எல்லைகள் கடந்த தண்ணீர் அரசியல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் பாடப்பட்ட காவிரி ஆறு தமிழகத்தில் இன்று நீரின்றி வறண்டு போய்விட்டது.


பூவர் சோலை மயிலால
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி
என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால் பாடப்பட்ட காவிரி ஆறு தமிழகத்தில் இன்று நீரின்றி வறண்டு போய்விட்டது. அதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் இல்லாமல் போய்விட்டது. மரம், செடி கொடிகள் பட்டுப்போய்விட்டன. கால்நடைகள் மெலிந்து போய்விட்டன. பறவைகள் நீர் தேடி நெடுந்தொலைவிற்குச் சென்றுவிட்டன. விவசாயிகளில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். பலர் கூலித் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். நிலவுடைமையாளர்களாக இருந்த மிராசுதாரர்கள், விளை நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்றுவிட்டு, நகரங்களுக்குச் சென்றுவிட்டார்கள். காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார்கள். குளிக்கிறார்கள். பாரம்பரிய கலாசார, இலக்கிய சுகஜீவனம் இல்லாமல் போய்விட்டது.
அதற்கு அடிப்படையான காரணம், தமிழ்நாடு, கர்நாடகம் இடையே காவிரி நீர்ப் பிரச்னை தீர்க்கப்படாமல் போனதுதான்.
காவிரி ஆறு கர்நாடகத்தின் குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது. மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணம் வழியாகத் தவழ்ந்து, தமிழ்நாட்டில் ஓடி வந்து, காவிரிப்பூம்பட்டினத்தில் கடலோடு கலக்கிறது. காவிரி நதியின் மொத்த 736 கி.மீ. பயணத்தில் தமிழகத்தில் மட்டும் 416 கி.மீ. பயணித்து, தமிழ்நாட்டைப் பொன் விளையும் பூமியாக்கி வந்தது.
காவேரி ஆற்றின் நீர்ப்பங்கீடு பற்றி 1924-ஆம் ஆண்டில் மைசூர் சமஸ்தானத்தோடு, மதராஸ் ராஜதானி ஒப்பந்தம் செய்துகொண்டது. அது ஐம்பதாண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்று கூறியது.
ஒப்பந்தக் காலம் முடிவடைந்து பழைய ஒப்பந்தம் புதுப்பிப்பது பற்றி ஆலோசிக்கும்போது, காவிரி ஒப்பந்தம் காலாவதியானதாக கர்நாடகம் கைவிரித்தது. இதற்கு இடையே மொழிவாரி மாநிலம் பிரிந்தபோது ஏற்பட்ட நதிநீர் ஒப்பந்தம் மீறப்பட்டது. பழைய ஒப்பந்தமும் மீறப்பட்டது. அப்போது முதல் பிரச்னை தொடங்கியது. அதோடு இல்லாமல், காவிரி ஆற்றுக்கு நீர் கொண்டு சேர்க்கும் துணை நதிகளானன ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, சுவர்ணவதி ஆறுகளில் கர்நாடக மாநிலம் புதிய அணைகள் கட்டி நீரைத் தேக்கி வைத்துக் கொண்டது. அதனால் காவிரி தமிழ்நாட்டில் வறண்டு போனது.
தண்ணீர் என்பது சகல ஜீவராசிகளின் அடிப்படைத் தேவை. நீரின்றி எந்த ஜீவனும் உயிர் வாழ முடியாது. மழையாகக் கிடைக்கும் தண்ணீர் வானமுது. ஆறுகளில் ஓடும் தண்ணீர் உருகி ஓடும் தங்கம். தண்ணீரின் தேவை, மகிமை பற்றி அறிந்த திருவள்ளுவர், 'நீரின்றி அமையாது உலகு' என்றார்.
நீரோடும் ஆறு என்பது அது தோன்றும் நாட்டிற்கோ மாநிலத்திற்கோ மட்டும் சொந்தமானது இல்லை. அது ஓடி கடலில் கலக்கும் பகுதிக்கெல்லாம் உரியது. நதி தோன்றும் இடத்தில் இருக்கிறவர்கள் ஆறு எங்களுக்கே சொந்தம், மற்றவர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று அணையின் முன்னே நின்று கொண்டு சவால் விடுகிறார்கள். அது சட்டப்படியும், தர்ம நியாயத்தின்படியும் முறையற்றது.
