இனிப்புமில்லை கசப்புமில்லை
என்றைக்கும் இல்லாத பணப்புழக்கம், இன்று எல்லாரிடத்தும் காணப்படுகின்றது.


என்றைக்கும் இல்லாத பணப்புழக்கம், இன்று எல்லாரிடத்தும் காணப்படுகின்றது. அவசியமான பொருள்களை வாங்குவதோடு, அநாவசியமான பொருட்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். உணவகங்களுக்குச் சென்று, உண்ணுவதற்குரிய பண்டங்களை வருவிப்பதோடு, உண்ண முடியாது போன உணவுப் பொருட்களுக்குரிய தொகையையும் சேர்த்துச் செலுத்திவிட்டுக் கவலையின்றி வெளியேறுகின்றனர்.
ஒவ்வொரு வீட்டிலும் தேவைக்கேற்ற ஆடைகள் என்பது மாறி, இப்பொழுது ஒரு நடமாடும் ஜவுளிக்கடையே இடம் பெற்றிருக்கிறது. கை நிறைய சம்பளம் என்பது போய், இப்பொழுது பைகள் நிறைய சம்பளங்களோடு வருகின்றனர். என்றாலும், எங்கே நிம்மதி என்றுதானே ஒவ்வொருவரும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். தூக்கத்தைத் தொலைத்த துக்கத்தோடு திரிபவர் எத்தனை பேர்!
ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் யார் பெரிய திருடன், யார் சின்ன திருடன் என்று இலாவணிக்கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றனர். வாக்காளர்கள் வாங்கியதைத் தவிர, வாங்காமல் விட்டதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளும் வழியாகப் பார்த்துத் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். கல்வியாளர்கள் கற்பிக்க வேண்டிய கல்வியை, விற்பதற்குரிய பொருளாக்கி வருகின்றனர். இதில் யாருக்கும் வெட்கமில்லை.
நீதிநெறியோடு அரசாட்சி செய்பவனைக் குடிமக்கள் தெய்வம் என்று கொண்டாடுவார்கள் என்றார் திருவள்ளுவர். 'திருவுடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேன்' என அருளிச் செய்தார், நம்மாழ்வார். 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்றார், சங்கப்புலவர்.
தேவாமிர்தத்தைப் போன்ற ஆட்சிக்கலை எல்லாருக்கும் எளிதான ஒன்றல்ல அரிது என்பதைத் தெய்வச் சேக்கிழார், 'அருமந்த அரசாட்சி அரிதோ? மற்றெளிதோ? தான் என்றார்.
மேலும், காலத்தை ஊடுருவிப் பார்ப்பதுபோல் பார்த்த தெய்வச் சேக்கிழார், 'மாநிலத்தை ஆளுகின்ற ஆட்சித்தலைவன், அவனால், அவனுடைய சுற்றத்தாரால், அயல்நாட்டுப் பகைவர்களால், திருடர்களால், புலி - யானை போன்ற விலங்குகளால் வரும் துன்பங்களைப் போக்கியருள வேண்டும்' என்றார் (பெரிய புராணம் - நகரப் படலம் - பாடல் 36).
தகுதியில்லாத தலைவனால் ஆளப்படும் ஆட்சிக்குக் கெளடில்யர் அர்த்த சாஸ்த்திரத்தில் ஓர் அழகான உவமை சொன்னார். 'திறமையற்ற பாகனால் நடத்தப்படும் யானை எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் அழிக்கும். அதுபோல அற்ற தலைவனால் நடத்தப்படுகின்ற ஆட்சியில் நல்லவர் - கெட்டவர் அனைவரும் அல்லற்படுவர்' என்பதே அவ்வுவமை.
அமைச்சர்களுக்குரிய இலக்கணத்தைக் கம்பர் வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி! 'நல்லதைச் சொல்லுகின்றபோது அரசன் சீற்றம் கொண்டாலும், தம் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நீதியைச் சொல்லுகின்றபோது அரசன் ஆத்திரம் கொண்டாலும், தொடர்ந்து எடுத்துரைக்கும் வீரனாக இருக்க வேண்டும். அறவாழிகள் எடுத்துச் சொன்ன நீதிகளை எல்லாம், துணிந்து எடுத்துச் சொல்லுகின்ற திரிகால ஞானியாக இருக்க வேண்டும். முன்னுக்குப் பின் மாறுபட்டுச் சொல்லாமல், எடுத்த கருத்தில் உறுதியுடையவராக இருக்க வேண்டும்' எனக் கம்பர் எந்நாட்டவர்க்கும் பொருந்தக்கூடிய இலக்கணத்தை எடுத்துரைத்திருக்கிறார். (அயோத்தியா காண்டம், மந்திரப்படலம், 8 ஆம் செய்யுள்).
