தகுதியால் வென்று விடல்!
ஒருதாய் வயிற்றில் பிறந்த இரு பிள்ளைகளைக்கூட ஒத்த மனமுடையவர்களாய், ஒற்றுமை உடையவர்களாய் வளர்க்கத் தவறிவிட்ட கொடுமையால் இன்று


ஒருதாய் வயிற்றில் பிறந்த இரு பிள்ளைகளைக்கூட ஒத்த மனமுடையவர்களாய், ஒற்றுமை உடையவர்களாய் வளர்க்கத் தவறிவிட்ட கொடுமையால் இன்று உலகெங்கிலும் வன்கொடுமைகள், கொலைகள், அழிவுகள்.
ஒத்த நிலைகொண்ட, உடன் பயிலும் நண்பராகவே இருந்தாலும், இருவருக்கும் இடையில் போட்டி என்று வந்துவிட்டால், பொறாமை என்கிற இழிகுணமும் கூடவே வந்துவிடுகிறது. காரணம், போட்டியாளராக எதிரில் நிற்பவரை, எதிரியாக நினைப்பதில் தொடங்குகிற எதிர்ப்புணர்ச்சி, பகைமையை வளர்க்கிறது; பண்புகளைச் சிதைக்கிறது.
எதிரில் நிற்பவரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற வெறி, மெல்ல மெல்ல வளர்ந்து கொல்லவேண்டும் என்கிற அளவிற்கு கொடூரமாக ஆக்கிவிடுவதுதான் கொடுமை.
இங்கேதான் இந்திய இதிகாசங்கள் நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கின்றன.
ஒரு தாய் வயிற்றில் பிறக்காதபோதும், ஒத்த மனமுடைய சகோதரர்களாய் வளர்க்க முடியும் என்பதை தசரதன் துணைவியர் நிறுவிவிட்டனர். அதிலும் தலைமகன் இராமன், தன் குடும்பத்துத் தம்பிகளையும் தாண்டி, வேடனையும், குரங்கனையும், அரக்கனையும்கூட சோதரனாய்க் கொண்டுவிட்டான்.
அதிலும் அழகு, இராமனுக்கு மூத்தவன் குகன். எல்லோரும் தன்னை அண்ணா அண்ணா என்று அழைப்பதைக் கேட்டே பழகிவிட்ட தனக்கு, தானும் அண்ணா என்று அழைக்க ஓர் அண்ணன் அகப்பட மாட்டானா என்று தேடிக் கொண்டிருக்கும் வேளையில் தேனும் மீனும் கொண்டுவந்து கொடுக்கும் தாயினும் நல்லானாக ஒரு தமையன் கிட்டியதில் எத்தனை பெரிய மகிழ்ச்சி?
படிக்கிறபோதும், கேட்கிறபோதும் சிலிர்ப்பை உண்டாக்கும், இந்தச் சகோதரபாசம், இராமன் குடும்பத்தில் மட்டுமா இருந்தது; கம்பன் படைத்த இராவணன் தம்பியரிடத்திலும் இருந்ததே!
அண்ணனுக்காக உயிர் துறக்கத் துணிந்த தம்பி கும்பகருணன், அன்பினும் அறம்பெரிதென நம்பிய தம்பி வீடணன், இராமனொடு இருப்பதைத் தடுக்கவில்லையே. உனக்கு அதுதான் உரியது என்று உணர்த்திக் காட்டினானே. "நீதியால் வந்த நெடுந்தரும நெறியல்லால் சாதியால் வந்த சிறுநெறி அறியான் என் தம்பி' என்று அவனைப் பற்றி இராமனிடத்திலேயே பேசினவன் அல்லவா அவன்!
எந்த நிலையில் இருந்தாலும், இறந்தாலும், இந்த சகோதர பாசம் என்பது இந்தியா உலகிற்கு அளிக்கும் உன்னதக் கொடை.
"ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள் உலகு இன்பக் கேளி' என்றே - மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை என்று பாரதி பாடுகிறார். கேள் என்கிற சொல் உறவைக் குறிக்கும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன் பூங்குன்றன் கவித்தொடர் குறிப்பதும் இதைத்தான்.
இந்த மரபில் பாரதி பாடிய "கேளி'யைத் தான் பின்னர் "கேணி' என்று யாரோ திருத்திவிட்டார்கள். "துன்பக்கேணி' என்று புதுமைப்பித்தன் கதையெழுதிய பிறகு அதற்கு எதிர்ப்பதம்போல, "இன்பக்கேணி' நிலைபெற்றுவிட்டது. அது ஒருபுறம் இருக்கட்டும்.
