எல்லைகள் உடைபடும் காலம்
எல்லைகள் நிரந்தரமில்லை; அவ்வப்போது வடிவம் மாறும். எல்லைகள் அடக்கி வைப்பதற்கும் அடங்கிப் போவதற்கும் மட்டுமில்லை கடக்கவும்தாம்.


எல்லைகள் நிரந்தரமில்லை; அவ்வப்போது வடிவம் மாறும். எல்லைகள் அடக்கி வைப்பதற்கும் அடங்கிப் போவதற்கும் மட்டுமில்லை கடக்கவும்தாம். இன்னொரு நாட்டில் மட்டுமின்றி இருக்கிற நாட்டிலும் மனம் உலாவர மொழியின் எல்லைகளைக் கடந்தாக வேண்டும். தற்காலத் தொழில்நுட்பம் மொழி எல்லைகளைக் கடக்கத் துணையாகி இருக்கிறது.
உங்கள் மொழி போதும் உலகைச் சுற்றலாம். ஒரே கருவியால் உலகம் மாறியிருக்கிறது. உலக நாடுகள், தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் உறவாட வழி தந்திருக்கிறது. அவரவர் தாய் மொழியில் அடுத்த மொழிக்காரரோடு உரையாடும் வசதி வந்திருக்கிறது. உலக மனிதர்கள் உறவாடவும் உரையாடவும் ஒன்றிணைந்து வாழவும் தவிர்க்க முடியாத சவாலாக இருந்தத் தடை உடைக்கப்பட்டிருக்கிறது.
மலையோ, மணல்வெளியோ, காடோ, ஆறோ, கடலோ நாடுகளைப் பிரிக்கும் எல்லைகள் என்றால் அவை இயற்கையின் கோடுகள் - இணைக்கும் கோடுகளாக இருக்கும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று அப்படித்தான் தமிழர்கள் எல்லைகளைத் திணைகளாகப் பாகுபாடு செய்திருப்பார்களோ? அல்லது அப்படியும் மனது கேட்காமல் நாடுகளின் எல்லைகள் நிலவியல் அடிப்படையில் இல்லாமல் வாழும் மக்களின் மனநிலை அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்களோ?
மனநிலையைக் கட்டமைப்பதில் மொழிக்குத் தான் முதலிடம் இருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து என்று தமிழ் வழங்கும் நிலப்பகுதியே தமிழுலகுக்கு எல்லைகளாகப் பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தில் கூறியுள்ளார். பனம்பாரனார் கருத்துப்படி, ஒரு மொழி புழக்கத்தில் இருக்கும் நிலப்பகுதியே ஒரு நாட்டின் எல்லைகளாகின்றன.
அதனால்தான் வேற்று நாட்டினரை, மொழிபெயர் தேயத்தினர் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால், இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; தமிழ் இருக்கிறது. எனவே தமிழுக்கு இப்போது உலகமே எல்லை. தமிழர்களுக்குத் தனி நாடு இல்லாமல் இருக்கலாம்; ஆனால் தமிழுக்கு உலகம் கிடைத்திருக்கிறது.
சாதிகளுக்கும் மதத்திற்கும் கூட எல்லைகள் இருக்கின்றன. அடுத்த சாதியினர் அல்லது மதத்தினர், கொள்வினை கொடுப்பினைகளில் எல்லைகளை மீறாமல் பார்த்துக்கொள்ள, கண்கொத்திப் பாம்பாகக் கட்டுப்பாடுகளும் சடங்குகளும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் மனித குல வாழ்க்கைக்குத் தடையான சாதி மத எல்லைகள் உடைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், நாடுகளுக்கான எல்லைகள் அப்படி இல்லை. மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு நாடுகளுக்கு எல்லைகள் வேண்டும் என்று நியாயம் சொல்லப்படுகிறது. அதனால் எல்லைகளை அனுமதித்துக் கொண்டே இணக்கமாக வாழ்வதற்கு வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் அனைவரையும் உறவாக நினைத்து யாவரும் கேளிராக வாழ நினைப்பவர்களுக்கு உலகின் எந்த ஊரும் சொந்த ஊர்தான் என்றால் எல்லைகளுக்கு இடம் ஏது?
