இந்தியர்கள் அறியாத தமிழ் மொழி
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி இருந்தபோது, நாடு முழுவதிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேனிலைப் பள்ளிகளில் சம்ஸ்கிருத மொழி வாரம் கொண்டாட வேண்டுமென


மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி இருந்தபோது, நாடு முழுவதிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேனிலைப் பள்ளிகளில் சம்ஸ்கிருத மொழி வாரம் கொண்டாட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சட்டத்தில் 22 மொழிகள் ஆட்சிமொழிகள். அவற்றில் தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்படும் இந்தி மத்திய அரசின் நிர்வாக மொழி. சம்ஸ்கிருதம் மற்ற இந்திய மொழிகள் போல ஒன்று. அப்படியிருக்கையில் சம்ஸ்கிருத மொழிக்குத் தனியாக விழா எதற்கு என்று கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கேட்டார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜன், "பல மொழிகள் கற்பிக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் தனியாக விழா எதற்கு? இந்திய அரசு சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய ஆறு மொழிகளை செம்மொழி என்று அங்கீகாரம் செய்திருக்கிறது. எனவே செம்மொழி வாரம் என்று கொண்டாடலாம். அது மாணவர்கள் இந்திய மொழிகள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்குமென்று அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு பதில் வந்தது. அதில், "எல்லா இந்திய மொழிகளும் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தவை. எனவே சம்ஸ்கிருத மொழி வாரம் கொண்டாடினால்,அது எல்லா இந்திய மொழிகளுக்கும் விழா கொண்டாடுவது போலாகும்' என்று எழுதப்பட்டிருந்தது.
இந்திய மொழிகள் பற்றிய உண்மையான சரித்திரம் அமைச்சர் அறியாதது. அவர்க்கு பதில் எழுதி கொடுத்த அதிகாரிக்குத் தெரியாதது. இந்தியா ஒரு பெரிய நாடு. நெடுங்காலமாகப் பன்மொழிகள் பேசப்பட்டு வருவது. 1962-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1652 மொழிகளும், அவற்றின் கிளைமொழிகளும் பேசப்படுகின்றன. உலகின் ஐவகையான மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் இந்தியாவில் பேசப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தவை இல்லை. தென்னிந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும், வடகிழக்குப் பகுதிகளிலும் பேசப்படும் பல மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தியாவிலும், தென் கிழக்காசிய நாடுகளிலும் 20 கோடி பேர் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த 26 மொழிகளைப் பேசுகிறார்கள். உலக நாடுகளில் மொழியியல் அறிஞர்கள், இலக்கியவாதிகளில் பலரும் தமிழ்மொழி பற்றியும் அது செம்மொழி என்றும் அறிந்திருக்கிறார்கள்.
மொழியென்பதே மனிதர்கள் அறிவால் கண்டுபிடிக்கப்பட்டது. மொழியே அறிவு கிடையாது. மனித அறிவு, அனுபவம், சிந்தனை, மேதமை மொழி வழியாகச் சொல்லப்படுகிறது. எத்தனைதான் சொன்னாலும் எழுதினாலும் முழு அறிவையும் பூரணமாகச் சொல்லிவிட முடிவதில்லை. கிரேக்க ஞானி சாக்ரடீஸ், "நான் தெரிந்து வைத்திருக்கிறேன், எனக்கொன்றும் தெரியாது என்பதை' என்று மொழிவழியாகவே சொன்னார்.
அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் எல்லாம் தெரிந்தவர்கள். அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. எதையும் சொல்லலாம். மொழியை அதிகாரத்தின் ஆயுதமாகவே பயன்படுத்துகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தியாவை ஒற்றை மொழி நாடாக்கியது.
சம்ஸ்கிருதம் பேசப்படும் மொழியாக இல்லை. ஆனால் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்த மொழிகளில் அதிகமான மக்கள் பேசும் மொழியாக, இந்துக்களின் அடையாளமானது. நிறைய சம்ஸ்கிருத சொற்கள் கொண்டதாக இருந்ததால் இந்தியை ஆட்சிமொழியாக்கிக் கொண்டுவிட்டார்கள். மொழியை நாட்டுப்பற்றின் குறியீடாகவும் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமையை மொழி கொண்டு வரும் என்று கனவு காண்கிறார்கள்.
