ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுவால் விளையும் கேடு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக தொடர் எதிப்பும் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:45 pm

ஐவி.நாகராஜன்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக தொடர் எதிப்பும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவும் இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருந்தது. நீதிமன்ற உத்தரவால் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை மூடப்பட்டன. மாவட்டத்துக்கு 200 கடைகள் செயல்பட்டு வந்தநிலையில் அவை 50 கடைகளாகக் குறைக்கப்பட்டன.
ஒரு காலத்தில் ஊருக்கு ஒன்றிரண்டாக இருந்த குடிமகன்களின் எண்ணிக்கை இன்று தலைகீழாக மாறி, குடிப்பழக்கம் இல்லாதவர்கள் ஊருக்கு ஒன்றிரண்டு பேர்தான் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.
குடிப் பழக்கம் தவறு, கெடுதல் என்ற உணர்வுபோய் அதை சகித்துக் கொண்டு தொடர்ந்து குடிக்கும் மனோபாவம் மேலோங்கிவிட்டது. மதுபான விற்பனையை அரசே கையில் எடுத்த பிறகு தமிழகத்தில் பள்ளி செல்லும் சிறுவர்கள் உள்பட எல்லா வயதினரும் மது குடிக்கக் கற்றுக் கொண்டனர்.
குடிப்பவர்கள் போதையில் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் விபத்து மற்றும் உயிர்சேதங்களால் ஒரு பாவமும் அறியாதவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான் தேசிய - மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுபான கடைகளை இழுத்து மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது மதுப்பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கக் கட்ட நடவடிக்கை. இத்தகைய நடவடிக்கை வரவேற்கத் தகுந்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு பிறகு ஏற்பட்டுள்ள சூழல்களை பார்க்கும்போது இந்தத் தீர்ப்பால் பல சிக்கல்களும் உருவாகியிருப்பதை கவனிக்க முடிகிறது.
சாலையோரங்களிலிருந்த கடைகள் அகற்றப்பட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கின்றன. இதன் விளைவாக அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மூடினால் என்ன? இருக்கவே இருக்கு புதுச்சேரி மது என குடிமக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். வெளிமாநில மது கடத்தலை தடுக்க எத்தனை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் தாண்டி புதிய வழித்தடங்களை உருவாக்கி லாரி லாரியாக மது பாட்டில்களை இறக்குமதி செய்து வருகிறார்கள் சாராய வியபாரிகள்.
தமிழகத்தில் எற்பட்டுள்ள டாஸ்மாக் மது தட்டுப்பாட்டைப் போக்க புதுச்சேரி மது பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்களே தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் ஒரு மாதத்திற்கு 18 லட்சம் லிட்டர் மது பயன்பாடு இருந்தாலும் உள்ளுர் மக்கள் ஆறு லட்சம் லிட்டர்தான் அருந்துகின்றனர். மூன்றில் இரண்டு பங்கு மது அருந்துவது சுற்றுலா பயணிகளும் சட்டவிரோதமாக வாங்கி செல்பவர்களும்தான்.
இது ஒருபுறம்மிருக்க புதுச்சேரி மதுவை தமிழகத்துக்குள் கடத்தி வந்து காசு பார்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் நிலவும் டாஸ்மாக் மது தட்டுபாட்டை சாதகமாக பயன்படுத்தி வியாபாரிகள் உருவாகியுள்ளனர்.
இதனால் தற்போது புதுச்சேரியிலிருந்து கள்ளச்சாராயம், எரிசாராயம் உள்ளிட்ட சகல பானங்களும் தமிழகத்துக்குள் தங்குதடையின்றி கடத்தப்படுவதாவகக் கூறப்படுகிறது.
தமிழக - புதுச்சேரி எல்லையோரம் உள்ள மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், நாகை, திருவாருர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களின் எல்லைகள் வழியாகவே புதுச்சேரி மதுபானம் தமிழகத்திற்குள் வந்து கெண்டிருக்கின்றன. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகள் வழியாகவே மது கடத்தல் ஊடுருவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 8 மது விலக்கு சோதனை சாவடிகள் அமைந்துள்ள நிலையிலும் பற்பல வழிகள் தமிழக - புதுச்சேரியை இணைக்கும் வகையில் உள்ளதால் மது கடத்தல் என்பது எளிதாக நடைபெறுகிறது.
மது, சாராயம், ஸ்பிரிட் கடத்துவதற்கென தனி வியாபாரிகள் இரு மாநிலங்களிலும் செல்பட்டு வருகின்றனர். இவர்களில் மொத்த வியாபாரிகள் எல்லையை கடப்பதற்காக மது விலக்கு பிரிவு, உள்ளுர் காவல்துறை என அனைவருக்கும் முறையாக கப்பம்கட்டி கவனித்து விடுகின்றனர்.
விழுப்புரம் மற்றும் நாகை, திருவாருர் மாவட்ட - கிராமப்புற பகுதிகளை குறிவைத்து இந்த விற்பனை நடைபெற துவங்கியிருக்கிறது.
இதேபோல் சாராயத்தை சாக்கு மூட்டைகளில் எடுத்து வந்து பாக்கெட்டுகளில் நிரப்பி ரூபாய் 30-க்கு 200 மி.லி. சாராயத்தை விற்பனை செய்கின்றனர். விலை மலிவு என்பதால் சாராயத்திற்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டு பரபரப்பாக விற்பனை ஆகிறது.
சில மாவட்டங்களில் இது தொடர்பாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கடத்தி கொடுக்கும் இளைஞர்களுக்கு கூலிகொடுத்து பயன்படுத்துகின்றனர்.
இதற்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் இந்த தொழிலில் இறங்கியிருக்கிறார்கள். குடும்ப செலவு மற்றும் கை செலவுக்கு ஆசைப்பட்டு சட்டவிரோதமான வேலைகளில் ஈடுப்படுவது வேதனைகுரியதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.
டாஸ்மாக் குறைந்துவிட்டதால் குடும்ப பிரச்னைகளும் குறைந்துவிட்டது என எண்ணியிருந்த குடும்ப பெண்களுக்கு புதிய பிரச்னையாக பாக்கெட் சாராயம் தலைதூக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசும், காவல்துறையும் விழிப்புடன் இருந்து இதனைத் தடுத்துநிறுத்திட வேண்டும். விலை மதிக்க முடியாத மனித உயிர்களைப் பாதுகாத்திட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.