எல்லாவற்றையும் சகிக்கலாமா?
பல்வேறு இன மத மொழியினரால் நிரம்பியிருந்தாலும், எந்த ஒரு மதத்தையும் சாராத நாடு - நடுவு நிலை மிக்க நாடு என விளங்குவதால், சகிப்புத்தன்மை மிக்க நாடு என்றும் - சகிப்புத்தன்மை


பல்வேறு இன மத மொழியினரால் நிரம்பியிருந்தாலும், எந்த ஒரு மதத்தையும் சாராத நாடு - நடுவு நிலை மிக்க நாடு என விளங்குவதால், சகிப்புத்தன்மை மிக்க நாடு என்றும் - சகிப்புத்தன்மை மிக்க மக்கள் எனவும் நாம் பெயர் பெறுகின்றோம்.
நமக்கு இருக்கும் சகிப்புத் தன்மை என்பதனை அளவிட முடியாதது என்பதுதான் உண்மை. ஆனால் அது மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக அல்ல.
காய்கறிகள் மற்றும் பழங்கள் செயற்கையாக ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படுதல், நிறமூட்டப்படுதல் பள்ளிச் சிறுவர்கள் பொதி சுமப்பதனை அனுமதித்திருப்பது - குழந்தைகள் தொழிலாளர்களாக உபயோகப் படுத்தப்படுவது - அனுதினமும் நம் கண்ணெதிரில் நமது மொழி தொலைக் காட்சிப் பெட்டிகளில் சிதைக்க படுதல் - பாரம்பரிய உணவு முறைகள் அற்றுப் போகுதல் - போலி மருந்துகள் - போலி மருத்துவர்கள் - ஓட்டுக்குப் பணம் - செய்ய வேண்டிய வேலைக்கே அலுவலகங்களில் லஞ்சம், தருதல் - ஒரு சமுதாயம் தன்னை முழுமையாக குடிப் பழக்கத்துக்கு ஆட்படுத்திக் கொள்ளுதல் - கலப்படம் அற்ற பொருள் சந்தையில் இல்லாத சூழல் - கல்வி என்பது வியாபார பொருளாக இருத்தல் - பொது இடங்களை ஆக்கிரமித்தல் - தூய்மை - சுகாதாரம் குறித்த அலட்சியம் - நலியும் விவசாயம் - காடுகள் சுருங்குதல், பல உயிரினங்கள் நம் தலைமுறையோடு அழியும் அபாயம் - தரமற்ற திரைப்படங்கள் போன்ற எல்லாவற்றையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
லஞ்சம் என்பது, தவறான செயல்களை - சட்டத்துக்கு புறம்பான விஷயங்களை செய்வதற்கு என்ற நிலை மாறி, சட்டப்படி - நியாயமான வகையில் செய்ய வேண்டியவற்றை செய்து முடிப்பதற்கேகூட லஞ்சம் என்பது வழக்கமாகிவிட்டது.
நாம் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடியவர்கள். அவர்களது சட்டங்களையும், நம்மை அவர்கள் ஏய்த்ததையும் ஏற்க மறுத்தவர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இழைத்த தவறுகள் இன்று நம்மவர்களால் இழைக்கப்படும்போது நம்மில் பெரும்பாலானோர் வாய் மூடி மெளனிகளாய் இருக்கிறோமே இது சரியா?
நம்மால், எவ்வாறு இதனை இவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஒரு வேளை, இந்த தவறுகளை செய்பவர்கள், நம் நாட்டினர் - நமது மொழி பேசுபவர்கள் - நமது மதத்தை சார்ந்தவர்கள் - அல்லது நமது ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலா அல்லது நமது கண்ணோட்டமும் அளவீடுகளும் மாறிவிட்டனவா?
பொதுவாக இத்தகைய மனப்பாங்கு - ஒரு நாடு முழுமைக்கும் ஏற்படுவது ஒரு சில நாட்களில் நடந்துவிடக் கூடிய காரியமல்ல. தவறுகளுக்கு கடுமையான எதிர்ப்பு - கண்டும் காணாத நிலை - என்ற படிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி கடந்த எழுபது ஆண்டுகளில், இவற்றையெல்லாம் சகித்து, இப்போது வேறு வழியின்றி முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.
