காந்தி வந்தால் ஏந்தும் கருவி
இன்றைக்கு இந்தியாவின் தந்தை காந்தியடிகள் பிறந்தால் கைராட்டைக்குப் பதிலாக அவர் கையில் எடுத்துக்கொள்ளும் கருவி எதுவாக இருக்கும்?


இன்றைக்கு இந்தியாவின் தந்தை காந்தியடிகள் பிறந்தால் கைராட்டைக்குப் பதிலாக அவர் கையில் எடுத்துக்கொள்ளும் கருவி எதுவாக இருக்கும்?
இந்தக் கேள்விக்கான பதிலாக, "கணினி', "செல்லிடப்பேசி', "சூரியஆற்றலைச் சேகரித்துப் பயன்படுத்தும் கருவி' என்றெல்லாம் அப்போதைக்கு, தேடிப் பார்த்துச்சலித்தது மனது.
கிட்டத்தட்ட மறந்தேபோய்விட்ட வேளையில், காந்தி முன் வைத்த மூன்று குரங்குகளைப்பற்றி வகுப்பறையில் சொல்லும் தேவை வந்தது. கூடவே, இந்தக் கேள்வியும் மனதைக் குடைந்தது.
முன்னர்ச் சிந்தித்த பதில்கள் நகர் சார்ந்தவை.
காந்தியடிகள் பெரிதும் நேசித்தது கிராமங்களையல்லவா?
கிராம மக்களையல்லவா?
கிராமத்தின்மீது மனங்கவிந்ததும் மின்னலைப் போல் அண்மையில் கிராமத்தில் சந்தித்த மூவரின் முகங்கள் தோன்றின.
உரையாடிய சொற்களைச் சேகரித்து வைத்திருந்த செவிகள் சாராம்சத்தை நினைவுகூர்ந்தன.
இதற்கிடையில் அந்தக் கிராமம் பற்றியும் கொஞ்சம் சொல்லிவிடவேண்டும்.
மலைகளும், தென்னந்தோப்புகளும், நெல் விளையும் வயல்களும் நிறைந்த ஊர்.
காவிரி போலான ஆறு பாய்ந்து நீர் தராவிட்டாலும் பக்கத்து மலைகளில் பெய்யும் மழை, அருவியாய் இறங்கிச் சிற்றாறுகளில் செந்தண்ணீர் தரும். பக்குவமாய்ச் சேமித்து வேளாண்மை செய்யப் பழகிய ஊர். அதன்வழி, சுய தேவைகளைப் பூர்த்தி செய்யப் பழகிய மக்கள்.
வேளாண்மைத் தொழில் தீவிரமாக நடந்துவரும் காலத்தில் ஊரே பரபரப்பாய் இயங்கும்.
சில சமயம், பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு, கதிர் அறுக்கவும், தளுக்கு அடிக்கவும் போக வேண்டியிருக்கும்.
கொட்டும் பனியில், குவித்துக்கிடக்கும் வைக்கோல் போரைப் பிரித்து உதறிவிட்டு, மாடுகளைப் பிணைத்த கயிறு பிடித்து வலம் வரவேண்டும். விடிவதற்குள் முடிந்துவிடும் பணியின் நிறைவில், குவிந்த நெல்மணிகளைக் குன்றுபோல் வைத்துக் கும்பிடுவது வழக்கம்.
இருப்பதிலேயே இளம்பருவத்துச் சிறுவன் ஒருவன், வைக்கோலைக் கையில் பிடித்துக்கொண்டு, அந்த நெற்குன்றைச் சுற்றி வரவேண்டும். "பொலி' "பொலி' "பொலி' என்று சொல்லச்சொல்லி, எல்லாரும் சொல்வார்கள். ஏன் என்று புரியாது நானும் சொல்லியிருக்கிறேன்.
மும்முறை வலம் வந்து, ஈசான்ய மூலையில் விழுந்து வணங்குவோம். உயர்ந்து தெரியும் பிரான்மலை பார்த்துப் பெரியவர்கள் சொல்லச்சொல்வார்கள் -
"பிரான்மலை உயரம், அழகர்மலை நீளம்' என்று.
கிளிப்பிள்ளைபோல் அப்படியே சொல்வது உண்டு. ஏன் என்று தெரியாது. பின்னர், தமிழ் பயிலப்போன பிறகுதான் புரிந்தது. அது பழந்தமிழ் இலக்கியத்தில் விளைந்த பசுஞ்சொல் என்று.
"பொலிக' என்ற இலக்கியச் சொல்லின் பேச்சு வடிவம், "பொலி'.
"நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
விளைக வயலே, பால் பகடு பல சிறக்க'
என்றெல்லாம் ஐங்குறுநூற்றுப் புலவர் ஓரம்போகியார், மருதத் திணையில் பாடுவார். "பகடு' என்றால் "கால்நடை' என்று பொருள்.
"பொலிக பொலிக' என்று நம்மாழ்வாரும் பாடுவார். குவிந்திருக்கும் நெல்மணிகள் பிரான்மலைபோல் உயரமாகவும் அழகர் மலைபோல் பரந்துவிரிந்து அகலமாகவும் உயர வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அது அமைந்தது என்பதைப் பின்னால் உணர்ந்திருக்கிறேன்.
"வரப்புயர' என்று வாழ்த்திய ஒளவைப்பிராட்டியின் வாக்கியம் மக்கள் மொழியில் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். வாழ்வும் தொழிலும் இலக்கியத்தரமாய் இருந்த அந்தப் பழைய காலம் போயே போயிற்று.
வீடுகள்தோறும் கட்டப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டிகளையோ, மேய்ந்து திரியும் கோழியினங்களையோ சுத்தமாய்க் காண முடியவில்லை. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆட்டுக்குட்டிகளையும், அவசரச் செலவுகளுக்குக் கோழிகளையும் வளர்த்து விற்று வாழ்ந்தவர்கள் எல்லாரும் மாறியே விட்டார்கள்.
ஒன்றிரண்டு வீடுகளில்தான் மாடுகள், அதாவது பசுக்கள். அதிலும் உழவு மாடு இல்லாமலே போயிற்று. டிராக்டர் வந்து உழுதால் தான் உண்டு.
இன்று எல்லாக் கிராமங்களுக்கும் நேர்ந்த நிலைதான், இந்தக் கிராமத்துக்கும். நகர்மயமாதலின் சகல நசிவுகளுக்கும் நிலைக்களனாகி விட்டிருக்கிறது ஊர்.
இப்படியெல்லாம் இந்த ஊர் குறித்துப் பழைய நினைவுகளை எனக்குள் கிளர்த்தி, அந்த 87 வயது முதியவர் கவலையோடு சொன்னார்: "எப்படியெப்படியெல்லாம் வெள்ளாமை போட்டு வாழ்ந்த ஊரு. இப்ப ஒரு பயலுக்கும் வெள்ளாமை வேலையே தெரியலே.
எல்லாத்தையும் வித்துச் சாப்பிடணும்னு நினைக்கிறது என்ன பழக்கமோ தெரியல. எதுக்கு இன்னமும் வயலைக்கட்டி அழணும்னு என் பிள்ளையே சொல்றான். வயலை வித்துட்டுப் பேங்க்ல போட்டுட்டு வர்ற வட்டியிலே அரிசி வாங்கிச் சாப்பிடலாம்னு பலரும் நினைச்சுட்டாங்க.
எல்லாரும் இப்படியே போனா அரிசியும் தானியமும் எங்கே இருந்து வரும்? வானத்துல இருந்தா வரும்? வீட்டில் பசியாற விலை கொடுத்துத் தானியம் வாங்குகிறவன் சம்சாரியில்லை தம்பி. எப்பவும் சொந்தமா வெள்ளாமை போட்டுச் சாப்பிடணும்னு இருக்கிறவன் நான். இந்த வருசத்தோட அந்த நினைப்பிலும் மண் விழுந்துவிடும்போல' என்றார்.
ஏன்?
"இவ்வளவு பெரிய ஊரில் இந்த வருசம் ஆறே ஆறுபேர் தான் வெள்ளாமை போட்டோம். போர் தண்ணீர் பாய்ச்சி என்னத்தையோ விளைய வச்சிட்டோம். வெளியூர்ல இருந்து கூட்டி வந்த அறுப்பு மிஷின் ரிப்பேராப் போச்சு. அறுவடைக்கு ஆள் கிடைக்கலே.
பயிரெல்லாம் முறுகிப் பாழாப் போச்சே' என்று கலங்கினார். "மாட்டுக்காவது வைக்கோலுக்கு வழி பண்ணணும்' என்று கிளம்பினார்.
கொஞ்ச நேரத்தில், என் கூடப் பள்ளியில் சேர்ந்து படித்த பழைய நண்பன் ஒருவன் வந்தான். பல காலம் படித்தும் பள்ளித் தேர்வில் பாஸாக முடியாதவன்.