எத்தாயர் வயிற்றில் பிறந்தாலும் ஒத்த உடன்பிறப்பாகவே கருதிக்கொள்ளும் இந்திய மனநிலையின் உச்சமாய் பாரதி முரசடித்துப் பாடுகிறார்.
பாருக்குள்ளே சமத்தன்மை- தொடர்
பற்றும் சகோதரத்தன்மை
யாருக்கும் தீங்கு செய்யாது புவி
எங்கும் விடுதலை செய்யும்
என்று.
இது தன் வீடு தொடங்கி, தாயகத்தில் நிலைபெற்றுத் தரணி முழுவதும் பரவவேண்டிய இந்தியப் பெருமாண்பு.
அது எப்படிச் சாத்தியம்? இந்தக் கவிதைத் தொடர் அதற்கு இரண்டுவிதமான பதில்களை முன்வைக்கிறது.
முதலில், பாருக்குள்ளே சமத்தன்மை. அது எப்படி வரும்? தொடர்பற்றும் சகோதரத்தன்மை நிலவுகிறபோது வரும்.
உதரம் என்றால் வயிறு. சக உதரத்தில் தோன்றியவன் சகோதரன். அதாவது ஒரே வயிற்றில் பிறந்த உடன்பிறப்புத் தன்மையை இச்சொல் குறிக்கிறது.
பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு பிரிவுகள் கொண்ட பாரதநாட்டில் பிறந்தவர் யாரும் சோதரர்களாக வாழ்வதுபோல, உலக மக்கள் ஒன்றுபட்டு வாழலாமே! தொடர்பு அற்ற நிலையிலும், இந்தச் சகோதரத்தன்மையைப் பேணலாமே அதற்கும் வழி காட்டுகிறது, பாரதியின் இந்தக் கவிவாக்கு!
தொடர்பு அற்றும் என்று பிரிக்காமல், தொடர் பற்றும் சகோதரத்தன்மை என்று பற்றுடன் பற்றினால், இது சாத்தியமாகுமே! இவ்வாறு யாவரும் சகோதரர் ஆகிவிட்டால் மட்டும் போதாது. அப்படிக் கூடியமைத்த கூட்டணியால் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைந்துவிடக்கூடாது. அதற்கு மாறாக, புவி எங்கும் விடுதலையைச் செய்யவேண்டும் என்றும் கட்டளையிடுகிறது.
சொந்த அண்ணனையே சொத்தைக் காரணம் காட்டிப் பங்காளியாக்கிப் பகைவளர்த்தால், பிற பிள்ளைகளிடத்தில் எப்படி அன்பு வளரும்? வேண்டும் வேண்டும் என்று எடுத்துக்கொள்வதைவிட, வேண்டாம் என்று விலக்கிவிடுவதே சிறந்த செல்வம் என்று வள்ளுவர் விளக்கம் செய்கிறார். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம்' என்பது அவர்தம் வாக்கு.
ஆட்சிக் கட்டில் தனக்கு வேண்டாம் என்று விட்டுக்கொடுப்பதால் விளைந்தது இராமாயணம். ஊசிமுனை இடம்கூடக் கொடுக்கமாட்டேன் என்று சொல்லிக் கெட்டுப்போனதால் விளைந்தது மகாபாரதம். இரண்டிலும் சோதனைகளைச் சந்தித்த சோதரர்கள் வருகிறார்கள். சோதனைக்குச் சோதனை கொடுத்துச் சாதனை செய்தவர்களாக அவர்களும் ஆகிறார்கள். வளர்ந்த பிறகு நிகழ்ந்த போர்கள் புறப்போர்கள். அவர்கள் வளர்கிறபோதே வளர்ந்த பொறாமை என்கிற அழுக்காறுதானே, அத்தனை போர்களுக்கும் காரணமாக அகப்போர் விளைவித்த நாற்றங்கால். அந்தக் களையெடுக்கும் கலையைக் கற்றுத் தருவதுதான் கல்வியின் முதன்மைப்பணி.
இதுதானே, இன்றையத் தேவை. இதனை நிலைநிறுத்தும் பயிற்சிக்களம்தானே, இந்த வாழ்க்கை. இதற்கான முன் ஒத்திகைதானே வகுப்பறைப் பாடம். வகுப்பில் கற்றதைத்தானே வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.
