/

சொலல் வல்லார் யார்?

அண்மையில், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியப் பேச்சுப்போட்டிக்கு நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்ற வேண்டி வந்தது. கல்லூரி மற்றும் பள்ளி அளவில் நிகழ்ந்தேறிய போட்டிகள் அவை.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:52 am

கிருங்கை சேதுபதி

அண்மையில், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியப் பேச்சுப்போட்டிக்கு நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்ற வேண்டி வந்தது. கல்லூரி மற்றும் பள்ளி அளவில் நிகழ்ந்தேறிய போட்டிகள் அவை.
எதையும் பேசிவிடலாம் என்கிற துணிச்சலுடனும், எதையாவது பேசிச் சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடனும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்களித்தனர்.
கொடுக்கப்பட்ட மணித்துளிகளுக்குள், நினைவில் நின்ற அளவிற்குச் செய்திகளை அடுக்கிச் சொல்வதைவிடவும், அடுக்குமொழியில் எடுத்துச் சொல்வது பொருந்துகிறதோ, இல்லையோ இடையிடையே, "பஞ்ச்' டயலாக்குகளை எடுத்து விடுவது, தொடர்பேயில்லாத துணுக்குகளைச் சொல்லிச் சிரிக்க வைக்க முயல்வது, ஆவேசமாகக் கூப்பாட்டுத்தொனியில், தலையையும் கைகளையும் செயற்கையாக ஆட்டிப் பேசுவது, ஆணித்தரமாகத் தன் கருத்தை நிலைநிறுத்த பேச்சுமேடையை ஓங்கிக் குத்துவது - ஆகிய பாசாங்குகளைச் செய்துகாட்டி பார்வையாளர்களுக்கு மத்தியில் காட்சிப்பொருளாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது - இவ்வாறான போக்குகளில் திருவள்ளுவர் கொஞ்சம் காணாமல் போய்க் கொண்டிருந்தார்.
ஆனாலும் பேச்சுக்கிடையில், இன்னமும் பாரதியும், பாரதிதாசனும் மேற்கோள்களாய்த் தோன்றிவிடுகின்றனர் என்பது ஆறுதலான செய்தி. இடையிடையே ஆங்கில மேற்கோள்கள் கூறினால் நடுவர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
அன்னை தெரசா, மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் ஆகியோரை, எந்தவொரு பேச்சாளரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை, அவ்வப்போது சுவாமி விவேகானந்தரையும் இளைஞர்கள் குறிப்பிடுவது கவனிக்கத்தகுந்ததாக இருந்தது.
பன்முகத்தன்மை கொண்ட பார்வை, நினைவாற்றல், தனித்தன்மையான பாணி போன்றவை குறைவு. பெரும்பாலும் சின்னத்திரையில் பேசுவோர் பாணியையே "மொன்னை'யாய்ப் பிரதிபலிப்பது மிகுந்திருக்கிறது.
பேச்சுமொழியின் உயிர்ப்பான உச்சரிப்பும், தனித்தன்மைக்கு அடையாளமான வட்டாரப் பாங்குகளும் நலிந்து, திரை தொடர்பான ஊடக பாணியையே அவர்கள் பின்பற்றுகிறார்கள்; பலரது உரைகளில் தலைப்புத் தொடர்பாகக் கருத்தை வளர்த்துச்செல்லும் பான்மை அறவே இல்லை.
மற்றொன்று "விரித்தல்' நடைமுறையாகிவிட்டது. எப்படியோ தொடக்கத்திலும் முடிவிலும் தலைப்புக்குள் வந்துவிடுகிற வித்தை இவர்கள் வசப்பட்டிருப்பதும் தெரிந்தது. மென்மையாக எடுத்துமொழிகிற தன்மை மிகக்குறைவு.
உரத்தக் குரலெடுத்து முழங்கினால்தான் பேச்சு என்று யார் இவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களோ? பள்ளிகளுக்கிடையேதான் பலத்த போட்டி. மிகுந்த சிரத்தையோடு, தங்களைத் தயார் செய்துகொண்டு வந்திருந்தனர். ஆசிரியர்களோடு, பெற்றோர்களும், அவர்களை ஊக்கப்படுத்த உடன்வந்திருந்தனர். குறிப்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற குறிப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததால், பெரிதும் உரையை ஒப்பித்தல் போட்டியாகவே உருக்கொள்ளத் தொடங்கியது.
