்து கொண்டே இருக்கிறது. புத்தகத்தின் விமர்சனங்களைத் தாள முடியாமல் தடுமாற வைத்து விடுகிறது. எனவே தான் புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர் ஆள் திரட்டிக் கொண்டு ஆயுதங்களோடு வருகிறார்கள் என்று தடுப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறது. ஆயுதம் என்பது புத்தகம்.
தேசத் துரோகச் சட்டம், ராஜ துரோகச் சட்டம் என்பதெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்டம். இங்கிலாந்து மன்னருக்கோ, அரசிக்கோ, பாராளுமன்றத்திற்கோ எதிராக எழுதுவது, பேசுவது, சித்திரங்கள் வரைவது, பாடுவது, மேடைகளில் நாடகம் போடுவதெல்லாம் தேசத் துரோகமாக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தச்சட்டம் காலனி நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டது.
தேசத் துரோகச் சட்டத்தால் தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சுரேந்திரநாத் ஆர்யா, வ.வே.சு. ஐயர் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள். சுதேசமித்திரன் ஆசிரியராக இருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர், தேசத் துரோகக் கருத்துகள் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார். அவர் நோயுற்று இருந்ததாலும், முதுமையடைந்து இருந்ததாலும், இனி சுதேசமித்திரனில் தேசத் துரோகக் கருத்துகள் கொண்ட கட்டுரைகள் வெளிவராது என்று எழுதி வாங்கிக் கொண்டு விடுதலை செய்தார்கள்.
1906-ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து 'இந்தியா' என்ற வார இதழ் வெளிவந்தது. சனிக்கிழமைதோறும் வெளிவந்த 'இந்தியா'தான் தமிழின் முதல் அரசியல் இதழ். ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியர்களை மோசமாக நடத்தியது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது. மொழிநடை மக்கள் படிக்கக்கூடிய விதத்தில் புத்தம் புதிதாக இருந்தது. 'இந்தியா'வில் பணம் போட்ட முதலாளிகள் எஸ்.என்.திருமலாச்சாரி, மண்டையம் சீனிவாசாச்சாரி.
'இந்தியா'வின் ஆசிரியர், அச்சிடுபவர், வெளியிடுபவர், முதலாளி என்று அரசாங்க ஆவணத்தில் எம்.சீனிவாசாச்சாரி கையெழுத்துப் போட்டிருந்தார். அவர் கட்டுரை, கதை எழுதக்கூடியவர் இல்லை. 'இந்தியா'வில் வெளிவந்த அரசியல் கட்டுரைகள் பலவற்றையும் பாரதியார்தான் எழுதி வந்தார். ஆனால் பெயர் போட்டுக் கொள்ளவில்லை. சில இதழ்களில் கவிதையெழுதினார். அவற்றில் ஸி.சுப்பிரமணிய பாரதி என்று பெயர் போட்டுக் கொண்டார்.
'இந்தியா'வில் வெளிவந்த கட்டுரைகள் தேசத் துரோகமாக இருக்கின்றன என்று ஆங்கிலேய அரசு கருதியது. அவற்றை மொழிபெயர்த்து உயர் அதிகாரிகள் படித்தார்கள். அவர்களுக்கும் கட்டுரைகள் தேசத் துரோகமாகவே பட்டன. சட்ட ரீதியாக ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டுடன் போலீஸார் சென்றார்கள். எதிர்ப்பட்ட பாரதியாரிடம் 'இந்தியா' ஆசிரியருக்கு வாரண்ட் என்றனர். அதற்கு பாரதியார், 'ஆசிரியர் மாடியில் இருக்கிறார்' என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டார். போலீஸ் 'இந்தியா'வின் ஆசிரியர் என்று பெயர் போட்டிருந்த சீனிவாசாச்சாரியை கைது செய்து அழைத்துக் கொண்டு போய்விட்டது.
பாரதியார் பெயர் போட்டுக் கொள்ளாமல் கட்டுரை எழுதியது தானே என்பதை போலீஸ் கண்டுபிடித்துவிடும் என்று அச்சங் கொண்டார். சிறை சென்று முடங்கிக் கிடப்பதைவிட பக்கத்தில் உள்ள பிரெஞ்சு காலனியாக இருக்கும் புதுச்சேரிக்குச் சென்று சுதந்திரமாகப் பேசலாம், எழுதலாம் என்று கருதினார். எனவே தன்னந்தனியாகப் புலம்பெயர்ந்து புதுச்சேரி சென்றார். அவர் பழைய முதலாளிகள் அச்சு இயந்திரத்தையும், அச்சு எழுத்துகளையும் வைக்கோலில் வைத்து மறைத்து மாட்டு வண்டியில் ஏற்றி புதுச்சேரி கொண்டு வந்தார்கள்.