எல்லைகளற்ற உலகத்திற்காகத் தமிழர்கள் ஏங்கி இருக்கிறார்கள். அப்படி எல்லைகள் அற்றுப்போக, எல்லோரும் கற்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்; கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று தூண்டி இருக்கிறார்கள். கற்றவர்க்கு எந்த நாடும் தன் நாடு. எந்த ஊரும் தன் ஊர் என்று உரிமை கொண்டாடச் சொல்லித் தந்திருக்கிறார்கள்; யாதானும் நாடாமால் ஊராமால் என்று இறுதிக் காலம் வரை கல்வி கற்கச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் மொழி எல்லை அப்படி இல்லை. அதை உடைத்துக் கொண்டு வரமுடியாது; வாழ முடியாது. எனக்கு எந்த சாதியும் மதமும் வேண்டாம் என்று சொல்பவர்களும் கூட, எனக்கு எந்த மொழியும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. வாழ்வதற்கு ஏதாவதொரு மொழி வேண்டும்.
மொழி இல்லாமல் வாழ முடியாது. சைகை மொழியால் காலம் தள்ள முடியாது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஒரே மொழியைக் கொண்டும் உலகில் வாழ்வதற்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
அதனால் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டு பேசும்போதே உச்சரிப்புப் பிழையால் பொருள் தவறாகிவிடுமோ என்ற தடுமாற்றம் வருகிறது. அரசியல் உறவுகளில் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் அடுத்த நாட்டவருடன் உரையாட மொழிபெயர்க்க மூன்றாவது ஒருவர் தேவைப்படுகிறார். மூன்றாவது நபரின் மொழிபெயர்ப்பின் அடிப்படையில்தான் இரு நாட்டு நல்லுறவும் வல்லுறவும் அடங்கி இருக்கின்றன.
இன்றையத் தேவைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு மொழி போதுமானதாக இல்லை என்பது கடந்த மாதம் வரை விதியாக இருந்தது. இப்போது, ஒரே கருவி உலகத்தை மாற்றி இருக்கிறது. மொழிகளின் எல்லைகளையும் உடைத்துப் போட்டிருக்கிறது. மொழி அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. ஆளுகிறவர்கள் அதிகாரம் செலுத்த மொழித் திணிப்புக்குத் தேவை இல்லை.
மனிதனுக்குப் போட்டியாக மனிதனைவிட நேர்த்தியாகவும் நுட்பமாகவும் செயற்பட மனிதர்களால் கண்டுபிடிக்கப்படும் கருவிகள் உலகை வியப்பில் ஆழ்த்துகின்றன. உயிரை அறிவால் வகைப்படுத்தி, அறிவின் வாயில்களை ஐம்புலன் என்று உலகுக்கு அறிவித்த ஆசான் தொல்காப்பியர். மனிதர்களுக்குக் கிடைத்த ஆறறிவில் ஐந்து அறிவுகளில் மூக்கறிவு தவிர மற்ற நான்கு அறிவையும் கணினிக்கும் செல்பேசிக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
தொட்டால் உணருகிறது. விரல் ரேகையை உணர்கிறது.
பார்த்தால் முகம் பார்த்துத் திரை எடுக்கிறது. முகநூலில் அடையாளம் சொல்கிறது. இடத்தைக் காட்டினால் விவரம் சொல்கிறது.
பேசுகிறது. சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொண்டு இணையப் பக்கம் திறக்கிறது. சொல்வதைத் தட்டச்சு செய்கிறது.
ஆனால் மற்றவர் பேசுகிற மொழியிலிருந்து நமக்குத் தெரிகிற மொழியில் சொற்களை மாற்றிக் கொடுக்கும் செயலி முழுமையாகக் கிடைக்கவில்லை. இப்போது ஒரு கருவி கிடைத்திருக்கிறது. அந்தக் கருவிக்குக் எஞஞஎகஉ உஅதஆமஈந என்று பெயரிட்டுள்ளார்கள். மொழிச் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு வழித்துணையாக கூகுளின் மொழித்துணை இருக்கும்.
காதுகளில் பொருத்திக் கொண்டால், மற்றவர் பேசுவதைக் கேட்பவர் விரும்பும் மொழியில் உடனுக்குடன் மாற்றிச் சொல்கிறதாம். மொழிபெயர்க்க நேரம் எடுத்துக் கொள்வதில்லையாம். அப்படியே நாம் பேசுவதை மற்றவர் மொழிக்கு மாற்றி அவருக்குச் சொல்கிறதாம்.
