/

மனித வடிவில் மானிடவியல்

சேரியிலிருந்த சிலர் தங்கள் ஆளுமையினால் சிகரத்திற்கு வந்தனர். அதே நேரத்தில், சிகரத்தில் இருந்த சிலர் ஆராய்ச்சி மனவலிமையினால் சேரிக்கு வந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:48 pm

தி. இராசகோபாலன்

சேரியிலிருந்த சிலர் தங்கள் ஆளுமையினால் சிகரத்திற்கு வந்தனர். அதே நேரத்தில், சிகரத்தில் இருந்த சிலர் ஆராய்ச்சி மனவலிமையினால் சேரிக்கு வந்தனர். அப்படி வந்தவர்களுள் ஒருவர் தாம் மைசூர் நரசிம்ஹாசாரியா சீனிவாஸ் (16.11.1916 - 30.11.1999). திறமையான புலமையெனில் வெளிநாட்டார், அதனை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார் மகாகவி பாரதியார். அவ்வகையில் எம்.என். சீனிவாஸ், அனைத்து நாடுகளும் வாழ்த்துவதற்கும், வணங்குவதற்கும் உரியவர் ஆனார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர் எம்.என். சீனிவாஸ். அவர் அங்கிருந்து விடைபெற்று இந்தியாவுக்கு வந்தபின்னர் தக்கவர்கள் இன்மையினால், 2008-இல் இருந்து அத்துறை செயலற்று நிற்கிறது.
அத்துறைப் பேராசிரியர் எம்.என். சீனிவாஸ் பெயரிலேயே மையமாக அமைக்க, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆன்ட்ரூ ஹேமில்டன், கர்நாடக அரசிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை மானியமாகக் கேட்டார். எம்.என். சீனிவாஸ், மண்ணின் மைந்தர் என்பதாலும், இவ்வாண்டு அவருடைய நூற்றாண்டு என்பதாலும், ஒரு கோடியை நல்குவதற்கு இசைந்திருக்கிறது, அவ்வரசு.
பேராசிரியர் எம்.என். சீனிவாஸ் சமூகவியலுக்கும், மானிடவியலுக்கும் ஆற்றிய தொண்டிற்கு, அவரை நன்கறிந்த ஆன்டெர் பிடெய்லீ எனும் மதிப்பார்ந்த பேராசிரியர் தந்த இரங்கலுரை சான்றாதாரமாகும். "பேராசிரியர் எம்.என். சீனிவாஸ் மறைவோடு இந்திய மானிடவியலின் சரித்திரமும் நிறைவடைகிறது.
எம்.என். சீனிவாசனுக்கு முன்னும் பின்னும் அவரைப்போல் அந்தத் துறையை ஆட்டிப் படைத்தவர்களும் இல்லை, அதில் ஆதிக்கம் செலுத்தியவர்களும் இல்லை. இனியும் அவ்விடத்தை வேறெந்த தனிமனிதராலும் நிரப்ப முடியாது' எனும் இரங்கலுரை சரித்திரச் சான்றாக நிற்கும்.
சாதியப் பாகுபாடுகளைக் கிராமப்
புறங்களில் இருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் களைந்தால்தான், தேசிய நீரோட்டம் சாத்தியமாகும் என்பது பேராசிரியர் எம்.என். சீனிவாஸின் திடமான நம்பிக்கை.
இக்கருத்தையே கார்ல் மார்க்ஸ் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்தில் இருந்துகொண்டே இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக விடுத்தார். "இந்தியாவில் புரட்சி வெற்றி பெறாது. ஏனென்றால், பிரசாரங்கள் அனைத்தும் பெரிய நகரங்
களையே மையம் கொண்டிருக்கின்றன.
கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இருக்கின்ற பாமர மக்கள் எந்தச் சிந்தனை
களும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்' எனத் தொலைதூரங்களை ஊடறுத்து, அந்த மாமனிதன் வெளியிட்ட உண்மை. இதைப் படித்தபிறகுதான் காந்தியடிகள் கிராமப் புனருத்தாரணம் எனப் புறப்பட்டார்.
காந்தியடிகள் அமரத்துவம் அடைந்த சில நாட்களுக்குப் பிறகு பேராசிரியர் எம்.என். சீனிவாஸ், கோடகஹள்ளி எனும் கிராமத்தில் குடியேறினார். பதினொரு மாதங்கள் அங்குக் கள ஆய்வில் ஈடுபட்டார், பேராசிரியர்.
