உலகமெங்கும் ஒரே மொழி!
கல்வி என்பது மொழி வழியானது. அதாவது கல்வி கற்க மொழியை இலக்கணத்தோடு பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும்


கல்வி என்பது மொழி வழியானது. அதாவது கல்வி கற்க மொழியை இலக்கணத்தோடு பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் கல்வி கற்றலின் தொடக்கம். அது வீட்டில் இருந்து தொடங்குகிறது. இரண்டு வயதில் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு குழந்தை ஆறு வயதிற்குள் ஐயாயிரம் சொற்களைப் பேசவும், அவற்றின் பொருளை அறிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டு விடுகிறது என்று குழந்தைகள் மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
வீடுதான் குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடம். பெற்றோர்கள்தான் முதலாசிரியர்கள். இப்படிச் சொன்னாலும், ஒரு குழந்தை வீட்டிலேயே கல்வி பெற்றுவிட முடியாது. கல்வி பன்முகத் தன்மை கொண்டது. பெற்றோர்களால் பல்வேறு பணிகளுக்கு இடையில் முழுமையான கல்வியைத்தர முடியாது.
எனவே கல்வி கற்றுக் கொடுப்பதற்கென்று பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார்கள். மொழிப் புலமையும், கற்றுக் கொடுப்பதில் தேர்ச்சியும் பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்தார்கள்.
குழந்தைகள் பாடப்புத்தகங்களில் இருந்ததைப் படித்ததோடு பல்வேறு அம்சங்களையும் தெரிந்து கொண்டார்கள். அது அவர்களிடம் ஆளுமையை உருவாக்கியது. சுயமாகச் சிந்திக்கவும், அதைச் சொல்ல வார்த்தைகளையும் தெரிந்து கொண்டார்கள்.
சீனாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் தத்துவ ஞானியான கன்பூஷியஸ் பள்ளிக்கூடம் ஆரம்பித்து எல்லோருக்கும் கல்வி கொடுத்தார். இந்தியாவில் குருகுலக் கல்வி இருந்தது. இளவரசர்கள், உயர்குடி இளைஞர்கள் குருகுலத்தில் அரசியல், தத்துவம், இலக்கியம், தர்க்க நியாயம் கற்றதோடு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, போரிடுவது, போர் வியூகங்கள் வகுப்பது பற்றியெல்லாம் கற்றார்கள்.
மொழிதான் பள்ளிக்கூடத்தின் கருவி. அதாவது மொழியில்லாமல் பள்ளிக்கூடம் கிடையாது. உலகத்தில் எந்த நாடும் ஒரே ஒரு மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடாக இல்லை. ஒரு நாட்டின் எல்லைக்குள் பன்மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.
தொழில், வணிகம் என்பதின் பொருட்டுப் புலம் பெயர்கின்றவர்கள் பல மொழிகளையும் கற்றுக் கொள்கிறார்கள்.
அரசாங்கம் என்று ஒன்று ஏற்பட்ட பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் தங்களின் தாய் மொழியைப் பள்ளிக்கூட மொழியாகவும், அரசாங்கத்தின் ஆட்சிமொழியாகவும் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஆட்சிமொழி பாரசீகம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழி. இரண்டு மொழிகளும் இந்தியர்களுக்குத் தாய்மொழி கிடையாது. ஆனால் ஆங்கிலம் ஒரு நூற்றாண்டிற்கு மேல் இந்தியாவின் கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசானது. அதாவது மக்களிடம் அதிகாரம் வந்துவிட்டது. குடியரசு என்றால் பெரும்பான்மை மக்களின் அதிகாரம். அது தேர்தல் வழியாக வருகிறது.
இந்தியாவில் 1962 தாய்மொழிகளும், அவற்றின் கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. அவற்றில் எந்தவொரு மொழியும் பரவலாக நாடு முழுவதும் பேசப்படும் மொழி கிடையாது. பன்மொழிகள், வேறுபட்ட எழுத்துகளில் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகின்றன.
இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்தியாவிற்காக அரசியல் சட்டம் இயற்ற டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட நிபுணர்கள், சிந்தனையாளர்கள், தேசபக்தர்கள், சமூக நீதிக் காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் அதிகமாக விவாதிக்கப்பட்டது மொழி பற்றிதான்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே பல தேசிய தலைவர்கள் 'இந்தி மொழிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும். ஏனெனில் அது பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது' என்று சொல்லி வந்தார்கள்.
மகாத்மா காந்தி பாரசீகம், உருது மொழி சொற்கள் கலந்த இந்துஸ்தானி மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று சொல்லிவந்தார். ஆனால், இந்தி மொழி பேசுவோர் அதனை ஏற்கவில்லை. சமஸ்கிருத மொழி சொற்கள் கொண்ட தரப்படுத்தப்பட்ட இந்தி மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று பலரும் கூறிவந்தார்கள்.
அரசியல் சட்டம் எழுதும் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருத மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று உரைத்தார். அதற்கு நஸ்ருதீன் அகமது இரானி பெரும் ஆதரவு கொடுத்தார். தமிழ்நாட்டில் இருந்து, அரசியல் சட்டக் குழுவில் இடம் பெற்றிருந்த முகமது இஸ்மாயில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்றார். ஆனால் இரண்டும் புறந்தள்ளப்பட்டன.
