/

நீதிதேவதையைப் பட்டினி போடக்கூடாது

நதியின் கண்கள் அடைபட்டால் ஊற்றுக்கண் திறக்கும். ஆனால், நீதியின் கண்கள் அடைபட்டால் மாற்றுக்கண் கிடையாது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:27 pm

தி. இராசகோபாலன்

நதியின் கண்கள் அடைபட்டால் ஊற்றுக்கண் திறக்கும். ஆனால், நீதியின் கண்கள் அடைபட்டால் மாற்றுக்கண் கிடையாது. அப்படி மாற்றுக்கண் கிடையாததால்தான், மாட்சிமிகு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் அனைத்து மாநில முதல்வர்களுக்கு முன்பும், அனைத்து மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்பும், இன்னும் பாரதப் பிரதமருக்கு முன்பும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். 24.04.2016 அன்று இதனை அத்தனை ஊடகங்களும் ஈர நெஞ்சத்தோடு எடுத்துரைத்தன.

"நாட்டின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; ஆனால், நீதித் துறையின் நிலை கவலையளிக்கும் விதமாக உள்ளது. வழக்குகள் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன.

நீதித் துறை சிறப்பாகச் செயல்படுவதும் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். மற்ற நாடுகளில் உள்ளதைவிட, நமது நாட்டில் நீதிபதிகள் அதிகமாக உழைக்கிறார்கள். இப்போதுள்ள நீதிபதிகள் முழுமுனைப்புடன் பணியாற்றியதன் மூலம் இரண்டு கோடி வழக்குகளை மட்டுமே விசாரித்துத் தீர்த்து வைக்க முடிந்தது. நீதித் துறையின் மீது அதிக சுமையைச் சுமத்தாதீர்கள்' என கண்ணீரையும், சில சொற்களையும் கொட்டித் தீர்த்திருக்கிறார் நீதிபதி டி.எஸ். தாக்குர்.

சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நீதித் துறையைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் எதிர்காலத்தில் உரசல்கள் வரும் என்பதை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார் ஸர் ஐவர் ஜென்னிங்ஸ். சட்டத் துறையில் விற்பன்னராகவும் வல்லுநராகவும் திகழ்ந்த ஜென்னிங்ஸ், சில நாடுகளுக்கு அரசமைப்புச் சட்டத்தையும் வரைந்து கொடுத்தவர். வரன்

முறைகள் மீறுகின்றபோது, நீதி தேவதை கண்ணீர் வடிப்பது சிலப்பதிகார காலத்திலேயே அரங்கேறியிருக்கிறது. பூம்புகாரில் பாவை மன்றம் நீதிமன்றத்தைப் போலச் செயல்பட்டிருக்கிறது.

அரசியல் தொடர்புடையோர் அறநெறிக்கு மாறுபட்டு நடந்தாலும், நியாய சபைகளில் உள்ளோர் நீதிக்கு மாறுபட்டுத் தீர்ப்புக் கூறினும், பாவை மன்றத்திலுள்ள பாவை நாவால் வெளிப்படச் சொல்லாது, துன்பக் கண்ணீரைச் சொரிந்து, நின்று அழுமாம் (சிலம்பு: இந்திர விழவு ஊர் எடுத்த காதை, வரிகள் 136-140). அன்று பாவை மன்றத்திலிருந்து நீதி தேவதை அழுதது; இன்று நீதிதேவன் பாராளுவோருக்கு முன்னர் அழுதிருக்கிறார்.

10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என இருப்பதை, 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என அதிகரிக்கப்பட வேண்டும் என்று 1987-ஆம் ஆண்டிலேயே சட்ட ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால், அது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமெரிக்க நாட்டிலே 1.36 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், நீதிபதிகளை அதிகரித்ததால், அவை 19,000-க்கு வந்ததாகவும் நீதியரசர் கே.டி. தாமஸ் தெரிவிக்கிறார்.

நீதிபதி டி.எஸ். தாக்குருக்கு முன்பேயே, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா ஓர் அபாயச் சங்கை ஊதியிருக்கிறார்.

2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று உச்சநீதிமன்றத்தில், சுதந்திர தின விழாவன்று பேசியபொழுது, "நீதிபதிகள் பற்றாக்குறையினாலே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறையில் இருப்பவர்களைக் காட்டிலும், விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். 50 விழுக்காட்டிற்கு மேல் இருப்பவர்கள், விசாரணைக் கைதிகளே. மாவட்டச் சிறைகளிலே 72 விழுக்காட்டினர் விசாரணைக் கைதிகளே.

