கேட்டினும் உண்டு ஓர் உறுதி!
வேடனால் துரத்தப்பட்டு தன்னை வந்து சரணடைந்த ஒரு புறாவிற்காகத் தன்னையே கொடுத்த மன்னன் வாழ்ந்த மண்ணிது!


வேடனால் துரத்தப்பட்டு தன்னை வந்து சரணடைந்த ஒரு புறாவிற்காகத் தன்னையே கொடுத்த மன்னன் வாழ்ந்த மண்ணிது! ஒரு மயிலின் குளிரைப் போக்குவதற்காகப் போர்வையைக் கொடுத்த வள்ளல் வசித்த பூமி, இந்த பூமி! இந்த மனிதநேயம் உலகம் முழுவதும் ஆழ வேரூன்றி நிற்பதற்குச் சான்றாகச் சமீபத்தில் தாய்லாந்தில் நிகழ்ந்த ஒரு பேரிடரைச் சுட்டலாம்.
தாய்லாந்தில் சியாங் ராய்' எனுமிடத்தில், தாம் லூவாங்' என்றொரு குகை உண்டு. இது பத்து கிலோ மீட்டர் தொலைவு நீண்டது. அந்தக் குகைக்குள் வைல்ட் போர்ஸ்' என்னும் கால்பந்தாட்டக் குழு ஜுன் 23 ஆம் தேதியன்று நுழைகிறது.
தாய்லாந்தில் பல போட்டிகளுக்குச் சென்று விருதுகள் பலவற்றை வென்ற கால்பந்தாட்டக் குழு வைல்ட் போர்ஸ்'. இக்குழுவிலுள்ள கால்பந்தாட்டக்காரர்கள் அனைவரும் 11 வயதிலிருந்து 16 வயதிற்குட்பட்டவர்கள். குழுவின் பயிற்சியாளர் எக்கப் போல் சன் தாங்வாங்' மட்டும் 25 வயதுக்காரர். ஒவ்வொரு நாளும் பயிற்சி முடிந்த பிறகு, அந்த குகைக்குள் சூழ்ந்து நிற்கும் தண்ணீரில் நீச்சல் அடித்துவிட்டுக் கலைந்து செல்வார்களாம்.
ஜுன் 23 அன்று கால்பந்தாட்டக் குழுவிலுள்ள பீராபட்' எனும் விளையாட்டாளனுக்குப் பிறந்தநாள் விழாவாகும். அதனால் பீராபட்' கால்பந்தாட்டப் பயிற்சி முடிந்தவுடன், நீச்சல் பயிற்சிக்குச் செல்லாமல், வீட்டுக்குப் போக விரும்பினான். ஆனால், கால்பந்தாட்டக் குழுவினர், குகைக்குள்ளேயே பீராபட்டினுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாட விரும்பினர். பயிற்சியாளர் அனைவரையும் குகைக்குள் அழைத்துச் சென்றார்.
அன்றைக்குப் பார்த்து, மூன்று வாரங்களுக்குப் பின்னர் தொடங்க வேண்டிய மழை அப்பொழுதே தொடங்கிவிட்டது. ஒரு மணி நேரத்திற்குள் மூன்று மீட்டர் உயரத்திற்கு மழை பெய்து, கால்பந்தாட்டக் குழுவினரை வெளியே திரும்ப முடியாமல் செய்துவிட்டது. கால்பந்தாட்டக் குழுவினரும் உற்சாகத்தில் குகையின் மூன்றாவது அடுக்கிற்குச் சென்றுவிட்டனர். கால்பந்தாட்டக் குழுவினர் எடுத்துச் சென்றது, நீச்சலின்போது தலையைச் சுற்றி அணிந்து கொள்ளும் பேட்டரி விளக்கு மட்டுமே!
கால்பந்தாட்டக் குழுவினர் எவ்வளவோ முயன்றும், இடையில் எதிர்ப்பட்ட 4 கி.மீட்டர் செங்குத்தான பாறை, மலையாக நின்று அவர்களை வழிமறித்துவிட்டது. இப்படியாகப் பத்து நாட்கள் உணவு எதுவுமின்றி, பாறையில் வழிந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டே 13 பேரும் பாதுகாப்பாக இருந்து வந்தனர். கால்பந்தாட்டக் குழுவினர் சிவப்புக் கம்பளியால் ஆன டி.சர்ட்டை அணிந்திருந்ததால், அதனை அவர்கள் முழங்கால் வரை இழுத்துவிட்டுக் கொண்டு கடுங்குளிரில் இருந்து தப்பினர்.
