நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தலைகீழ் மனிதர்கள்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எம். நாகராஜும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.ஆர். விசுவநாத்தும் கர்நாடகச் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் ஆவர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:48 pm

தி. இராசகோபாலன்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எம். நாகராஜும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எஸ்.ஆர். விசுவநாத்தும் கர்நாடகச் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் ஆவர். இவ்விருவரின் ஒழுகலாறுகளைப் பற்றி அவதூறாக எழுதியதாக கர்நாடக சட்டப்பேரவையின் தலைவர் கே.பி. கோலிவாட், "ஹாய் பெங்களூரு' பத்திரிகையின் ஆசிரியர் ரவி பெலகிரேவுக்கும், "எலகென்காவின் குரல்' எனும் பத்திரிகை ஆசிரியர் அனில் ராஜுவுக்கும் ஓராண்டு சிறைவாசமும், ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளார்.
ஒருவேளை, ரூபாய் பத்தாயிரத்தைக் கட்டத் தவறினால், அவர்கள் மேலும் ஆறு மாதம் சிறைவாசம் செய்ய வேண்டும் என்றும் 22.06.2017 அன்று கட்டளையிட்டார்.
கர்நாடக சட்டப்பேரவையின் உரிமை மீறல் ஆய்வுக்குழு பரிந்துரைத்தது, ஓராண்டு சிறைவாசம் மட்டுந்தான். ஆனால் பேரவைத் தலைவர் கூடுதலாக ரூ.10,000 கட்ட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.
காரணம், பேரவைத் தலைவர் முந்தைய சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்தபோது, அவரைப்பற்றி ரவி பெலகிரே தம் பத்திரிகையில் (2014-ஆம் ஆண்டு) விமர்சித்து எழுதியதற்கான காரணத்தை மனத்தில் வைத்திருந்து, வாய்ப்பை நழுவவிடாமல் தம் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்திலுள்ள சமூகப் பொறுப்பாளர்கள், உரிமை மீறல் என்பதற்குரிய விளக்கத்தை எடுத்துச் சொன்னார்கள். நடக்கின்ற சட்டப்பேரவையின் போக்கைத் திசை திருப்பி, அது நடக்கவிடாமல் எழுதினால், அது உரிமை மீறல்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பற்றி அபாண்டமாக எழுதினாலோ, அவர்கள் சட்டப்பேரவைக்குச் செல்வதைத் தடுக்கும் போக்கில் எழுதினாலோ, அது உரிமை மீறல் ஆய்வுக்குழுவுக்குச் செல்லும் என்பதை எடுத்துச் சொன்னார்கள்.
சட்டவியலில் 194-ஆவது பிரிவும், 105-ஆவது பிரிவும் நாடாளுமன்ற, சட்டப்
பேரவை நடவடிக்கைகளைச் சுதந்திரமாக விமர்சிப்பதற்கு உரிமை கொடுத்திருக்கின்றன.
கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் எவர் சொல்லியும் செவிமடுக்க மறுத்தார். "பேரவைத் தலைவரின் நடவடிக்கை, அதிகாரத்தை முற்றிலும் துஷ்பிரயோகம் செய்வதாக அமைந்திருக்கிறது. மேலும், எழுத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகவும் அமைந்திருக்கிறது. எனவே, கர்நாடக அரசு இரண்டு பத்திரிகைகள் மீதும் எடுத்திருக்கும் நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்' என அகில இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் செய்திருக்கிறது.
"இண்டர்நேஷனல் இந்தியா' என்ற ஊடகங்களுக்கான அமைப்பின் இயக்குநர் அஸ்மிதா பாசு, "ஆரோக்கியமான பொது வாழ்வுக்கு வந்தவர்களின் போக்கை, பத்திரிகையாளர்கள் விமர்சித்து எழுதினால், அவற்றைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத்தன்மை அவர்கட்கு வேண்டும். பத்திரிகையாளர்களால் மானமும் மனமும் பாதிக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தால், அவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீதிபதிகளின் இடத்தில் அமரக்கூடாது' எனக் கண்டித்திருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் வேண்டுமென்றே பத்திரிகையாளர்கள் மீது வழக்கை ஜோடித்திருக்கிறார் என்பதற்குச் சில சான்றுகள் இருக்கின்றன.
= இன்றைய பேரவைத் தலைவர், 2014-ஆம் ஆண்டு வெறும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபொழுது, பத்திரிகையாளர் அவரைப் பற்றி எழுதிய விமர்சனத்திற்கு 2017-இல், தாம் பேரவைத் தலைவராக இருக்கும்போது நடவடிக்கை எடுக்கின்றார்.
= இன்னும் உரிமை மீறல் ஆய்வுக்குழு விதித்த தண்டனைக்கு மேல், இவரும் ரூ.10,000 அபராதம் கட்டும்படிப் பணிக்கின்றார்.
= குற்றம் சாட்டிய சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். விசுவநாத்தே, உரிமை மீறல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்து விசாரித்திருக்கின்றார். இவை போன்ற காரணங்களால், பத்திரிகையாளர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்கு, புனையப்பட்ட பொய் வழக்கு என்பது புலனாகின்றது.
குட்டைக் கால்களையுடைய வெளவால்கள் தலைகீழாகத் தொங்கலாம். நீண்ட அறிவுக்கால்களைப் படைத்த ஆட்சியாளர்கள் தலைகீழாகத் தொங்கலாமா?