பல பிள்ளைகள் ஒப்பிக்கத் தொடங்கியவுடனேயே, பெற்றோர்களும் உதடசைக்கத் தொடங்கியதையும் பார்க்க முடிந்தது. காரணம், பேசும் பிள்ளைகள் அவர்களைப் பார்த்தே பேசுவதில் தெரிந்தது.
சில பெற்றோர்கள் பார்வையாளர்களின் மத்தியில் இருந்தபடியே, பேசும் தம் பிள்ளைகளை ஆட்டிப் படைத்தனர். "கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை' போல பிள்ளைகள் இயங்கினாலும் சுயம் புலப்பட அவர்கள் வெளிப்பாட்டுத் திறன் மிளிர்ந்தது.
தம் மகவை அவையத்து முந்தியிருக்கச் செய்வதில் அம்மாக்களுக்கே கூடுதல் அக்கறையிருப்பது தெரிந்தது. ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும், போட்டி நடப்பது, தாய்மொழியில் அல்லவா?
சமயங்களில் எதிர்பார்த்த வண்ணம் தம் பிள்ளைக்குப் பரிசு கிடைக்காது போனால் பெற்ற தாயே அழுதுவிடுகிற உருக்கமும் சில போட்டிகளிடையே நிகழ்ந்திருக்கிறது.
கொடுக்கப்பட்ட கால அளவில், மிகையும் குறைவும் இல்லாமல் கச்சிதமாகச் செதுக்கப்பட்ட உரைகளில் பிசிறு இல்லை. மற்றொன்று விரித்தல் இல்லை. பலமுறை பெற்றோர் மற்றும் பயிற்சி தந்த ஆசிரியர்கள் முன்னிலையில், அவர்கள் அரங்கேற்றிப் பார்த்திருக்க வேண்டும்.
பல மாணவிகள் தேர்ந்த நாட்டியக்காரிகள் போல், உடல்மொழி காட்டி, உணர்ச்சி பொங்கப் பேசியது அவையினர்க்குச் சிலிர்ப்பூட்டியது. ஒருவரைவிட மற்றொருவர், அவரைவிட அடுத்தவர் சிறப்பாகவே பேசிக்கொண்டுபோகப் போட்டியும் வலுத்தது.
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், இரண்டுக்கு மேற்பட்ட சுற்றுகளுக்குப் பிறகே, பரிசுக்குரியவர்களைத் தெரிவுசெய்ய வேண்டி வந்தது.
இறுதிக்கட்டப் போட்டி தொடங்கியது. கடுமையான போட்டி, நடுவர்கள் மூவர். அதில் மிகச் சிறப்புக்குரியவராக ஒரு மாணவியை ஏனைய இருவர் தெரிவுசெய்து வைத்திருந்தனர். எனது மதிப்பீட்டில் அவர் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார். அவர் சிறப்பாகப் பேசினார் என்றாலும், அவரைவிட இன்னொரு மாணவரின் பேச்சுச் சிறப்பாக இருந்தது என்பது எனது கருத்து.
எங்களுக்குள் ஒரு விவாதம். சொல்லும் முறையிலும் பாவனையிலும் அம்மாணவி, சிறப்பாக விளங்கினார் என்பது அவர்கள் கருத்து. நான் மறுக்கவில்லை. அதேசமயம் எனது பார்வையையும் அவர்களிடம் பதிவு செய்தேன்.
எல்லாரிடமும் கேட்பதுபோல், அந்த மாணவி, பேசத்தொடங்குமுன் அவரது தலைப்பெழுத்து (initial) இனிஷியல் என்ன என்று தமிங்கிலத்தில்தான் கேட்டேன். "ஜி' என்றார். "தமிழில்' என்றேன். ஒரு கணம் யோசித்த அவர், சொன்ன பதில் என்னை அதிரவைத்தது. "சாரி ஐ டோண்ட் நோ தமிழ்' என்றார்.
அதாவது அப்பா பெயரின் முதல் எழுத்து என்று கேட்டேன். புரியவில்லை அவருக்கு. ஆங்கிலத்தில்தான் கேட்க வேண்டியிருந்தது. ஒருவாறாக யோசித்து, "க' என்றார். அது குறிலா நெடிலா என்றேன், புரியவில்லை.
தொடர்ந்து க, கா என்ற உச்சரிப்பைச் சொல்லிப்பார்த்தேன். உடன் அவரால் அதைத் தெளிவுபடுத்த முடியவில்லை. அதற்குள் நடுவருள் ஒருவர் தன்னிடம் உள்ள பெயர் பட்டியலைக் காட்டிவிட்டதால், அவரது பேச்சைத் தொடங்கச் சொன்னோம் (இத்தனைக்கும் அந்த மாணவி தமிழகத்து, தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தவர்).
