மனிதநேயமற்ற மாவோயிஸ்டுகள்
தோட்டத்துப் பயிர்களை ஆடுமாடுகள் மேய்ந்துவிடக்கூடாது என்பதற்காக, நான்கு பக்கமும் வேலி போட்டிருப்பார்கள்.


தோட்டத்துப் பயிர்களை ஆடுமாடுகள் மேய்ந்துவிடக்கூடாது என்பதற்காக, நான்கு பக்கமும் வேலி போட்டிருப்பார்கள். மேய வருகின்ற மாடுகள் வேலிகளைப் பார்த்துவிட்டு, வேறு இடங்களுக்குத் திரும்புமே தவிர, மேய்ச்சலைத் தடுத்துவிட்டனவே என்று வேலிகளைத் தம் கொம்புகளால் ஒடித்து, மிதித்துப் போட்டுவிட்டுச் செல்வதில்லை.
ஆனால், ஏகபோக முதலாளிகளின்மேல் ஆத்திரப்படுவதற்குப் பதிலாக மாவோயிஸ்டுகள், சத்திஸ்கர் மாநிலத்தில் சுக்மாவில் 25 மத்திய ரிசர்வ் படைப்பிரிவினரைக் கொன்றுகுவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். வேலி பயிர் காக்கும் அரண் என்றால், இராணுவத்தினர் உயிர் காக்கும் அரண் அல்லவா?
சத்தீஸ்கர் மாநிலத்தின் காடுமேடுகளில் - சதுப்பு நிலங்களில் - அடிப்படை வசதி எதுவுமில்லாத மலைப்பிரதேசங்களில், தங்கள் குடும்பத்தைப் பிரிந்து, தேச சேவையில் ஈடுபட்டிருக்கும் போர்வீரர்களுக்கு, மாவோயிசம் தந்த பரிசு இதுதானா? மாசேதுங் நூறு பூக்களைப் பூக்க வைத்துப் பார்த்தவர் நூறு எண்ணங்களை மலர வைத்துப் பார்த்தவர்; அவர்பேரில் இயங்கும் இயக்கம் 25 உயிர்களைச் சுட்டுக் கொன்று பார்க்கலாமா? எட்டுச் சிறுவர்களைக் கடத்திக்கொண்டு போகலாமா?
ஆந்திரம், சத்தீஸ்கர், ஒடிஸா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது, தண்டகாரண்ய வனப்பகுதி. இது ஏறத்தாழ 45,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் விரிந்து கிடக்கும் அபாயகரமான காடு. சத்தீஸ்கர் மாநிலத்தில், 40 விழுக்காடுகள் காடும், மலை சார்ந்த பிரதேசமும் ஆகும். அம் மாநிலத்தில் சரியான சாலைகள் கிடையாது; மருத்துவமனைகள் கிடையாது; தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது.
கடந்த பிப்ரவரி 28-இல் துர்காபிரசாத் எனும் படைத்தலைவர் ஓய்வு பெற்ற பிறகு, படைத்தலைவரும் கிடையாது. அதனால், ஏப்ரல் 24-ஆம் தேதி நடு இரவு 12.25 மணிக்கு, உள்ளூர் ஆதிவாசிகளை அனுப்பி வேவு பார்த்துவிட்டு, 300 மாவோயிஸ்டுகள் சேர்ந்து, தொண்ணூற்று ஒன்பது பேர்களைக் கொண்ட 74 படைப்பிரிவினரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இது முதல் தடவை அன்று. ஏப்ரல் 6, 2010 அன்று 75 போர் வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றார்கள். ஜூன் 29, 2010-இல் மத்தியப் படையைச் சேர்ந்த 26 வீரர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். மே 25, 2013-இல் மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் 25 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இப்படிப் பலமுறை இந்திய வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
மாசேதுங் ஒரு சிந்தனைச் சிற்பி. மாவீரன். சோவியத் புரட்சி முடிந்து, அந்நாடு தொழிற்புரட்சியில் ஈடுபட்டிருப்பதை எண்ணிப் பார்த்தார். தாமும் அவ்வாறே தொழிற்புரட்சியில் இறங்காமல், விவசாயப் புரட்சியில் இறங்கினார். "நிலச்சீர்திருத்தமே சீனாவின் உடனடித் தேவை' என்றார். அதுபோல மாவோயிஸ்டுகள் சூதற்ற - சுரண்டலற்ற - வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு கொலையில்லாமல், வேறு வழிகளைக் கண்டிருக்கலாமே.