புதுச்சேரியில் இருந்து 1908-ஆம் ஆண்டு 'இந்தியா' வெளிவந்தது. கடுமையான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை பாரதிதான்எழுதினார். ஆனால் பெயர் போட்டுக் கொள்ளவில்லை. இடம் மாறினாலும் பத்திரிகையின் தொனி மாறவில்லை. 'இந்தியா' இதழ் கண்டு ஆங்கிலேய அரசு எரிச்சலுற்றது. அச்சு சட்டத்தின் கீழ் 'இந்தியா' இதழ், இந்திய எல்லைக்குள் வரக்கூடாதென்று தடைவிதித்துவிட்டது. புதுச்சேரியில் இருந்து 'இந்தியா' இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது.
பத்திரிகை இல்லாவிட்டாலும் பாரதியார் எழுதிக்கொண்டுதான் இருந்தார். வயது இருபத்தெட்டாகி இருந்தது. மனைவி செல்லம்மாள், இரண்டு பெண் குழந்தைகளோடு வாடகை வீட்டில் குடியிருந்தார். சுதேசமித்திரனுக்குக் கவிதைகள், கட்டுரைகள் எழுதி முப்பது ரூபாய் சன்மானம் பெற்றார். அதில்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அவருக்கு எழுத வேண்டியதென்று பட்ட அரசியல் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட பத்திரிகைகள் இல்லாமல் போய்விட்டன. எனவே சுயசரிதை, கதைகள் எழுத ஆரம்பித்தார்.
1910-ஆம் ஆண்டு, புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியார், 'கனவு' என்று கவிதையில் சுயசரிதையும், 'ஆறிலொரு பங்கு' என்று சிறுகதையும் எழுதினார். அவற்றை 1911-ஆம் ஆண்டு சிறு புத்தகங்களாக வெளியிட்டார். இரண்டையும் பிரிட்டிஷ் அரசாங்கம் அபாயகரமான புத்தகங்கள் என்று கருதி தடை போட்டுவிட்டது.
எழுத்தாளர்கள் எதன் பொருட்டும் சோர்ந்து விடுவதில்லை. அவர்களின் படைப்பாற்றல் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. படைப்பு எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதுவே பாரதியாருக்கும் நேர்ந்தது. அவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் எழுதிக் கொண்டிருந்தார். அதோடு பகவத்கீதையை மொழிபெயர்த்து நீண்ட முன்னுரை எழுதினார்.
பாரதி 1921-ஆம் ஆண்டு, செப்டம்பர் 12-ஆம் தேதி தன் 39-ஆவது வயதில் காலமானார். கவிஞர்கள் மரணத்துடன் முடிவடைவதில்லை; தம் படைப்புகள் வழியே மரணமிலா பெருவாழ்வு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது பாரதியாருக்கும் பொருந்தி போய்விடுகிறது.
1928-ஆம் ஆண்டில் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக பர்மா (மியான்மர்) இருந்தது. ஆனால் அது தனி மாநிலம். பர்மாவில் இரண்டு நூற்றாண்டு காலமாகத் தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழ்ப் புத்தகங்கள் படித்து வந்தார்கள். பத்திரிகைகள் கூட நடத்தினார்கள். பர்மா அரசு பாரதியாரின் 'ஸ்வதேச கீதங்கள்' ராஜ துரோகமாக - தேசத் துரோகமாக இருக்கிறது என்று தடை போட்டது. ஆறணா விலையுள்ள கவிதைப் புத்தகத்தைப் பறிமுதல் செய்துவிட்டது.