பலமுறைக்குப் பலமுறை பேசிப் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் துல்லியமாகத் தமிழில் பேசினார். சொல்லிய சொல்லின் பொருளோ, உணர்வோ சற்றும் உட்படியாது உள்வாங்கி வெளிப்படுத்துகிற நுட்பமான யந்திரத்தன்மையில் அவர் வாக்கு வெளிப்பட்டதைக் கண்டுகொள்ள முடிந்தது.
சரியாகச் சொன்னால் அப்பட்டமான ஒப்பித்தல் திறமை. ஆனால், எனது தேர்வில் இடம்பெற்ற மாணவரது பேச்சு துல்லிய, சிந்தனையின் வெளிப்பாடு.
இடையில் உணர்ச்சி மேலிட்டுப் பெருங்குரலில் பேசிய கணத்தில் சற்றே தொண்டை கரகரத்தது. சூழல் அறிந்து எனக்கு வைத்திருந்த நீர்க்குடுவையைத் திறந்து நீட்டினேன். அடுத்த கணம் அதைப் பெற்று "நன்றி' என்று தமிழில் சொல்லிவிட்டு, பருகினார்.
பிறகு "ரொம்ப நன்றி சார்' என்று எனக்குக் கேட்கும் தொனியில் சொல்லிவிட்டு, எந்தத் தடுமாற்றமுமின்றி, தான் விட்ட இடத்தில் இருந்தே உரையைத் தொடர்ந்தார். மேற்கோள்களோடு தன் கருத்துகளையும் குறித்த நேரத்திற்குள் தர்க்க ரீதியில் விரித்துச் சொன்னார்.
இவ்விருவருக்கும் இடையில், ஒரு முக்கியமான வேற்றுமை. அம்மாணவி, நடுவர்களுக்குப் புகழ்ச்சி சொல்லி வணக்கம் தெரிவித்தமுறையில் ஒருவித மிகையுணர்ச்சி இருந்தது. அவை வணக்கத்திலும் ஒருவிதப் பாசாங்குத்தனம்.
ஆனால், இந்த மாணவரின் உரையில் இயல்பாக எழுந்த உணர்வும் உச்சரிப்பும் மிகை, குறையற்ற வணக்கத் தொடர்களும் இடம்பெற்றிருந்தன. அவை அந்தக் கணத்தின் வெளிப்பாடு என்பதோடு, நேரம் கருதி நேரே தலைப்பிற்குள் தன் சொந்த பாணியில் வெளிப்படத் தொடங்கிய முறைமை இருந்ததையும் சுட்டிக்காட்டினேன்.
பேச்சுக்கு மனப்பாடத்திறன் இன்றியமையாததுதான். அதைவிட, சிந்தனையின் வெளிப்பாடாக, இயன்றவரை சுய சிந்தனையின் புலப்பாடாக அது அமையவேண்டும் அல்லவா?
அத்தகு பேச்சுப் பாணியை மாணவர் களிடம் வளர்க்கத் தவறியதன் விளைவாக, தொடர்ந்து புத்திளம் பேச்சாளர்கள் பட்டியல் விரைந்து வளரக் காணோம். பள்ளிக்கல்விக்குப் பிறகு அவர்கள் இத்துறையில் தொடர்ந்து வரவோ, வளரவோ தவறிவிடுகிறார்கள்.
வெற்றி, பரிசு, பாராட்டு என்கிற அளவில் திருப்தி அடைந்து இத்துறையை விட்டு விலகுவதோடு, தான் பேசப் புகுந்த பொருண்மையைத் தனது சிந்தனைக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியாது போனால், இந்தப் போட்டிகள் நடத்துவதில் அர்த்தமென்ன என்றெல்லாம் விவாதிக்க வேண்டி வந்தது.
ஜீவா, எஸ்.ஆர்.கே., அ.ச.ஞா. உள்ளிட்ட மூத்த தலைமுறைகளின் தனித்தன்மை மிகுந்த பாதையில், வாழையடி வாழையென இவர்கள் வருவதற்கு இத்தகைய முறையில் தேர்வு அமைந்தால் சரியாக இருக்கலாம் என்று நம்புவதாகத் தெரிவித்தேன்.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து' என்பது மணிவாசகம். சொல்லிய சொல்லின் பொருளுணர்ந்து சொல்கிற சொல்லின் செல்வர்களையும் செல்வியர்களையும் அடையாளம் கண்டு வளர்ப்பதுதானே நமது குறிக்கோள்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.