நீராதார வீழ்ச்சிக்கு யார் காரணம்?
வெயில், மழை, காற்று எனும் தனது இடையறாத மூன்று பெருங்கொடைகளின் வாயிலாக, வானம் நமது பூமியை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.


வெயில், மழை, காற்று எனும் தனது இடையறாத மூன்று பெருங்கொடைகளின் வாயிலாக, வானம் நமது பூமியை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இம்மூன்று கொடைகளின் கூட்டு நடவடிக்கைகளே, பூமியைப் பேரழகானதொரு பல்லுயிர்க் களஞ்சியமாகப் பாதுகாத்து வருகின்றன. மனிதகுலம் தனது அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு, இம்மூன்றிலிருந்தும் தனக்கு இன்றியமையாத ஒன்றாகிப் போன மின்சாரத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் வீசும்போதே காற்றிலிருந்தும், காயும்போதே வெயிலில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும் கூட, பொழியும் போதே மழையிலிருந்து நேரடியாகவோ, உடனடியாகவோ எதையும் தயாரிக்க முடிவதில்லை. மழையின் வடிவில் நீர் பூமிக்கு வந்தபிறகுதான் அதைத் தேக்கி வைத்துக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ, மீன் வளர்க்கவோ, பயிர்களை விளைவிக்கவோ, படகுச் சவாரி செய்யவோ முடியும்.
வானின் மழை நீரையும், நிலத்தடி நீரான ஊற்று நீரையும், பனிமலைகளின் உருகு நீரையும் கொண்டு அமைக்கப்பட்ட பல்வேறு வகையான நீர்நிலைகளே மனிதகுலத்தைக் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக நிமிரச் செய்து கொண்டிருக்கின்றன.
முன்தோன்றிய மூத்த இனம் எனும் வகையில், தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையான நீர் நிலைகளைத் தோற்றுவித்தும், அவற்றைப் பராமரித்துப் பயன்படுத்தியும், பிற்கால விஞ்ஞான உலகம் வியக்கத்தக்க வகையில், வாழ்வாங்கு வாழ்ந்த பெருமை நம் தமிழ் இனத்திற்கு உண்டு.
இந்த நெடிய வரலாற்றுப் பெருமையை, வேக வேகமாக இழந்து கொண்டிருக்கிற இனமாக இன்றைய தமிழினம் தன்னைத் தரம் தாழ்த்தி கொண்டிருக்கிறது என்பதுதான் சோகம். பல்லாயிரக்கணக்கில் கைவிடப்பட்டுக் கிடக்கிற, காணாமல் போகச் செய்யப்பட்ட நமது முன்னோர்களின் நீர்நிலைகளை நினைத்துப் பார்த்தும், நேரில் போய்ப்பார்த்தும் இந்தத் துயரத்தை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு அமைந்த அரசுகளும், அவற்றின் ஆட்சியாளர்களும், தங்களுக்கான நீராதாரங்கள் குறித்த விழிப்புணர்வு எதுவுமற்ற பெருந்திரள் மக்களுமே இன்றைய தமிழகத்தின் நீராதார வீழ்ச்சிக்குக் காரணம். கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூர் வாரப்படாமல் கிடக்கும் மதுராந்தகம் ஏரியே நிலைமையின் அவலத்தை நமக்கு உணர்த்தப் போதுமானதாகும்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான, 34 சதுரமீட்டர் பரப்பளவும், 21 அடி ஆழமும், 2,400 ஏக்கர் பாசனத் தகுதியும் கொண்ட, அந்த ஏரிக்கே இந்த நிலை என்றால், மற்ற நீர் நிலைகளின் நிலை எப்படியிருக்கும் என்பதை எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
ஞாயிறையும், மாமழையையும் போற்றிப்பாடி, மழைக்கடவுளான இந்திரனுக்கு "இந்திரவிழா' நடத்திய நாம், இன்றைக்கு எல்லோருக்கும் தேவையான மழையை வரவேற்கும் வகையில் எந்த விழாவையும் கொண்டாடுவதில்லை. மாறாக, மழை மீது பழிபோடுவதும், மழையை வெறுப்பதுமாக ஒரு புதிய இழிவுமனப்பான்மை இப்போது தலைதூக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம், தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளில் இருந்தும் இன்றைய நிலையில் ஒவ்வொருநாளும் சராசரியாக 90,000 லாரிகளில் மணல் அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், காய்ந்து கிடக்கும் ஏரிகளில் இருந்து, மாட்டு வண்டிகளில், வேளாண்மைக்கு உரமாகப் பயன்படுகின்ற வண்டல் மண்ணைச் அள்ளிச் செல்லவும், மண்பாண்டத் தொழில் செய்வோர் தங்களது தொழிலுக்கான மண்ணை எடுக்கவும் மிகக் கடுமையாகத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
அரசு உருவாக்கிய இந்தச் சிறுமைச் சிக்கலுக்கு எதிராக, மண்பாண்டத் தொழில் செய்வோர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தங்களது தொழிலின் மீது இறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டனர்.