பர்மா மாநில அரசு செய்ததை இன்னொரு மாநிலம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் புத்தகம் தமிழில் இருந்தபடியால் சென்னை மாநில அரசும் தடை போட்டுவிட்டது. அப்போது தமிழ்நாட்டில் கலப்பு மந்திரி சபை இருந்தது. டாக்டர் பி.சுப்பராயன் முதல்வர். திவான் பகதூர் மன்னத்து கிருஷ்ணன் நாயர் சட்ட அமைச்சர். எஸ். முத்தையா முதலியார் கல்வி அமைச்சர். அப்போது சட்ட மேலவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, 'பாரதியாரின் 'ஸ்வதேச கீத'ங்களுக்கு அரசு தடை போட்டது, பறிமுதல் செய்தது பொது முக்கியத்துவம் வாய்ந்தது; எனவே சட்ட மேலவையின் எல்லா பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அது பற்றி விவாதிக்க வேண்டு'மென்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
'ஸ்வதேச கீதங்கள்' தடை பற்றிய விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கியது. எஸ்.சத்தியமூர்த்தி அதனைத் தொடங்கி வைத்தார். ''இந்த மண்ணில் தமிழ் நிலைத்திருக்கும் வரையில், கடைசித் தமிழன் உள்ள வரையில், பாரதியாரின் விலை மதிக்க முடியாத பாடல்களைப் பறிமுதல் செய்வதற்கு காவல்துறைக்கு அனுமதியளித்த, அதற்குத் துணை போன அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டிக்கிற தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்க மாட்டார்கள்'' என்று சொல்லி, 'வந்தே மாதரம்', 'யாமறிந்த மொழிகளிலே', 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி', 'வாழிய செந்தமிழ்' என்ற பாடல்களைப் பாடி ''இவையெல்லாம் தேசத் துரோகப் பாடல்களா?'' என்று வினவினார்.
சட்ட மேலவையில் பேசிய எல்லா உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாகவே பேசினார்கள். எதிராகப் பேசிய சட்ட அமைச்சர் திவான் பகதூர் மன்னத்து கிருஷ்ணன் நாயர் நடந்ததற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஏற்படுத்திய கப்பல் கம்பெனிக்கு சிறிது காலம் சட்ட ஆலோசகராக இருந்தவர்; அதோடு முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்த தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வரக் காரணமாக இருந்தவர். முதல்வராக இருந்த பி.சுப்பராயன் பள்ளிக்கூடங்களில் பாரதியார் பாடல்களைப் பாட அனுமதி கொடுத்தவர். கல்வி அமைச்சராக இருந்த எஸ். முத்தையா முதலியார் வகுப்புவாரி சட்டம் கொண்டு வந்தவர்.
எத்தனைதான் அறிவுள்ளவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் அரசு நிர்வாகம் என்பது இயந்திரம் போல நடைபெறுவது. அதுவேதான் பாரதியாரின் 'ஸ்வதேச கீதங்கள்' தடை, பறிமுதல் என்பதிலும் நடைபெற்றது. பெரும்பாலும் இலக்கியம் பற்றி சட்டசபைகளில் விவாதிக்கப்படுவதில்லை. அது அப்படியொன்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்டதில்லை என்று ஒதுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் பாரதியார் பாடல்களுக்கான தடை, தமிழ்மொழி மீதும், தமிழர்கள் மீதும் தொடுக்கப்பட்ட போர் என சத்தியமூர்த்தி கிளர்ந்தெழுத்தார். அவர் சட்டம் படித்தவர் இல்லை. இயற்கையான சட்டத்தின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பறிக்க எந்தவொரு அரசாங்கத்திற்கும் அருகதையில்லை என்பதை முன்வைத்தார்.
சத்தியமூர்த்தியின் ஒத்திவைப்புத் தீர்மானம் - அதாவது தடையை நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ராவ் பகதூர் ஓ.எம். நாராயணன் நம்பூதிரி, செளந்தரபாண்டியன் நாடார், ஆதிநாராயண செட்டி, முத்துரங்க முதலியார், பனகல் ராஜா, பி.டி.ராஜன், டி.கே.சிதம்பரநாத முதலியார், எஸ்.சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அப்துல் ஹமீது கான், ஆர்.நாகன் கெளடா, ராம்நாத் கோயங்கா உட்பட எழுபத்தாறு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். 'ஸ்வதேச கீதங்கள்' மீதான தடை நீக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.
சட்ட மேலவை விவாதம் முழுவதும் பெரும்பாலும் ஆங்கில மொழி வழியாகவே நடைபெற்றது. சட்டசபைக்கு ஒரு மாண்பு இருக்கிறது என்பதை நிலைநாட்டும் விதமாக கண்ணியமாக - மேலான தரத்தில் விவாதங்கள் நடைபெற்றன.
தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற விவாதம் ஒரு முன்னுதாரணமாக உள்ளது. அது எவ்வாறு மாண்பு இழந்து இருக்கிறது என்பதையும் சொல்லக் கூடிய விதமாகவும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.