1942-இல் தம்முடைய பிஎச்.டி. ஆய்வுக்கு, மைசூர் வட்டாரத்தில் குடும்பவியலும், திருமண நிகழ்வுகளும் என எடுத்துக்கொண்ட தலைப்பு, சமூகவியலில் அவருடைய உள்ளுணர்வை உந்தித் தள்ளியது. மேலும், கூர்க் வட்டாரத்தில் நிலவிய சமயத்தையும், சமூகத்தையும் ஆராய்ந்து அவர் வெளியிட்ட நூல், மானிடவியலில் அவர் கொண்டிருந்த ஆர்வத்திற்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.
சமூகப் புரட்சியாளர்களும், போராளி
களும் சாதி ஒழிய வேண்டும் என்று முயன்றார்களே தவிர, அச்சாதிப்பாகுபாட்டிற்குரிய காரணிகளை அகற்றத் தவறிவிட்டனர். ஆனால் பேராசிரியர் எம்.என். சீனிவாஸ் சமஸ்கிருதமயமும், மேட்டுக்குடி மக்களின் மேலாதிக்கமும், பாமர மக்களின் வறுமையும், அறியாமையும் இரட்டைக்குழல் துப்பாக்கியாய் அமைந்து,
சமூகத்தைச் சுட்டுக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.
கோடகஹள்ளியில் அவர் செய்த கள ஆய்வின் முடிவு, அறிவுலகத்தின் செவிப்பறைகளைத் தட்டின. அவருடைய கோடகஹள்ளி ஆய்வுத் தடங்களைக் கேட்டு மகிழ்ந்த அமெரிக்க ஸ்டான்போர்டு பல்
கலைக்கழகம், அதனை வெளியிட விரை ந்து வருமாறு அழைத்தது. அந்நேரம் அமெரிக்க - வியட்நாம் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நேரம்.
அப்பொழுது அப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த முற்போக்கு இளைஞர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முயற்சியில் விருந்தினர்கள் தங்கியிருந்த அறைகளில் தீ வைத்தனர். அது டாக்டர் எம்.என். சீனிவாஸ் வைத்திருந்த தரவுகள் - தடயங்கள் - ஆய்வுக் குறிப்புகள் அனைத்தையும் எரித்துத் தீர்த்தது.
என்றாலும், அமெரிக்காவில் மிகப்பெரும் மானிடவியல் பேராசிரியராகிய ஷோல் டாக்ஸ் டாக்டர் சீனிவாûஸ தூக்கி நிறுத்தி, அவருடைய மனத்திலே படிந்திருக்கின்ற தரவுகளை வைத்து எழுதும்படி கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் சீனிவாஸ் தம் நாட்குறிப்பிலிருந்தும், நினைவுகளிலிருந்தும் எழுதிய அந்த ஆய்வு நூலுக்கு, "தி ரிமெம்பர்டு வில்லேஜ்' எனப் பெயர் சூட்டினார். அந்த அறிவுப் பாதையின் மதிப்பையுணர்ந்த பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகமும், தில்லி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையும் தங்கள் பல்கலைக்கழகங்களில் அத்துறையை அமைக்க அவரை அழைத்தன.
அந்நூலைப் படித்த பேராசிரியர் ஏ.எம். ஷா (ஆக்ஸ்போட்டில் பேராசிரியர் சீனிவாஸிடம் படித்தவர்) "முதிர்ச்சியான இந்நூலைப் படிக்கின்றபோது ஒரு வட்டார நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வைப் பெற்றேன். எம்.என். சீனிவாஸ் ஒரு வெற்றி பெற்ற சிறுகதையாசிரியராகவும் இருப்பதால், இவ்வெற்றியைப் பெற முடிந்தது' எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் எம்.என். சீனிவாசஸ் ஆக்ஸ்போர்டில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்களான ஏ.ஆர். ரேட்கிளிப் பிரெüனிடமும், ஈ.ஈ. ஈவான் பிரிட்கார்டிடமும் மானிடவியலை ஆழ்ந்து கற்றவர். அவருடைய ஆள்வினையுடைமையைக் கேள்விப்பட்ட பேராசிரியர் வி.கே.ஆர்.வி. ராவ் தாம் பணியாற்றும் தில்லிப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து, மானிடவியல் துறையைத் தொடங்குமாறு அழைத்தார். சீனிவாஸýம் தில்லிக்கு வந்து தம் பணியைத் தொடங்கினார்.
