ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தேசியப் பேரிடர்களும் மேலாண்மையும்

இயற்கை மானுடத்திற்கு ஏற்றத்தையும் தந்திருக்கிறது; சீற்றத்தையும் தந்திருக்கிறது. ஏற்றத்தைத் தருகின்றபோது

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:55 pm

தி. இராசகோபாலன்

இயற்கை மானுடத்திற்கு ஏற்றத்தையும் தந்திருக்கிறது; சீற்றத்தையும் தந்திருக்கிறது. ஏற்றத்தைத் தருகின்றபோது படிப்படியாகத் தருகின்ற இயற்கை, சீற்றத்தைத் தருகின்றபோது ஒரு சில மணி நேரத்தில் மொத்த மானிடப்பரப்பையும் துக்கத்தில் ஆழ்த்தி விடுகின்றது.
சுனாமி, புயல், பூகம்பம், எரிமலை, நிலச்சரிவு, அமிலமழை, வெப்பத்துடன் கூடிய சூறாவளி போன்றவை தேசியப் பேரிடர்களாகக் கருதப்படுகின்றன. நம் நெஞ்சைப் பெரிதும் நெருடக்கூடியது, 2004-ஆம் ஆண்டு எழுந்த சுனாமி ஆகும்.
சுனாமியால் 14 நாடுகளைச் சேர்ந்த 2,30,000 பேர்கள் மரணித்தார்கள். 10 நிமிஷங்கள் மட்டுமே தாக்குதலை நடத்திய சுனாமி, 5640 பேர்களைக் காணாமல் போகச் செய்தது; 3 லட்சம் மீனவர்களுடைய வாழ்வாதாரங்களை அழித்தது; 11,827 ஹெக்டேர் நிலப்பரப்பில் விளைந்திருந்த பயிர்களை அழித்தது. சுனாமியைத் தொடர்ந்து இப்பொழுது தமிழர்களைக் கண்ணீர் கடலில் ஆழ்த்தியிருப்பது கஜா புயல் ஆகும்.
உலகிலேயே இந்தியா மட்டுமே 7516 கி.மீ தொலைவுக்குக் கடலோரப் பகுதியைக் கொண்டிருப்பதால், அடிக்கடி பேரிடர்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. புயல் எப்படி உருவாகின்றது? வடதுருவக் குளிர்ந்த காற்று தென்திசை நோக்கி வெப்பப் பகுதிகளுக்குள் புகுந்து ஓடுகின்றது. எனினும் அதனைப் பின்னுக்குத் தள்ள தெற்கேயுள்ள அனற்காற்றுகள் முயலுகின்றன. 
இந்த முரண்பட்ட போராட்டத்தின் விளைவாகத் துருவக் குளிர் காற்றுகள், மேல்திசைக்குத் திரும்புகின்றன. அனற்காற்றுகள் கீழ்த்திசைக்குத் திரும்புகின்றன. இவ்விதம் ஒன்றையொன்று விரட்டுவதனால், நீரில் சுழல்கள் ஏற்படுவது போல, வாயு மண்டலத்திலும் சுழல்கள் ஏற்படுகின்றன. இந்தச் சுழல்களே சூறாவளிப் புயல்களாக உருவெடுக்கின்றன. 
ஒரு காலத்தில் புயல்கள் உருவாவதைக் கணிக்கின்ற அளவுக்கு அறிவியல் வளரவில்லை. ஆனால், கஜா புயல் உருவாவதை ரேடார்கள் கணித்துச் சொன்னாலும், அவை எந்தத் திசையில் திரும்பும் என்பதை முன்கூட்டியே அறிய முடியாததால், கஜா புயல் கடலோர மாவட்டங்களை மென்று தின்றுவிட்டது.
2008- இல் ஏற்பட்ட நிஷா புயல், 2011- இல் வீசிய தானே புயல் போன்றவை பெருஞ்சேதங்களை விளைவித்தாலும், கஜா புயல் போல் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தனித் தீவுகளாக ஆக்கவில்லை.
பேரிடர் என்றால் என்ன? அதிலும் தேசியப் பேரிடர் என்றால் என்ன? 2015-இல் சென்னையில் தொடர்ந்து பெய்த மழையில், ஏரிகள் உடைந்தன. அதனால் அதனைத் தேசியப் பேரிடர் எனச் சொல்ல முடியாது. தேசிய மேலாண்மை நிறுவனம் 2005 -ஆம் ஆண்டு விதி இரண்டின் கீழ் டி பிரிவில் தேசியப் பேரிடருக்கு ஓர் இலக்கணத்தை வகுத்திருக்கிறது.
