/

தவிர்ப்போம் தனிமனித வழிபாடு

ரயில் நிலையம் போன்ற பொது இடத்தில், ஒரு பெரும் சிந்தனையாளர், எழுத்தாளர், பல்லாயிரம் பேருக்கு வேலை தந்திருக்கும் தொழில் அதிபர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

இரா. கதிரவன்

ரயில் நிலையம் போன்ற பொது இடத்தில், ஒரு பெரும் சிந்தனையாளர், எழுத்தாளர், பல்லாயிரம் பேருக்கு வேலை தந்திருக்கும் தொழில் அதிபர், சிறந்த கண்டுபிடிப்புகளைக் கொடுத்த விஞ்ஞானி, ஏரளாமான நல்ல மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் போன்றோர், வருவதும் போவதும், அமைதியாக பிறர் அறியாது நிகழ்கின்றது.
ஆனால், அதே இடத்தில, திரைப்படத் துறையைச் சார்ந்த ஒருவர் வந்துவிட்டால், ஏதோ தெய்வம் நேராக வானிலிருந்து இறங்கி வந்துவிட்டதுபோல பாவித்து அவரை சூழ்ந்து கொள்ளுகிறது ஒரு கூட்டம்; சில நிமிடங்களில் கூட்டம் பெருங்கூட்டமாக மாறுகிறது.
சினிமா துறையினரை நன்கு தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு இந்த நாடு, பெரும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட பொறியாளரையோ, சிறந்த விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களையோ, திறமை மிகுந்த நிர்வாகிகளையோ அல்லது தமது வாழ்நாளில் கையூட்டு பெறாத அரசியல்வாதிகளையோ தெரிந்து வைத்திருக்கிறதா அல்லது கொண்டாடுகிறதா? அவர்களுக்குரிய அங்கீகாரத்தை சமூகம் தருகிறதா?
மக்கள் தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ, தனிமனித வழிபாட்டு மனோபாவத்துக்கு ஆளாகிவிட்டனர்; கல்வி மற்றும் அறிவியல் முன்னேற்றம் ஆகியனவற்றுக்கும் பின்னர்கூட இந்நிலை தொடர்கிறது.
முடியாட்சி நீங்கிய பின்னும் மன அளவில் அதன் பிடியில் இருக்கிறோமா? கடவுள், மறுபிறப்பு போன்றவற்றை கேள்விக்குட்படுத்திய புத்தர் கூட கடவுளாக்கப்பட்டார் என்பது ஒரு நகைமுரண் என்றே சொல்ல வேண்டும் .
'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்று புறநானூறு கூறுகிறது. பிறரை அளவுக்கு அதிகமாக புகழுபவர், தம்மை தாமே தாழ்த்திக் கொள்ளும் ஒரு கேடான நிலைக்குத் தள்ளிக் கொள்ளுகிறார் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய மனோபாவத்தால், எந்த ஒரு நாடும் பெற்றதைவிட இழந்தது அதிகம்.
ஒரு தலைவரிடம் இருந்து உத்வேகத்தை பெறுவது என்பது ஒருவரது வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடும்; ஆனால், அது வழிபாடாக மாறக் கூடாது; அதேபோல, மக்கள் மீது அன்பும் பாசமும் உள்ள தலைவர், மக்களிடம் வழிபாட்டு மனோபாவத்தை வளர விடக்கூடாது.
தம்மை தாழ்த்திக் கொள்ளுவதும், பிறரை அளவுக்கதிமாக புகழ்தலும், போற்றுதலும், வழிபடுதலும் நம் சமுதாயத்தின் குணாதிசயமாக மாற இடம் அளித்துவிட்டோமா எனும் ஐயம்கூட எழுகின்றது. இந்த தனிமனித வழிபாட்டு மனோபாவம், யாரை பீடிக்கின்றதோ அவர்களது மெய்யான -  நேர்மையான வளர்ச்சியை அது தடுக்கிறது.
