/

எவருக்கான நலத்திட்டங்கள் இவை?

கடந்த மாத இறுதியில் ஒரு நாள், சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் மின்னியது சென்னைப் பெருநகர மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் பில்டிங்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:37 pm

ஜெயபாஸ்கரன்

கடந்த மாத இறுதியில் ஒரு நாள், சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் மின்னியது சென்னைப் பெருநகர மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் பில்டிங். மீண்டும் ஐந்து நாட்களுக்குப் பின் அது நீலவண்ண அலங்கார விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மின்னியது. உலகத் தண்டுவடச் செயலிழப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சிவப்பு வண்ண விளக்குகளாலும், அதன்பிறகு எலும்பு மற்றும் மூட்டு நல விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் வகையில் நீல வண்ண விளக்குகளாலும் அந்தக் கட்டடம்அலங்காரிக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.
இப்படி வண்ண வண்ண விளக்குகளால் அந்தக் கட்டடத்தை அலங்கரித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் என்பது யாருடைய கோரிக்கை? இதற்கான செலவுத்தொகை யாருடையது? மருத்துவம் தொடர்பான இந்த விழிப்புணர்வு நடவடிக்கை அரசு மருத்துவமனைகளில்கூட மேற்கொள்ளப்படவில்லையே!
தரமான மருத்துவம், தேவையான மருந்துகள், அலையவிடாத சேவை முறை,  பணம் பிடுங்காத பணியாளர்கள், தூய்மையான கழிப்பறை மற்றும் படுக்கை வசதி போன்றவையே அரசு மருத்துவமனக்கு வந்து சேருகின்ற ஏழை எளிய மக்களின்  கோரிக்கைகளாகும். ஆனால், இவை தமிழ்நாட்டின் 80% அரசு மருத்துவமனைகளில் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. 
குடிமக்களின் நலன்கள் குறித்து சிந்தித்து விழிப்புணர்வு பெறவேண்டியவர்கள், நமது அரசுகளின் நிர்வாகத் தரப்பினரே ஆவர். ஆனால் அவர்களோ, எதற்கெடுத்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டக் கிளம்பி விடுகின்றனர். மக்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் போராட்டங்களை நமது அரசுகள் ஒரு போதும் விரும்புவதில்லை. அத்தகையப் போராட்டங்களை ஒடுக்க அரசுகள் களமிறங்குவதைக் கண்கூடாகவே காண்கிறோம். மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதிலேயே நமது காவல்துறையினரின் நேரம் விரயமாகிக் கொண்டிருப்பதால், கண்டறியப்படமுடியாத அளவுக்குச் சமூகச்சிறு குற்றங்கள் பெருகத் தொடங்கியுள்ளன. இதனால், நீதிமன்றங்களின் பணிச் சுமைகளும் பெருமளவில் கூடியுள்ளன.
தங்களின் தேவைகளைக் கோரி மட்டும் மக்கள் போராடவில்லை; தங்களுக்குத் தேவையில்லாதவற்றை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, அரசு மதுக்கடைகளுக்கு எதிராக, தமிழகப் பெண்களின் போராட்டம் மிகவும் தீவிரம் பெற்றுள்ளது. "மதுக்கடை தேவை' என்று எந்தவொரு தனி மனிதரோ, சமூக அமைப்போ அரசிடம் கோரிக்கை வைக்காத நிலையில், தமிழக அரசு தன்னிச்சையாக, மாநிலம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளைத் திறந்தது. பின்னர் அவற்றின் எண்ணிக்கையை ஏழாயிரத்துக்கும் மேலாக உயர்த்தியது. மதுக்கடைகளுக்கு எதிராகப் பெண்களும் சமூக அமைப்புகளும் போராடியதன் விளைவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழக அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது.
ஓர் அரசின் தன்னிச்சையான ஒரு திட்டம் எந்த அளவுக்குச் சமூகத்தைச் சீரழித்துத் அடுத்தடுத்த தலைமுறைகளையும் நாசப்படுத்தும் என்பதற்கு தமிழக அரசின் மது வணிகத்திட்டமே சான்று.
இது ஒருபுறமிருக்க, மக்கள் கோரிக்கை வைக்காத, சென்னை-சேலம் எண்தடச்சாலை, நியூட்ரினோ ஆய்வு மையம், அணு உலைகள் போன்ற அரசின் திட்டங்களும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அரசின் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் திட்டங்களும் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கும் போராட்டங்களுக்கும் வழி வகுத்துள்ளன. 
தமிழகத்தின் அத்தனை ஆறுகளின் மணலையும் அள்ளி விற்பனை செய்யும் மணல் வணிகம், மலைக்கல் வணிகம் போன்றவையும் மக்களின் கோரிக்கையல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளான சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, குடிநீர் போன்றவை விடுதலை பெற்று எழுபது ஆண்டுகளைக் கடந்தும் உறுதி செய்யப்படாத நிலையில், அரசு, வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகின்ற திட்டங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் விளைந்திடாது. 
வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக்கூட அடையாமல், அரசின் திட்டங்களுக்காகத் தங்களது விளைநிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்தாக வேண்டிய நிலைக்கும், அத்திட்டங்கள் தோற்றுவிக்கின்ற அபாயகரமான விளைவுகளுக்குத் தங்களது உயிரையும் உடல்நலத்தையும் பறிகொடுத்தாக வேண்டிய நிலைக்கும் நமது வேளாண் மற்றும் மீனவப் பெருங்குடிமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற திட்டங்கள் எவையும் நமது நிகழ்கால அரசுகளிடம் இல்லை. எனவே, தனியாரின் விருப்பமான திட்டங்கள் வாயிலாக அப்பகுதி மக்களில் சிலருக்கு வேலைவாய்ப்புகளையும், நில மதிப்பீட்டின் அடிப்படையில் பணத்தையும் தருவதாக தற்போதைய அரசுகள் அறிவிக்கின்றன. 
அது போன்ற அறிவிப்புகளுக்கு இசைவு தெரிவித்துவிட்டு, அறிவிக்கப்பட்டவாறு பயன்களைப் பெறாத நிலையில், நாட்டின் பல பகுதிகளில்  மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். "நீங்கள் நிலம் கொடுத்தால் நாங்கள் வேலை கொடுப்போம்' என்கிற நவீன பண்ட மாற்றுக் கொள்கையே நமது அரசுகளின் வேலை வாய்ப்புக் கொள்கை.
காமராசர் தமிழக முதல்வராக இருந்தபோது நிறுவிய பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பான்மை மக்களின் வாழ்வை நிமிரச் செய்தன. ஆனால், அடுத்தடுத்து அமைந்த அரசுகள் அதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தொடரவில்லை. 
ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்புகளை வழங்குகின்ற திட்டங்கள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலை இப்போது உருவாக்கப்பட்டுவிட்டது. அரசின் திட்டங்களோ, மக்களின் அன்றாடப் பயன்பாடுகளுக்கான பல்வகை நுகர்பொருள்களை அவர்களுக்கு நேரடியாகவே வழங்கி நற்பெயரையும், வாக்குகளையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யக்கூடிய இலவசத் திட்டங்களாக மாறிவிட்டன. 
அரசுகள், நலத்திட்டங்கள் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதும், அத்திட்டங்களின் பயன்கள் குறித்து கேள்வி எழுப்ப வலிமையான அமைப்புகள் இல்லை என்பதுமே இன்றைய நிலை. தனியாரிடமிருந்து நுகர்பொருள்களை பல்லாயிரங்கோடிக் கணக்கில் கொள்முதல் செய்து, தன் குடிமக்களுக்கு இலவசமாக வழங்குகின்ற அன்பளிப்புக் கலாசாரமே, இன்றைய தமிழக அரசு பல லட்சக்கணக்கான கோடிக்கு கடனாளியாக மாறுவதற்கான முதற்காரணமாகும்.
கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரக் கட்டமைப்பு போன்ற குடிமக்களுக்கான தனது கடமைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, தொண்டு நிறுவனங்கள் செய்யக்கூடிய அன்பளிப்பு வழங்கும் பணியை அரசு கையிலெடுத்துக் கொண்டுவிட்டது. கூடுதலாக, மக்களின் உயிரைக் குடிக்கவல்ல மதுவணிகத்தையும்  செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, போதிய நிதியை ஒதுக்கி, அவசர அவசரமாகவும், அரை குறையாகவும் நிறைவேற்றப்பட்டு, வெகு விரைவிலேயே மக்களாலும், அரசுகளாலும் கைவிடப்பட்டுக் குலைந்து கிடக்கிற திட்டங்கள் பல்லாயிரக்கணக்கில் நம்மிடையே உள்ளன.
தெருக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. ஆனால் புதிய பூங்காக்களின் திறப்பு விழாவில் மட்டும் வண்ண வெளிச்சங்களில் நீர்க்குழாய்கள் பீறிட்டு அடிக்கின்றன. அவையும் மூன்றே மாதங்களில்முற்றாகச் சீர்குலைந்து பராமரிப்புகளின்றித் துருப்பிடித்து அழிகின்றன. போக்குவரத்துக்கான பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதங்களோ, பேருந்துகளுக்குரிய முறையான கட்டுமானங்களோ இல்லாத நிலையில்,  பேருந்து நிறுத்தங்கள் மட்டும் பளபளப்பான உலோகத்தூண்கள், கண்ணாடிகள் மற்றும் விளக்குகளால் அமைக்கப்பட்டு, அவற்றில் ஆட்சியாளர்களின் சாதனை விளம்பரங்களும் ஒளிக்க விடப் படுகின்றன. அவையும், சில மாதங்களிலேயே சீரழிந்து நிற்கின்றன.
நடைபாதைகளின் அளவு மற்றும் தேவைகளின் பொருட்டான எந்தத் தெளிவும் இல்லாமல், அவை ஆக்கிமிக்கப்பட்டும், குறுக்கப்பட்டும் விட்ட நிலையில், அவற்றில் விலை உயர்ந்த கிரானைட் கற்களைப் பதிக்கின்ற ஒப்பந்தப் பணிகள் மட்டும் வேகவேகமாக அரங்கேறுகின்றன. பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கழிப்பறைகள், நாடெங்கிலும் நீரும், நிர்வாகமுன்றி மக்கள் மீதே பழி போட்டுக் கைவிடப்பட்டுள்ளன. இவை அவ்வளவும் மக்களின் வரிப்பணமாகும்.
ஊழல், பொய்யான தரகு ஒப்பந்தம், அலட்சியம், அக்கறையின்மை போன்ற கூறுகளின் கலவைகளையே மக்களுக்கான நலத்திட்டங்களாக நமது அரசுகள் முன் வைக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஆட்சியாளர்களை நோக்கி குடிமக்கள் எழுப்ப வேண்டிய கேள்வியொன்று நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. அது, "நீங்கள் நிறைவேற்றுகின்ற திட்டங்களெல்லாம் எங்கள் நலத்திற்காகவா? உங்கள் வளத்திற்காகவா?' 
கட்டுரையாளர்:
கவிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.