பணிக்குத் திரும்ப வேண்டியதால் நிரம்பப்பேசமுடியாமல் சற்றே சம்பிரதாயமாகச் சில சொல்லிவிட்டு, எதிரில் வரும் நகர்ப்பேருந்தில் ஏற யத்தனித்தேன். தடுத்த அவன் தன் காரில் ஏற்றிப் பக்கத்து நகரத்தில் கொண்டுவந்து விட வந்தான்.
வழியில், நெடுநாள் தரிசாய்க்கிடக்கும் நிலங்களில் ஊன்றிய எல்லைக் கற்களைச் சுட்டிக்காட்டி எனக்கு உபதேசம் செய்தான். "குறைஞ்ச விலைக்கு வருது. வாங்கிப்போடு. பின்னால் நல்ல விலைக்குப் போகும்' என்றான்.
மேல் படிப்புக்காக நாற்றங்காலை விற்ற அன்று அப்பாவின் கலங்கிய முகம் நினைவுக்கு வந்தது. இன்றைக்கு அப்பாவும் இல்லை. அந்த நிலமும் இல்லை. பழைய நிலத்தில் கொஞ்சம் தரிசாக அப்பாவின் ஞாபகமாய் அப்படியே இருக்கிறது. மழையில்லாத காரணத்தால் வேளாண்மைக்கு வழியே இல்லை. முடிந்தவரைக்கும் அந்த நிலத்தில் வேளாண்மை செய்து கஷ்டமும் நஷ்டமும் பட்ட அப்பாவின் நண்பர் இப்போது திருப்பூரில், ஃபேன்ஸி ஸ்டோர் வைத்துப் பிழைத்துவருகிறார்.
எத்தனையோ பேர்களை இந்த ஊர் இப்படிப் பிரிந்து தனித்திருக்கிறது.
"உன்னோட தரிசு நிலம் நல்ல விலைக்குப்போகும். அதை விற்று இதை வாங்கிப்போடு, பின்னால இதுவும் நல்ல விலைக்குப் போகும். நானே வித்துத் தர்றேன். அதுதான் எனக்குத் தொழில்' என்றான்.
பேச்சுக்கிடையில் அசைத்துக் காட்டிய விரல்களில் ஆகப்பெரிய மோதிரங்கள் அணிந்திருந்தான். கழுத்திலும், கரத்தின் மணிக்கட்டிலும் பொன்னாரங்கள்.
"பார்க்கலாம்' என்று பொதுவாய்ச் சொல்லிவிட்டு,சொல்லமுடியாத சோகத்தோடு மெல்ல விடைபெற்றேன்.
எதிரில் வந்த பெருநகரப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
பக்கத்தில் பார்த்த முகம். பரஸ்பரப் புன்னகைக்குப் பிறகு புரிந்தது. அவர் எனது தொடக்கப்பள்ளி ஆசான். "பணி ஓய்வுக்குப் பிறகு எங்கோ தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி' - "சரிதான் இவரும்...' என்று சரிந்த மனதைத் தூக்கி நிறுத்தினார்: "இயற்கை வேளாண்மை செய்கிறேன். உழைப்பு, உணவு, உடல்நலம் என்று எதற்கும் குறைவில்லை' என்றார்.
"சின்னச்சின்ன விவசாயிகளை இணை த்து இந்த விவசாயத்தை வலுப்படுத்திட்டு வர்றேன். சந்தைப்படுத்தத் தெரியாமத்தான் சம்சாரிகள் கஷ்டப்படுறாங்க. எங்களுக்கான நுகர்வோர் யார்னு தெரிஞ்சு அவங்க கிட்ட உற்பத்திப் பொருள்களை உணவுப் பொருள்களாகக் கொடுத்திர்றோம்.
கூடவே, அவங்கவங்க வீட்டுல மாடியிலே காய்கறித்தோட்டங்களைப் போடவும் கத்துக்கொடுக்கிறோம். தொடக்கத்துல கொஞ்சம் கஷ்டம். ஆனா, போகப்போக நல்லாயிருக்கும். நம்பிக்கை இருக்கு' என்றார்.
ஒரு நாள் வகுப்பில், "மேழிச்செல்வம் கோழைபடாது' என்று சொல்லித் தந்தவர். "மேழி' என்றால் கலப்பை.
கலப்பை பிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகின்ற செல்வம் ஒருபோதும் குறைவுபடாது.
இப்போது புரிந்துவிட்டது எனக்கு. இராம ராஜ்யத்தைக் கனவு கண்ட காந்தி பிறந்தால், வில்லேந்திய கோதண்ட ராமனை விடுத்துக் கலப்பையை ஏந்திய பலராமனைத்தான் முன்னிறுத்துவார்.
அப்போது அவர் கையில் ராட்டை இருக்காது; கலப்பையே இருக்கும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...