தாய்லாந்து ஒரு சிறிய இடம். அங்கு நடந்த பேரிடரைக் கண்டு உலகமே அலறியது. மக்கள் கவலை தோய்ந்த முகத்தோடு இரவு பகலாக ஊடகங்களுக்கு முன்னிருந்து மீட்புப் பணியை பார்வையிட்டுக் கொண்டேயிருந்தனர். பேரிடர் மீட்புப் பணியில் வல்லவர்கள் யாரும் அழைத்து அங்கு வரவில்லை. ஏதோ தங்கள் குடும்பத்து, தங்கள் நாட்டுப் பிள்ளைகளுக்கு நேர்ந்த விபத்துப் போல் எண்ணி தாய்லாந்து விரைந்தனர்.
இச்செய்தி, ஊடகங்களின் மூலம் உலகம் எங்கும் எதிரொலித்தது. தாய்லாந்தின் பேரிடர் மீட்புக்குழுவினர் விறுவிறுப்போடு செயல்பட்டாலும், அவர்கட்குத் தொழில்நுட்பம் விளங்காமல் போனதால், துரிதமாக அப்பணியில் ஈடுபட முடியவில்லை. பன்னாட்டுப் பேரிடர் மீட்புக்குழுவினர் தாய்லாந்தை நோக்கி விரைந்தனர். பேரிடர் மீட்பு விற்பன்னர்கள் பல நாடுகளில் இருந்தாலும், அவர்களின் தலைமைச் செயலகம் அமெரிக்காவில்தான் உள்ளது. அங்குள்ள அன்மார் மிர்ஷா எனும் ஒருங்கிணைப்பாளரின் கீழ்தான் இயங்குகிறது.
பன்னாட்டுப் பேரிடர் மீட்புக் குழுவில் இங்கிலாந்திலிருந்து ராபர்ட் ஹாப்பர், ஜான் வோலந்தன், ரிக் ஸ்டேன்டன் எனும் மூவர் இடம் பெற்றிருந்தனர். ஆஸ்திரேலியாவிலிருந்து ரிச்சர்டு ஹாரிஸ் எனும் மருத்துவர் இடம் பெற்றிருந்தார். இவர் மருத்துவர் மட்டுமன்று; நீரில் மூழ்கியவரை மீட்கும் பணியிலும் வல்லவர் ஆவார். மற்றும் போக் காக் வீ, டக்ளஸ் யூ எனும் இரண்டு சிங்கப்பூர் குடிமக்களும் மீட்புப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்தியாவிலிருந்து கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்' நிறுவனமும் மீட்புப் பணியில் ஈடுபட்டது.
குகையைப் பார்வையிட்ட அன்மார் மிர்ஷாவின் நுண்ணறிவு துரித கதியில் செயல்பட்டதில் இரண்டு வழிகள் துல்லியமாகத் தென்பட்டன. (1) குகைக்குள்ளே இருக்கின்ற தண்ணீரை வடிகட்டல், (2) பாறையாக இல்லாத பகுதியாகப் பார்த்துக் குகையைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லுதல் ஆகிய வழிகளை முன்மொழிந்தார். தாய்லாந்துப் பேரிடர் மீட்புக் குழுவினர் குகையைக் குடைவதே நல்லது என்று எண்ணினர். வேறு சிலர் இரண்டு பணிகளும் ஒரே நேரத்தில் நடப்பது நல்லது எனும் முடிவிற்கு வந்தனர்.
பன்னாட்டுப் பேரிடர் மீட்புக்குழுவினருக்குப் பொதுவாக, சீல்' (SEAL) எனப் பெயர். அதன் பொருள், கடல் வழி - வான்வழி - தரைவழி ஆகிய மூன்றிலும், பேரிடருக்கு உள்ளானவர்களைப் காப்பவர்கள்' என்பது. இந்தியாவிலிருந்து சென்றிருந்த கிர்லோஸ்கர்' நிறுவனத்தினர் குகைக்குள்ளிருக்கும் தண்ணீரை இறைப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டு, அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் நட்டாபான்ங் லெக்கம்னர்' எனும் 49 வயதுக்காரர் ஆற்றிய பணி வித்தியாசமானது. குன்றுகளுக்கிடையில் கயிறுகளைக் கட்டிக் கொண்டு, அதன் வழியாகத் தொங்கிக் கொண்டு செல்லும் வல்லுநர்களாலும், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும் எனத் தாய்லாந்து பேரிடர் மீட்புக் குழுவினர் நினைத்தனர். நட்டாபான்ங் லெக்கம்னர்' தாம் இந்தப் பணியைச் செய்வதாகச் சொல்லி அப்பணியில் ஈடுபட்டார்.
மீட்புப் பணியில் ஈடுபட்ட தாய்லாந்தைச் சேர்ந்த 100 பேர் ஆற்றிய பணியும் வித்தியாசமானது. தாம் லூவாங்' குகைக்கு மேலே தொடர்ச்சியாகக் குறுங்காடு போல் புதர்கள் வளர்ந்து நின்றன. சீல்' மீட்புப் பணியாளர்களுக்கு அக்குறுங்காடு தடையாய் இருக்குமோ என எண்ணிய அந்த நூறு பேரும் குறுங்காட்டினை அழிக்கும் பணியில் ஈடுபட்டது, அனைவராலும் பாராட்டப்பெற்றது.
இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஜான் வோலந்தரும், ரிக் ஸ்டேன்டனும் கடல்வழியில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியில் வல்லவர்கள். அதனால் அவர்கள் தலையில் பேட்டரி விளக்குடன், கரங்களில் ஆக்சிஜன் பைகளை ஏந்தி, அபாயகரமான கட்டங்களையும் தாண்டி நீச்சலடித்துச் சென்றனர். கடற்கரையை நெருங்கியவுடன், ஜான் வோலந்தர் ஆங்கிலத்தில் குரல் கொடுத்தார். அந்தப் பன்னிரெண்டு பேரில், ஆங்கிலம் தெரிந்த அதுல் சாம் எனும் கால்பந்தாட்டக்காரர், தாங்கள் தயாராக இருப்பதாக எதிர்க்குரல் கொடுத்தார்.
இங்கிலாந்து வீரர்களைத் தொடர்ந்து, அமெரிக்க டாக்டர் ரிச்சர்டு ஹாரிஸ் மருந்துப் பொருட்களுடனும், மிதவைச் சாதனங்களுடனும் வந்தார். இங்கிலாந்து மீட்பாளர் ஜான் வோலந்தன், அங்கிருக்கும் பதிமூன்று பேரில் யார் முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர்' எனக் கேட்டார். அதற்கு அதுல் சாம், குகையிலிருந்து வெகுதூரத்தில் வீடு இருக்கப் பெற்றவர்கள் முதலில் காப்பாற்றப்பட வேண்டும்' எனக் கூறி, முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர்களை முன்னிறுத்தினார்.
இங்கிலாந்து வீரர்கள் இருவரும், கால்பந்தாட்டக்காரர்களைத் தங்களுக்கு நடுவில் மிதவைச் சாதனங்களில் இருத்தி, கூடவே கொண்டு சென்றிருந்த ஆக்ஸிஜன் குழாய்களையும் பொருத்தி, அன்று இரவு எட்டு பேரை குகைக்குவெளியில் கொண்டு வந்து சேர்த்தனர். மறுநாள் மற்றவர்களும் கரை சேர்க்கப்பட்டனர்.
முதலில், பீராபட்'டினுடைய பிறந்தநாள் விழாவைக் குறுகிய நேரத்தில் கொண்டாடிவிட்டுப் புறப்படலாம் எனக் கால்பந்தாட்டக்காரர்கள் முடிவு செய்தனர். ஆனால், பயிற்சியாளர் கொஞ்ச நேரம் நீச்சல் பயிற்சியும் செய்துவிட்டுப் போகலாம் என அறிவுறுத்தினார். ஆனால், இளைஞர்களிடம் இருந்த ஆர்வக்கோளாறு, உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற சூழ்நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. குகைக்குள்ளேயே பாரஸ்ட் பார்க்' எனும் உல்லாசபுரி' ஒன்று இருந்தது. அந்த உல்லாசபுரிக்குச் சென்றுவிட்டால் அங்கிருந்து கொஞ்ச தூரம்தான் மியான்மர்' (அன்றைய பர்மா).
இளங்கன்று பயம் அறியாது' எனும் பழமொழிக்கு ஏற்ப, அவர்கள் அந்த பாரஸ்ட் பார்க்'கிற்குச் செல்ல நினைத்த காரணத்தால், பேரிடருக்கு உள்ளாக நேர்ந்தது. பேரிடரிலிருந்து மீட்கப்பட்டு வெளியே வந்த கால்பந்தாட்டக் குழுவினர் வரிசையாகத் தங்களுடைய பெற்றோரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டது, அனைவருடைய நெஞ்சையும் தொட்டது.
உலகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொலைகள், கொள்ளைகள், வன்முறைகள் நடப்பதால், மனிதம் உயிரோடு இருக்கிறதா? செத்துவிட்டதா எனப் பலரும் எண்ணுகிறோம். கடல் எப்போதோ ஒருமுறை சுனாமியைக் கொண்டு வந்து சேர்ப்பதால், மற்ற நாள்களில் நம்மால் கடற்கரைக்குப் போகாமல் இருக்க முடிவதில்லை.
அதுபோல மானுடத்தின் மேல் சில சமயங்களில் விழுகின்ற காயங்களால், மானுடத்தை நம்மால் மதிக்காமல் இருக்க முடிவதில்லை. அண்மையில் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரிடர், கேட்டினும் உண்டு ஓர் உறுதி' என்னும் வள்ளுவப் பேராசான் வாக்கை மெய்ப்பித்திருக்கிறது!
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...