வாணிபம் புரிவதற்காக இந்தியா வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நாட்டின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆட்சி புரிய ஆரம்பித்தது. அதுவே இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கியது. நாட்டை நிர்வகிக்கப் பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்து ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுத்தார்கள்.
நிர்வாகம், நீதி, ராணுவத்தின் உயர் பதவிகளில் ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். மூன்றாம் கட்ட, நான்காம் கட்டப் பணிகளில் ஆங்கிலம் படித்த இந்தியர்கள் சேர்ந்தார்கள்.
இந்தியாவிற்கு வந்த சில ஆங்கிலேயர்கள் இந்திய கலைகள், மொழி, பண்பாடு, சமயம் இவற்றில் அக்கறை கொண்டார்கள். அவர்களில் குறிப்பாகச் சொல்ல வேண்டியவர் வில்லியம் ஜோன்ஸ். பல மொழிகள் கற்றவர். கலைகளில் ஈடுபாடு கொண்டவர். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில், கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவந்தது. அதற்கு நீதிபதியாக 1783-ஆண்டில் வந்த அவர் சம்ஸ்கிருதம் படித்தார். லத்தீன், கிரேக்க மொழிகளைவிட சம்ஸ்கிருதம் வளமான மொழி, அதன் இலக்கணம் நன்கு கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்று பேசியும் எழுதியும் வந்தார். அது பல ஆங்கிலேய அதிகாரிகளைக் கவர்ந்தது. அவர்கள் சம்ஸ்கிருதம் படித்தார்கள். பகவத்கீதை, மனுதர்மம் உட்பட பல நூல்களை மொழிபெயர்த்தார்கள்.
சம்ஸ்கிருதம் இந்திய மொழியாக இருந்தாலும் அது இந்தோ ஐரோப்பிய குடும்பத்து மொழி. அதில் இருக்கும் பல சொற்கள்ஐரோப்பிய மொழிகளில் இடம்பெற்று இருக்கின்றன. அது ஐரோப்பியர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வைத்தது. பலரும் சம்ஸ்கிருதம் படித்தார்கள். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் சம்ஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளாக வந்தவர்களில் சிலரும், பாதிரிமார்களும் இந்திய மொழிகள் தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்கள்.
பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர், "தமிழ்மொழி சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது இல்லை; அது திராவிட மொழிகளில் ஒன்று' என்று எழுதினார். திருக்குறளில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் திராவிட மொழி என்ற கருத்தாக்கம் ஏற்பட்டது.
1856-ஆம் ஆண்டில் ராபர்ட் கால்டுவெல், "திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்' என்ற நூலை வெளியிட்டு, பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் கருத்தை வலுவாக்கினார்.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழியாக இருந்தது. சம்ஸ்கிருதத்தின் பழைய நூல் ரிக் வேதம். ரிக் வேதத்தில் எண்பது வார்த்தைகள் மூல திராவிட மொழியில் இருந்து கடன் வாங்கப்பட்டிருக்கின்றன என்று ரஷிய மொழியியல் அறிஞர் நிகிடா குரோவ் கண்டறிந்துள்ளார்.
உலகத்தில் உள்ள மொழிகளில் எந்த மொழியும் சொற்களைக் கடன் கொடுக்கும் மொழியாகவே இருப்பதில்லை. கல்வி, கலை, கலாசாரம், இறை வழிபாடு, வாணிபம், நீதி, நிர்வாகம் சார்ந்த சொற்களை கடன் வாங்கிக் கொள்ளும் மொழிகளாகவும் இருக்கின்றன. அரிசி, இஞ்சி, தோகை என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு, கிரேக்க மொழிகளில் இடம்பெற்றுள்ளன என்று திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் கால்டுவெல் குறிப்பிட்டிருக்கிறார்.