அறத்தினை கைவிட்டு பொருளினைச் சேர்க்கும் கூட்டம் ஒரு புறமும், சிறுமையை கண்டும் காணாதப் போக்குடன் இன்னொரு கூட்டமுமாய் பிரிந்து கிடக்கிறது சமுதாயம். பல ஆண்டுகளுக்கு முன்னர், தவறு செய்பவர்கள், பிறரால் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
அனால், அத்தகையோர் சமூக அந்தஸ்து பெற்று உலவும் காட்சி நம் முன் விரிவதும், பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவன் என்ற பெயர் மாறி, சம்பாதிப்பவன் என்ற பெயரோடு உலவுவதும் விந்தையிலும் விந்தை.
கலை - விளையாட்டு போன்றவற்றில், raising the bar - என்பது தரத்தினை உயர்த்துவது குறித்துக் கூறப்படும் ஒரு சொற்றோடர் ஆகும்.
அதேபோல, தொழில் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத் துறையில் - தவறுகள் கிஞ்சித்தும் நிகழாவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும். அப்படியே சிறு சிறு தவறுகள் நிகழ்ந்தாலும்கூட, அவை எவ்வாறு நிகழ்ந்தன, அவற்றுக்கான காரணங்கள் எவை - யாவர் - என அலசப்பட்டு அவை மீண்டும் நிகழா வண்ணம் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
தனியார் நிறுவனங்களிலும் - பன்னாட்டு நிறுவனங்களிலும் கடைபிடிக்கப்படும் இத்தகைய கடுமையான சகிப்பின்மை, நமது ஒவ்வொருவர் வாழ்விலும் கடைபிடிக்கப் படவேண்டும். அது சமுதாயத்தில் பெரும்தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.
நாம் சகிப்புத்தன்மை அதிகம் உடையவர்கள் என்று பெருமை படுவதை விடவும், தவறுகள் குறித்த சகிப்பின்மை கொண்டவர்கள் என்ற நிலை எய்தும்போதுதான் பெருமை கொள்ள வேண்டும்.
ஆனால், நாம் சகிப்புத்தன்மை உடையவர்கள் என்பதாகக் கூறிக்கொண்டு, தவறுகளை கண்டும் காணாததுமாயும் - உடந்தையாயும் - காரணமாகவும் இருப்பதுவும் வெறுக்கத்த தக்கதாக இருக்கிறது.
அடிப்படை உரிமைகள் பெருமளவு மறுக்கப்பட்ட நாடுகளில்கூட, குற்றங்கள் குறைந்திருப்பதும், குற்றங்கள் சார்ந்த அவலங்கள் அருகி வருவதும் கவனிக்கத் தக்கவை. ஆனால், நமது நாட்டின் நிலையோ, இத்தகைய தவறுகளுக்கு கூச்சமின்றி இடமளிப்பதாக அமைவது விந்தையாக இருக்கிறது.
இவை குறித்து நாம் சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். சில விஷயங்களைப் பற்றி பேசினால், அவை எங்கெங்கு சுற்றினாலும் பள்ளிக் கூடங்கள் - ஆசிரியர் - பெற்றோர் என இவர்களிடத்திலேயே வந்து நிறைவுறும்.
ஆம், ஒவ்வொரு வீட்டிலும் - பள்ளியிலும் செய்வன திருந்தச் செய்யவும், சிறுமை கண்டு பொங்கவும் இளைய தலைமுறையினர் பழக்கப்படுத்தப்பட வேண்டும். அது அவர்களை மட்டுமல்ல வருங்கால சமூகத்தையும் பண்படுத்தும்.
’ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை' என்றார் வள்ளுவர். அத்தகைய மிகக் கடுமையான கோட்பாடுகள் கொண்டவர்கள் நாம் என்பதனை மறக்கலாகாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...