தமிழக அரசினால் பல்வேறு காலக் கட்டங்களில் கைவிடப்பட்ட, காணாமற்போகச் செய்யப்பட்ட, நிகழ்காலத்திலும் முறையாகப் பராமரிக்காமல் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்ற பல்லாயிரக்கணக்கான நீராதாரங்களைப் பற்றிய வழக்குகள், நீதிமன்றங்களுக்கான புதிய கூடுதல் சுமைகளாகத் தற்போது மாறியுள்ளன.
தமிழ்நாட்டின் ஆழியாறு, கல்லணை, கிருஷ்ணகிரி, பாபநாசம் போன்ற 11 பெரும் அணைகளைத் தூர்வாரி முழுமையாகவும், முறையாகவும் பராமரிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்காகவும் மாறி, இப்போது அரசுத் தரப்பில் விடை சொல்லும் சடங்கில் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. வனவெளிகளையழித்தும், அவற்றின் பரப்பளவைச் சுருங்கச் செய்தும், அவ்வனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்ற பல்வகை உயிரினங்கள் மற்றும் பழங்குடியின மக்களை, முறையான நிவாரணங்கள் ஏதுமின்றி வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும்தான் தற்போதுள்ள அணைகள் அனைத்தும் கட்டப்பட்டுள்ளன.
வேளாண்மை, மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, மீன் வளர்ப்பு போன்றவற்றுக்கான தண்ணீர்த் தேவைகளின் பொருட்டே நமது தமிழ்நாட்டிலும் 11 மாபெரும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர நடுத்தர, சின்னஞ்சிறு அணைகளும் நூற்றுக் கணக்கில் உள்ளன என்றாலும் கூட அவை அனனத்தும், உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளன என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் இப்போது, நீர்க்கொள்ளளவில் 30 முதல் 50 விழுக்காடுவரை தூர்ந்துபோயுள்ள பல அணைகள் உள்ளன. பெரிய அணைகளின் நிலையே இப்படி இருக்கிறது என்றால், ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகளின் பராமரிப்பு நிலையை நாம் நேரில் போய்ப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ள முடியும்.
அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறைகிணறு என்றெல்லாம் தொடங்கி படுகர், பல்வலம், படு, பட்டம், உவளகம், பண்ணை, வாவி, வட்டம், கயம், பயம், தடாகம், கிடங்கு, ஆழி, அலந்தை, குண்டம் என்றெல்லாம் 61-க்கும் மேற்பட்ட பெயர்களில் நமது தமிழகத்தில் நீர் நிலைகள் அமைந்திருந்தன. அவை ஒவ்வொன்றும் வடிவிலும், கொள்ளளவிலும், நீர்பிடிப்புத் தன்மைகளிலும், பயன்படுகின்ற வகையிலும் வேறுபட்டிருந்தன.