பூமியைப் பிளக்கக்கூடிய ஒரு பேரழிவு, சமுதாயத்தை நிலைகுலையச் செய்யும் பேராபத்துக்கள், சமூகத்தை நாசம் செய்யக்கூடிய விபத்துக்கள், பல உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இடர்கள் ஆகியன இயற்கையினாலோ, சதிகாரர்களின் செயலாகக்கூட இருக்கலாம். 
அந்த இடர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மனித உயிர்களை மாளச் செய்திருந்தால், ஊரையே நகரங்களையே அழித்திருந்தால், சொத்துக்களையோ, விலங்குகளையோ துப்புரவாகத் துடைத்திருந்தால், அந்த விளைவுகளை தேசியப் பேரிடர் என இந்திய அரசின் மேலாண்மை நிறுவனம் கருதுகிறது.
தேசியப் பேரிடர்களினால் ஏற்படும் துன்பங்களைத் துடைக்கவும், நிவாரணப் பணியில் ஈடுபடவும் மத்திய அரசு 23.12.2005 அன்று தேசியப் பேரிடர் மேலாண்மை மையத்தை நிறுவியது. அதன் தலைவராகப் பாரதப் பிரதமரே இருப்பார். அவருக்குக் கீழ் ஒன்பது பேர்களைக் கொண்ட ஒரு குழு உண்டு. இராணுவம், உள்துறை, மருத்துவம் போன்ற துறைகளின் செயலர்களே உறுப்பினராக நியமிக்கப்படுவர்.
தேசியப் பேரிடர்களின்போது நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டிய அமைச்சர்களின் பெயர்களையும் அது வரையறுத்தது. நிவாரணப் பணியில் துரித கதியில் ஈடுபடக்கூடிய, பயிற்சி பெற்ற பத்துப் படைப் பிரிவினரை, அந்தக் குழு நியமித்தது. ஒவ்வொரு படைப் பிரிவிலும் 1000 இராணுவ வீரர்கள் உண்டு. தேசியப் பேரிடர்களைத் தவிர்க்கக்கூடிய தற்காப்பு நடவடிக்கைகளையும், பேரிடருக்குப் பின்னர் மீட்புப் பணியில் ஈடுபட வேண்டிய விதிமுறைகளையும், தேசியப் பேரிடர் மேலாண்மை மையம் துல்லியமாக வகுத்திருக்கிறது.
உலகத்துப் பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்குள், இந்தியப் பேரிடர் மேலாண்மை இயக்கம் ஆற்றல் பெற்றதும் நுண்ணறிவு பெற்றதும் ஆகும். 2011-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்ப நிவாரணப் பணிகளில், இந்திய மேலாண்மையினர் தங்களுடைய பேராண்மையை நிலைநாட்டினர். 
இந்திய மேலாண்மைப் பிரிவின் செயல்திறன் கண்டு ஜப்பானியரே வியந்து நின்றனர். 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளத்தைச் சீரழித்த வெள்ளப்பெருக்கில் 170 மனித உயிர்கள் மரணித்தன; 65 லட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். என்றாலும், இந்தியப் பேரிடர் மேலாண்மையினர் ஆற்றிய சாதுர்யமான பணிகளால், பேரழிவுக்குச் செல்லாமல் கேரள மாநிலம் காப்பாற்றப்பட்டது.
இந்தியப் பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு 567 கிளைகள் நாடு முழுமையும் அமைந்திருக்கின்றன. உலக வங்கி உதவியுடன் ஒடிஸாவில் 312 கிளைகள், ஆந்திரத்தில் 218 கிளைகள், குஜராத்தில் 22 கிளைகள், மேற்கு வங்கத்தில் 15 கிளைகள் அமைந்துள்ளன. 
ஆனால், தமிழகத்தில் ஒன்றுகூட அமையாமல் போனது நமது துரதிர்ஷ்டமே! கஜா புயல் நிவாரணத்துக்கு மத்தியப் பேராண்மைக் குழுவினர் வராமல் போனது, மிகப் பெரிய துரதிர்ஷ்டம் ஆகும். என்றாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மின்சார வாரியமும் ஆற்றிய பணிகள் வியக்கத்தக்கன ஆகும்.