இதற்காக, இருக்கும் ஒற்றை இடத்தைப் பெறப் பலரும் முயல்கிறபோது போட்டியில்லாமல் எப்படிச் செய்வது? போட்டி, பொறாமையின் நாற்றங்கால் ஆகிவிடக் கூடாது.
தகுதியைப் புறந்தள்ளிவிட்டு, மிகுதியாக உள்ள செல்வத்தையோ, அதிகாரத்தையோ, இன்னபிறவற்றையோ கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட்டால், இன்னல்தான் விளையும். எதிர்காலத்தில் இது இன்னும் பெரிதாகும். அழிவை நோக்கி விரைந்து அழைத்துச்செல்லும்.
இந்தப் பாதையை இழுத்து மூட ஏது வழி? எல்லாவற்றிற்கும் வழிகாட்டும் வள்ளுவர் இதற்கும் ஒரு வழி சொல்லாதிருப்பாரா? சொல்லியிருக்கிறார்.
"மிகுதியான் மிக்கவை செய்தாரை' எவ்வாறு வெல்லுவது?
அவர் சொல்கிறார்.
"தாம்தம் தகுதியால் வென்றுவிடல்' என்று.
இங்கே மிகுதி என்று வள்ளுவர் சொல்வது எது என்பதில் உரைசொல்கிறவர்கள் நுழைந்து உட்குழப்பம் விளைவித்து விடுகிறார்கள். பரிமேலழகர், "மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை' என்கிறார். மணக்குடவர், "தமது செல்வமிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களை' என்கிறார்.
பரிதியார் "ஆங்காரத்தினாலே மிகை செய்வார் பிழை' என்கிறார். காலிங்கர், "செய்யும் திறன் ஒழிய நெறிகேட்டாலே மிகையான தீங்குகளைச் செய்தாரை' என்கிறார். எளிய உரை செய்த மு.வ.வும், "செருக்கினால் தீங்கினைச் செய்தவரை' என்றே குறிப்பிடுகிறார்.
இவ்வாறு உரை செய்த திரைகளை விலக்கி நேரடியாகவே வள்ளுவரிடம் சென்றால், இதனினும் மிகுதியான பல செயல்களை அவர் உள்ளடக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். செல்வமிகுதியால், செருக்கு மிகுதியால், அதிகாரமிகுதியால், ஆணவமிகுதியால், ஆற்றல் மிகுதியால், மெஜாரிட்டி என்று இன்று சொல்லப்பெறும் ஆள்பலத்தின் மிகுதியால், பணபலம், படைபலம், இன்னபிற பக்கபலம் மிகுதியால் செய்யும் அத்தனை அடாவடிச் செயல்களையும் எப்படி எதிர்கொள்வது?
அதே வழிகளில் செயல்படுவது ஆகாத காரியம். அது செய்யக்கூடாததும்கூட. எனவே, மிகுதிக்கு எதிராக, வள்ளுவர் தகுதியை நிறுத்துகிறார். மிகுதியானது பயன்படுத்தப்பயன்படுத்தக் குறையும். ஆனால், தகுதியானது வளர்ந்துகொண்டே வரும். மிகுதியை, மிகுதியாக வைத்திருப்பவர்களிடம் இருந்து பிரித்துவிடலாம். ஆனால், தகுதியை உரியவர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது. அது உயிர்ப் பண்பாக உறைந்திருப்பது.
"தாம் தம் தகுதி' என்று அழகாகச் சொல்கிறார் வள்ளுவர். தமக்கும் தாமுக்கும் இடையில் ஒரு பாரம்பரியப் பண்பே படைக்கலமாக வந்து நிலைகொண்டுவிடுவது அழகு. தம் பிறப்பால், தான் பிறந்து வளர்ந்த சூழலால் பெற்ற தகுதி ஒன்று. தாமே தம்மை உணர்ந்து தேவையானவற்றைத் தேடி வளப்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டிய தனித்தகுதியாகும் தம் தகுதி இன்னொன்று.
ஆக, இருவகைகளிலும் வந்து எய்திய தகுதியை மேம்படுத்திக் கொள்கிறபோது, "மிகுதியான் மிக்கவரை செய்தாரை மிக எளிதாக வெல்லுகிற தகுதி' தானே வந்துவிடும் தானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...