இக்கூட்டம் எண்ணிக்கையில் பெருகும்போது, அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் சராசரி அறிவும் குறைகின்றது. அவர்கள் தங்களது சுயமரியாதையை இழக்கின்றனர்; ஒரு தொண்டன், தலைவரின் செயல்களை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளுகிறான், அவரது தவறுகளை நம்ப மறுக்கிறான் அல்லது நியாயப் படுத்துகிறான்.
இதுதவிர, பிற நல்ல சக்திகள் உதாசீனப் படுத்துகிறான், அவனுக்கு நடுநிலை என்ற கோட்பாடு அற்றுப்போய் விடுகிறது.
போற்ற வேண்டியவற்றை போற்ற வேண்டிய அளவுக்கு போற்றலாம். அதனைவிடுத்து, வழிபாட்டு மனோபாவப் புதைமணலில் ஒரு சமுதாயம் சிக்கினால் அது எங்கு கொண்டு போய் சேர்க்கும்? இந்த பலவீனத்தை, அரசியல் வாதிகள் தவறாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தனி மனித வழிபாட்டின் பலவித வெளிப்பாடுகளில் ஒன்றாக, தான் ஆதர்ச மனிதனாக நினைக்கும் திரைப்பட நாயகனைத் திரையில் மட்டுமல்ல வெளியிலும் பெரும் சாதனைகளை அனாயாசமாக செய்து முடிப்பவர் என நம்புகிறான்.
இந்த வழிபடு மனோபாவத்துக்கு எதிர் விளைவாக ஜனநாயகத்தின் மீதே ஒரு சாரார் நம்பிக்கை இழக்கின்றனர்.
சில சமயம் அரசியல் வானில் மிகச் சிறந்த ஆளுமைகள் நட்சத்திரம் போல் தோன்றுவது உண்டு. மக்கள் மெய் மறந்து அவர்களை வழிபடுவதும் உண்டு. இப்படி வழிபடப் பட்டவர்களில் முக்கியமானவரான நேரு இதனை எப்படி பார்த்தார்? என்ன செய்தார்?
அவர் தனிமனித வழிபாட்டினை ஊக்கியவர் அல்லர். ஒரு சமயம், வடஇந்திய நாளிதழில், ஒரு கட்டுரை 'சாணக்கியா' என்பவரால் எழுதப்பட்டது -  'தமக்கிருக்கும் அதீத செல்வாக்கு, புகழ் ஆகியவற்றால், நேரு ஒரு முடியாட்சி மன்னனைப் போல் -  சீசரைப்போல் செயல் படத் துவங்குவாரோ என்ற அஞ்சுகிறேன்; எக்காரணம் கொண்டும் அவர் அப்படி தம்மை நினைத்துக் கொள்ளக் கூடாது' என்று 'சாணக்யா' எழுதினார்.
சில நாட்கள் கழித்துதான் தெரிய வந்தது,' சாணக்யா' என்ற பெயரில் எழுதியவர், ஜவாஹர்லால் நேருதான் என்பது.
இன்னொரு சமயம் , பிரபல கேலிச்சித்திர ஓவியர் சங்கரின் ஓவியக் கண்காட்சிக்கு வருகை தந்த நேரு, 'என் மீது விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டாம் சங்கர்' (Please, don't spare me Shankar) என்று வருகையாளர் பதிவேட்டில் எழுதிவிட்டு சென்றார்.
தலைவர்கள், மக்களிடையே வழிபாட்டு மனோபாவம் வளர இடம் கொடுக்காதவர்களாக இருக்க வேண்டும்.
ஊடகங்களும், சில செய்திகளை, சம்பவங்களை, அவை தொடர்பான நபர்களை அவர்களது தகுதிக்கதிகமாகப் பெரிதாக்கிக் காட்டாமல் இருப்பது நல்லது. தனிமனித வழிபாட்டினால் ஏற்படக்கூடிய தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதும், உண்மையான சேவையாக அமையும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, தனிமனித வழிபாட்டில் பல காலம் சிக்கி, தற்போது மீளக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறது எனலாம். இந்த சூழலில், நாம் தனி மனித வழிபாடு அவசியம்தானா என்பது குறித்துத் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.