நீர்நிலைகள், குடிநீருக்கு, வேளாண்மைக்கு, கால்நடைகளுக்கு, மீன்வளர்ப்புக்கு, கோட்டைப் பாதுகாப்புக்கு என்றெல்லாம் அதனதன் அமைவுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டாலும் கூட, அவையனைத்தும் நிலத்தடி நீர் வளத்துக்கான ஆதாரங்களாகவே அமைந்திருந்தன.
தற்போது அவை அனைத்தும் காணாமலும், பாழடைந்தும், கைவிடப்பட்டுத் தூர்ந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் போய்விட்ட நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமற் போய்விட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 2,400 ஏரிகள் காணாமற் போயுள்ளன. இதே போல கடந்த 40 ஆண்டுகளில் காணாமற் போன பல்வேறு வகையான நீர் நிலைகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் நீள்கிறது.
ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற தங்களுக்குரிய பல்வேறு வகையான நீர்நிலைகள் காணாமற்போனதன் விளைவாகவே தமிழக விவசாயிகள், ஏரிப்பாசன விவசாய முறையில் இருந்து விலகி, கிணற்று பாசன முறைக்குத் தள்ளப்பட்டனர்.
1960-ஆம் ஆண்டு 215 லட்சம் ஏக்கர் நிலம் கிணற்றுப்பாசன முறையில் பயிரிடப்பட்டது. அதே கிணற்றுப்பாசன முறையில், 1996-ஆம் ஆண்டு பயிரிடப்பட்ட நிலம் 761 லட்சம் ஏக்கர்களாக உயர்ந்துவிட்டது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது கிணற்றுப் பாசன முறையின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
சூழலியல் பார்வையில் இது மிகவும் அபாயகரமான வீழ்ச்சியாகும். பூமி உள்வாங்குகின்ற நீரைவிட, அதிலிருந்து உறிஞ்சப்படுகின்ற நீரின் அளவும், நீர் உறிஞ்சப்படுகின்ற வேகமும் பல மடங்கு அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் மேலும் குறைந்துகொண்டேயிருக்கும். நிலத்தடி நீர் மட்டம் குறையக் குறைய ஆழ்துளைக்கிணறுகளின் ஆழம் அதிகமாகும். பம்புகளின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இந்நிலையானது, சாதாரண ஏழை, எளிய, விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்துகிறது என்பதோடு, அவர்களது நிலவெளிகளையும், நீராதாரங்களையும் வேகவேகமாக மாற்றுப் பயன்பாடுகளுக்குப் பலி கொடுத்துக் கொண்டுமிருக்கிறது.
வானத்திலிருந்து வலிய வந்து விழுந்து, பூமியின்மீது தேங்கி நிற்கிற நீர் ஆதாரங்களையெல்லாம் கோட்டை விட்டு காணாமற்போகச் செய்துவிட்டு, நிலத்தைத் துளையிட்டு உறிஞ்சியெடுப்பது என்பது இயற்கையியலுக்கும், சமூகவியலுக்கும் எதிரானதொரு அழிவுப்பயணம் என்பது நமது நிர்வாகத் தரப்புகளால் முறையாக இன்னமும் உணரப்படவில்லை.
நிலத்தின் அடியாழத்திலிருந்து உறிஞ்சப்படுகின்ற நீர், நேரடியாகப் பயிர்களை நோக்கியே செலுத்தப்படுகிறது. பல இடங்களில் அந்த நீரும் பூமிக்குள் பதிக்கப்பட்ட குழாய்களின் வழியே பயணிக்கிறது.
பறவைகளுக்கும், ஊர்மக்களின் பிற தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், செடி, கொடி, மரங்களுக்கும் மீன்களுக்கும் காற்றின் ஈரப்பதம் போன்றவற்றுக்கும் எவ்வகையிலும் பயன்படாத உறிஞ்சு நீரைக் கொண்டு விவசாய முறையை வளர்த்துக் கொண்டிருப்பது, நீரின் உன்னதங்களையே கொச்சைப்படுத்துகின்ற செயலன்றி வேறென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...