ஆற்றின் மேல் பகுதியில் இருக்கிறவர்கள் அரசியல் லாபத்திற்காக, தேர்தல் வெற்றிக்காக, மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டிவிடுகிறார்கள். அது சில நேரங்களில் வெற்றியைத் தந்துவிடுகிறது. எனவே, எல்லா அரசியல் கட்சிகளும் அதனையே பின்பற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் உள்ள காவிரி நதி நீர்ப் பிரச்னையைப் பல முறை நடைபெற்ற முதலமைச்சர்கள் சந்திப்பாலும், நீதிமன்றம் அளித்த எந்தவொரு தீர்ப்பாலும் தீர்க்க முடியவில்லை. காரணம், நதி நீர்ப் பங்கீடு இல்லை. கர்நாடகத்திற்கு தண்ணீர் கொடுக்க மனமில்லை என்பதுதான்.
மழையை மட்டுமே நம்பியிருக்கும் ஆறு காவிரி. மேற்குத் தொடர்ச்சி மலையிலும், குடகிலும் பொழியும் மழை நீர்தான் காவிரி நீருக்கு ஆதாரம். கர்நாடகம் என்றொரு புதிய மாநிலம் தோற்றுவிக்கப்பட்டதும், அது தன் வேளாண்மை பரப்பைக் கூட்டிவிட்டது. மைசூரு, பெங்குளூரு நகரங்கள் பெருநகரங்களாக வளர்ந்துவிட்டன. தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருகிவிட்டன.
ஏரி, குளங்கள், நீரோடைகள் தூர்க்கப்பட்டுப் பெரிய வணிக வளாகங்கள், கிரிக்கெட், கோல்ஃப் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றைப் பராமரிக்க லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. மழை நீர் சேமிக்கப்படவில்லை. சாலைகள் சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட்டன. மழை நீர் பூமியில் இறங்குவது சாத்தியமற்றுப் போயிற்று.
தமிழகத்தில் காவிரி ஆறு வறண்டு போய்விட்டது. அதனோடு பருவ காலத்தில் பொழிய வேண்டிய மழையும் பொய்த்துப் போய்விட்டது. விவசாயிகளும், மிராசுதாரர்களும் அல்லல்பட, மணல் மாபியாக்களுக்கும் தண்ணீர் மாபியாக்களுக்கும் கொண்டாட்டமாகிவிட்டது. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.
உலகத்தில் உள்ள பல நாடுகளிலும் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், மக்கள் பயன்பாட்டுக்கு கூடுதலாக ஐம்பத்தைந்து சதவீதம் தண்ணீர் தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யப் புதிய வழியொன்றும் தெரியவில்லை.
பூமி என்பது நீரின் நடுவில்தான் இருக்கிறது. ஆனால் அந்த நீர் முழுவதும் குடிக்க, விவசாயம் செய்ய உகந்ததில்லை. உலகத்தில் சகல ஜீவன்களும் ஜீவித்திருக்க நன்னீர் வேண்டும். எல்லா நாடுகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. உலகத்தில் இருக்கும் நன்னீரில் பாதிக்கும் மேல் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கிறது. எனவே அவை தண்ணீர் தேசங்கள் என்று பெயரெடுத்திருக்கின்றன.
பல நாடுகளில் தண்ணீர் பிரச்னை என்பது உள்நாட்டுப் பிரச்னையாகவும் வெளிநாட்டுப் பிரச்னையாகவும் இருக்கிறது. இந்தியாவில் இரண்டு பிரச்னைகளும் இருக்கின்றன.
ஆறு என்பது விவசாயத்திற்கும், மீன் பிடிப்பதற்கும், படகுப் பயணத்திற்குமானது என்பது பழங்கதையாகிவிட்டது. தண்ணீர் ஓர் சக்தி. வலிமை கொண்டது. ஒரு சக்தியைப் பயன்படுத்தி இன்னொரு சக்தியை உண்டாக்கிவிடலாம் என்பது இயற்பியல் தத்துவம்.
மின்சார உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் புனல் சக்தியால் இயந்திரங்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள். ஆறுகளில் பெரிய அணைகள் கட்டி நீரைத் தேக்கி மின்சாரம் உற்பத்தி செய்தார்கள். இதனை ஹைட்ரோ பவர் என்கிறோம். பல நாடுகளில் அணைகள் கட்டி தண்ணீரைத் தேக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆற்றின் கீழ்ப்பகுதிகள் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை எழுந்தது. பிரச்னைகள் தொடங்கின. அரசியல் தொடங்கியது. இதனை ஹைட்ரோ பாலிடிக்ஸ் - தண்ணீர் அரசியல் - என்று அழைக்கிறார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்டது.