சரித்திர ஆசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள், அரசியல் தலைவர்களில் பலர் இந்தியா என்பது சம்ஸ்கிருத மொழி நாடு என்று கணித்துவிட்டார்கள். சம்ஸ்கிருத மொழியை பழைய மொழி என்று நிலைநாட்டிய ஐரோப்பியர்கள் போல, இந்தியாவில் தொன்மையான திராவிட மொழிகள் இருக்கின்றன, அதில் மூத்த மொழி தமிழ் என்றும் தங்களின் ஆய்வுகள் வழியாகவே அறிய வைத்தார்கள்.
இந்திய அரசின் மொழிக் கொள்கை சம்ஸ்கிருதம், அதன் வழியாக வந்த இந்தி மொழிக்கானதாகவே இருக்கிறது. தமிழ் என்றொரு மொழி இந்தியாவில் பேசப்படுகிறது; அது அசலான இலக்கியங்கள் கொண்டது; புலவர்கள் கவிஞர்கள் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார்கள்; இலக்கியம் உரைநடைக்கு மாறியபோது, மரபின் தொடர்ச்சியாகத் தமிழில் புதுக்கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
தமிழ் ஓர் இந்திய மொழி. அதில் பண்டைய காலத்தில் இருந்தே இலக்கியம் படைக்கப்பட்டு வருகிறது. அது புத்திளமை கொண்டு இருக்கிறது. அதன் படைப்பிலக்கியம் என்பது துதிபாடல்கள் இல்லை. வரம் கேட்பது கிடையாது. வாழ்க்கையை, வாழ்க்கையாகவே கண்டு அகம் புறமென்று வகைப்படுத்திச் சொல்வது. அலங்காரம் ஒழித்தது. ஒவ்வொரு பாடலும் ஒரு சொல் மிகாமலும், ஒரு சொல் குறையாமலும் பாடப்பட்டிருப்பது.
சமூகத்தில் எல்லா நிலைகளில் இருந்தவர்களின் பாடல்களும் தமிழின் சங்கப் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்று இருக்கின்றன. நாடாண்ட மன்னர், ஏர் பிடித்து உழுத உழவர்கள், அரசிகள், வணிகர்கள், பெண்கள் என்று பலரும் தமிழில் பாடியிருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியம் என்பது பல நூற்றாண்டுகள் வாய்மொழி இலக்கியமாக இருந்து, பின்னால் அதுவே எழுதப்பட்டதல்ல. மொழிக்குள் மொழியைக் கொண்டு புலவர்கள் நாடியது. அவர்கள் புலமையும், கவித்துவமும் ஒன்றாகக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே தமிழ்மொழி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் மொழியாகவும் இருந்து வருகிறது.
மொழிகளில் அந்நிய மொழி, சுதேசி மொழி என்பதெல்லாம் கிடையாது. மொழி என்பது கற்கக் கூடியது. எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டு மேதைமையை அதில் நிலைநாட்டலாம். ஆதிசங்கரர் தாய்மொழி தமிழ். ஆனால் அவர் சம்ஸ்கிருதத்தில்தான் எழுதினார்.
சம்ஸ்கிருதம் பிறந்த இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் தோன்றியவைதான் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ரஷிய மொழிகள். அவை இந்தி, குஜராத்தி, வங்காளி, அஸ்ஸாமி உட்பட பல இந்திய மொழிகளுக்குச் சகோதரிகள். அது அறியப்படவில்லை என்பதால் இல்லை என்றாகிவிடாது.
இந்திய தேசிய தலைவர்களில் பலர் மொழி, கலாசாரம், கலை, இலக்கியம், இசை, நடனம், என்பனவற்றில் ஆழந்த அறிவோ, விசாலமான பார்வையோ கொண்டவர்கள் இல்லை. சிலர் தங்கள் தாய்மொழி ஆட்சிமொழியாக வேண்டும், சர்வதேச மொழியாக எங்கும் ஒலிக்க வேண்டும் என்றும் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாடுபடுகிறார்கள்.
இந்திய மொழியாக்கப்பட்டுவிட்ட தமிழ், பலநூற்றாண்டுகளாகப் பேசும் மொழியாகவும், எழுதப்படும் மொழியாகவும் இருந்து வருகிறது. சம்ஸ்கிருதம் போல தமிழும் எங்கள் மொழி என்ற அறிவும், தெளிவும் இந்தியர்கள் பெற வேண்டும். சம்ஸ்கிருத மொழி இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...