அமைச்சர்கள் ஈட்டிய தேட்டையைக் கூடப் புலனாய்வுத்துறையினர் கணக்கிட்டுக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அதிகாரிகள் ஈட்டியதை, ஈட்டியைத் தீட்டிக் குத்தித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது என்பதைக் கெளடில்யர், 'நீரில் வாழும் மீன்கள் உண்ட நீரை, அளந்து அறிய முடியாது.
அதுபோல் அரசு நிறுவனங்களில் நியமிக்கப் பெற்ற வினைஞர்கள் கவர்ந்த பொருளை அறிய இயலாது' என அர்த்தசாஸ்த்திரத்தில் எடுத்து இயம்புகின்றார்.
ஓர் ஆட்சியில் மக்கள் வாய்மூடி மெளனிகளாய் இருந்தால், தடியெடுத்தவன் எல்லாம் தலைவன் ஆகிவிடுவான். மன்னராட்சியிலேயே இதை நன்குணர்ந்த கம்பர், குடிமக்களைப் பேச வைக்கிறார். தசரதன், இராமனுக்குத் தரவிருந்த பதவியைப் பரதனுக்குக் கொடுத்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்ட மக்கள், 'என்னடா சக்கரவர்த்தி இவர்.
தன்னேரில்லாத இராமனுக்குப் பதவியை முன்னர் கொடுத்துப் பின்னர் பரதனுக்குக் கொடுத்தால் பழுதோ' எனத் தெருவிற்கு வந்து கேள்வி கேட்கின்றனர். (அயோத்தியா காண்டம், நகர் நீங்குப்படலம், பாடல் 108).
நம்முடைய நாட்டிலே கூடச் சற்று முந்தைய காலத்தில் ஓர் ஆரோக்கியமான அரசியல் இருந்திருக்கிறது. 1952 இல் மூதறிஞர் இராஜாஜி முதலமைச்சர்; எதிர்க்கட்சியில் அனல் பறக்க, கனல் தெறிக்கப் பேசுகின்ற தோழர் பி. இராமமூர்த்தி.
முதலமைச்சர் இராஜாஜி சட்டப்பேரவையில் ஒரு கருத்தை முன்மொழிந்து பேசிவிட்டு அமர்ந்துவிட்டால், உடனே தோழர் பி. இராமமூர்த்தி எழுந்துவிடுவார். இராஜாஜி பொதுவுடமைக் கொள்கையை ஏற்காதவர் என்பதால், தோழர் இராமமூர்த்தி சண்டமாருதம் என முழங்கி விட்டுத்தான் அமர்வார்.
என்றாலும் இரண்டு பேருக்கும் ஒரு பரஸ்பர பாசநேசம் இருந்தது. இடைவேளையின்போது முதலமைச்சர் ஹார்லிக்சோ ஓவலோ அருந்துவார். அப்போது எதிர்வரிசையில் அமர்ந்திருக்கும் பி. இராமமூர்த்தியை அழைத்து, 'இராமமூர்த்தி, எழுந்து வா! ஓவல் சாப்பிட' என்பார்.
பி. இராமமூர்த்தி வந்து இராஜாஜியின் ஓவலை சுவைத்துச் சாப்பிடுவாராம். அப்பொழுது இராஜாஜி, 'இராமமூர்த்தி நல்லா சாப்பிடு. அப்பத்தான் என்னை நல்லாத் திட்டலாம்' என்பாராம். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவர்களிடம், மனிதநேயம் தலைதூக்கி நின்றது ஒரு காலத்தில்.
ஆட்சித்தலைவர், அதிகாரி, சராசரி குடிமகன் ஆகிய முத்தரப்பிலும் கண்ணியமும் நேர்மையும் இருந்தால்தான், வாழ்கின்ற வாழ்க்கையில் இனிப்பும் கசப்பும் இருக்கும். அதற்கொரு சான்றை அமரர் கக்கன் வாழ்க்கையிலிருந்து சுட்டலாம்.
1942 இல் 'வெள்ளையனே வெளியேறு எனும் ஆகஸ்டுப் போராட்டத்தில், மறியலில் ஈடுபட்ட கக்கனைக் கைது செய்து காவலர்கள் மதுரை - மேலூர் சிறையில் அடைக்கின்றனர். அச்சிறைச்சாலையில் இருந்த ஆணவம் பிடித்த போலீஸ் அதிகாரி, ஒவ்வொரு நாளும் கக்கனுக்குக் கசையடி கொடுக்கும்படி, காவலருக்கு ஆணையிடுகிறான்.
அதிகாரியின் ஆணைக்குக் கட்டப்பட்டுக் காவலரும் மனவேதனையோடு தம் பணியைச் செய்கிறார். பின்னர் நாடு விடுதலையடைந்து, 1957-இல் கக்கன் உள்துறை அமைச்சராகிறார். அமைச்சருக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களில் கசையடி கொடுத்த காவலரும் ஒருவர்.