கஜா புயல் தமிழக வரலாற்றில் கீறப்பட்ட கரிக்கோடு ஆகும். எட்டு டெல்டா மாவட்டங்களை 30 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நகர்த்திப் போட்டிருக்கிறது.
63 மனித உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. 3.7 இலட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்களில் அடைக்கலம் அடைந்துள்ளனர். முத்துப்பேட்டைக்கு அடுத்துள்ள இடும்பாவனம் கிராமத்தில் மட்டும் 2 இலட்சம் தென்னை மரங்கள் தலை சாய்ந்துவிட்டன. கடந்த 30 ஆண்டுகளாகக் காவிரி நிதி கைவிரித்ததால், நெற்பயிரை விட்டுத் தென்னைப் பயிருக்கு மாறிய, மேற்குத் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை இப்பொழுது கஜா புயல் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.
3.4 இலட்சம் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. 28,000 மின்சாரக் கம்பங்கள் மடங்கி வீழ்ந்திருக்கின்றன. 201 மின் வழங்கு நிலையங்கள் செயலிழந்திருக்கின்றன. 886 டிரான்ஸ்பார்மர்ஸ் குப்புற வீழ்ந்திருக்கின்றன. 53,21,506 மின்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பேரிடரைத் தாங்க முடியாத சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது, தணிக்க முடியாத துயரம் ஆகும். 
கஜா புயல் தமிழகத்தில் ஒரு யுகப் பிரளயத்தையே நிகழ்த்தியிருக்கிறது. சோகத்திலேயே மிகப் பெரும் சோகம், வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை வரையில் 25 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்த அலையாத்திக் காடுகள் அழிந்ததுதான்.
இக்காடுகளில் உள்ள மரங்கள் அதிக வேர்களை நிலத்தில் பரப்பியும், மூச்சு வேர்களை நிலத்திற்கு மேல் நீட்டியும், மண் அரிப்பைத் தடுக்கின்றன.
சான்றாகச் சுரபுன்னை மரங்கள் தமது சல்லி வேர்களைப் பூமிக்கு மேல் மூச்சு வாங்க அனுப்புவதால், அவையும் மண் அரிப்பைத் தடுக்கின்றன. இதனால், காற்றின் வீச்சைக் குறைக்கவும், பெருமளவில் அலைகளால் கரை அரிக்கப்படுவதைத் தடுக்கவும், இந்தக் காடுகள் உதவின.
இந்தக் காடுகளில் வாழ்ந்த பல அரிய பறவையினங்கள் செத்து வீழ்ந்தன. இந்தக் காட்டை பறவைகளின் சொர்க்க பூமி என வருணிக்கிறார், பறவையின ஆராய்ச்சியில் வல்லுநரான சலீம் அலி. பறவைகள் மட்டுமன்றி, மான் வகைகளும் காட்டு பன்றிகளும் செத்து மிதந்து வந்தது, ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
இயற்கைப் பேரிடர்கள் வருவதை இப்பொழுது கணிக்க முடிகிறதே தவிர, அவை ஏற்படுத்தும் இடர்களை நம்மால் தணிக்க முடிவதில்லை. என்றாலும், மக்களுக்குக் கொஞ்சம் நிதானம் வேண்டும். நிலங் கலங்கினும், கடல் கலங்கினும், கலங்காது நிதானத்தோடு செயல்படுவதே விவேகம்!

கட்டுரையாளர்:
பேராசிரியர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.