நீதித் துறையின் தலைவராக இருக்கும் எனக்கு இதைவிட அதிக வேதனை தரத்தக்கது எதுவுமில்லை. குற்றவியல் துறையில் நீதி வழங்கும் முறையானது, சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு வேதனை, துயரம், மனித உரிமைச் சுரண்டல், சுதந்திரம் பறிப்பைத் தவிர வேறு எதையும் வழங்கவில்லை' எனக் குமுறிக் கொந்தளித்திருக்கிறார்.

நீதிபதிகளின் மனக்குமுறல்களை, சமூகப் பொறுப்பை கணக்கில் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, மத்திய அரசு நீதித் துறையின் கையிலிருக்கும் கொலிஜியத்தைப் பறித்துக்கொண்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தைக் கொண்டு வருவதற்கே முயன்று வருகிறது. நம்மை விடச் சற்று கூடுதலான மக்கள்தொகையைக் கொண்ட நாடு சீனா. ஆனால், அந்நாட்டில் 2 லட்சம் நீதிபதிகள் இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் 20,000 நீதிபதிகள்தாம் இருந்து வருகின்றனர்.

நம் நாட்டின் மக்கள்தொகையில் 100 பேருக்கு 10 நீதிபதிகளே இருக்கின்றனர். ஆனால், சீனாவிலோ 100 பேருக்கு 66 நீதிபதிகள் இருக்கின்றனர். விசாரணைக் கைதிகளில், தேசத் துரோகச் செயல்களில் ஈடுபட்டுக் கைதான பயங்கரவாதிகள், நீதி விசாரணைத் தாமதமானால், மாஃபியாக்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் மூலம் வெளியே வந்துவிடுவதாக நீதியரசர் கே.டி. தாமஸ் குறிப்பிடுகிறார்.

நீதிபதிகள் பற்றாக்குறையினால், உச்சநீதிமன்றத்தில் 59,910 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் 40,05,704 வழக்குகள் விசாரிக்கப்படவில்லை. மாவட்ட நீதிமன்றங்களில் 2,71,56,020 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. ஆக, நாடு முழுமையும் 3.1 கோடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நீதித் துறையில் இரண்டு வகையான வழக்காறுகள் இன்றுவரை இருந்து வருகின்றன. (1) விரைந்து வழங்கப்பட்ட நீதிகள், புதைக்கப்பட்ட நீதிகளுக்குச் சமமாகும். (2) கால தாமதமாக வழங்கப்பட்ட நீதிகள், மறுக்கப்பட்ட நீதிகளுக்குச் சமமாகும். இவற்றுள் ஒரு வழக்கில் விரைந்து ஒரு தவறான தீர்ப்பு வழங்கப்படுமானால், பாதிக்கப்பட்டோர் உயர்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம். அங்கும் தீர்ப்பு விரைந்து வழங்கப்படுமானால், உச்சநீதிமன்றத்துக்குப் பாதிக்கப்பட்டோர் மேல்முறையீட்டிற்குச் செல்லலாம்.

ஆனால், காலதாமதமாக வழங்கப்படும் தீர்ப்புகளால் வாதியும் பாதிக்கப்படுவான், பிரதிவாதியும் பாதிக்கப்படுவான். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை முதலில் உச்சரித்தவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டபிள்யூ.ஈ. கிளாட்ஸ்டன். தாமதமாக வழங்கப்படும் நீதி, அநீதி எனச் சொன்னவர் வில்லியம் பென்.

இந்திய அரசமைப்புச் சாசனம் தொடக்கத்திலேயே இந்தியர்களாகிய நம் எல்லாருக்கும் இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நீதியை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றைத் தருவதற்குக் கடமைப்பட்டிருக்கிறது எனச் சொல்லுகிறது. ஆனால், இந்த நாட்டின் சராசரி மனிதர்கள், பாமர மக்கள் மேற்சொன்னவற்றில், நீதியைத் தவிர மற்ற எதிலும் நம்பிக்கை வைத்ததில்லை. அந்த நீதி, ஏழை எளியவர்களுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் இல்லை.

காலதாமதத்தினால் வழக்குரைஞர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. வழக்குரைஞர் அலுவலகத்தில் இருப்பவர்களையும் திருப்திப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஒருவருக்கு, வழக்கின் முகாந்திரத்தை எடுத்துச் சொல்வதற்கு விமானத்தில் பறக்கும்போதுதான் நேரம் கிடைக்கும்.

