திருத்தங்கள் அவசியம்
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளில் சட்டத்தை இயற்றிவிட்டால் எல்லாம் முறையாக நடைபெற்றுவிடும் என நம்புவதற்கில்லை.


சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளில் சட்டத்தை இயற்றிவிட்டால் எல்லாம் முறையாக நடைபெற்றுவிடும் என நம்புவதற்கில்லை. சட்டங்களை அமல்படுத்துவதோடு மட்டுமன்றி அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகப் பொருள்.
அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாகவே அவற்றை தவறாகப் பயன்படுத்துவதும் நிகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில், மாநில அரசின் பட்டியலில் 632 சட்டங்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. மஹாராஷ்டிர மாநிலத்துக்கு (1032) அடுத்தப்படியாக தமிழ்நாட்டில்தான் அதிகமான சட்டங்கள் உள்ளன.
இவற்றில் சமூக, பொருளாதார கோணத்தில் நோக்கினால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, தமிழ்நாடு அதிக வட்டி வசூல் தடுப்புச் சட்டம் (கந்துவட்டி சட்டம்) 2003, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம் (வரதட்சணை ஒழிப்புச் சட்டம்) 2005 ஆகியவற்றை முக்கியமானவைகளாகக் கருதலாம்.
இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு அத்தகைய சம்பவங்கள் குறைந்ததா என்றால் இல்லை. குற்றம் இழைப்போருக்கு எதிராக இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்படும் அதேவேளையில், அரசியல், பழிவாங்குதல் மற்றும் மோசடி நோக்கிலான காரணங்களால் இந்தச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
கடந்த 2013-இல் கோவாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய பிரபல சமூக ஆர்வலர் ஆஷீஷ் நந்தி, 'அதிகமாக ஊழல் செய்வோரில் 'தலித்'களும் அடக்கம்' எனப் பேசிவிட்டார். அதற்கு அவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைப் படாதபாடு படுத்திவிட்டார்கள். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகும் விடுவதாக இல்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டமானது தெளிவற்றும், மிகைப்படுத்தும் வகையிலும் உள்ளது எனவும், அதில் உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சட்டத்தைக் கொண்டு 'பிளாக்மெயில்' செய்வதைத் தடுக்க, அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடிய அனைத்து வாய்ப்புகளையும் சட்டத்தில் இருந்து நீக்க திருத்தம் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அடுத்து, கந்துவட்டிக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்ட பிறகு 2014 ஆண்டு வரையில் பதிவான 1,531 வழக்குகளில் 20 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பமே தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதற்குக் கந்துவட்டியே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அந்தக் குடும்பம் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்பத் தலைவர் வாங்கியிருந்த மிதமிஞ்சிய கடனே முக்கிய காரணம் என்பது பொதுவெளியில் மறைக்கப்பட்டு விட்டது என்ற கருத்தும் உண்டு.
இப்போது, அம் மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார்கள் குவிந்து வருகின்றன. இதில் எத்தனை உண்மை, எத்தனை பொய் என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும்.
கந்துவட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 4 உயிர்கள் தீயில் கருகியதும் ஏற்புடையது அல்ல. ஆனால், கந்துவட்டி கொடுமையுடன் நெல்லை சம்பவத்தை கோர்ப்பது ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது.
கைமாற்றாக வாங்கிய கடனுக்கும், வருந்தி கேட்டு பெற்ற கடனுக்கும் கந்துவட்டி புகார் கொடுத்தால் என்ன ஆவது? தேவையற்ற பதற்றம்தான் ஏற்படும்.
அரசியல்வாதிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் ஆய்ந்தறிந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. எல்லோருடைய கடன் தேவையையும் சந்திக்க அரசும், அரசு நிறுவனங்களும் தயாராகும்போதுதான் இதற்குத் தீர்வு ஏற்படும்.
அடுத்து, கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு என்றால் சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளலாம். ஆனால், குடும்பத் தகராறில் கணவன்மார்களைப் பாதுகாக்க சட்டம் இல்லை.
மனைவியர் கணவன் குடும்பத்தாரை பழிவாங்கும் நோக்கத்தில் வரதட்சணை புகார் கொடுத்தால் உடனடியாக கணவனும் அவரது பெற்றோரும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். இப்படி இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை 'சட்ட தீவிரவாதம்' என உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது.
எனவேதான், வரதட்சணைக் கொடுமை புகார் தொடர்பாக உடனடியாகக் கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மாவட்டந்தோறும் குடும்ப நலக் குழுக்களை அமைத்து புகார் தொடர்பாக ஒரு மாத காலத்துக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை அளித்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் தண்டனை கிடைப்பதும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளில் மற்ற குற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் 40 முதல் 47 சதவீதமாக உள்ளது. ஆனால் வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் 13.7 முதல் 22.4 சதவீதம் மட்டுமே.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களின் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மல்லிமாத் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
நாட்டில் அமைதியை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டிய சட்டங்களால் பதற்றம் ஏற்படாமல் தடுக்க அவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...