மேற்கு வங்கம் - சிங்கூரில் டாடா நிறுவனத்தினர் தங்கள் தொழிற்கூடத்தைக் கட்டியிருந்தார்கள். அதனைக் குஜராத்திற்கு மாற்றிக் கொண்டு போகும்படியாகச் செய்தவர்கள் மாவோயிஸ்டுகள்தானே? உயிர்களைக் கொல்லுவதற்குப் பதிலாக ஏன் அப்படிப்பட்ட இராஜதந்திரத்தைச் சத்தீஸ்கரிலும் கையாண்டிருக்கக் கூடாது?
மாவோயிஸ்டுகள் இன்று மேற்கொண்டிருக்கும் கொலை வெறிக்கும், சித்தாந்த அடிப்படையில் சிந்திக்கும் பொதுவுடமைவாதிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. இதனைச் "சிவப்புத் தீவிரவாதம்' என முத்திரைக் குத்த நினைத்தால், நாம் மேற்கொள்ள வேண்டிய காரியத்தின் வீரியத்தை அது குறைப்பதாக அமையும்.
மாவோயிஸ்டுகள் பயன்படுத்தும் நவீன கனரக ஆயுதங்களும், வெடிமருந்துகளும், நம்முடைய மத்திய ரிசர்வ் படையினரிடம் இல்லை. நக்சல்பாரிகளை ஒழிப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த சிந்தனையும் வழிமுறைகளும் இல்லை.
இந்த மாவோயிஸ்டுகளின் தோற்றம் என்ன? 1969-க்குப் பிறகு தீவிரமான மார்க்சிஸ்டுகளிடம், நாடாளுமன்ற சனநாயக வழியில் ஒரு புரட்சியைக் கொண்டு வர முடியுமா என்ற ஐயம் எழுந்தது. இந்தச் சிந்தனைக்கும் பி.டி. ரணதிவே, பசவபுன்னையா, பி. சுந்தரய்யா, ஜோதிபாசு, ஹர்கிசன்சிங் சுர்ஜித், எஸ்.ஏ. டாங்கே, ஏ.கே. கோபாலன், அஜாய் கோஷ் போன்ற பெருமக்களுக்கும் தொடர்பு இல்லை.
1918-இல் மேற்கு வங்கம் - சிலிகுரி பகுதியில் சாரு மஜும்தார் என்றொரு இளைஞர் தோன்றினார். மேற்கு வங்கத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த "தெபாக இயக்கம்' எனும் ஆயுதப் போராளிக்குழுவுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
அவர்தாம் இளைஞர்களைக் கூட்டி, அழித்தொழிப்பு நடவடிக்கைகளினால் மட்டுமே ஒரு புரட்சியைக் கொண்டு வர முடியும் எனும் நச்சுவிதையை ஊன்றினார். கொத்தடிமைத்தனம் காலம் காலமாக வேரூன்றிக் கிடந்த மாநிலங்களில், அவர் வீசிய விதைகள் நன்றாகவே முளைத்தன.
டார்ஜிலிங் மாவட்டத்தில் இமயமலை அடிவாரத்தில் நக்சல்பாரி என்றொரு கிராமம் உண்டு. அங்கு நிலச்சுவான்தார்கள், குறைந்த கூலி, கொத்தடிமை, கடுந்தண்டனைகள் போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்ததால், அவ்விடத்தைப் புரட்சிக்குரிய முதலிடமாக சாருமஜும்தார் தேர்ந்தெடுத்தார்.
அடிமைத்தனத்திலும் மிடிமைத்தனத்திலும் சோர்ந்து கிடந்த மக்கள் வீறுகொண்டு, எழுந்து நடத்திய புரட்சியால், அங்கு "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' எனும் கொள்கை நடைமுறையாயிற்று. நக்சல்பாரியில் முதல் புரட்சி நடந்ததால், அந்த இயக்கத்திற்கே "நக்சல்பாரி இயக்கம்' எனப் பெயர் உண்டாயிற்று.
சாரு மஜும்தார், "நாடாளுமன்ற சனநாயகம் நயா பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை. யார் இல்லாதிருந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்களோ, அவர்கள் அனைவரையும் ஒருத்தர் விடாமல் ஒழித்துவிடுங்கள். ஆயுதமில்லாமல் அதிகாரம் இல்லை' என நக்சல்பாரிகளுக்கு ஆணையிட்டார்.