'ஐயா, என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி, கக்கனின் காலில் விழுந்து, அவர் கதறி அழுதார். உடன் கக்கன், 'எழுந்திரு! காலில் விழுவது அநாகரிகம். உன் கடமையைத்தானே செய்தாய். உன்னைப் போன்றவர்கள் தாம் இந்நாட்டிற்குத் தேவை' எனச் சொல்லித் தட்டிக் கொடுத்து அனுப்பினார்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் வாழ்கின்ற வாழ்க்கையில் ஓர் ஒழுங்கு இருக்க வேண்டும். பொது வாழ்க்கையில் ஓர் அர்ப்பணிப்போடு வாழ்ந்த காமராசர், பி. இராமமூர்த்தி வாழ்க்கையில் நேர்ந்த ஒரு சுவையான சம்பவம் உண்டு. 1961 - 62 இல் சீனா, இந்திய எல்லையை ஆக்கிரமித்து, ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியது.
அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படுகிறது. மத்திய அரசில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தோழர் பி. இராமமூர்த்தி தலைமறைவாகிறார். தமிழகக் காவல்துறையால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
என்றாலும், மாறுவேடம் போடுவதில் கைதேர்ந்த தோழர் பி. இராமமூர்த்தி மாநிலங்களவையில் பேசுவதற்கு வந்து விடுகிறார். அவர் பேசும்போது, 'எங்கள் மாநிலத்தில் (தமிழகத்தில்) ஓர் அற்புதமான உள்துறை அமைச்சர் இருக்கிறார். நான் தலைமறைவு ஆகிவிட்டதாகச் செய்தி தருகிறார். ஆனால், நான் இங்குப் பேசிக்கொண்டிருக்கிறேன்' என பேசி முடித்தார்.
அதற்குப் பிறகு தமிழகக் காவல்துறைக்கு ஓர் உந்துதல் ஏற்பட்டு, தோழர் பி. இராமமூர்த்தியைக் கைது செய்வதற்கு மும்முரம் காட்டுகிறது. காவல்துறையில் தலைமையதிகாரி முதலமைச்சர் காமராசரைக் கோட்டையில் சந்திக்கிறார்.
முதலமைச்சர் காமராசர் தலைமை அதிகாரியிடம், 'இராமமூர்த்தி எனக்கு ரொம்பப் பழக்கம். விடுதலைப் போராட்டக்காலத்தில் நானும் அவரும் ஒரே சிறையில் இருந்தோம்; ஒரே அறையில் இருந்தோம். அவரை நான் அறிவேன். அவரை உங்களால் பிடிக்க முடியாது. போங்கள்! அவரே வந்து சரணடைவார்' எனச் சொல்லியனுப்பினார்.
இதற்கிடையில் தோழர் பி. இராமமூர்த்தி காவல் துறைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 'என்னைத் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். என் மனைவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு, நானே குறிப்பிட்ட தேதியில் சரணடைவேன்' என்பதுவே அச்செய்தி. ஆனால், தமிழகக் காவல்துறை டெல்லிக்கு ஒரு படையை அனுப்பியிருந்தது.
சென்னை சென்ட்ரல் இரயில் நிறுத்தத்திலும் முழுவதும் காவலர்களாக இருந்தனர். அப்போது, பெண்கள் பெட்டியில் இருந்து பர்தா அணிந்த பெண் ஒருவர் கீழே இறங்கினார். உடனே தாம் போர்த்தியிருந்த பர்தாவை அகற்றிவிட்டு, காவலரைக் கூப்பிட்டு, 'எடு பெட்டியை, நட ஸ்டேசனுக்கு' என்றார் பெண் வேடத்திலிருந்த தோழர் பி.ஆர். யானை விழுந்தாலும், அதன் மட்டத்திற்குத்தான் விழும் என்பதுபோல் நடந்து கொண்டவர், தோழர் பி. இராமமூர்த்தி.
முன்னோர்கள் வடித்துக்கொடுத்த, வாழ்ந்து காட்டிய அன்றைய ஆட்சிக்கலை, இன்று எங்கே? அரியணைகள்தோறும் வஞ்சகர்கள்தானே வீற்றிருக்கிறார்கள். பாண்டிய மன்னர்கள் இன்று பதுங்கு குழிகளை அல்லவா தேடிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணகிமார்கள் கோவலன் சாவிற்குச் சரியான நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வானுலகத்திலிருந்து இறங்கி வந்த கோவலர்கள் மறுபடியும் மாதவியைத் தேடிக்கொண்டு தவச்சாலைகளுக்குச் செல்லுகிறார்கள். செய்தி கேள்விப்பட்ட சேரன் செங்குட்டுவர்கள் சித்திராபதியருக்கு அல்லவா கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
விரக்தியோடும் மன அழுத்தங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சராசரி குடிமக்களுடைய செவிமடல்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய 'நான் எண்ணி எண்ணிக் கதறி என்ன உலகிலே, ஒரு இனிப்புமில்லை, கசப்புமில்லை முடிவிலே' எனும் பாடல்தானே ஒலித்துக் கொண்டிருக்கும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...