இந்திய அரசியல் சட்டத்தில் 22 இந்திய மொழிகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றோடு ஆங்கில மொழியையும் சேர்க்க வேண்டுமென்று ஆங்கிலோ - இந்தியரான பிராங் மோரீஸ் கோரினார். ஆங்கிலம் இந்திய மொழி இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்று பிரகடனப் படுத்தப்பட்ட பிறகு சமூக, கலாசார, தொழில், வேலைவாய்ப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் ஆங்கிலம் கல்வி மொழியாகி விட்டது. அது மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு இன்றியே நடந்தது. சர்வதேச காரணிகள் ஆங்கில மொழியை முன்னெடுத்துச் செல்கின்றன.
இருபத்தொன்பது இந்திய மாநிலங்களிலும் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலம் முதல் மொழியாக இருக்கிறது. கல்வி என்பது தேசபக்தி சார்ந்ததில்லை. எனவே 'தாய்மொழி படியுங்கள், ஆட்சி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அதில் பெருமைப்படுங்கள்' என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இந்தியாவில் மகத்தான தோல்வி அடைந்த திட்டம் மும்மொழித் திட்டம். 1961- ஆம் ஆண்டில் ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் மும்மொழி கற்பிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதனை எல்லா மாநில முதல்வர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் மும்மொழி திட்டம் வெற்றி பெறவில்லை.
இந்தியாவில் ஆரம்பப் பள்ளிகளில் 47 மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. வட இந்திய மாணவர்கள் தங்கள் தாய்மொழியும், மாநில மொழியும், மத்திய ஆட்சி மொழியுமான இந்தி மொழியும் ஆங்கிலமும் படிப்பார்கள். அல்லது ஆங்கில மொழியோடு இந்தி படிப்பார்கள். மூன்றாவது மொழியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் இவற்றில் ஏதோ ஒரு மொழி படித்து இந்தியர்களாகி விடுவார்கள்.
தென்னிந்திய மாணவர்கள், தாய் மொழி, மாநில மொழி, இந்தி மொழி, ஆங்கிலம் படித்து இந்தியர்கள் என்று பெருமை கொள்வார்கள். உயர்கல்விக்கு இந்தி மொழி பயன்படாவிட்டாலும், பத்தாம் வகுப்பு வரையில் ஓரளவு பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டு இந்தியர்களாகிவிடுகிறார்கள். இந்தியா ஒரு மொழி தேசமாகிவிடும்.
இந்தியாவிற்கு தேசிய மொழி இல்லையென்கிற நிலை மாறி, இந்தி மொழி தேசிய மொழியாகவும் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் வட இந்தியாவில் மும்மொழித் திட்டம் செல்லுபடியாகவில்லை. அங்குள்ள மாணவர்கள் மூன்றாவது மொழியாக ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானீஷ், மாண்ரீன் படித்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை (தமிழ் - ஆங்கிலம்) அண்ணா முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது. அறிவிப்பில் இருந்த குளறுபடியால் தமிழ் மொழி பள்ளிக்கூடங்களில் இருந்து தொலைந்து போய்விட்டது. அதிகமான சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை நியமித்து சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகள் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் பல மாநில மொழிகள், பழங்குடி மக்களின் பேச்சு மொழிகள் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் மாநில அரசுகள் ஏற்பட்ட பிறகு இந்தி மொழி பெரும் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இந்தியா ஒரு மொழி நாடென்ற சித்தாந்தம் நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது.
பன்மொழிக் கலாசார நாடென்பது முன்னேற்றம் வளர்ச்சிக்கு உரியது இல்லை என்ற கோட்பாடு செயல்பாட்டு முறையில் வேகம் பெற்று இருக்கிறது.
மொழியென்பது கல்விக்கானது என்பது புறந்தள்ளப்பட்டு, எந்த மொழியிலும் அறிவை நிலைநாட்டலாம் என்பது மறுக்கப்பட்டு, ஒற்றை மொழி கலாசாரத்தில் மக்களின் வாழ்க்கைக் கொண்டு போகப்படுகின்றது. ஏழைகளுக்கு ஏழ்மையான கல்வி, பணக்காரர்களுக்கு உயர்தரமான கல்வி என்று ஆகிறது.
உலகத்தில் முதல் சுற்றில் மக்கள் ஒரு மொழி பேசிக் கொண்டிருந்தார்கள். பின்னர் புலம் பெயர்ந்து பல மொழிகளை உருவாக்கிக் கொண்டார்கள். முதல் பயணம் முடிந்துவிட்டது. உலகம், இரண்டாவது சுற்றுக்கு வந்துவிட்டது.
மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பல மொழிகள் மறைந்துவிட்டன. ஏராளமான மொழிகள் அழிவின் விளிம்பிற்கே வந்துவிட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது உலகெங்கும் ஒற்றை மொழி பேசப்படும் என்பதுதான். அதில் இந்திய மொழிகள் எதற்கும் இடமில்லையாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...