நக்சல்பாரிகள் புரட்சி நடத்தும் இடங்களில், பண்ணையார்கள், அங்கேயே கூண்டிலேற்றப்பட்டுத், தண்டனையும் பெற்றார்கள். அச்சவுணர்விலேயே மக்கள் வாழ்ந்ததால், அரசாங்கத்திற்கும் உடனடியாகத் தகவல்கள் எட்டவில்லை. மேற்கு வங்கத்திலிருந்த கம்யூனிஸ்டுகளாலும் நக்சல்பாரிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்தவுடன்தான், நக்சல்பாரிகளின் ஆட்டம் அடங்கியது.
காங்கிரசு ஆட்சி போனவுடன், ஜனதா அரசு வந்தது. அந்நேரத்தில், "நக்சல்பாரி' எனும் பெயரில் தொடர்ந்து இயங்குவது சாதகமில்லை எனக் கருதி, அவர்களே மாவோயிஸ்டுகள் என்று தங்களை அழைக்கத் தொடங்கினர்.
"மாவோயிஸ்டுகள்' தங்களுடைய ஆளுமையை வெற்றிகரமாக நடத்துவதற்குச் சத்தீஸ்கர் மாநிலம் வசதியாக அமைந்தது. மலைவாழ் மக்களும், ஆதிவாசிகளும் மாவோயிஸ்டுகளுக்கு அடங்கியே வாழ்ந்தனர். பழங்குடி மக்களின் பின்னணியில் மாவோயிஸ்டுகள் தங்களுடைய காரியங்களை நடத்தியதால், அரசாங்கத்திற்கும் அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.
அதனால், சத்தீஸ்கர் அரசு திரைமறைவில் "சல்வா ஜுதும்' என்ற ஓர் அமைப்பை உருவாக்கியது. "சல்வா ஜுதும்' என்பதற்குக் கோண்டி மொழியில், "அமைதிப்படை' எனப் பெயர். சல்வா ஜுதும் இயக்கத்தினர், மாவோயிஸ்டுகளைத் தேடிப் புறப்பட்டனர். மாவோயிஸ்டுகள் கொரில்லாப் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகவே, சல்வா ஜுதும் இயக்கத்தினர் பொதுமக்களைப் பெரிதும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். மாவோயிஸ்டுகள் இருக்கும் இடத்தைச் சொல்லச் சொல்லி, கொடுமைகள் பல செய்தனர். பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளிடம் எவ்வளவு அட்டூழியங்களை அனுபவித்தார்களோ, அதே கொடுமைகளைச் சல்வா ஜுதும் இயக்கத்தினர் வழியும் பெற்றார்கள். அதனால், அரசாங்கம் சல்வாஜுதும் இயக்கத்தை முடக்கியது.
பொதுவுடமை நமக்குப் புதிதன்று. "செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்போம் எனினே தப்புந பலவே' என்றான் சங்கப் புலவன்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு
உடைக்கும்
கூன்கையர் அல்லா தவற்கு என்றார்
திருவள்ளுவர்.
"வீங்குகின்ற செல்வம் வீங்குவதும் ஆபத்து. ஏங்குகின்ற ஏழை நெஞ்சம் ஏங்குவதும் ஆபத்து' என்றார் கவியரசர் கண்ணதாசன். ஆனால், அவர்கள் யாரையும் கொல்லச் சொல்லவில்லை.
மாவோயிஸ்டுகள் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நிலவுடைமைச் சமுதாயத்தை அழிக்க, நிலச்சுவான்தார்களையே கொல்ல வேண்டும் என அறிவுறுத்திய சாரு மஜும்தாருடைய கதியை எண்ணிப் பாருங்கள். சாரு மஜும்தார் 1972-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த பன்னிரெண்டாம் நாள், அவர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். "கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்' எனும் விவிலிய வாசகத்தை இனியாவது மாவோயிஸ்டுகள் எண்ணிப் பார்க்க வேண்டும். "
ஒரு கன்றுக்காகத் தம் மகனையே தேர்க்காலில் மடித்த மன்னன் வாழ்ந்த நாடு இது. ஒரு புறாவிற்காகத் தன்னையே கொடுத்த மன்னன் வாழ்ந்த மண் இது.
இனியாவது உங்கள் துப்பாக்கிகளில் புறாக்கள் கூடு கட்டட்டும். நீங்கள் அழைத்துப் போகும் பிள்ளைகளை வெடிக்க வைக்காதீர்கள்; படிக்க வையுங்கள்!
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...