அப்படிக் கேட்பதற்கு அந்த வழக்குரைஞருக்கு ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தாக வேண்டும். இந்த நிலையில், ஏழைக்கு ஏது நிதி? நீதி? காலதாமதத்தினால் வழங்கப்பட்ட நீதி, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு அநீதி ஆனதை, வாச்சாத்தி ஒன்றின் நிகழ்வைச் சொன்னால் போதுமானது.

வாச்சாத்தியிலும் சித்தேறி குன்றுகளிலும் சந்தனக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன எனும் குற்றச்சாட்டோடு, வனத் துறையினரும், காவல் துறையினரும் வருமான வரித் துறையினரும் ஒரு சோதனை நடத்தினர்.

20.06.1992 அன்று 155 வனத் துறையினர், 108 காவல் துறையினர் 6 வருவாய்த் துறையினர் கூட்டாகச் சேர்ந்து, கடத்தப்பட்ட சந்தன மரங்களைத் தேடி வாச்சாத்திக்குள் நுழைந்தனர். வாச்சாத்தியில் தலித் மக்களுடைய சொத்துகள் சூறையாடப்பட்டன; குடிசைகள் எரிக்கப்பட்டன; கால்நடைகள் கொல்லப்பட்டன.

மண்ணின் மைந்தர்கள் 100 பேர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; 18 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தப்பட்டனர். இக்கொடூரம் குறித்து உடனடியாகக் காவல் துறையினருக்கு புகாராக அளித்தபோது, அவர்கள் அதை ஏற்கவில்லை.

பின்னர் மனித உரிமைக் குழுவினர் குரல் எழுப்பவே, ஜுன் 20 அன்று நடத்திய மனித வதைகளை, 22.09.92-ஆம் தேதியில்தான் ஓசூர் காவல் துறையினர் புகாராக ஏற்றனர். அதுவும் வழக்கு மன்றத்தினர் வற்புறுத்தியதால். மலைவாழ் மக்களுக்குக் காவல் துறையினரிடம் நம்பிக்கையில்லாமல் போகவே, அவர்கள் ஜனவரி 1993-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, சி.பி.ஐ. விசாரணை வேண்டினர்.

உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்து, 1995-ஆம் ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்ற ஆணை பிறப்பித்தது. குற்றப் புலனாய்வுத் துறையினர் ஓராண்டு கழித்துப் புகார்ப் பட்டியலைத் தந்தனர் (23.04.1996). அதனையடுத்துப் பத்தாண்டுகள் தாமதித்து (ஜனவரி, 2006) கிருஷ்ணகிரி வழக்குமன்றத்திற்கு விசாரணையைத் தொடரலாம் எனக் குற்றப் புலனாய்வுத் துறை சொல்லியது.

கிருஷ்ணகிரி வழக்குமன்றம் இரண்டு ஆண்டுகள் கழித்து, (பிப்ரவரி 2008-இல்) தருமபுரி மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது. அந்நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் காலமாகிவிட்டனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 215 பேர்களைக் குற்றமுடையவர்கள் எனத் தீர்ப்பளித்து, அந்த வழக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது என்றும், அவ்வழக்கு அத்தோடு முடிந்தது என்றும் 29.09.2011 அன்று அறிவித்தது.

இதனால், ஜாலியன் வாலாபாக் போன்ற ஒரு கொடூரமான வழக்கிற்குத் தீர்ப்பு, 19 ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறது. நீதிபதி ஆர்.எம். லோதாவும், நீதியரசர் டி.எஸ். தாக்குரும் வார்த்தைகளைக் கொட்டியது, பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தான்.

கருத்து வேறுபாடு கொண்ட இருவரின் நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு, வழக்கை ஆராய்ந்தால், ஒரு சார்பின்றி நீதி சரியாகவே இருக்கும் என்பதை உலக நீதிமன்றங்களின் ஒப்பற்ற நீதிபதியான தெய்வப்புலவர் திருவள்ளுவர், "தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்' என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

அதன்படி, நீதியரசர் ஆர்.எம். லோதாவும், நீதியரசர் டி.எஸ். தாக்குரும், டபிள்யூ.இ. கிளாட்சனும், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் வடித்துச் சொன்ன வார்த்தைகளின் வண்ணம், காலம் கடந்து வழங்கப்பட்ட நீதி, அநீதியாகவே அமையும்.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.