கிட்டத்தட்ட துல்லியமான மொழிபெயர்ப்பாகவும் இருக்கிறதாம். பேசுவதற்கு முன் அதற்கு நாம் எந்த மொழிக்கு மாற்றிச் சொல்ல வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுப் பேச வேண்டுமாம். நாம் பேசும்போது முடிந்தவரை எழுத்து நடையில் பேச வேண்டுமாம். பேச்சுமொழிக்கு இன்னும் அது தயாராகவில்லையாம்.
சுற்றிலும் இரைச்சல் இருந்தாலும் நமது பேச்சை மட்டுமே எடுத்துக்கொண்டு மொழி பெயர்க்கிறதாம்.
சாதி, மத, நாட்டு எல்லைகளைக் கடக்க வசதியும் வாய்ப்பும் இருப்பதைப்போல மொழிகளின் எல்லைகளக் கடந்து கலந்து இனிது வாழ உலகம் எதிர் நோக்கியிருந்த இந்தக் கருவியைச் சுந்தர் பிச்சை தலைவராக இருக்கும் கூகுள் நிறுவனம் கடந்த மாதம் உலகுக்கு வழங்கி இருக்கிறது.
இன்றைய உலகத் தேவையை மனதில் கொண்டு, குறிப்பாக இந்தியா போன்ற பன்மொழிச் சூழல் நாடுகளின் தேவைகளை மனதில் கொண்டு கூகுள் தயாரித்திருக்கிறது. கடந்த 2011-இல் திட்டமிட்டு 2012-இல் தொடங்கிய மொழிபெயர்ப்புத் திட்ட முயற்சி இது.
இப்படியான முயற்சிகள் 1997 முதலே பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு காலங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன. தொடக்கத்தில் 12 மொழிகளில் முயற்சி செய்தார்கள். சரியாக வரவில்லை.அடுத்தடுத்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளும் கைகூடவில்லை. 2015 இல் ஸ்கைப்பில் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். பேசும்போதே மொழி
பெயர்க்க நான்கு மொழிகளில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
காதில் பொருத்திக் கொள்ளும் கருவியைக் கண்டுபிடிப்பதில் கடந்த ஆண்டு இண்டிகோ திட்டம் முயற்சி செய்திருக்கிறது. ஆனால் அந்தக் கருவி இன்னும்
பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சீன மொழிக்கும் ஸ்பானிஷ் மொழிக்குமான குரல் மொழி மாற்றத்திற்குக் காட்சி உரைகளில் பயன்படுத்த முயற்சி செய்தது. குரல் மாற்றத்திற்கு அதிக உழைப்பும் நேரமும் தேவைப்பட்டிருக்கின்றன.
கூகுள் நிறுவனம் இதைச் சாதித்து உள்ளது. வெளிநாடுகளில் இப்போது
சந்தைக்கு வந்துள்ளது.
உலகத்தின் எல்லா நாடுகளோடும் நாட்டு மக்களோடும் அரசியல், வணிகம், பொருளாதாரம், கலை, இலக்கியங்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் உரையாடவும் உறவாடவும் கடந்த மாதம் வரை வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
உலகின் எந்த ஒரு தனி மொழியும் அப்படித் தகுதி பெற்றதாகவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் அவரவர் மொழியில் பேச அடுத்தவர் அவரது மொழியில் கேட்டுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் உலக மொழிகளில் நாற்பது மொழிகளுக்கு அந்த வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது.
சீனம், ஜப்பான், ஆங்கிலம், போலிஷ், ஜெர்மன் பிரெஞ்ச், கொரியன் என்று இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும் உலக மொழிகள் நாற்பது. அவற்றில் தமிழ், இந்தி, வங்காளம் என்று மூன்று இந்திய மொழிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எல்லாம் தடைபோட்டுக்கொண்டிருந்த சீன நாடு இப்போது இந்தக் கருவிக்குக் கதவைத் திறந்திருக்கிறது.
இப்படி எல்லைகள் உடைபடும் காலத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தலைவராக இருக்கும் கூகுள் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...