/

தகுதியும் விருதும்

உலகத்தில் எந்த ஒரு செல்வந்தர் அல்லது அதிகாரம் மிக்கவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆசிரியருக்கு உணடு. செல்வந்தர் அல்லது  அதிகாரம் மிக்கவர் யாராக இருந்தாலும் அவர்கள் யாராவது  ஓர் ஆசிரியருக்கு மாணவராகத்தான

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:37 pm

ஆர். வேல்முருகன்

உலகத்தில் எந்த ஒரு செல்வந்தர் அல்லது அதிகாரம் மிக்கவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆசிரியருக்கு உணடு. செல்வந்தர் அல்லது  அதிகாரம் மிக்கவர் யாராக இருந்தாலும் அவர்கள் யாராவது  ஓர் ஆசிரியருக்கு மாணவராகத்தான் இருந்திருப்பார்கள்.
அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர் பணிதான் இப்போது ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறான செய்கைகளால் ஆசிரியர் சமுதாயத்துக்கே மிகவும் இழிவான பெயரைப் பெற்றுத் தருகிறது.
அருப்புக் கோட்டையில் தனியார் கல்லூரிப் பேராசிரியை ஒருவர் மாணவியைப் பாலியல் பேரத்துக்கு அழைத்த செய்தி வெளிவந்தவுடன் பொதுமக்கள் அதிர்ந்தனர். இத்தனைக்கும்  மாணவியரைப் பாலியல் பேரத்துக்கு அழைத்த அந்தப் பேராசிரியைக்கும் கல்லூரி செல்லும் வயதில் மகள் இருக்கிறார். 
இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. அந்தப் பேராசிரியை யாருக்காக இதைச் செய்தார் என்பதை அறிந்து அவர்களையும் தயவு தாட்சண்யமில்லாமல் கைது செய்ய வேண்டும்.
இதையடுத்து இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கல்லூரியில் அதே சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது தொடர்பாக நீதிபதிகள் நேரடியாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். 
இது போன்ற பேராசிரியர்கள் எல்லாம் ஏழைப் பெண்களைக் குறிவைத்துத்தான் காய் நகர்த்துகின்றனர். ஆடம்பர வாழ்வுக்கும் ஆசை வார்த்தைக்கும் மயங்கி வழிதவறும் மாணவியர், பெரும்பாலும் திருமணத்தின்போதுதான் தாங்கள் எவ்வளவு தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்கிறார்கள்.
ஆசிரியர் என்றால் இந்தச் சமுதாயத்தில் எவ்வளவு மரியாதை இருந்தது ஒரு காலத்தில். அதனால்தான் முதல் குடியரசுத் தலைவராக ஓர் ஆசிரியரைத் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது நம் நாடு . அவருடைய பிறந்த நாளைத்தான் இப்போது ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்தமானது ஆசிரியர் தொழில்.  அதனால்தான் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகைப்பேராசிரியராக இருந்தார்.
உலகில் எந்தப் பணிக்கும் இதுபோல ஈடில்லை என்னும் வகையில் மிகச் சிறந்த பணியாகக் கருதப்படுவது ஆசிரியர் பணிதான் எனும்போது அதற்கான மரியாதை மேலும் கூடுகிறது.
பெற்றெடுத்த தாய், தோளில் சுமந்து உலகத்தைக் காணச் செய்த தந்தை ஆகியோருக்கு அடுத்தபடியாகப் புகழுக்குரியவர் குரு என்றழைக்கப்படும் ஆசிரியர்தான். தெய்வம் கூட ஆசிரியருக்கு அடுத்துத்தான்.
அரசர் கால குருகுலக் கல்வியில் இருந்து இப்போதைய ஸ்மார்ட் வகுப்பறை வரை ஒரு மாணவரின் உயர்வும் தாழ்வும் ஆசிரியரால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. 
ஆசிரியர் நினைத்தால் எந்த மாணவரையும் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். அத்தகைய சக்தி ஆசிரியரிடம் உண்டு. அதனால்தான் இப்போதும் ஆசிரியர் தினத்தன்று நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருது  மத்திய, மாநில அரசுகளால் வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது.
ஆனால் இன்று அந்த விருதுகள் வழங்கப்படுவதில்லை மாறாக வாங்கப்படுகின்றன என்பது வேதனை தரும் உண்மை.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ்ந்த ஆசிரியர்களைத் தேடிபிடித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  அதுபோன்றவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பாக எவ்வித விமர்சனங்களும் எழுந்ததில்லை. அவர்களில் யாரும் பிறரின் கிண்டலுக்கு ஆளானதில்லை.
மாணவர்களின் மத்தியில் சிறந்த விளங்கும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும்போது அவ்விருதுக்கும் பெருமை. மாணவர்கள் மத்தியிலும், சமூகத்திலும் அவர்களுக்குத் தனி மரியாதை கிடைக்கும்.
அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஆசிரியரைப் பணியிட மாற்றம் செய்ததைத் தடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமில்லாமல் பெற்றோரும் சேர்ந்து போராட்டம் நடத்தினர். அப்படியானால் அந்த ஆசிரியர், மாணவ, மாணவியரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு விருது வழங்கப்படாது.
இதுபோல பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் படித்த மாணவர்கள் இணைந்து தங்கள் இயற்பியல் ஆசிரியையின் பெயரில் ரூ. 2 கோடி மதிப்புள்ள கட்டடத்தைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.  இந்நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியையும் அழைத்துப் பெருமைப்படுத்தியிருக்கின்றனர். அந்தப் பேராசிரியை அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் எத்தகையதாக இருந்திருக்கும்?
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்படும்போது கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இதற்குக் காரணம் விருது பெறத் தகுதியில்லாத, ஆசிரியராக இருக்கவே தகுதியில்லாத சிலருக்கு இவ்விருது வழங்கப்படுவதுதான். அவர்கள் தங்களுக்கு இருக்கும் அரசியல், பண பலத்தின் மூலம்தான் இத்தகைய விருதுகளைப் பெறுகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலும் ஆளும் கட்சிக்குச்சாதகமாகச் செயல்படும் ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி  அதிகாரிகள், மாவட்டக் கல்வி அலுவலர்களை ஏதாவது ஒரு வகையில் சரிக்கட்டி விருது பெறுகின்றனர்.  அல்லது அரசியல்வாதிகள் மூலம் அலுவலர்களை மிரட்டிப் பணிய வைக்கின்றனர். இந்த இடத்தில் பணபலம் விளையாடுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விருது பெறும் தகுதி சுத்தமாகக் கிடையாதென்பது ஊரறிந்த ரகசியம்.
தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு விருது வழங்குவது என்பது ஆசிரியர் சமுதாயத்துக்கே மிகக் கேவலம்.  எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் சக்தி படைத்த 
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்  இந்த விருதுகளால் அவர்களுக்குப் பெருமை கிடைக்க வேண்டுமே தவிர விருது சிறுமையாகிவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.