பதினோரு நாடுகள் வழியாக 6,800 கிலோமீட்டர் நீளத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக நைல் நதி ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த நதி எகிப்துடன்தான் எப்போதுமே அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நைல் நீருக்கு இன்று எத்தியோப்பியா சொந்தம் கொண்டாடுகிறது. நைல் நதிக்கு மிக அதிக அளவில் நீரைக் கொண்டு சேர்க்கும் கிளை நதியான நீல நைல் குறுக்கே மின்சார உற்பத்திக்காக மிகப் பெரிய அணை கட்டுகிறது எத்தியோப்பியா. போர் மூளும் என்றே அஞ்சுகிற அளவுக்கு மோதல் முற்றி வருகிறது.
சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் நாடுகள். பல ஆறுகள் அண்டை நாடுகளில் தோன்றி இந்தியாவிற்குள் ஓடுகின்றன.
பிரம்மபுத்ரா ஆறு திபெத்தில் உற்பத்தியாகி, சீனப் பெருநாட்டின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, வங்க தேசம் வழியாக ஓடி கடலில் கலக்கிறது.
பிரம்மபுத்ரா ஆற்றிலும், அதற்குத் நீரைக் கொண்டு சேர்க்கும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கிளை ஆறுகளிலும் அணைகள் கட்டி, நீரைத் தேக்கி மின்சாரம் உற்பத்தியில் ஈடுபட்டது சீனா. அதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 'எங்கள் நாட்டிற்குள் வரும் நீர் குறைந்து போகும்; விவசாயம் பாதிக்கப்படும்' என்று ஆட்சேபித்தது. இந்தப் பிரச்னை அப்படியே இருக்கிறது.
சிக்கிமில் தீஸ்தா என்றொரு ஆறு உற்பத்தியாகி, மேற்கு வங்கத்தில் நுழைந்து, வங்கதேசத்தின் வழியாக பிரம்மபுத்ரா ஆற்றில் கலந்து விடுகிறது. தீஸ்தா ஆற்றில் மேற்கு வங்க அரசு அணைகள் கட்டிவிட்டது. அதனால் வங்கதேசத்தில் தீஸ்தா ஆற்றில் தண்ணீர் குறைந்துபோய்விட்டது. விவசாயம், மீன்பிடிப்பு எல்லாம் பாதிக்கப்படுகிறது என்று வங்கதேசம் இந்தியாவிடம் புகார் செய்துகொண்டேயிருந்தது.
2011-ஆம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் வங்கதேசம் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் உடன் அழைத்துச் சென்று, வங்கதேசத்திற்கு கூடுதல் நீர் கொடுப்பது பற்றிய பேச்சில் கலந்து கொள்ளக் கூறினார். கடைசி நிமிடத்தில் மம்தா பானர்ஜி மனதை மாற்றிக் கொண்டார். வரைவு ஒப்பந்தத்தை திடீரென எதிர்த்தார். பிரதமருடன் அவர் வங்க தேசம் செல்ல இருந்த அரசு முறைப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா - வங்கதேசம் இடையே ஐம்பத்துமூன்று நதிகள் குறித்த ஒப்பந்தம் உறுதியானால், அது சீனாவில் உற்பத்தியாகி இந்தியாவுக்குள் வரும் நதிகள் தொடர்பாக சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்மாதிரியாகும். ஆனால் ஒப்பந்தங்கள் ஏற்படாதபடி, வெவ்வேறு நிலைகளில் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.
இந்தியா பல மாநிலங்களிலும், சில வெளிநாடுகளுடனும் தொடர்ந்து நதி நீர்ப் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஆனால் அதிலிருந்து சரியான பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் கடந்த ஐம்பதாண்டு காலமாக காவிரி நதி நீர் பிரச்னை இழுத்தடிக்கப்பட்டு வருவது சொல்கிறது.
விவேகமற்ற அரசியல் தலைவர்கள், தேர்தல் வெற்றி என்பதையே கவனத்தில் கொண்டு செயல்படும் கட்சிகள், பொறுப்பற்ற அதிகாரிகள், தீர்ப்புகளுக்கு விளக்கம் கேட்க வேண்டிய நிலை ஆகியவற்றால், நேசமிகு எளிய மக்கள் எதிரிகளாகவும் வன்முறையாளர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...