கர்நாடகப் பேரவைத் தலைவரின் நடவடிக்கையை ஊடுருவிப் பார்த்த மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, "பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுக வேண்டும். பேரவைத் தலைவரின் உத்தரவு எத்தன்மை உடையதாக இருந்தாலும், அது நீதிமன்றத்தின் பரிசீலிப்பிற்கு உட்பட்டதே' என நாகரிகமாக இரண்டு தரப்பினரையும் எச்சரித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சரான டி.பி. ஜெயச்சந்திரா, "இந்தப் பிரச்னையில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் புகார்களைக் கொடுத்தார்கள். சட்டப்பேரவைத் தலைவர் அதனை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பினார், அவ்வளவுதான்' என என்.டி. டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கழுவிய மீனில் நழுவிய மீனாக சட்டத்துறை அமைச்சர் நழுவிவிட்டார்.
சட்டப்பேரவைத் தலைவரும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் இவ்விரண்டு பத்திரிகையாளர்களின்மீது நடவடிக்கை எடுத்ததற்குக் காரணம், தாங்கள் தவறு செய்யும்போது மற்ற பத்திரிகையாளர்கள் தங்களை விமர்சித்து எழுதக்கூடாது என்று எச்சரிப்பதற்குத்தான்.
பேரவைத் தலைவர் கைது ஆணை பிறப்பித்தவுடன் காவல்துறையினர், ரவி பெலகிரே உடல்நலமில்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் உத்தரகன்னடா மாவட்டத்திலுள்ள ஜோய்டா பண்ணையை நோக்கி விரைந்தனர்.
பின்னர் இருதயவலி அதிகமாகி தார்வாரிலுள்ள எஸ்.டி.எம். மருத்துவமனையில் பெலகிரே அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர், சிகிச்சை முடிந்து பெலகிரே வெளியே வரும் தருணத்தை நோக்கிக் காத்துக்கிடந்தனர்.
இதற்கிடையில் பெங்களூருவிலுள்ள பத்திரிகையாளர்களுடைய சங்கம் முதலமைச்சர் சித்தராமய்யாவைச் சந்தித்து, அந்தப் பிரச்னையின் கனத்தையும் வீரியத்தையும் விவேகத்துடன் எடுத்துரைத்தனர்.
அதே நேரத்தில் தில்லியிலுள்ள பத்திரிகையாளர்கள் காங்கிரஸ் தலைவி சோனியாவைச் சந்தித்து, கர்நாடக பேரவைத் தலைவர் பத்திரிகையாளர்கள் மேல் கொண்டுள்ள விரோதப் போக்கை எடுத்துரைத்திருக்கின்றனர். சோனியாவும் முதல்வர் சித்தராமையாவைத் தொடர்பு கொண்டு பேசுவதாக வாக்களித்திருக்கிறார்.
இந்த இடைவெளியில் ரவி பெலகிரே பெங்களூருவிலுள்ள கெம்பகவுடா மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி சித்தராமைய்யா உள்துறைக்கு ஆணையிட்டு, பெலகிரேவைக் கைது செய்ய வேண்டாம் எனவும் பணித்துவிட்டார்.
அதே நேரத்தில் பத்திரிகையாளர்களும் தங்களுடைய தொழிலின் சுதர்மத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். உரிமை மீறல் ஆய்வுக் குழு இரண்டு, மூன்று முறை அழைத்தும் ரவி பெலகிரே போகவில்லை.
அனில் ராஜு, சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜுவை "மனநோயாளி' என்று வருணிக்கும் அளவுக்குச் சென்றிருக்கக் கூடாது. ஆட்சித்துறையில் தலைகீழ் மனிதர்கள் தொங்கலாம். இதழியல் துறையிலும் தலைகீழ் மனிதர்கள் தொங்க வேண்டுமா?
புலனாய்வு இதழியல் எனும் பெயரில் மேலோட்டமாக மிதக்கும் செய்திகளை எல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டு, உறுதிப்பட எழுதக்கூடாது. ஒரு பிரச்னையைப் பூர்வாங்கமாக ஆய்ந்த பிறகே எழுத வேண்டும்.
நமது பாட்டன் மகாகவி பாரதி, "சொல்லவந்த விசயத்தை மனதிலே சரியாகக் கட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை தானாகவே நேரான எழுத்து எழுதும்' என இதழியலுக்குப் பல்லவி பாடிவிட்டுப் போயிருக்கிறான்.
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதை ஆர்.சி.எஸ். சர்க்கார், "பத்திரிகைச் சுதந்திரம் என்பது ஒரு தேவையான தீமையாகும். ஒரு பக்கமிருக்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும், மறு பக்கமிருக்கும் அது தன்னுடைய சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையில், சரியான சமன்பாட்டைக் காண வேண்டும்' என வெகு இலாவகமாகச் சுட்டுவார்.
பத்திரிகைச் சுதந்திரத்தையும் சராசரி மனிதர்களின் சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கும் மகாகவி பாரதியார் தாம் வாழ்ந்த காலத்திலேயே ஓர் உயில் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.
"ஜனங்கள் குற்றம் செய்யாமல், நீதிக்காரர் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரர் குற்றம் செய்யாமல், ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிக்காரரிலே இரண்டு பெரிய பிரிவு உண்டு. நியாயஸ்தலங்களிலிருந்து நீதியைப் பரிபாலனம் செய்வோர் ஒரு பகுதி. சட்டப்பேரவையிலிருந்து விதிகள் ஏற்படுத்துவோர் மற்றோர் பகுதி. இவ்விரு திறத்தாரும் கோணல் வழியில் இறங்காமல், அடக்க வேண்டியது ஜனங்களின் பொறுப்பு' என்பதுவே அவ்வுயில்.
பறவைகளிலே வேண்டுமானால், தலைகீழ் தொங்கும் வெளவால்கள் இருந்துவிட்டுப் போகட்டும். மனிதர்களிலே தலைகீழ் மனிதர்கள் வேண்டாம்; அது பத்திரிகைத் துறையாக இருந்தாலும் சரி; ஆட்சித்துறையாக இருந்தாலும் சரி.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.