ஆனால், அங்குப் பொருளியல் துறையில் பணியாற்றிய இறுக்கமான மார்க்சீயவாதிகளான அமர்த்தியா சென், கே.என். ராஜ், பிரணாப் பார்தன், மிரினாள் டட்டா போன்ற பேராசிரியர்கள் டாக்டர் சீனிவாசனின் கள ஆய்வைக் கொச்சையாகப் பேசி கேலி புரிந்தனர். அதனால் வி.கே.ஆர்.வி. ராவ், சீனிவாûஸ பெங்களூரிலுள்ள ஜே.ஆர்.டி. டாடா ஆய்வு மையத்திற்குப் பேராசிரியராக அனுப்பிவிட்டார்.
மேலும், பிரான்சைச் சார்ந்த கல்வெட்டறிஞரும், சமூகவியல் பேராசிரியரு
மாகிய மார்சல் மாஅஸ், "ஒரு மானிடவியலாளர் ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வரலாற்றைச் சொல்லும் நாவலாசிரியராக மாறியிருப்பது, வியப்பிற்குரியது' எனப் பாராட்டியிருக்கிறார்.
எம்.என். சீனிவாஸýம், ஆர்.கே. நாராயணனும் நண்பர்கள். இருவருடைய எழுத்துக்களிலும் ஒருவருடைய செல்வாக்கும், தாக்கமும் இன்னொருவருடைய எழுத்துக்களில் உண்டு.
கோடகஹள்ளி எனும் கிராமத்தின் உள்வட்டத்தில் உருளும் பல்சக்கரங்களைப் பற்றி சீனிவாஸ் எழுதியிருப்பதால், அதனைக் கோடகஹள்ளி எனும் பெயரில் வெளியிட்டால், சிலர் வழக்குமன்றங்களக்குப் போய்விடக்கூடும் என எண்ணிய சீனிவாஸ் அதற்கு ராம்புரா எனப் பெயரிட்டார். என்றாலும், ராம்புராவைப் படித்தவர்கள் கோடகஹள்ளியைப் பார்க்கப் புறப்பட்டார்களாம்.
டாக்டர் சீனிவாஸ் இந்தியாவுக்கு மட்டுமன்றி, ஆய்வுலகம் அனைத்திற்கும் பயன்படும்படியாக சோஷியல் சேன்ஞ் இன் மாடர்ன் இந்தியா, இந்தியாவின் சோசியல் ஸ்ட்ரெக்சர் போன்ற 12 நூல்களைப் படைத்துத் தந்தார். ஆங்கிலத்தில் இரண்டு சிறுகதைகளையும் தீட்டியுள்ளார். தமிழ் - தெலுங்கு நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்து, கட்டுரைகளையும் வடித்துத் தந்துள்ளார். அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
பேராசிரியர் சீனிவாஸ் குடும்பம் முழுதுமே மானிடவியலுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. சீனி
வாஸýன் மனைவி ருக்மணி அம்மையார், நகரமைப்புச் சூழலைக் காப்பதிலும், சுற்றுப்புறச் சூழலைக் காப்பதிலும் தம்மை ஒப்
படைத்தார்.
பேராசிரியரின் மூத்த மகள் லட்சுமி கலிபோர்னியாவில் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பேராசிரியரின் இளைய மகள் துளசி பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் பிஎச்.டி. ஆய்வை நிறைவு செய்யும் நிலையில் இருக்கிறார்.
அந்திம காலத்திற்கு முன்னர் இரண்டு காரணங்களுக்காக நொந்து போனார் பேராசிரியர் எம்.என். சீனிவாஸ். முதலாவது, இந்தியாவில் அரசியலும் சமயமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து செயல்படுவது, இரண்டாவது, இந்திய மரபியல் அனைத்தும் இந்து மரபியலைச் சார்ந்து நிற்பது, இந்து மரபியல் அனைத்தும் சாதிய அடிப்படையில் அமைந்திருப்பது. என்றாலும், நவீனத்துவம் வளர வளர சாதித்துவம் தகர்ந்துவிடும் என அழுத்தமாக நம்பினார்.
அவருடைய வாழ்க்கையில் அவர் 07.10.1999 அன்று கடைசியாக ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு: சாதியத்துக்கு ஓர் இரங்கல் என்பதாகும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.